[ ராம் கோபால் வர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ]

.

Ram Gopal Varma

.

நான் தயாரித்திருக்கும் “ஃபூங்க் 2” (Phoonk 2) படம் இந்தியா முழுக்க, அதன் தமிழ் தெலுங்கு மொழிமாற்ற வெளியீடுகளைச் சேர்க்காமல், முதல் மூன்று நாட்களில் மட்டும் 5.12 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. நான் இயக்கிய முந்தைய படமான “ராண்” (Rann) முதல் மூன்று நாட்களில் 2.6 கோடி மட்டுமே வசூலித்தது. “ஃபூங்க் 2”-யின் தயாரிப்புச் செலவு “ராண்” படத்தினுடையதில் ஒரு சிறு பகுதியே என்பதையும், இதன் விளம்பரச் செலவு “ராண்”-ஐவிட பாதியே என்பதையும் கருத்தில் கொண்டால், இந்தப் படம் ஒரு மிகப் பெரிய வெற்றியே.

phoonk2“படம் எப்படிப் போகுது?.. ஓடுமா?” என்று ஒருவர் கேட்கும்போது அவர் எதை அர்த்தப்படுத்துகிறார் என்பது ஒரு அருமையான விவாதத்திற்குரிய விஷயம்.

ஒரு படத்தை 100 பேர் பார்க்கிறார்கள், அதில் 90 பேருக்குப் படம் பிடித்திருக்கிறது; அதேசமயம் இன்னொரு படத்தை 1000 பேர் பார்க்கிறார்கள், அதில் 990 பேருக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அந்த 1000 பேரின் டிக்கட் பணத்தைக் கணக்கிட்டால் இரண்டாவது படம்தான் மிகப்பெரிய வெற்றி. வியாபாரத்தை மட்டுமே கணக்கில் கொண்டால் அதுதான் சரி. அதேபோல ஒருபடம் 4 கோடியில் தயாரிக்கப்பட்டு 6 கோடி வசூலித்தால் அது வெற்றி, ஆனால் அதே வசூலை 8 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் எடுத்தால் அது ஒரு தோல்வி.

rannஒரு படத்தின் வெற்றியை அதன் செலவு-வசூல் விகிதாச்சாரத்தை வைத்து அளவிடுவதா அல்லது இந்தப் படம் இவ்வளவு வசூலிக்கும் என்ற ஒருவரின் எதிர்பார்ப்பை வைத்து அளவிடுவதா அல்லது விமர்சகர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்தா அல்லது படத்தைப் பார்த்த ஒவ்வொரு தனிமனிதனும் என்ன நினைக்கிறார் என்பதை வைத்தா?

ஒவ்வொரு பார்வையாளரும் படத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது முடியாத காரியம். ஒவ்வொருவரையும் சந்தித்துக் கருத்துக்கேட்பதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அதனால் நீங்கள் உரையாட முடிந்த சிலரை வைத்துத்தான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால் என்னுடைய ப்ளாக்கையே (http://rgvzoomin.com) எடுத்துக்கொண்டால், முற்றிலும் வெவ்வேறான, நேர் எதிரான கருத்துக்களையும் எதிர்வினைகளையும் ஒரே படத்தைப் பற்றி ரசிகர்கள் தெரிவித்திருப்பதை நீங்களே காண முடியும்.

shiva

குறிப்பிட்ட ஒருவருடைய எதிர்பார்ப்பின்படி பார்த்தால், அவர் படம் 1000 ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கும்போது அது 500 ரூபாய் மட்டும் வசூலித்தால் அது தோல்வி, 500 ரூபாயை எதிர்பார்க்கும்போது 1000 ரூபாய் வசூலித்தால் அது வெற்றி. ஆனால் இதுவும் சரியான அறிவியல் முறை ஆகாது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள், பல்வேறு வித்தியாசமான காரணங்களால் உருவானவைகளாக இருக்கும். “தர் (Darr)” படம் ஷாரூக் கானைப் பொருத்தவரை மிகப் பெரிய வெற்றிப்படம், ஆனால் சன்னி தியோலுக்கோ மாபெரும் தோல்வி, அவருடைய நட்சத்திர அந்தஸ்த்தையே அழித்த படம் அது.

