தேடுக

வார்த்தைகள்

If it can be written, or thought, it can be filmed – Stanley Kubrick

எனியோ மோரிகோனி என்னும் இசை மேதை

(ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்!’ கட்டுரையின் மூல வடிவம்)

  

ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு “ஹேட்ஃபுள் எயிட்” படத்துக்காகப் பெற்றிருக்கிறார், 87 வயது இத்தாலிய இசைமேதை எனியோ மோரிகோனி. 50 வருடங்களாக 500 படங்களுக்கும் மேலாக இசையமைத்து, உலகெங்கும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர் அவர். ஹாலிவுட் படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக்கொண்டிருந்த காலத்தில்கூட தன் சொந்த நாட்டையும் பிறந்த ஊரான ரோம்-ஐயும் விட்டு வெளியேறாத எனியோ மோரிகோனிக்கு இப்போதும் ஆங்கிலம் பேசத் தெரியாது.

இதற்குமுன் 6 படங்களுக்காக பரிசீலனைப் பட்டியலில் இருந்தும் ஆஸ்கார் அவர் கைக்கு எட்டவில்லை. ஆனால் இது அவர் வாங்கும் முதல் ஆஸ்கர் அல்ல. 2007ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அவர் இசையமைத்த படங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நடிகரும் இயக்குநருமான கிளின்ட் ஈஸ்ட்வுட்தான் அன்று விருதை வழங்கி அவரது உரையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். எனியோ மோரிகோனி அந்த மேடையில் சொன்னார், “நான் ஓய்வு பெறப்போவதில்லை மேலும் ஊக்கத்துடன் என் பணிகளைத் தொடர்வேன்”. எல்லாரும் வழக்கமாகச் சொல்வதுதான். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது ஒரு தனிப் படத்தின் இசையமைப்புக்காக இந்த ஆஸ்கர் விருதைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

திரைப்படம் ஒரு காட்சிக் கலை. கதை வசனங்கள் எல்லாம் விசுவலுக்குப் பின்னால்தான். அப்படியானால் இசையின் இடம் என்ன? பின்னணி இசை ஒரு படத்தை வேறு உயரத்துக்குத் தூக்கிச்சென்றுவிட முடியும் என்பதைப் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் எனியோ மோரிகோனி.

“த குட், த பேட், அண்ட் தி அக்லி” படத்தில் ஒரு விசுவல் கவிதை போல, ஒரு மயானக் காட்சி உண்டு. ‘அசிங்கமானவ’னாக வரும் கதாபாத்திரம், நூற்றுக்கணக்கான கல்லறைகளுள் எதிலோ ஒன்றில் புதைக்கப்பட்டிருக்கும் தங்கத்தைத் தேடி ஓடும் வசனமில்லாத காட்சி அது. அவனது கண்களில் தெரியும் பேராசை மெல்லமெல்ல அதிகரித்து வெறியாகவே மாற அவன் ஓடுகிறான். அவனைச் சுற்றி இருப்பவைகளோ இறந்த மனிதர்களின் கல்லறைகள், வாழ்க்கை நிலையில்லாதது என்பதை அறிவிக்கும் சாட்சியங்கள். ஆனால் புதையலைத் தேடி அலைபவனின் கண்களில் மட்டும் ஆசை குறையவேயில்லை. மெல்ல மெல்ல வேகம் அதிகரித்து, இறுதியில் காட்சிச் சட்டத்துக்குள் அவன் ஓரிடத்திலிருக்க, அவனைச் சுற்றி உலகம் சுற்றுவது போலத் தெரியும் கட்டம் அற்புதமானது. இயக்குநர் செர்ஜியோ லியோனி வெறும் ‘கௌபாய்’ சண்டைப்படம் எடுப்பவராக அல்லாமல், திரைக்கலையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுவதற்கு, இத்தகைய காட்சிகளை அவர் உருவாக்கியதே காரணம். நடிப்பும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இணைந்து உருவாக்கிய இந்தக் காட்சிக்கு உயிரூட்டுவது உண்மையில் இசைதான். எனியோ மோரிகோனி இந்தக் காட்சிக்காக அமைத்த பின்னணி இசைக்கோர்வைக்குப் பெயர் “தங்கத்தின் பேரானந்தம்”.

செர்ஜியோ லியோனி எப்போதும் முக்கியமான காட்சித்தொடர்களைப் படம் பிடிப்பதற்கு முன், தனது முன்னாள் பள்ளித் தோழரும் இசையமைப்பாளருமான எனியோ மோரிகோனியிடம் அந்தக் காட்சியை விளக்கி, பின்னணி இசையைப் பதிவுசெய்து வாங்கிக்கொள்வார். பிறகு அந்த இசையைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒலிக்கச் செய்து, அதற்கேற்பப் படம்பிடிப்பார். இதனாலேயே அவர் படங்களில் வரும் பல காட்சிகள், பாடலைப் படமாக்கியது போல இருக்கும். அந்தக் கல்லறைக் காட்சியும் அதன் தொடர்ச்சியாக வரும் உச்சக் காட்சியில் மூன்றுபேருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதலும், இதேபோல இசைக்குத் தக்கபடி படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டதுதான்.

