ராம் கோபால் வர்மா எழுதிய (அக்டோபர் 7, 2009) கட்டுரையின் தமிழாக்கம்

.

rgv

.

சுழற்சி 1

ஏதாவது வாய்ப்புக் கிடைக்காதா என்று அன்னபூர்னா ஸ்டூடியோவை (ஹைதராபாத்) நான் சுற்றிவந்துகொண்டிருந்த காலம். அப்போது அங்கே “கலெக்டர் காரி அப்பாயி” படத்தின் இசையமைப்பு நடந்துகொண்டிருந்தது. இடைவேளைகளில் இசையமைப்பாளர் சக்கரவர்த்தியும் இயக்குனர் பி.கோபியும் சேர்ந்து சாப்பிடுவதற்காக வெளியே செல்லும்போது, நான் இசையமைப்பாளரின் உதவியாளரிடம் அரட்டையடிப்பது வழக்கம். அவ்வப்போது அவர் தானே இசையமைத்த சில மெட்டுக்களை எனக்குப் பாடிக்காட்டுவது உண்டு. அதில் பல மெட்டுக்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், ஒருநாள் நான் அவரிடம் “சிவா” திரைக்கதையிலிருந்து ஒரு காட்சியையும் அதை நான் எப்படி படமெடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்பதையும் விவரித்து, அதற்கு எந்த மாதிரிப் பின்னணி இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டேன். அந்தக் காட்சிக்கு எந்தப் பின்னணி இசையுமே இருக்கக் கூடாது என்று அவர் சொன்னார். அந்தப் பதில், அதுவும் குறிப்பாக ஒரு இசைக் கலைஞர் அப்படிச் சொன்னது என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. உடனே நான் அவரிடம், எனக்கு எப்போதாவது இயக்குனராகும் வாய்ப்புக் கிடைத்தால் உங்களைத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வேன் என்று உறுதியளித்தேன்.

.

shiva ilayaraja

.

இறுதியில் எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோது, இளையராஜா அவர்களோடு பணியாற்றும் சந்தர்ப்பம் திடீரென அமைந்தது. அதனால் நான் மிகுந்த குற்ற உணர்வோடு அந்த உதவியாளரிடம், எனக்கு இளையராஜா கிடைத்துவிட்டதால் நான் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று சொன்னேன். அவருக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தபோதிலும், என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வதாகச் சொல்லி வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஆனால் அவரோடு நான் கழித்த நாட்களும் வளர்த்த கூட்டுறவும் குற்ற உணர்வாக வந்து என்னைக் கொன்றது. எந்தக் கணம் “சிவா” (தமிழில் “உதயம்”) மிகப் பெரிய வெற்றி என்று ஆனதோ அப்போதே நான் அவரிடம் திரும்பிச் சென்று எனது இரண்டாவது படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்தேன். அந்த உதவியாளரின் பெயர் கீரவாணி, அந்தப் படம் “க்ஷணா க்ஷணம்” (Kshana Kshanam). நான் எடுத்த படங்களிலேயே “ரங்கீலா”வும் “க்ஷணா க்ஷண”மும்தான் ஆகச் சிறந்த இசைப் படங்கள் என்று நான் நினைக்கிறேன்.

.

kshanakshanam

.

கீரவாணியிடம் ஒரு கீபோர்டு கலைஞர் வேலை செய்தார். அவரிடம் நான் அவ்வப்போது, குறிப்பாகப் பின்னணி இசைக்கூறுகளை அவர் அமைத்துக்கொண்டிருக்கும்போது தனியாக உரையாடுவதுண்டு. அவர் முயற்சி செய்தால் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற முடியும் என்று நான் நம்பினேன். ஆனால் அவரோ அதை மறுப்பது வழக்கம், தான் அடிப்படையில் ஒரு கம்போசர் அல்ல என்று சொல்வார். நெடுநாளுக்குப் பிறகு, இந்தியில் “துரோகி” (தெலுங்கு “அந்தம்”) படத்தின்போது R.D.பர்மன் அவர்களோடு ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கீரவாணியும் பிஸியாக இருந்ததால், நான் அந்த கீபோர்டு கலைஞனைக் கட்டாயப்படுத்தி ஒரு பாடலை அந்தப் படத்துக்காகச் செய்ய வைத்தேன்.

.

