நான் சென்ற ஆண்டு முழுவதும் மூழ்கியிருந்தது ‘ரோஜாக் கூட்டம்’ என்னும் தொலைக்காட்சித் தொடரில்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தத் தொடரை நான் இயக்கினேன். டிசம்பர் 2008யில் இதன் படப்பிடிப்பு ஆரம்பித்தது. சரியாக ஓராண்டு முடிந்தபோது, 2009 டிசம்பர் முதல் வாரத்தில் இந்தத் தொடரிலிருந்து என்னை நானே விடுவித்துக் கொண்டேன். தொடர் இப்போதும் தொடர்ந்து போய்க்கொண்டுதானிருக்கிறது.

தினசரித் தொடர் இயக்குவதென்பது மிகவும் சலிப்பூட்டும் ஒரு வேலை. ஆரம்பிக்கிற காலத்தில் மிக அதிக வேலைவைப்பதாகவும், முதல் ஆறுமாதங்கள் தாண்டும்போதே மெல்ல மெல்ல அது ஒரு தினசரி வழமையான அலுவலக வேலைபோல ஆக ஆரம்பித்து, படைப்பூக்கத்தை முழுக்க மழுங்கடித்துவிடுவதாகவும் மாறிவிடும். எனவே நான் வேலை செய்த எல்லா தொடர்களிலும், 100 எபிசோடுகளை நெருங்குகிறபோதே சமயம்பார்த்து மெல்ல விலகிவிடுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

ஆனால் நான் அதிக நாட்கள் வேலை செய்தது (165 எபிசோடுகள் என்று நினைக்கிறேன்) இந்தத் தொடரில்தான். காரணம் இதன் தயாரிப்பாளர் அந்தோணி திருநெல்வேலி (‘நீயா நானா’ நிகழ்ச்சியின் இயக்குனர்) பதினைந்து வருடங்களாகவே எனக்கு நல்ல நண்பர். மேலும் இதன் ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா எல்லாருமே நல்ல நண்பர்கள்.

ஒவ்வொரு மாதமும் கதைவிவாதம், படப்பிடிப்பிற்கான முன்னேற்பாடுகள், மாதத்திற்கு 15-20 நாட்கள் படப்பிடிப்பு, படத்தொகுப்பு மற்றும் ஒலிக்கலவை மேற்பார்வை என்று ஒருநாள் கூட ஓய்வில்லாமல் வேலை செய்துவிட்டு இப்போது மாதம் முழுவதும் ‘சும்மா’ இருப்பதில் இருக்கும் சுகம்.. அப்பப்பா.. அதை வார்த்தையால் விவரிக்கத் தெரியவில்லை.. சோம்பலின் சுகமான போதை என்று அதை வகைப்படுத்தலாம்.

அந்த போதை சில கிறுக்குத்தனங்களையும் அளிக்கிறது. இல்லையென்றால் இணையத்தில் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, யாரும் படிக்கவேபோவதில்லை என்று நான் நினைத்து ஒளித்து வைத்திருந்த கவிதைகளை, ‘வேர்ல்ட் வைட் வெப்’பிலேயே போடும் தைரியம் எனக்கு வந்திருக்கவே வந்திருக்காது.

Advertisements