லியோனி தனது ஆரம்பகாலப் படங்களை இத்தாலிய மொழியிலேயே எடுத்தார், செலவைக் குறைப்பதற்காக ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்தினார், ஆனால் கதைகளோ அமெரிக்கக் கௌபாய்களைப் பற்றியன. இந்த விநோதக் கலவை காரணமாக, அந்தப் படங்கள் “ஸ்பாகட்டி வெஸ்டர்ன்” (Spaghetti Western) என்ற தனிப் பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றன. அந்தப் படங்களுக்கு இசையமைத்ததின் மூலம்தான் எனியோ மோரிகோனி முதன்முதலில் வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தார். 

பெரிய இசைக் குழுவை வைத்து ஒலிப்பதிவு செய்வதற்கான பட்ஜெட் இல்லாததனால் புதுமையாக, துப்பாக்கி வெடிக்கும் சத்தம், சாட்டையின் சத்தம், விசில், குரல் ஒலிகள், மவுத் ஆர்கன் மற்றும் மோர்சிங் போன்ற சிறுகருவி இசைகளைப் பயன்படுத்தி அவர் அந்தப் படங்களுக்கு இசைகோர்த்தார். அந்தப் புதிய இசைவடிவம் “ஸ்பாகட்டி வெஸ்டர்ன் மியூஸிக்” என்று உலகெங்கும் இன்று தனித்த இசை வடிவமாக அறியப்படுகிறது. “எ ஃபிஸ்ட்ஃபுள் ஆஃப் டாலர்ஸ்” “ஃபார் எ ஃபியூ டாலர்ஸ் மோர்” “த குட், த பேட் அண்ட் தி அக்லி”, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் த வெஸ்ட்’, ‘எ ஃபிஸ்ட்ஃபுள் ஆஃப் டைனமைட்’ ஆகிய லியோனியின் படங்களுக்கு அவர் அமைத்த பின்னணி இசை, தனித் தொகுப்புகளாக ஆடியோ சந்தையில் பெரும் விற்பனைச் சாதனைகளைச் செய்திருக்கின்றன.

இயக்குநர் லியோனி, ஸ்பாகட்டி வெஸ்டர்ன் வகையிலிருந்து வெளிவந்து அமெரிக்கத் தயாரிப்பாளர்களுக்காக இயக்கிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா’, உலகின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குவதற்கு மோரிகோனி அமைத்த மென்மையான இசையும் காரணம். புல்லாங்குழல் இழையோடும் டைட்டில் இசை நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடியது. கதாநாயகிக் கதாபாத்திரத்துக்கான தீம் இசையும் மிகப் பிரபலமானது. ஆனால் அந்தப் படத்துக்காக அவருக்கு ஆஸ்கார் நாமினேஷன்கூட கிடைக்கவில்லை.

ரோலண்ட் ஜோஃபே இயக்கிய ‘த மிஷன்’ படத்துக்கு அவர் அமைத்த இசை, தெய்வீகம்! வேறு எப்படியும் அதை விவரிக்க முடியாது. ‘ஓபோ’ என்கிற மரத்தாலான குழல் இசைக் கருவியுடன் எளிமையாக ஆரம்பித்து விரிந்து நிறையும் அதன் தீம் இசையைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நம் கண்கள் பனிக்கும். பின்னணி இசை ஒரு படத்துக்கு எத்தனை ஆழத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்போதும் சொல்லப்படும் படம் அது. அந்த இசைக்கு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்தது, ஆனால் விருது கிடைக்கவில்லை. ஆஸ்கார் விருதுகளின்மேல் நம்பிக்கையை இழக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்று அது.

பிரையான் டி பால்மா இயக்கிய ‘தி அன்டச்சபிள்ஸ்’, பேரி லெவின்ஸ்டனின் ‘டிஸ்குளோசர்’, வுல்ஃப்கேங் பீட்டர்சனின் ‘இன் த லைன் ஆஃப் ஃபயர்’, மைக் நிக்கோலஸின் ‘வுல்ஃப்’ போன்ற பல ஹாலிவுட் வெற்றிப் படங்களையும், பல ஃபிரஞ்சுப் படங்களையும் செய்தபடியே, தன் நாடான இத்தாலியிலும் தொடர்ந்து பணியாற்றினார் அவர். கெஸெபி டோர்னேடோரியின் ‘சினிமா பாரடிஸோ’, ‘மெலினா’, ‘ஸ்டார் மேக்கர்’ ‘லெஜண்ட் ஆஃப் 1900’, ‘பாரியா’ போன்ற உலகப் புகழ்பெற்ற இத்தாலிப் படங்களில் அவருடைய அற்புதமான இசையைக் கேட்கலாம்.

குவெண்டின் டரண்டினோ தன் படங்களுக்கென்று தனியாக இசையமைப்பாளரை வைத்துக்கொள்பவர் அல்ல. காட்சிகளுக்குப் பொருத்தமான இசையை வெவ்வேறு இசைக் கலைஞர்களின் ஆல்பங்களிலிருந்து தேர்ந்தெடுத்து அவற்றுக்கான உரிமத்தைப் பெற்றுப் பயன்படுத்திக்கொள்வார். அப்படி அவர் தன்னுடைய பல படங்களுக்குத் தன் ஆதர்ஸமான எனியோ மோரிகோனியின் இசைத் தொகுதிகளைத் தொடர்ந்து பயன்படுத்தியபடியேதான் இருந்தார். இப்போது ‘ஹேட்ஃபுள் எயிட்’ படத்துக்கு அவரையே முழுமையாக இசையமைக்கவைத்திருக்கிறார். எனியோ மோரிகோனியின் திரை இசைப் பயணம் முழு வட்டத்தை அடைந்ததுபோல, அவருக்கு ஆரம்பத்தில் புகழ் சேர்த்த ஸ்பாகட்டி வெஸ்டர்ன் பாணியிலேயே மிகச் சிறப்பாக இந்தப் படத்துக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

