avatar

வெளிநாடு சென்று திரும்பிய என் மூத்த அண்ணன், ஃப்ரேம் செய்யப்பட்ட இரண்டு 3D ஓவியங்களைக் கொண்டு வந்திருந்தார், அப்போது எனக்கு 8 வயதிருக்கும். அதுதான் நான் 3D என்னும் சொல்லை முதல் முறை கேள்விப்பட்டது. முதல் படம் கிறிஸ்து அரசரின் ஓவியம், இயேசு மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தோடு அரசருடையில் தன் இதயத்தை வெளியே காட்டியபடியிருக்கும் கம்பீரமான ஓவியம். மற்றது மாதா மிக எளிய இளநீல நிற ஆடையோடு விண்ணை நோக்கி எழுந்து பறக்கும் (பரலோக மாதா அல்லது விண்ணேற்ற மாதா) நளினமும் அழகும் கூடிய ஓவியம். பல அடுக்குகளாக இருக்கும் அந்த ஓவியங்களில், இயேசுவுக்கு சிறிது முன்னே தனியாகத் தெரிந்தது அவருடைய திருஇருதயம். இயேசுவும் அவர் தலைக்கு மேலே அந்தரத்தில் இருக்கும் கிரீடமும் தனியாக நடுவில் தெரிய, சிறிது பின்னே, அவர் வீற்றிருக்கும் சிம்மாசனம் பெரிதாக எழுந்து நின்றது. மாதா அந்தரத்தில் எழுந்தருளியிருக்க அவருக்கு முன்னும் பின்னும் மேகங்கள் அவரைவிட்டு விலகித் தனியாகத் தெரிந்தன.

இவ்வாறாக உருக்காப்படும், தூரம் அல்லது ஆழம் இருப்பது போன்ற மாயத்தோற்றம்தான் முப்பரிமான ஓவியங்களுக்கு ஒரு அற்புதத்தன்மையைக் கொடுக்கின்றன. வரையப்பட்ட ஆள் அல்லது பொருள் (Subject), அதன் முன்னிருக்கும் இடம் (Foreground), பின்னிருக்கும் இடம் (Background) ஆகிய மூன்றும் விலகித் தனித்தனியாகவும் அதேசமயம் ஏதோ ஒருவகையில் இணைந்து ஒரே படமாகவும் தெரிந்தால் அது ஒரு நல்ல முப்பரிமாண படம். இப்போது அத்தகைய படங்கள் மிக எளிதாகக் கடைகளில் கிடைக்கின்றன (பெரும்பாலும் உள்ளூரில் போலி செய்யப்பட்டவை), ஆனால் எண்பதுகளின் ஆரம்பத்தில் அந்த இரு படங்களும் மிகப்பெரிய அதிசயமாக இருந்தன. எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் முதலில் அந்தப் படங்கள் மாட்டப்பட்ட சுவருக்கு எதிரே நின்று, கைகளைக் கட்டியபடியோ கன்னத்தில் கைவைத்தோ அல்லது மோவாயை வருடியபடியோ சிறிது நேரம் ஆராய்ச்சி செய்துவிட்டு பிறகுதான் வந்தவிஷயத்தைப் பேசுவார்கள். இப்போதுகூட நான் தூத்துக்குடிக்குச் செல்கிறபோது எங்கள் வீட்டின் வரவற்பறையை இப்போதும் அலங்கரிக்கும் அப்படங்களைப் பார்த்தபடி நிற்பதுண்டு.

kutti chathan

எண்பதுகளின் மத்தியில் வெளியானது இந்தியாவின் முதல் 3D படமான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’. அது மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, தமிழகமே திரும்பிப்பார்த்தது. மொத்த மக்களும் அதைப் பற்றியே பேசினார்கள், குடும்பம் குடும்பமாக வந்து கண்ணாடி போட்டுக்கொண்டு அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். பள்ளிக்கூடங்கள் மாணவர்களிடம் பணம் வசூலித்து, உயிரியல் தாவரவியல் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வதைப்போல வரிசை வரிசையாக அழைத்துவந்து படம் காட்டினார்கள். நானும் அந்த மாணவர்களில் ஒருவனாகத்தான் அதைப் பார்த்து வியந்தேன். மறுநாள் ஆசிரியர், திரை என்பது நீளம் அகலம் உள்ள இருபரிமாணம் என்றும் மூன்றாவது பரிமாணம் திரையிலிருந்து பார்வையாளர்களை நோக்கி நீண்டிருந்தது என்றும் விளக்கினார். பல நாட்களுக்கு நாங்கள் அதைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தோம்.