மக்களுக்கு ஒரு படத்தின்மேல் எதிர்பார்ப்பு ஏற்படுவது, அதன் விளம்பரப் பிரச்சாரத்தைப் பொருத்தே அமைகிறது. படத்தின் கதையைப் பற்றிய ஒரு அனுமானத்தை விளம்பரங்கள் அவர்களுக்குக் கொடுக்கின்றன. ரசனைக்குரிய ஒரு மையப்புள்ளி, அல்லது நட்சத்திரங்களின் கூட்டணி போன்ற ஏதோ ஒன்று பெருவாரியான மக்களைக் கவர்ந்து அவர்களைப் படத்தைக் காணச்செய்தால், பணவரவு பெருகுகிறது.

nishabd

முன்பெல்லாம் படங்கள் வெள்ளி விழா, நூறு நாட்கள், ஐம்பது நாட்கள் என ஓடுவதுண்டு. ஆனால் இப்போது ஹிந்தியின் மிகப் பெரிய வெற்றிப்படங்களே 2 முதல் 3 வாரங்கள்தான் ஓடுகின்றன. பலபடங்கள் வெளியான வார இறுதி நாட்களில் மட்டுமே ஓடி முடிந்துவிடுகின்றன.

இதற்கும் படத்தின் தரத்திற்கும் சம்பந்தமில்லை, இப்போதிருக்கும் விநியோக முறையின் மாற்றத்தையே இது காட்டுகிறது. ஒரு படத்தைப் பற்றி மிகப் பெரிய பரபரப்பை சூழலில் உருவாக்கி, வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் மிக வேகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு லாபத்தை அள்ளிச் சேர்த்துவிடுகிறார்கள். இது நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவாக உருவான வியாபார யுத்தி. தனது படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பெரும் கூட்டம் அலைபாய்வதைப் பார்த்துப் படைப்பாளி மனவெழுச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த காலம் முடிந்துவிட்டது. இப்போது யாராவது ஒருவர் ஒரு படத்தைப் பார்க்க விரும்பினால் அவருக்கு உடனே டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தற்கால விநியோக முறை இயங்குகிறது.

நுகர்வோர் ஒருவர் எப்போதாவது கோக் அருந்த நினைத்தால் அப்போதே அவர் கைக்கெட்டும் தூரத்தில் அது இருக்க வேண்டும் என்பதே கோக் நிறுவனத்தின் விற்பனை யுத்தி. அவருடைய குளிர்சாதனப் பெட்டியிலோ, அல்லது வீட்டுக்கு அடுத்திருக்கும் கடையிலோ, அல்லது எங்கெல்லாம் அவரது பார்வை திரும்புமோ அங்கெல்லாம் அது இருக்க வேண்டும். கிட்டத்தட்ட இதை நோக்கியே திரையுலகின் விற்பனை மற்றும் விநியோக முறையும் நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கான பிரதான காரணம், தற்போது திரைப்படம் ஒரு நுகர்வுப் பொருளாகக் கருதப்படுவதே ஆகும்.

ஒரு படம் அதை உருவாக்கியவருக்கு மட்டுமே ஒரு கலைப்படைப்பு, வேண்டுமானால் அப்படி நினைக்கும் ஒருசில பார்வையாளர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு படம் எப்படி உருவாகிறது, தியேட்டரில் வெளியாகிறது என்பதெல்லாம் ஒரு நுகர்வுப் பொருளின் தயாரிப்புப் படிநிலைகளையே பெரிதும் ஒத்திருக்கிறது.

Daud

நான் “ரங்கீலா” (Rangeela) படத்தின் மூலம் எந்தப் பணமும் சம்பாதிக்கவில்லை என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நான் “தோட்” (Daud) படத்தில் ஏராளமாக சம்பாதித்தேன். எப்படியென்றால், 1995யில் இருந்த வியாபார நடைமுறையில் விநியோக அமைப்புக்குள் மிகுந்த ஒழுங்கின்மை இருந்தது. அதன் காரணமாக, “ரங்கீலா” படத்தில் எனக்கு சேர வேண்டிய பங்குப் பணம் எதுவுமே வரவில்லை. ஆனால் கடைக்கோடியில் இருந்த விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் ரங்கீலா எவ்வளவு வசூலித்தது என்பது தெரியும் என்பதால், அவர்கள் “தோட்” படத்தை மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கினார்கள். அதனால் நான் நன்றாக சம்பாதித்தேன், ஆனால் அந்தப்படம் வாங்கிய தொகை அளவுக்கு வசூலிக்காததால் அவர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. வியாபாரக் கணக்கின்படி “ரங்கீலா” எனக்கு ஒரு தோல்விப் படம், “தோவ்ட்” ஒரு பெரிய வெற்றி.