அதற்கு கோல்டன் குளோப் விருது அளிக்கப்பட்டபோது, மோரிகோனியின் சார்பாக டரண்டினோ பெற்றுக்கொண்டார். அப்போது அவர், “எனியோ மோரிகோனி என் விருப்பத்துக்குரிய இசையமைப்பாளர், நான் இசையமைப்பாளர் என்று சொல்லுவது, திரைப்பட இசையமைப்பைப் பற்றி அல்ல, அது ஒரு குப்பை, நான் பேசுவது மொஸார்ட், பீத்தோவன் போன்றவர்களைப் பற்றி” என்றார். பெரும் இசைமேதைகளின் வரிசையில் வைக்கவேண்டிய எனியோ மோரிகோனியை, இந்தத் திரைப்பட விருதுகளை வைத்து அளவிடக் கூடாது என்பதை டரண்டினோ தன் பாணியில் பொட்டில் அறைந்ததுபோல் சொல்லிவிட்டார்.

இந்திய வணிக சினிமா – XIII

கண்ணீரைப் பின்தொடர்தல்.

இந்திய நாவல்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது எது தெரியுமா?

சந்தேகமில்லாமல், ‘தேவதாஸ்‘ தான்.

சரத் சந்திர சட்டோபாத்யாயர் 1917ஆம் ஆண்டு, தன் 17ஆம் வயதில் வங்காள மொழியில் எழுதிய இந்த நாவல், இதுவரை 16 முறைக்குமேல் படமாக்கப்பட்டிருக்கிறது. ‘வாழ்வே மாயம்’ போல கொஞ்சமாகத் தழுவி எடுக்கப்பட்ட படங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

முதன்முதலில் ‘தேவ்தாஸ்’ 1927யில் மௌனப் படமாக நரேஷ் மித்ரா என்பவரால் எடுக்கப்பட்டது. பிறகு கல்கத்தாவில் படித்த அஸ்ஸாமியரான பி.சி.பருவா அதைப் பேசும் படமாக வங்காளம், இந்தி, அஸ்ஸாமி மொழிகளில் வெவ்வேறு நடிகர்களை வைத்து முறையே 1935, 1936, 1937 ஆகிய ஆண்டுகளில் எடுத்தார்.

1953ஆம் ஆண்டு வேதாந்தம் ராகவய்யாவால் தமிழ், தெலுங்கு இருமொழிப் படமாக ‘தேவதாஸ்/தேவதாசு’ எடுக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் (தேவதாஸ்), சாவித்திரி(பார்வதி), லலிதா(சந்திரமுகி) ஆகியோரின் சிறந்த நடிப்பும், பி.எஸ்.ரங்காவின் அற்புதமான ஒளிப்பதிவும், அருமையான பாடல்களும் இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றியடைய வைத்தன. அதன் பெரும்பான்மையான பாடல்களுக்கு இசையமைத்த சி.ஆர்.சுப்பராமன் இடையிலேயே காலமானதனால், விஸ்வநாதன் ராமமூர்த்தி பின்னணி இசையையும் மிகப் பிரபலமான ‘உலகே மாயம்’ பாடலையும் செய்து முதன்முதலில் கவனம் பெற்றார்கள்.

இந்தியில் 1936யில் பி.சி.பருவாவால் எடுக்கப்பட்ட ‘தேவ்தாஸ்’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிமல் ராய். பிறகு பிமல் ராய் தனியே இயக்குநராகப் பிரபலமடைந்தபின், 1955ஆம் ஆண்டு இந்தியில் மீண்டும் ‘தேவ்தாஸ்’ஐ எடுத்தார்.

திலீப்குமார் தேவதாஸாகவும், வங்காள நடிகையான சுசித்திரா சென் பார்வதியாகவும், தமிழ் நடிகையான வைஜயந்திமாலா சந்திரமுகியாகவும் நடித்திருந்தனர். வங்காள நாட்டுப்புறம் மற்றும் செவ்வியல் இசை பாணிகளை எஸ்.டி.பர்மன் வித்தியாசமாகப் பயன்படுத்தியிருந்தார். கமல் போஸ் ஒளிப்பதிவு செய்தவிதமும் மிகமிக யதார்த்தமானது. எல்லாம் சேர்ந்து அந்தப் படம் இந்தியாவின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்றாக இப்போதும் எல்லோராலும் மதிப்பிடப்படுகிறது.

பிமல் ராய்-யின் ‘தேவ்தாஸ்’ டிரைலர்:

பாகிஸ்தானில் இருமுறை இந்தக் கதை உருது மொழியில் படமாக்கப்பட்டிருக்கிறது. பங்களாதேஷ் நாட்டிலும் படமாக்கியிருக்கிறார்கள். மலையாளத்தில் வந்திருக்கிறது. வங்காளம், தெலுங்கு, இந்தியில் மீண்டும் மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் முக்கியமான படங்கள் இரண்டு. 2002யில் ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், மாதுரி தீஷித் நடித்து, இஸ்மாயில் தர்பார் இசையமைத்து, பிநோத் பிரதான் ஒளிப்பதிவு செய்து, சஞ்சை லீலா பன்சாலி மிகுந்த அழகுணர்ச்சியோடு பிரம்மாண்டமாக இயக்கிய படம்.