இன்றும் தமிழ் சினிமா வணிகத்தில் மை டியர் குட்டிச் சாத்தானின் வெற்றி ஒரு மைல் கல். கேயார், அபிராமி ராமநாதன் போன்ற பல தமிழ்த் திரையுலகப் பெரும்புள்ளிகளின் தொடக்கப்புள்ளி அந்தப் படம்தான். பல சிறு நகரங்களுக்கு கறுப்பு நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்தியது அப்படம். குடும்பத்தோடு அந்த அதிசயத்தைக் காண வந்து, பார்க்காமல் திரும்பிச்செல்ல மனமில்லாமல் ஐந்து மடங்கு அதிகமாகப் பணம் கொடுத்து மக்கள் படம்பார்த்ததை நானே கண்டிருக்கிறேன். இரண்டாம் முறை குட்டிச்சாத்தான் பார்க்க முடியாமல் நான் பலமுறை திரும்பிச் சென்றிருக்கிறேன். நீண்டநாள் கழித்து இரண்டாவது வெளியீடாக அப்படம் வந்தபோதுதான் நான் மறுமுறை பார்த்தேன். அதன் திரைக்கதை அமைப்பும் இயக்கமும், தமிழின் சிறுவர்களுக்கான மாயாஜாலப் படங்களுக்கான உயர்ந்தபட்ச இலக்காக இன்றுவரை நீடிக்கிறது. அதன் 3D காட்சிகளில் இன்றும் மறக்க முடியாத ஒன்று, நம் கண்ணை நோக்கிப் பாய்ந்துவரும் தீப்பந்து, அதற்குப் பயந்து குனியாதவர்களே இல்லை. அடுத்தது நம்மை நோக்கி நீட்டப்படும் ஐஸ் கிரீம். அதன் முனையிலிருக்கும் செர்ரிப் பழம் எதிர்பாராத ஒருகணத்தில் முன்னால் நழுவி விழும்போது நாக்கை நீட்டியவர்களில் நானும் ஒருவன்.

3d audiance

அந்தப் படத்தின் வெற்றி தமிழ்த் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் 3D களத்தில் இறக்கிவிட்டது. ஆனால் அவர்களால் உருப்படியாக ஒன்றுகூட எடுக்க முடியவில்லை. கற்பனை வறட்சியான கதைகளை வைத்துக்கொண்டு, குட்டிச்சாத்தானில் செய்ததையே வேறுவேறு பொருட்களை வைத்துச் செய்தார்கள். நம்மை நோக்கி கல்லெறிந்தார்கள், ஈட்டி, கம்பு, கத்தி என்று கையில் கிடைத்ததையெல்லாம் நம் கண்ணுக்கு நேரே நீட்டி மெதுவாக ஆட்டி அல்லது சுழற்றி நம்மைப் பயமுறுத்தினார்கள். கையால் குத்தினார்கள், விரலை நீட்டி எச்சரித்தார்கள். விஜயகாந்த் கூட ஒரு 3D சண்டைப் படத்தில் நடித்தார். அவர்கள் எதையாவது நீட்டுவதைக் கூட ரசிக்க முடிந்தது, ஆனால் நம்மை நோக்கி எறிவதை என்னால் சகித்துக்கொள்ள முடியவிலை, அது வீண் பயத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தியது.