அந்தப் பாடலும் அந்தப் படமும் வெற்றியடையவில்லை. ஆனால் பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவியோடு ஒரு படம் செய்யவிருந்தபோது, நான் “துரோகி” படப்பாடல் வெற்றியடையவில்லை என்றபோதிலும் அந்த இசையமைப்பாளர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகச் சொன்னேன். சிரஞ்சீவி என்னிடம் “உங்களுக்குச் சரியென்றால் எனக்கும் சரியே” என்றார். அந்த கீபோர்ட் கலைஞர் பரவசமடைந்தார். ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு மிகப் பெரிய அளவில் துவக்க விழா நடத்தப்பட்ட அந்தப் படம் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நின்றுபோனது. கீபோர்டு கலைஞர் சோகத்தில் மூழ்கினார். ஆனால் எடுக்கப்படாத அந்தப் படத்துக்காக அவர் பதிவு செய்திருந்த ஒரு பாடலால் மிகவும் கவரப்பட்ட சிரஞ்சீவி, தனது அடுத்த படத்தை அவருக்கே கொடுத்தார். “சூடாலனி உந்தி” என்ற அந்த வெற்றிப்படம் அந்த கீபோர்டு கலைஞரை தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக ஆக வழிகோலியது. அந்த கீபோர்ட் கலைஞரின் பெயர் மணி ஷர்மா.

.

mani sharma pokiri

.

.

சுழற்சி 2

எனது முதல் படமான “சிவா” பின்னணி இசை சேர்ப்புக்குத் தயாரான போது, சென்னையில் இசைக் கலைஞர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனால் இளையராஜாவும் நானும் மும்பைக்குச் சென்றோம். அங்கு இளையராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இசைக் கலைஞர்களின் அணி படத்தைப் பார்த்தது. அதில் வயலின் குழுவிலிருந்த ஒரு குறிப்பிட்ட வயலின் கலைஞர் மட்டும் என்னை நோக்கி நடந்துவந்து, இந்தப் படம் ஒரு மிகப் பெரிய அலையை உருவாக்கும் என்று சொன்னார். உண்மையில் எனது திரையுலக வாழ்வில், வெளியிலிருந்து எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதற்குப் பிறகு பின்னணி இசை சேர்ப்பு நடந்த காலம் முழுவதும் நானும் அந்த வயலின் கலைஞரும் அவ்வப்போது உரையாடிக்கொண்டிருந்தோம்.

.

சில வருடங்களுக்குப் பிறகு, “துரோகி” படத்துக்காக நான் R.D. பர்மனை ஒப்பந்தம் செய்தபோது, ஒரு பாடல் ஒலிப்பதிவுக்காக மும்பைக்குச் சென்றிருந்தேன். அந்த நாட்களில் நான் ஹைதராபாத்தில் இருந்தபடியேதான் செயல்பட்டுக்கொண்டிருந்தேன், மும்பைக்குப் பறந்து போவதும் வருவதுமாக இருப்பேன். அங்கே அதே வயலின் கலைஞரை மீண்டும் சந்தித்தேன். தான் சொன்னபடியே “சிவா” மிகப் பெரிய வெற்றியடைந்தபோது அளவில்லாத மகிழ்ச்சி அடைந்ததாகச் சொன்னார். அவர் ஒரு நபரை என்னிடம் அழைத்துவந்து, தனது நெருங்கிய நண்பர் என்றும் பாடலாசிரியர் என்றும் அறிமுகம் செய்துவைத்தார். அந்த ஆள் ஒரு விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார். நான் அதை வாங்கி என் பையில் வைத்ததோடு சரி, அன்று மாலையே ஹைதராபாத் திரும்பிவந்தேன், பிறகு அதைப் பற்றி முழுக்க மறந்துபோனேன்.

.

drohi

.

நான் ஏற்கனவே சொன்னது போல, R.D.பர்மன் சில காரணங்களால் அந்தப்படத்திலிருந்து விலக்கப்பட்ட பிறகு, நான் மணி ஷர்மா என்னும் புதிய இசையமைப்பாளரைக் கொண்டு சென்னையில் வைத்து ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

.

ஒரு மாலை நான் சென்னைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த போது, என் அம்மா சிலகாலமாக சேர்ந்துவிட்ட ஏராளமான விசிட்டிங் கார்டுகளை கொண்டுவந்து காட்டி, இவைகளைத் தூர எறிந்துவிடலாமா என்று கேட்டார். நான் மிக வேகமாக ஒவ்வொன்றையும் ஒரு பார்வை பார்த்தேன், அந்தப் பாடலாசிரியரின் கார்டும் அதில் இருந்ததைக் கவணித்தேன், பிறகு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடும்படிச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

.