மற்றொன்று, இவை எதுவுமே இல்லாமல் ஆனால் கதை நம் காலத்தில் நடப்பதுபோல் மிகுந்த நுண்ணுணர்வோடு மாற்றப்பட்டு அனுராக் காஷ்யப்பால் 2009யில் உருவாக்கப்பட்ட நவீன தேவதாஸான, ‘தேவ். டி‘.

பிமல் ராய் மற்றும் சஞ்சை லீலா பன்சாலி படங்களின் உச்சக் காட்சிகளை ஒப்பிட்டுத் தொகுக்கப்பட்ட ஒரு வீடியோ :

இந்த சோக காவியம் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு வணிக வெற்றியையும் பெறுவது எதனால்? 

சிறந்த இந்திய நாவல்களைப் பற்றிய தனது கட்டுரைத் தொகுப்புக்கு ஜெயமோகன் இட்ட தலைப்பு ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’. காரணம், சிறந்த எல்லா இந்திய நாவல்களிலும் இருக்கும் பொதுத்தன்மை அதுதான். இந்திய சினிமாவின் பொதுத்தன்மைகூட கண்ணீர்தான் இல்லையா?

சிறுவயதில் நான் என் அம்மாவோடு சேர்ந்து பார்த்த எல்லாப் படங்களும் கண்ணீர்க் காவியங்கள் தான். படம்விட்டு திரையரங்கிலிருந்து வெளியே வருபவர்கள் எல்லாரும் அழுது சிவந்த கண்களோடு மூக்குச் சீந்தியபடி வரும் காட்சிதான் திரையரங்கு பற்றிய என் ஆரம்பகால நினைவுகளாக இருக்கின்றன.

அப்போதெல்லாம் தமிழகத்தின் எந்த ஊரிலும் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். பக்கத்துத் திரையரங்குகளில் ரஜினியும், கமலும் சண்டையிட்டுக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால், கூட்டமாகப் பெண்கள் குழந்தைகளுடன், பீம் சிங் இயக்கிய ஏதாவது ஒரு ‘ப’வரிசைப் படத்தின் புத்தம்புதிய காபியைப் பார்க்க பகல் காட்சிக்குச் சென்றுகொண்டிருப்பார்கள்.

ஒரு கேஸ்ட் முழுவதும் சோகப் பாடல்களைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு எப்போதும் கேட்டுக்கொண்டிருந்த தேவதாஸ்கள் தெருவுக்கு ஒருவர் அப்போது இருந்தார்கள்.

குடும்பச் சித்திரங்கள் என்று அழைக்கப்பட்ட அழுவாச்சி காவியங்கள் மட்டுமல்ல, எந்த வகையான படத்திலும் ஒரு சோகப் பாட்டாவது இருக்கும். வெறும் சோகமாக இல்லாமல் காவிய சோகமாக அது மாறுமென்றால், தத்துவப் பாடலாகப் பரிணமிக்கும்.

இந்தத் தொடர் முழுவதும், இந்திய சினிமாவின் பொற்காலமான 40கள் முதல் 60கள் வரையான காலத்தின் இந்திப் படங்களின் வீடியோ லிங்குகளை இறுதியில் கொடுத்து வந்திருக்கிறேன். இந்தக் கட்டுரையின் இறுதியிலும் இந்திப் படப் பாட்டுத்தான் ஆனால் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது.

‘அவன்’ என்கிற ராஜ் கபூர், நர்கீஸ் நடித்த இந்தி டப்பிங் படம், ஒருவகையில் தேவதாஸ் பாணியிலான சோக காவியம். ஒரு படத்துக்குள் எத்தனை விதமான சோகப்பாடல்கள் பாருங்கள். ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடிய இந்தப் பாடல்களில், “அன்பே வா”வும் “கல்யாண ஊர்வலம் வரும்”மும் முன்பு வானொலியில் ஒலிக்கக் கேட்டிருக்கலாம்.

இதில் கடைசியாக இருப்பது ஒரு தத்துவப் பாட்டு. பொதுவாகப் பழைய படங்களில் இவ்வகைப் பாடல்களை யாரோ ஒரு வழிப்போக்கர், அல்லது படகோட்டி பாடுவதுபோல் வைப்பார்கள். இதில் ஒரு குதிரை வண்டிக்காரர் பாடுகிறார். இந்தியில் ராஜ்கபூருக்கு வழக்கமாகக் குரல்கொடுக்கும் முகேஷ் இதில் அவரே நடித்துப் பாடியிருக்கிறார். தமிழில் ஏ.எம்.ராஜா அவருக்குக் குரல்கொடுத்திருக்கிறார்.

இந்திய வணிக சினிமா – XII

தொழில்நுட்பப் பாலம்.

சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம். மக்களின் மனதில் கருத்துக்களை விதைக்கும் பிரச்சாரக் கருவியாக அது செயல்பட முடியும் என்பதைச் சென்ற பதிவில் பார்த்தோம். ஒன்றின்மேல் நம்பகத்தையோ அவநம்பிக்கையையோ எளிதில் உண்டாக்கிவிட அதனால் முடியும். சினிமாவில் ‘சொல்லப்படும்’ கருத்துக்கள், வீர வசனங்கள் பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை. பார்வையாளர்கள் உணராமலேயே கூட ஒரு எண்ணத்தை அவர்கள் மனதில் வலுவாகப் பதித்துவிட சினிமாவால் முடியும்.

