Leaf

.

மாற்றங்களேதுமில்லாத அந்த மரத்தின் அருகாமை

மீண்டும் சிறுவனாகவே உணர்த்துகிறது

அதில் இன்னும் கூட

வெளிச்சம்

எத்தனையோ மாயைகளை உருவாக்குகிறது..

ஒளிபட்ட இலைகளில் பளிச்சிடும் இளமை

நிழலிலிருக்கும் இலைகளில் முதுமையின் கணம்..

.

என் நெருங்கிய நண்பன் கேட்டான்

நடிகர்களுக்கு சீக்கிரம் வயதாவதில்லையே எப்படி..

சினிமா தொலைக்காட்சி சென்னை பற்றி

அவன் கேட்கும் ஐநூற்றுப் பத்தாவது கேள்வி..

.

பயமளிக்கும் முதிர்ந்த தோற்றத்துடன்

இன்னொரு பால்ய நண்பன் எதிர்ப்பட்டான்.

பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு

அக்காள் மகளை மணம்செய்தவன்.

நாங்கள் பத்தாம் வகுப்புப் பரிட்சையெழுதியபோது

தான் அப்பாவாகிவிட்டதாக மிட்டாய் கொடுத்தவன்.

.

தன் மூத்த மகளுக்கு

வரன் பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான்

அவன் விழிகளுக்கு அடியில் விழுந்திருந்த நிழல்

என்னையும் வயதானவனாக்குகிறது

துணுக்குற்று ஓடிவிடத் தோன்றுகிறது

கையிலிருக்கும் என் திருமண அழைப்பிதழ்

தூக்கமுடியாத அளவுக்கு கணக்கிறது..

.

Advertisements