Angel

.

அவனை இயக்கும் எல்லாப் பல்சக்கரங்களும்

நான்கு மையங்களிலேயே சுழன்று கொண்டிருந்தன..

இமேஜ்.. மார்க்கெட்.. பார்ட்டி.. செக்ஸ்..

.

பல்வேறு யோனிக் குழிகளில்

பாய்ந்து வழிந்து ஓடிக்கொண்டிருந்தன

அவனது இரவுகள்..

.

தான் ஒரு நட்சத்திரம் என்று

அடிக்கடி அவன் சொல்லிக்ண்டான்..

சுற்றியிருக்கும் எல்லாரும் அவனை

தேவதூதனைப் போலத்தான் நடத்தினார்கள்..

இருந்தும் அவன் யாருக்காக சொல்கிறான்?

ஒருவேளை அது தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும்

சமாதானமாகவும் இருக்கலாம்

.

எல்லார் கண்களும் தன்மீதே இருப்பதை

அவன் எப்போதும் உணர்ந்திருந்தான்

உற்றுப்பார்க்கும் அந்தக் கண்களிலிருந்தே

வற்றாத உற்சாகத்தைப் பருகி

இளமையை நீட்டித்தான்..

யாரும் திரும்பிப் பார்க்காத ஒரு வெளி

பயங்கரக் கனவுகளில் மட்டுமே

அவன் கானக்கூடியதாய் இருந்தது..

.

அழைத்தால் எந்தப் பெண்ணும்

படுக்கைக்கு வருவாள் என்று நம்பினான்..

செத்தாலும் புகழ் உடம்பைப்

போர்த்தியபடி வாழ்வேனென்று கர்வம் கொண்டான்..

.

ஒரு பார்ட்டியில்

நன்றாகக் குடித்துவிட்டு

கர்வத்தையும் சட்டையையும்

கழற்றிப் போட்டவனாய்

நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்தபின்பு

.

அழுதான்…

.

தன்னை உண்மையாய் நேசிப்பவர்கள்

எவருமே இல்லை என்று தழுதழுத்தான்..

.

நான் ஊமையைப்போல் இருந்தேன்

ஏனென்றால்..

அவனை நோக்கி

நீ மட்டும் உண்மையாய்

ஒருவரையாவது நேசித்திருப்பாயா என்று

திருப்பிக் கேட்ட எவரோடும்

அவன் பிறகு பேசியதே இல்லை..

.

Advertisements