Nanjupuram

.

நான் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படமான ‘நஞ்சு புரம்’ விரைவில் வெளியாக இருக்கிறது. திரைப்பட உலகுக்குள் ஒரு இயக்குனராக நான் எடுத்துவைக்கும் முதல் காலடி இது.

.

.

இந்தப் படத்தில் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, மிகமிகக் குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டுக்கொண்ட விலங்கு. இரண்டாவது பாம்புகள். நிறைய நிஜப் பாம்புகளும் கிராஃபிக்ஸ் பாம்புகளும் நஞ்சுபுரத்தில் வலம்வருகின்றன.

.

.

எனது நெடுநாள் நண்பனான ராகவ் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் என்பதுதான் எனது மிகப்பெரிய மகிழ்ச்சி. இதன்மூலம் ராகவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்துவிட்டால் அதுவே நஞ்சுபுரம் படத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

.

.

இந்தப் படத்தில் ராகவோடு ‘அழகி’ மோனிகா, தம்பி ராமையா, நரேன், பிரியா, தி.சு.சதாசிவம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரு எளிய கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் மோனிகா மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பொதுவாக நகைச்சுவை நடிகர் என்று அறியப்பட்டவரும் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தின் இயக்குனருமான தம்பி ராமையா, இப்படத்தில் எதிர்மறையான குணச்சித்திரப் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

.

.

இந்தப் படத்தின் ஐந்து பாடல்களைக் கவிஞர் மகுடேசுவரன் எழுதியிருக்கிறார். இலக்கிய வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவரான மகுடேசுவரன் திரைப்படப் பாடலாசிரியராக இந்தப் படத்தின் மூலம் அவதாரம் எடுக்கிறார். நவீன கவிஞராக இருந்தபோதும் மரபுக் கவிதையிலும் சந்தத்திலும் நல்ல பரிச்சயம் உள்ளவர் என்பதால் இசைக்குப் பாடல் எழுதுவதென்பது அவருக்குச் சிறிதுகூட சிரமமாக இருக்கவில்லை. பல வருட அனுபவமுள்ள பாடலாசிரியரைப் போல மிக வேகமாகவும் நேர்த்தியாகவும் புதுமையாகவும் பாடல்களை எழுதிக் கொடுத்தார்.

.

http://www.youtube.com/watch_private?v=cEfLEVAwxfE&sharing_token=h19AVGLFC7UgGK5f67LntA

.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராகவும் இருக்கும் ராகவ் தன்பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ‘ஊருல உனக்கொரு மேட’ என்ற நாட்டுப்புறப் பாடல் எனது விருப்பத்துக்குரியது. மகுடேசுவரன் ஏற்கனவே புத்தகத்தில் பிரசுரித்த ஒரு கவிதைக்கும் ராகவ் இசையமைத்திருக்கிறார். ‘யாவரும்..’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலும் மிக நன்றாக வந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசையையும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் ராகவ்.

.

.

இப்படத்தின் சில காட்சிகளுக்குப் பின்னணி இசையாக ராகவ் இரு ‘ராப்’ பாடல் பகுதிகளை எழுதிப் பாடி சேர்த்தார். அதைக் கேட்டவர்கள் அனைவரும் பாராட்டியதால் உற்சாகமடைந்த ராகவ், அந்தப் பகுதிகளை இணைத்து முழுப்பாடலாகச் செய்தார். அதையும் ஒரு இசை ஆல்பம் போன்ற வடிவில் படமாக்கியிருக்கிறோம். அதைப் படத்தின் கதையோட்டத்துக்குள் வைக்கும் எண்ணமில்லை, ஸ்ருதி கமலின் பாடலை ‘உன்னைப்போல் ஒருவ’னில் சேர்த்ததைப்போல படத்துக்கு முன்னாலேயோ அல்லது வழக்கம்போல படத்தின் முடிவில் எழுத்துக்கள் உருளும் போதோ சேர்க்கலாம் என்ற எண்ணமிருக்கிறது. அந்தப் பாடலின் உண்மையான நோக்கம் நஞ்சுபுரம் படத்தை அறிமுகப்படுத்தும் விதமாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுதான். இதில் சிறப்புத் தோற்றமாக ‘சிவா மனசுல சக்தி’ ‘மதுரை சம்பவம்’ படங்களின் நாயகி அனுயா நடித்திருக்கிறார்.

.

.

இந்தப் படத்தில் எனது நண்பர்கள் பலரும் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். கதாநாயகனும் இசையமைப்பாளருமான ராகவ், ஒளிப்பதிவாளரான ஆண்டனி, விசுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வை செய்த சுனில், ஒலிக் கலவை உள்ளிட்ட படத்தின் ஒலி வடிவமைப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் உதயகுமார் போன்றோர் எனக்குப் பல வருட நண்பர்கள்.

.

Nanjupuram working still

.

இப்படம் நிச்சயமாக எனது இலட்சியப் படைப்பு அல்ல, நான் படமாக்கக் கனவு கண்டுகொண்டிருக்கும் கதைகள் குறைந்தது ஐந்து என்னிடம் இருக்கின்றன. நஞ்சுபுரம் எனது நுழைவுச் சீட்டு மட்டுமே.

.

Nanjupuram

.

விரைவில் இசை வெளியீடும் அதைத் தொடர்ந்து பட வெளியீடும் நடக்கவிருக்கிறது. கர்ப்ப காலத்தைத் தாண்டியும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஒரு நிரந்தர படபடப்பை ஏற்படுத்திவிடுகிறது. சீக்கிரம் பெற்றுப்போட்டால் தேவலை என்றிருக்கிறது.

.