நான் சென்னைக்கு வந்து இறங்கியதும்தான், பாடல் வரிகளை எழுதிச் சென்னைக்கு எடுத்து வந்திருக்க வேண்டிய ஜாவீத் அக்தர், மும்பையில் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டதால் வரப்போவதே இல்லை என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. நான் கடும் கோபத்தோடு, மும்பையில் இருந்த எனது ஆட்களிடம் நான் ஒலிப்பதிவை ரத்துசெய்ய விரும்பவில்லை என்றும் யாராவது ஒரு பாடலாசிரியரைப் பிடித்து அன்றிரவே அனுப்பிவைக்கவேண்டும் என்றும் சொன்னேன். ஆனால் அவர்கள் மும்பையில் யாருமே கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். நான் பெரும் குழப்பத்தோடும் கவலையோடும் இருந்த நேரத்தில், சட்டென்று எனக்கு என் அம்மா காட்டிய விசிட்டிங் கார்டு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நான் அம்மாவை போனில் அழைத்து அதைப் பற்றிக் கேட்டேன், அவர் அவற்றை ஏற்கனவே குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டதாகச் சொன்னார். அம்மா எனக்காக அதைக் குப்பைத் தொட்டிக்குச் சென்று தேடினார், அதிர்ஷ்டவசமாக அதைக் கண்டெடுத்து, எனக்கு எண்ணைத் தந்தார். நான் உடனடியாக அந்தப் பாடலாசிரியரைப் பிடித்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவந்தேன். மணி ஷர்மாவின் மெட்டுக்கு அவர் பாடல் வரிகளை எழுத “துரோகி” படத்தின் பாடல் ஒலிப்பதிவாகியது.

.

rangeela

.

“துரோகி”யும் அந்தப் பாடலும் தோல்வியடைந்தன, ஆனால் சேர்ந்து வேலைசெய்ததன்மூலம் அந்தப் பாடலாசிரியரோடு உருவான நட்பு தொடர்ந்தது. நான் மும்பைக்கு செல்லும்போதெல்லாம் நானும், அந்த வயலின் கலைஞரும், பாடலாசிரியரும் கலந்துரையாடுவது வழக்கம். அது நான் “ரங்கீலா”வின் கதைக் கருவைப் பட்டைதீட்டிக்கொண்டிருந்த காலம். நான் அவர்கள் இருவரிடமும் அந்தக் கதையைப் பற்றிச் சொன்னபோது, அவர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள். அந்தப் பாடலாசிரியர் எழுதிய ஒரு பாடலுக்கு அந்த வயலின் கலைஞர் மெட்டமைத்துக் காட்டினார். அவர்களுடைய ஆர்வத்தால் கவரப்பட்டு, “ரங்கீலா”வின் இசையை நீங்கள் இருவரும்தான் உருவாக்கப்போகிறீர்கள் என்று நான் வாக்களித்தேன். அவர்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்தார்கள்.

.

mani-rahman-vairamuthu maniratnam with a.r.rahmanmaniratnam and a.r.rahman

.

சில நாட்களுக்குப் பிறகு, மணிரத்தினம் தனது “ரோஜா” படத்தின் பாடல்களை சென்னையில் இருக்கும் அவருடைய வீட்டில் வைத்து எனக்குப் போட்டுக்காட்டினார். நான் அசந்துபோனேன், A.R. ரஹ்மானின் தனித்துவமான இசையும் இசைக்கருவிகளின் ஒலிக்கோர்ப்பில் இருந்த புதுமையும் என்னைக் கவர்ந்தன. மிகுந்த பேராசையோடு, என்ன விலை கொடுத்தாகிலும் இந்தப் புதிய ஒலியை என் படத்திற்குக் கொண்டுவந்து சேர்க்க முடிவெடுத்தேன். அந்த வயலின் கலைஞருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீறி, ரஹ்மானை ஒப்பந்தம் செய்தேன். இது அந்த வயலின் கலைஞருக்குக் கடும் கோபத்தை உண்டாக்கியதும், மனமுடைந்த நிலைக்குத் தள்ளியதும் புரிந்துகொள்ளக்கூடியதே. அந்தப் பாடலாசிரியர் என்னிடம் கெஞ்சினார், தனது நண்பனுக்கு இப்படிச் செய்வது சரியல்ல என்று பரிதவித்தார். நான் அவரிடம் இந்த முடிவு படத்தின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட தொழில் ரீதியான தீர்மானமே என்றேன்.

.

நான் ரஹ்மானிடம் அந்தப் பாடலாசிரியரைப் பற்றிச் சொல்லி, அவருடைய முதல் பாடல் வெற்றியடையவில்லை என்ற போதிலும் அவர் ஒரு சிறந்த பாடலாசிரியர் என்று நான் நம்புவதாகச் சொன்னேன். ரஹ்மான், “உங்களுக்குச் சரியென்றால் எனக்கும் சரியே” என்றார்.

.

rangeela

.