இயக்குநர்கள் இதை உணராமல் பொறுப்பற்ற விதத்தில் படமெடுத்துவிடக் கூடாது. சினிமாக் கலைஞன் அடிப்படையில் நீதியுணர்வும், சமூக அக்கறையும் கொண்டவனாக இருப்பது அவசியம். தொழில்நுட்பச் சாதனையாளர்களை விடவும், மக்கள் நலன்விரும்பிய கலைஞர்களையே உலகம் விரும்பியிருக்கிறது.

சினிமாவுக்குச் சமூகப் பருப்பெல்லாம் தேவையில்லை என்று அலட்சியமாகச் சொல்பவர்கள் அதிகமும் உதாரணம் காட்டுவது குவெண்டின் டரண்டினோவை. அவர் படங்களில் வன்முறையும் குரூரமும் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கூர்ந்து பார்த்தால், அவரது ஒவ்வொரு படமும் பாதிக்கப்பட்டவர்களின் கதையாக மட்டுமே இருப்பதைக் காணலாம். மையக் கதாபாத்திரம் கோபம்கொள்வதற்கான எல்லாவித நியாயங்களையும் அவர் காட்டாமல் விட்டதே இல்லை.

சினிமா, பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மட்டும்தான் ஒலிக்க முடியும். அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீரோடு நிற்பவர்களின் சார்பாக மட்டுமே அதனால் பேச முடியும். ஏழைகளின் ஆதரவற்றவர்களின் பக்கத்தில் நின்றபடி அதிகாரப் பீடங்களைக் கேள்வி கேட்பதாகவே ஒட்டுமொத்தமாக சினிமா இருக்கிறது என்பதைக் கவனிக்கலாம்.

சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலப் படங்களில் மதநல்லிணக்கம், சமத்துவம், ஒற்றுமை, தேசபக்தி போன்றவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். ஆனால் அந்த அளவுக்குத் தீண்டாமை ஒழிப்பு பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது. முக்கியக் காரணம், அப்போது திரையரங்குக்கு வந்து படம்பார்த்தவர்கள் பெரும்பாலும் மேல்சாதிக்காரர்களாக இருந்ததனால், அவர்களைத் திருப்திப்படுத்தும் படங்களையே திரை முதலாளிகள் எடுத்தார்கள்.

சினிமாவுக்குச் செல்வதே ஒரு ஆடம்பரமாக இருந்த நிலைமை மாறி, அனைவரும் பார்க்கும் வகையில் நிறைய திரையரங்குகள் கட்டப்படத் தொடங்கியதும், திரைக்கதையின் பேசுபொருள் மாறியதை அவதானிக்க முடிகிறது. இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வைப் பதிவு செய்வதில் வடநாட்டு வணிக சினிமா தொடர்ந்து ஒரு தீண்டாமையைக் கடைப்பிடித்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் சுதந்திரத்திற்கு முன்பே தீண்டாமைக்கு எதிராக மிகத் துணிச்சலாக ஒரு படம் எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கிறது.

1936யில் ஹிமான்சு ராயின் பாம்பே டாக்கீஸ் தயாரித்து அசோக்குமார் தேவிகா ராணி நடித்த ‘அசுத் கன்யா’ (தீண்டத்தகாத பெண்), தாழ்த்தப்பட்ட கதாபாத்திரத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்ட முதல் இந்திப் படம். ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு வந்து நிறைய படங்களை எடுத்த ஃபிரான்ஸ் ஓஸ்டன் இந்தப் படத்தை இயக்கினார்.

ஓர் உயர்சாதி இளைஞனும் தீண்டத்தகாத பெண்ணும் சிறுவயதுமுதல் காதலிக்கிறார்கள். ஆனால் சமூக நிர்ப்பந்தத்தால் பிரிந்து தங்கள் சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் திருமணத்துக்குப் பின்னும் அவர்களால் முதல் காதலை மறக்க முடியவில்லை. இது இரு குடும்பங்களுக்குள்ளும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ரயில்வேயில் அடிமட்டப் பணியாளனாக இருக்கும் நாயகியின் கணவன், வியாபாரியான அவளது முன்னாள் காதலனைக் கொல்வதற்காக வருகிறான். ரயில்வே கிராஸிங்கில் சண்டை நடக்கிறது, அப்போது ரயில் வர, அவர்களைக் காப்பதற்காக பெண் ரயிலை நிறுத்த முயன்று அதில் மோதி இறக்கிறாள். அந்தத் தியாகத்திற்காக ஊரார் அவளைத் தெய்வமாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள் என்பது கதை.

வணிக சினிமாவில் எப்போதும் சாதிப் பிரச்சனையை வெறும் ஒரு காதல் கதையாகச் சுருக்கிவிடுவார்கள் என்கிற குற்றச்சாட்டு விமர்சகர்களிடம் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள், இன்று பெரும்பாலும் தீண்டாமை இல்லைதான், நகரங்களில் ஒரே தெருவில் பல சாதியினரும் வசிக்கிறார்கள், பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள், அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது? மற்ற சாதியினருள் கூட கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. ஆனால் தாழ்த்தப்பட்ட பையனோ பெண்ணோ வேறு சாதியினரைக் காதலிக்கவோ திருமணம் செய்துகொள்ளவோ முயன்றால் என்ன நடக்கிறது? இரயில்வே தண்டவாளத்தில் சடலமாக அல்லவா கிடக்க நேர்கிறது, ‘அசுத் கன்யா’வின் நாயகியைப் போல? கலப்புத் திருமணங்கள் மட்டும்தானே சாதியை முற்றாக ஒழிக்க முடியும்? அதைத்தானே சினிமா காலங்காலமாக வலியுறுத்திக்கொண்டிருக்கிறது?