பிறகு நான் அந்தப் படங்களில் சிறப்புக் காட்சிகளைத் தனியாக எடுத்துச் சேர்க்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தேன். அந்த ஷாட்கள் மட்டும் தனி வண்ணத்தில் இருக்கும். அந்த வண்ண மாறுபாட்டை பார்த்த உடனேயே நான் உஷாராகிவிடுவேன். அவர்கள் நம் கண்ணைக் குறிவைப்பதற்கு சற்று முன்னால் நான் சட்டென்று கண்ணாடியைக் கழற்றிவிட்டு பக்கத்திலிருப்பவர்கள் பீதியுடன் அலறுவதைப் பார்த்து ரசிப்பேன். படத்தில் அவ்வப்போது வரும் இந்த தாக்குதல்களை எதிர்பார்த்து படம் முழுவதும் கண்ணாடி அணிந்து பார்ப்பதென்பதும் சலிப்பூட்டுவதாக இருந்தது. இறுதியாக, 3Dயில் சாத்தியமான உச்சக் காட்சியொன்றை எடுத்தபிறகு தமிழ் சினிமாக்காரர்கள் இனி இதில் செய்ய ஒன்றுமில்லை என்று நிறுத்திக்கொண்டார்கள். ஒரு கவர்ச்சிப் பாட்டில் ஜெயமாலினியா அல்லது அனுராதாவா என்று நினைவில்லை, முன்னால் குனிந்து குலுங்கி ஆடினார். நிறைய ஆண்கள் வாயைப் பிளந்தார்கள், சிலர் கையைத் தூக்கிக் காற்றைப் பிசைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

3D Glasses

இவ்வாறாக குட்டிச் சாத்தானின் ஐஸ்கிரீமும், தீப்பந்தும் பற்பல வடிவமெடுத்த பின்பு, எனக்கு 3D கண்ணாடிகளின் மேல் ஒரு அலர்ஜியே ஏற்பட்டுவிட்டது. அவற்றில் பார்த்த ஒரு காட்சி கூட எங்கள் வீட்டிலிருந்த ஓவியத்தின் அழகை நெருங்கக்கூட இல்லை. அதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் மூன்று காரணங்கள் தோன்றுகின்றன..

முதலாவது காரணம், கண்ணுக்கு மிக அருகில் நீட்டப்படுவது அல்லது எறியப்படுவது என்பது திடீர் அதிர்ச்சிகளை உருவாக்குவதினால் மனம் எப்போதும் எச்சரிக்கையோடு இருக்கும். ஆகவே கதையின் மீது கவணமும் காட்சியமைப்புகளை ரசிக்கும் மனநிலையும் இல்லாமலாகிறது.

இரண்டாவது காரணம், முழுப் படமும் 3Dயாக இல்லாமல் தனித்தனித் துண்டுக் காட்சிகளாக, ஸ்பெஷல் எஃப்க்டுகளாக மட்டும் பயன்படுத்தப்பட்டது.

மூன்றாவது மிக முக்கியமான காரணம், திரையில் ஓடும் படம் எப்போதும் போல இரு பரிமாணங்கள் (2D) கொண்டதாகவே இருந்தது, திரைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான வெளியில் மட்டுமே அவ்வப்போது மூன்றாவது பரிமாணம் காட்டப்பட்டது. அதாவது முன்னிருப்பவை(Foreground) மட்டுமே தனித்துத் தெரிந்தது கதாபாத்திரங்கள்(Subject) மற்றும் பின்னணிக் காட்சிகள்(Background) சேர்ந்தே இருந்தன. மாறாக, முப்பரிமாண ஓவியங்களில் இருப்பதைப் போல கதாபாத்திரங்கள் பின்னணிக் காட்சியிலிருந்து பிரிந்து தனித்துத் தெரியும் அழகு கூடிவரவே இல்லை. நாம் நேரில் ஆட்களைக் காண்பதைப் போல முப்பரிமானமாக கதாபாத்திரங்களைப் பார்க்க முடிந்ததே இல்லை.

அப்படி ஒரு முழுமையான முப்பரிமாணப் படம் எடுக்கப்படுவது என்பது, ஒரு அறிவியல் புனைகதைக்குள் வேண்டுமானால் கற்பனையாக நிகழலாம், நிஜத்தில் சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. அவதார் படத்தைப் பார்க்கும்வரை..!