அப்படித்தான் மெஹ்பூப் (Mehboob) என்னும் அந்தப் பாடலாசிரியர் “ரங்கீலா” படத்துக்கு வந்து சேர்ந்தார். “தனுஹா.. தனுஹா..” அவர் ரங்கீலாவுக்கு எழுதிய முதல் பாடல். நான் அந்தப் பாடலை மணிரத்தினத்திற்குப் போட்டுக்காட்டினேன். அது அவரை மிகவும் கவர்ந்தது, காரணம் “தில். தீவானா, சனம்” போன்ற வழக்கமான வார்த்தைகள் இல்லாமல் ஒரு இந்திப் பாடலைக் கேட்டு வெகுகாலமாகிவிட்டது என்று அவர் சொன்னார். மணிரத்தினம் தனது “பம்பாய்” படத்துக்கு மெஹ்பூபை ஒப்பந்தம் செய்தார்.

.

BombayMehboobMehboob

.

“பம்பாய்” மற்றும் “ரங்கீலா” படங்களின் மாபெரும் வெற்றியினால் மெஹ்பூப்க்கு இந்தித் திரையுலகில் பெரிய பெயரும் நன்மதிப்பும் உருவாகியது. அவர் அதைப் பயன்படுத்தித் தனது நெருங்கிய நண்பரான அந்த வயலின் கலைஞருக்காக ‘சஞ்சை லீலா பன்சாலி’யிடம் சிபாரிசு செய்தார். அந்தச் சமயத்தில் சஞ்சை லீலா பன்சாலியும் தனது “ஹம் தில் தே சுக்கே சனம்” எனும் படத்துக்காக ஒரு புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தார். இப்படித்தான் ‘இஸ்மாயில் தர்பார்’ என்னும் இசையமைப்பாளர் உருவானார்.

.

HDDCS

.

“ஹம் தில் தே சுக்கே சனம்” பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தன. அந்தச் சமயத்தில் வந்த என்னுடைய “தோட்” (Daud) உள்ளிட்ட ரஹ்மானின் ஆல்பங்கள் சில சரியாகப் போகாத நிலையில், இஸ்மாயில் தர்பார் இந்தித் திரையுலகின் புதிய இசை மேதையாக சிம்மாசனம் ஏறினார். நான் வாழ்த்துச் சொல்வதற்காக இஸ்மாயில் தர்பாரை தொலைபேசியில் அழைத்தேன், ஆனால் அவர் எனது அழைப்புகள் எதையும் எடுக்கவே இல்லை.

.

devdas

.

அதன்பிறகு இஸ்மாயில் ஒரு பேட்டியில், ‘ராம் கோபால் வர்மா உட்பட முன்பு என்னைக் கண்டுகொள்ளாதவர்கள் பலரும் இப்போது நான் மிகப் பெரிய வெற்றியடைந்துவிட்டதால் தேடிவருகிறார்கள்’ என்று சொன்னார். “ரங்கீலா” படத்திலிருந்து அவரை விலக்கியதால் ஏற்பட்ட மனவருத்தத்திற்குப் பழிவாங்கவே அவர் அப்படிச் சொன்னார் என்பது வெளிப்படை.

.

ஒருவருக்கொருவர் வெற்றிக்குக் காரணமாக அமைந்த நெருங்கிய நண்பர்களான இஸ்மாயிலும் மெஹ்பூபும் “தேவதாஸ்” படத்தின்போது தங்களுக்குள் ஏற்பட்ட வேறுபாட்டின் காரணமாகப் பிரிந்தார்கள். அதன்பிறகு இருவருமே தங்களுடைய துறைகளில் கீழிறங்க ஆரம்பித்தார்கள். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அவ்வப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்து நடந்தவற்றைச் சரிசெய்து விரிசலைப் போக்க முயல்கிறார்கள். ஆனால் நான் இப்போது வேறு புதிய கலைஞர்களோடு இணைந்துவிட்டதினால், அந்த இருவருடைய அழைப்புகளை எடுப்பதே இல்லை. இப்போது பழைய உறவுகளைப் புதுப்பிப்பதற்கு எனக்கு நேரமும் இல்லை மனமும் இல்லை.

.

இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்குக் காரணம், மனிதர்களைக் குப்பைத் தொட்டிக்கும் சிம்மாசனத்துக்குமாக மாறிமாறித் தூக்கி வீசும் விதியின் சுழற்சி எத்தனை மகத்தானது என்னும் வியப்புதான்.

.

Rakta-Charitra-Surya Raktha Charitra

.

பின்குறிப்பு: நான் எடுத்துக்கொண்டிருக்கும் புதிய படமான “ரத்தச் சரித்திரம்” (Rakta Charitra) படத்துக்கு மணி ஷர்மாவை ஒப்பந்தம் செய்திருக்கிறேன். மெஹ்பூபை பாடலாசிரியராகச் சேர்த்துக்கொள்ளும் திட்டமும் இருக்கிறது.

ராம் கோபால் வர்மா

(தமிழாக்கம் – சார்லஸ்)