மானுடம் பெருவாரியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும் எந்தப் புதிய தொழில்நுட்பமும் ஏதோ ஒருவகையில் மனிதர்களை இணைப்பதற்கானவையாகவே இருக்கின்றன. வண்டிச் சக்கரத்தில் ஆரம்பித்து நவீன காலத்தின் தொலைத்தொடர்பு சாதனங்கள், இணையம் வரையில் இந்தப் பொதுத்தன்மை இருப்பதைப் பார்க்கலாம். சாதி மதம் அரசியல் என்று பிரியவேண்டிய சமூகக் காரணங்களை உருவாக்கும் மானுடம் அதற்கு எதிர் விசையாகத் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்குகிறது என்று நான் நினைப்பதுண்டு. சினிமா என்கிற தொழில்நுட்பம் மானுடத்துக்கு அளித்த பயனும் இந்த இணைப்புத்தான். இதைப் பற்றி காற்றுக்கு வேலி இல்லை என்ற எனது கட்டுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். 

ஜெயமோகன் ‘செல்லுலாய்ட்’ படம்பற்றி எழுதிய கட்டுரையில், சினிமா என்கிற தொழில்நுட்பம் யதார்த்தத்தை தலைகீழாகப் புரட்டிக் காட்டக்கூடியது என்று குறிப்பிடுகிறார். கேரளத்தின் முதல் படமான ‘விகதகுமாரன்’ஐ தமிழரான டேனியல் 1928யில் எடுத்தபோது, ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை படத்தில் நாயர் பெண்ணாக நடிக்கவைத்தார். சினிமாவின் யதார்த்தம் வெளியிலிருக்கும் யதார்த்தத்துக்கு நேர்மாறக இருக்கலாம் என்பதை அன்று பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருவனந்தபுரத்தின் கேபிட்டல் திரையரங்கில் அது வெளியான தினத்தில் பெரும் கலவரமே வெடித்தது. இந்த வரலாற்றையே ‘செல்லுலாய்ட்’ படத்தில் இயக்குநர் கமல் பதிவுசெய்தார்.

சாதிக்கு எதிரான முக்கியமான இன்னொரு ஆரம்பகாலப் படம் 1959யில் பிமல் ராய் இயக்கிய ‘சுஜாதா’. இந்திய இயக்குநர்களில் முக்கியமான ஒருவரான பிமல் ராய் சமூக அக்கறையுள்ள வணிகப் படங்களை எடுத்த முன்னோடி. இவருடைய ‘மதுமதி’ படத்தைப் பற்றி முந்தைய கட்டுரையில் நாம் பார்த்திருக்கிறோம். ‘தோ பீகா ஜமீன்’ அவருடைய முக்கியமான கலைப் படைப்பு.

‘சுஜாதா’ படத்தின் கதை எளிமையானது. ஒரு தாழ்த்தப்பட்ட அநாதைப் பெண்ணான சுஜாதா உயர்சாதிக் குடும்பத்தின் ஆதரவில் அவர்கள் வீட்டில் வளர்கிறாள். தன் குடும்பமென்றே அதை நினைக்கிறாள். அவள் தன்னை மகளாக உணர்ந்தாளும், வளர்க்கும் அன்னை அவள் சாதியால் தாழ்ந்தவள் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவூட்டிப் பிரித்துவைத்தபடியே இருக்கிறாள். இறுதியில், அந்தத் தாய் விபத்தில் அடிபட, அவளது சிகிச்சைக்குத் தேவையான அரிய வகை ரத்தம் கிடைக்கவில்லை. சுஜாதா ரத்தம் கொடுக்கிறாள். தாயின் சாதி மேட்டிமை எண்ணத்தை அந்த ரத்தம் கழுவிச் சுத்தமாக்குகிறது. சுபம்.

அந்தப் படத்தில் ஒரு புகழ்பெற்ற தொலைபேசிப் பாடல் இருக்கிறது. தொலைபேசியின் ஒரு முனையில் சுஜாதா அழுதபடி இருக்கிறாள். மறுமுனையில் உயர்சாதி நாயகன் சிரித்தபடிப் பாடுகிறான். இருவேறு உலகங்களில் இருக்கும் அவர்களை இணைக்கும் பாலமாகத் தொலைபேசி என்கிற தொழில்நுட்பம் அங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, சினிமா என்கிற தொழில்நுட்பத்தைப் போலவே.

