NanjuPuram Still

.

அன்புள்ள கவிஞருக்கு,

“ஊருல உனக்கொரு மேட..” பாடலைக் காட்சியுடன் காண கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.

http://www.youtube.com/watch_private?v=cEfLEVAwxfE&sharing_token=h19AVGLFC7UgGK5f67LntA

சார்லஸ்.

.

NanjuPuram Still

.

அன்புள்ள இயக்குநர் திரு. சார்லஸ் அவர்களுக்கு.,

வணக்கம்

தாங்கள் அனுப்பிவைத்த இணைப்பின் வழியாக ‘ஊருல உனக்கொரு மேட…’ பாடலை காட்சியோடு என் வீட்டில் உள்ள அனைவரும் பார்த்தோம். மீண்டும் மீண்டும் பார்த்தோம்.

அந்தப் பாடல் மனதை என்னவோ செய்கிறது !

மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ஏதோ ஒரு திகட்டாத தித்திப்பு அப்பாடலில் மௌனமாக அமர்ந்திருக்கிறது. கேட்கக் கேட்க இன்னும் மனதை ஆழமாக ஊடுருவுகிறது. புஷ்பவனம் குப்புசாமி தன் குரலால் எத்தனை வசீகரத்தைக் காட்ட முடியுமோ அது அத்தனையையும் காட்டியிருக்கிறார். அவரது குரலைக் பதிவுசெய்யும்போது கூட ஒரு மாயாஜாலம் நிகழ்ந்திருப்பதை நாம் அடையாளம் காணவில்லை. ராகவ் இசையமைத்த பாடலில் இதுவே இனி அவரை அடையாளம் காட்டும் பாடலாக இருக்கப்போகிறது.

தனிமைப்படுத்தப்பட்டவனின் நிலையே இப்பாடலின் கரு (THE VISUAL DESCRIPTION OF A QUARANTINED) என்பதை நானே கூட இப்பாடலைப் பார்த்துத்தான் புரிந்துகொண்டேன். பாடலை எழுதும்போது கூட இதை நான் புரிந்துகொண்டதாக ஞாபகம் இல்லை.

பாடல் முழுவதும் காட்சிக் கோணங்கள் ஒரு நிம்மதியில்லாமல் அலைவதைப்போல அருமையாக எடுத்திருக்கிறீர்கள். கிளையில் அமராமல் பரணைச் சுற்றிப் பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவையின் கோணத்தில் அப்பாடலைப் படமாக்கியிருக்கிறீர்கள் ! பகலும் இரவும் காலையும் மாலையும் என மாறி மாறிக் காட்டப்படும் பொழுதுகள் அந்தப் பாடலின் காட்சி ரூபத்தில் மின்னலென வந்து போவது பிரமாதமாக இருக்கிறது. இந்தப் பாடல் எனக்குள் உருவாக்கியிருக்கும் மனநிலையை இதற்கு முன் மைக்கேல் ஜாக்சனின் DANGEROUS ஆல்பத்தில் வரும் WHO IS IT என்ற பாடல் உருவாக்கியிருந்தது. காதலர்கள் இருவரும் முகத்தருகு கோணங்களில் அருமையான பாவனையைக் காட்டியிருக்கிறார்கள். அதை மறக்க முடியாது. கிட்டத் தட்ட நான்காண்டுகள் கழிந்துவிட்டதால் நான் இந்தப் பாடலை அதன் ஆசிரியன் என்ற நிலையில் இல்லாமல் முழு ரசிகன் என்கிற மனநிலையில் என்னைத் தள்ளி வைத்துப் பார்த்துத்தான் இவற்றையெல்லாம் சொல்கிறேன். சார் ! உறுதியாகச் சொல்கிறேன். உங்களை இந்தப் படம் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.

இந்தப் பாடலைப் பார்த்து என் மனைவி தேம்பித் தேம்பி அழுதாள். என் தாயார் ஒன்றும் புரியாமல் மெய் மறந்து நின்றார். என் தங்கை ‘வார்த்தை ஒவ்வொண்ணும் ஆணி அடிச்சாப்ல இருக்குண்ணா…’ என்றாள். என் தம்பி ‘இது ஹிட்டாயிரும்ணா…’ என்றான்.  ஹிட்டாகட்டும் !

நன்றியும் பாராட்டுகளும் !

அன்புடன்

கவிஞர் மகுடேசுவரன்

.

NanjuPuram Still

Advertisements