.

பெருகி வழிந்தது மயக்கம்

.

நடைக்கும் நடனத்துக்குமான மயக்கம்

கனவுக்கும் விழிப்புக்குமான மயக்கம்

மூளையின் கட்டிழந்து மயங்கும் உடல்மொழிகள்..

சம்பிரதாயப் பேச்சுத் தூரல்கள் வலுத்து

சவால்களும் கொந்தளிப்பும் எக்காளமுமாய்

அடைமழை போல் இரையத் தொடங்கியது அவை.

.

மழலை பேசும் சான்றோர்கள்

அழுதுதீர்க்கும் அறிஞர்கள்

குரலோங்கி முழங்கும் அப்ராணிகள்

குரலிழந்து முனங்கும் பேச்சாளர்கள்.

.

தருமிகளாக மாறிய கருமிகள்

பர்சைத் திறந்தார்கள்.

அதுவரை சுயகவனத்தை மட்டுமே

சுமந்திருந்த பெண்கள்

வெட்கம் துறந்தார்கள்.

பெருக்.. வழிந்.. போ..தை.. மயங்..

என்னைத் தன் வாகனத்தில்

வீடுசேர்த்தே தீர்வதாக

அடம்பிடித்து சத்தியம் வாங்கியிருக்கும் நண்பன்

சுயநினைவின்றி பிதற்றிக்கொண்டிருந்தான்

நான் வீட்டை அடைவேனோ

வீடுபேற்றை அடைவேனோ

கவலையோடு சேர்ந்து

என் பீர்க்குவளையும் நுரைத்து வழிந்தது...

Advertisements