இந்திய வணிக சினிமா – XI

தேசத்தின் குரல்
இந்திய சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படும் 40கள் முதல் 60கள் வரையான காலகட்டம் மிக முக்கியமானது. சுதந்திரம் பெற்ற இந்தியா தன்னை ஒரு தேசமாகக் கட்டமைத்துக்கொண்ட காலகட்டம் அது. நேருவின் தலைமையில் பிரிவினைக்கு எதிராகவும் பஞ்சத்துக்கு எதிராகவும் போராடியபடியே வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளங்களை அமைத்துக்கொண்ட காலம். Continue reading “இந்திய வணிக சினிமா – XI”

இந்திய வணிக சினிமா – X

கனவுச் சொர்க்கமும் நரகமும்.
சினிமாவைக் கனவுத் தொழிற்சாலை என்று சொல்வதுண்டு. இருண்ட அரங்குக்குள் அனைத்துப் பார்வையாளர்களும் சேர்ந்து காணும் ஒரு ‘கூட்டுக் கனவு’தானே சினிமா? Continue reading “இந்திய வணிக சினிமா – X”

இந்திய வணிக சினிமா – IX

கிளப் டான்ஸ்.

வெகுமக்கள் இசை, இந்தியாவில் திரை இசையாக மட்டும் இயங்குவது போலவே, வெகுமக்கள் நடனம் என்பதும் திரை நடனம் மட்டும்தான். மரபு நடனங்கள், நாட்டுப்புற நடனங்கள் தவிர்த்து வெகுஜனத்துக்கான ஒரு பொது நடனப்போக்கு இந்தியாவில் திரைப்படங்களில் மட்டுமே இருக்கிறது. Continue reading “இந்திய வணிக சினிமா – IX”

இந்திய வணிக சினிமா – VIII


பொழுதுபோக்கின் பொதுப்போக்கு

இந்திய சினிமாவின் பொற்காலமான 1940கள் முதல் 1960கள் வரையான காலகட்டத்தில் வெளிவந்த இந்திப் படங்களின் முக்கியமான காட்சிகளை முன்வைத்து, வணிக சினிமாவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் நான் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன். இந்தி சினிமாவை ஏன் ஆராய வேண்டும்? ஏனென்றால் அதன் போக்கைப் பின்பற்றித்தான் தமிழ் சினிமாவின் அடிப்படைகள் உருவாகிவந்தன. Continue reading “இந்திய வணிக சினிமா – VIII”

இந்திய வணிக சினிமா – VII


தரமான வணிகம்.

வணிக சினிமா என்று நான் குறிப்பிடுவது மிக அதிகப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கத்தோடு, அவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கையும், அதை எடுப்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கும் நோக்கத்தோடு எடுக்கப்படுபவை. Continue reading “இந்திய வணிக சினிமா – VII”

இந்திய வணிக சினிமா – VI

மறுஜென்மமும், பேய் பங்களாவும்

மேற்குலகில், 1818யில் மேரி ஷெல்லி எழுதிய அறிவியல் புனைவான ‘ஃபிராங்கன்ஸ்டைன்’ மற்றும் 1897யில் பிராம் ஸ்டோகர் எழுதிய பேய்க்கதையான ‘டிராகுலா’ ஆகிய நாவல்களைப் பின்பற்றி இதுவரை எத்தனைப் படங்கள் வந்திருக்கின்றன என்பதற்குக் கணக்கே இல்லை. போரிஸ் கர்லாஃப், கிறிஸ்டோபர் லீ போன்ற நடிகர்கள் அந்தக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெரும்புகழ் பெற்றிருக்கிறார்கள். Continue reading “இந்திய வணிக சினிமா – VI”

இந்திய வணிக சினிமா – V


பேசும் படமா? பாடும் படமா?

இந்தியத் திரை உலகம், இசை உலகையும் சேர்த்துத் தானே விழுங்கிவிட்டது என்று முந்தைய பகுதியில் எழுதியிருந்தேன். அது ஒரு கோணம் மட்டுமே. இன்னொரு கோணத்தில், இசை உலகம் திரை உலகத்தை விழுங்கிவிட்டது என்றும் சொல்லலாம். Continue reading “இந்திய வணிக சினிமா – V”

இந்திய வணிக சினிமா – IV

மக்கள் இசை
வெளிநாட்டினர், இந்திய வணிக சினிமா அல்லது பாலிவுட் சினிமா என்றாலே, அதில் பாடல்கள் இருக்கும் என்பதைத்தான் தனித்துவமாகச் சொல்வார்கள். இந்திய சினிமாக்கள் எல்லாமே இசைப் படங்கள் (மியூஸிக்கல்) என்றே அவர்கள் வகைப்படுத்துவார்கள். பாடல் ஆடல் கொண்ட படங்கள் அங்கு மியூஸிக்கல் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தனி வகையாக மட்டுமே இருக்க, பெரும்பான்மையான படங்களில் பாடல் இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். Continue reading “இந்திய வணிக சினிமா – IV”

இந்திய வணிக சினிமா – III

ராக் ஸ்டார்
வணிக சினிமாவை வெறுப்பவர்கள் முதன்மையாகச் சொல்லும் குற்றச்சாட்டே, நடிகர்களின் பின்னால் வெறிபிடித்து அலையும் இளைஞர்களை, ரசிகர் மன்ற செயல்பாடுகளைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலாவது இந்த மாதிரிப் பைத்தியக்காரத்தனம் உண்டா என்று அவர்கள் கோபமாகக் கேட்கும்போது எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கும். இவர்கள் உலகில் என்ன நடக்கிறதென்று உண்மையிலேயே தெரிந்துவைத்திருக்கிறார்களா இல்லையா? Continue reading “இந்திய வணிக சினிமா – III”