என்னுடைய “சத்யா” (Satya) மிகப் பெரிய வெற்றிப்படம் என்று நிறையபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அதற்குப் பிறகு நான் எடுத்த “ஜங்கிள்” (Jungle) படம் சத்யாவை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பாதித்தது.

Satyaஏனென்றால், “ஜங்கிள்” அதிகமான தியேட்டர்களில் ஒரே சமயம் வெளியாகி, நாடு முழுவதுமே பெரிய தொடக்க வசூலை அள்ளியது. ஆனால் “சத்யா” குறைந்த அளவிலேயே வெளியிடப்பட்டது, மும்பை, நிஜாம் மற்றும் டெல்லி நகரங்களில் மட்டுமே நன்றாக ஓடியது. நிஜாமிலேயே கூட சத்யா 1.25 கோடியும், ஜங்கிள் 1.75 கோடியும் சம்பாதித்தன. அதுமட்டுமின்றி “சத்யா” படத்தைப் பல ஊர்களில் 2வது 3வது வாரத்திலேயே பார்வையாளர்கள் வரவு குறைந்துவிட்டதாகக் கூறி தூக்கிவிட்டார்கள்.

அதனால் இந்த அளவுகோலின்படி “சத்யா”வை விட “ஜங்கிள்” சிறந்த படமாகிவிடுமா? அவசியமில்லை.jungle ஏனென்றால் “ஜங்கிள்” பார்த்த நிறையபேருக்கு அதைப் பிடிக்காமல் இருந்திருக்கலாம், “சத்யா” பார்த்த பலருக்கும் பிடித்திருக்கலாம். இவ்வளவு ஆண்டுகள் கழித்து, இப்போது நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் “சத்யா”தான் என்னுடைய ஆகச்சிறந்த படைப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதேசமயம் “சத்யா” வெளியான அதே ஆண்டில் மிகப் பெரிய வெற்றியடைந்த, கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாக வசூலித்த படம், சல்மான் கான் நடித்து கே.முரளி மோகன் ராவ் இயக்கிய “பந்தன்” (Bandhan). அதை இப்போது சல்மான் கானாவது நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒரு இயக்குனராக, எனக்கு மிகப்பெரிய மதிப்பையும் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்திக் கொடுத்த வகையில் “சத்யா” எனக்கு ஒரு பெரிய வெற்றியே.

இப்போது தனிப்பட்டவர்களின் கண்ணோட்டத்திற்கு வருவோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண், “நிசப்த்” (Nishabd) படத்தை அது வெளியாகி ஒரு வருடத்திற்குப்பின் தனது லேப் டாப்பில் பார்த்துவிட்டு, அதுதான் எனது ஆகச் சிறந்த படைப்பு என்று நினைப்பதாகச் சொன்னாள்.

ஒரு குறிப்பிட்ட குழுவிலிருந்த ஒருவர் என்னிடம் “சர்க்கார்” (Sarkar) என்னுடைய ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொன்னார். அதே குழுவிலிருந்த மற்றொருவர், அந்தப் படம் ஒரு வருந்தத்தக்க படம் என்றும் ‘காட் ஃபாதர்’ படத்திற்குச் செய்யப்பட்ட அவமரியாதை என்றும் சொன்னார்.

