actress-salma-hayek

.

மலிவுவிலை செண்ட்டின் குமட்டும் மணம்

ஒப்பனையில் தொலைந்த முகம்

சாயம் பூசிய சிரிப்பு

கீழ்ப்பாதி மார்பை மறைக்க மட்டும் மேலாடை

இடுப்புக்கு வெகுகீழே

அபாயகரமாகத் தொங்கும் பேண்ட்

.

அழுத்திக் கைகொடுத்தாள்

ஆல்பத்தை நீட்டினாள்

தெலுங்கில் தமிழ் பேசினாள்

கால்களை அகலவிரித்து உட்கார்ந்து

நெளிந்து குழைந்தாள்

.

துணைஇயக்குனர் பேசுவதைக்

கவணித்துக் கேட்கும் தோரணையோடு

முன்னகர்ந்து குனிந்து

இரண்டு முலைகளையும்

ஒருமுறை முழுசாய்க் காணக்கொடுத்தாள்

.

துணைஇயக்குனர் பேச்சுத் தடுமாற

‘உனக்கு வாய்ப்பில்லை’ என்பதைப் பூசி மழுப்பினார்

தொடைகள் தெரியும் புகைப்படத்தை

ஆல்பத்திலிருந்து உருவியெடுத்தபடி

பிறகு போன்பண்ணுவதாகச் சொன்னார்.

அவள் அந்தப் புகைப்படத்தின் பின்புறம்

சற்றும் பொருந்தாத புனைப்பெயரையும்

குறைக்கப்பட்ட வயதையும்

குத்துமதிப்பான உயரத்தையும்

தொடர்புக்கான எண்ணையும்

விரல் நடுங்க எழுதிக்கொடுத்தாள்.

.

அவள் போய் வெகுநேரத்திற்குப் பிறகும்

அங்கேயே சுற்றிக்கொண்டிருந்த

அந்தக் குமட்டல் மணம்

எப்போதும் பரிதாபத்தையும் சபலத்தையும்

ஒன்றாய் நினைவூட்டுவதாய்

மனதுக்குள் பதிந்துபோனது

.

பலநூறு புகைப்படங்கள் கொட்டிய அலமாரியில்

தேடினாலும் கிடைக்காதபடி கலந்துவிட்டது

அந்த கௌஷிகா ..அல்ல மௌஷிகா.. அல்ல..

ஏதோ ஒரு -காவின் தொடைகள்.

.

Advertisements