இந்திய வணிக சினிமா – II

உணர்ச்சிகரம்

இந்திய வணிக சினிமா அளவுக்கு உணர்ச்சிமயமாகக் கதைசொல்லுவது வேறு எந்த நாட்டிலும் இல்லை. காரணம் எளிதுதான், இந்தியர்களே பொதுவாக உணர்ச்சிகரமானவர்கள்தான். இன்று நாம் ஓவர் ஆக்டிங் என்று சொல்லும் பல பழைய நடிகர்களின் நடிப்பு உண்மையில் அன்றிருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைந்ததுதான். Continue reading “இந்திய வணிக சினிமா – II”

இந்திய வணிக சினிமா – I

பொதுவாக வணிக சினிமா பற்றி ஆராய்ந்து எழுத யாரும் முன்வருவதில்லை. வணிக சினிமா என்பது மூளை இல்லாதவர்களால் மூளை இல்லாதவர்களுக்காக எடுக்கப்படுவது என்கிற மேட்டிமையான எண்ணம் பொதுவாக எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால் வெகுஜன மக்களின் ஆசைகளை, லட்சியங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை, கோபங்களை எல்லாம் முழுக்கப் புரிந்துகொண்டவை வணிக சினிமாக்கள்தான். அதை ஆராய்வது ஒருவகையில் எளிய மக்களின் கூட்டு மனத்தை ஆராய்வதுதான் என்று நான் நம்புகிறேன். Continue reading “இந்திய வணிக சினிமா – I”

ஒரு நவீன மந்திரக்கோல்

 imagesசினிமா வட்டாரத்தில் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட “ஸ்டாப் பிளாக்கில மறைஞ்சு போயிட்டான்” என்று சொல்வது உண்டு. ஸ்டாப் பிளாக் என்கிற தந்திரம் சினிமாவுக்குள் நுழைந்த மிகப்பழமையான உத்திகளுள் ஒன்று. திரைக்கதையின் அடிப்படை நுட்பங்கள் கூட உருவாகியிருக்காத காலத்திலேயே இந்தத் தொழில்நுட்பம் தோன்றிவிட்டது. அத்தனைப் பழசு. Continue reading “ஒரு நவீன மந்திரக்கோல்”

எரியும் ‘பரதேசி’க் காடு

Paradesi

உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம் 

Continue reading “எரியும் ‘பரதேசி’க் காடு”

காற்றுக்கு வேலி இல்லை

[டூரிங் டாக்கீஸ் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரை]

.
CharlesChaplin-TheGreatDictatorசார்லி
சாப்ளின் இயக்கி நடித்த தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஒரு காட்சி வருகிறது- கட்டாயத்தால் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பயந்த சுபாவமுள்ள நாயகன், போர்க்களத்தில் தன்னுடைய படையுடன் அணிவகுத்துச் செல்கிறான். குண்டுகள் வெடித்து எங்கும் புகைமூட்டமாக இருக்க, அதனூடே அந்தப் படைப்பிரிவு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு அதிகரிக்க புகைமூட்டமும் அதிகரிக்கிறது, எதிரில் என்ன இருக்கிறதென்று தெரியாத புகைக்குள் நாயகன் செல்கிறான். ஒருகட்டத்தில் புகை குறைந்து காட்சி தெளிவாகிறது, இப்போதும் நாயகன் படையில் அணிவகுத்தபடிதான் சென்றுகொண்டிருக்கிறான், ஆனால் ஏதோ தவறாக இருப்பதாக அவனுக்குப் படுகிறது. Continue reading “காற்றுக்கு வேலி இல்லை”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 3

rajini_3விமர்சகர்களை மட்டும் குறைசொல்ல முடியாது. தமிழகத்தின் சாதாரணப் பார்வையாளர்களிலிருந்து விஷயம் தெரிந்தவர்கள் வரை நாம் எல்லாருமே எல்லாவற்றையுமே அரசியலாக்கித்தான் பார்க்கிறோம். நாம் ரசிக்கும் அல்லது வெறுக்கும் எதையும் ஒட்டுமொத்தமான சூழலில் இருக்கும் நியாய அநியாயங்களோடு இணைத்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். நம்முடைய பண்பாட்டிலேயே இந்தக் குணம் எப்படியோ ஒட்டிக்கொண்டிருக்கிறது. Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 3”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 2

bicycle-thieves

இணையத்தில் பரவலாகக் கண்ணில்படுவனவற்றை வாசிக்கையில் ஒன்றை உணரமுடிகிறது. ஒரு நல்ல சினிமா என்பது சமகால அரசியலைப் பற்றிப் பேசியிருக்கவேண்டும் என்கிற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. கலையம்சம் என்பதை இரண்டாமிடத்திலேயே வைக்கிறார்கள். ஒரு படம் POLITICALLY CORRECT—ஆக இருக்கிறது என்பதற்காகவே அது எத்தனை மோசமாக இருந்தாலும் கொண்டாடுகிறார்கள். தான் நம்பும் அரசியலுக்கு எதிராக இருக்கிறது என்பதாலேயே ஒரு படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் பிடிவாதமாக நிராகரிக்கிறார்கள். Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 2”

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 1

Neerparavai-movie

இணையத்தில் கேபிள் சங்கர் போன்றவர்கள் எழுதுவது ரிவ்வியூ வகை விமர்சனங்கள். ஒரு படம் வெளியானவுடன் சுடச்சுட எழுதப்படுபவை. அதன் வாசகர்கள் அதைப் படித்துப் படத்தைப் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள். Continue reading “எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 1”

Create a free website or blog at WordPress.com.

Up ↑