sarkar

விமர்சகர்களுக்கு வருவோம், காலித் முகம்மது (Khalid Mohammed) டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய விமர்சனத்தில், “ராத்” (Raat) ‘அப்படி நினைத்து எடுக்கப்படாத நகைச்சுவைப் படம்’ என்றார். அவரே எனது முதல் படமான “சிவா” (Shiva) பார்த்துவிட்டு தான் அவமானத்தோடு தலையைத் தொங்கப்போட்டபடி வெளியே வந்ததாக எழுதியிருந்தார். தீபா கெஹ்லாட் “சத்யா”வைக் கிழித்தெறிந்தார், அதன் பிறகு “கம்பனி” (Company) படத்துக்கு அதிகபட்சமான 3க்கு 2½ நட்சத்திரங்களை வழங்கியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு ‘கல்ட் கிளாஸிக்’காக கருதப்படும் “சிவா”வுக்குப் பிறகு வந்த என்னுடைய இரண்டாவது படமான “க்ஷானா க்ஷானம்” (Kshana Kshanam) நான் ஒரு- ‘ஒரு பட அதிசயம்’ (‘one film wonder’) அதாவது ஒரே படத்தோடு சரக்கு தீர்ந்துவிட்ட ஆள் என்று நிரூபிப்பதாக விமர்சித்தார்கள்.

company

எது எப்படியோ, மிக அடிப்படையான ஒன்று இருக்கிறது. மேற்சொன்ன எல்லா காரணங்களுக்காகவும் நாம் விமர்சகர்களையும், தனிநபர்களின் கருத்துக்களையும், வியாபாரக் கணக்குகளையும் புறந்தள்ளிவிடலாம், என்றாலும் இறுதியில் ஒரு விஷயம் மட்டும் மிக முக்கியமானது. நீங்கள் ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதில் சமரசமில்லாமல் அப்படியே எடுக்க வேண்டும். மேலும் அதன் தயாரிப்பில் ஈடுபடுபவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் செலவு செய்ததை மட்டுமாவது மீட்டெடுத்துவிட வேண்டும். அதற்கப்பால் மற்ற எதுவுமே முக்கியமில்லை.

மேலும், பலரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல எந்தப் படமும் எந்தப் பணத்தையும் ‘இழந்து’ விடுவது இல்லை. திரைப்படத் துறையில் 90% படங்கள் நஷ்டமடைவதாக நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் அதன் அர்த்தம் என்ன? பணம் தொலைந்து போய்விடுவதில்லை, மாறாகக் கை மாறுகிறது. ஒருவர் தான் 20 கோடியை ஒரு படத்தில் வீணடித்துவிட்டதாகச் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? அந்த 20 கோடி காற்றில் கரைந்துவிடவில்லை, பற்பல தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், படப்பிடிப்புக் கருவிகளை வாடகைக்கு விடுபவர்களுக்கும், நடிகர்களுக்கும் மற்றும் திரைப்படத்தைச் சார்ந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் பல்வேறு குடும்பங்களுக்கும்தான் பிரிந்து சென்றிருக்கிறது. நிறைய சம்பாதிக்கும் விருப்பத்தோடு 20 கோடியை முதலீடு செய்தவரது பார்வையில் மட்டுமே அது நஷ்டம் அல்லது தோல்வி. ஆனால் அந்தப் படத்தில் சம்பாதித்த அனைவருக்குமே அது வெற்றிதான். ஆகவே மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்படுகிற எந்தப் படத்திலும், அதில் 300 பேர் சம்பந்தப்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டமடையலாம் மற்றும் இயக்குனரும் கதாநாயகனும் தங்களது சந்தை மதிப்பை இழக்கலாம். ஆனால் அவர்களைத் தவிர்த்து, 300யில் 297 பேருக்கு அந்தப் படம் இலாபமே.

இருந்தாலும் திரைத்துறை எப்படி இயங்குகிறது, பொருளாதார வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் அது எப்படி எதிர்கொள்கிறது என்பது போன்றவை ஒரே கட்டுரையில் விவரித்துவிட முடியாத அளவுக்கு மிகமிகச் சிக்கலான விஷயங்கள். ஆனாலும் அதைப் பற்றி ஒட்டுமொத்தமான ஒரு பார்வையைத் தந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

ஒரு படத்தைப் பற்றி, அது எனக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் என்னால் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் அந்தப் படத்தின் பொருளாதாரமோ, எதிர்பார்ப்புகளோ, சம்பந்தப்பட்ட பல்வேறு ஆட்களுக்கு வாக்களிக்கப்பட்டவையோ தெரியாத நிலையில், “படம் எப்படிப் போகுது?” என்ற கேள்விக்கு மட்டும் என்னால் பதில் சொல்லவே முடிவதில்லை.

.

.