mfhusain

.

அம்புப் படுக்கையில்

ஓய்வு..

.

உடலைத் தாங்கி நிற்கும்

நூறு கூர்முனைகளும்

சதையை ஊடுறுவி

எலும்புகளில்

முட்டுகின்றன..

.

அன்னாந்த கண்களைக்

கூசிக் கிழித்தது

பகலின் பேரொளி.

ஒவ்வொரு

மயிர்க் கண்ணிலும்

ஊசி நுழைத்தது

இரவின் கடுங்குளிர்

.

தாகத்தில் மிதக்கும்

வறண்ட நாக்கில்

சொட்டிச் சுவைத்தது

இயலாமையின் ரணம்..

.

அம்புப் படுக்கையில்

துர்க்கனவுகள் இல்லை

சொல்லப்போனால்

எந்தக் கனவுகளுமே இல்லை.

.

அம்புப் படுக்கையில்

நம்மீதன்றி

எவர்மீதும் வெறுப்பில்லை..

பழிவாங்கும் எண்ணமில்லை

எதிரிகள் யாரென்றும்

நினைவில்லை..

.

இப்போது

முடிந்து போய்விடுவதிலிருந்த

பயம் முடிந்து

முடியாமலேயே நீண்டுவிடுமோ

என்ற பயம்தான்

தொடங்கியிருக்கிறது.

.

Advertisements