.

நான் திரைப்படக் கல்லூரிக்குச் செல்வதுவரை ‘ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்’ (ALFRED HITCHCOCK) இயக்கிய ஒரு படத்தைக்கூடப் பார்த்திருக்கவில்லை. ஆனால் நான் அங்கு படித்த மூன்று வருடக் காலங்களில் மெல்ல மெல்ல ஒரு ஹிட்ச்காக்தாசனாகவே மாறிப்போனேன். அவரது படங்களும் தனிப்பட்ட ஆளுமையும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. அவருடைய சில படங்கள் திரைப்படக் கல்லூரியிலும் கிடைக்கவில்லை, பின்பு DVD யுகம் ஆரம்பித்தபோது ஒட்டுமொத்தப் படங்களும் காணக்கிடைத்தன.

.

திரைப்படத் தொழில்நுட்பம் பற்றியும், திரைக்கதை எழுதுவது பற்றியும் நான் கொஞ்சம் புத்தகங்களைப் படித்திருந்த போதிலும், எனக்கு அதிகமும் பயனளித்த புத்தகம் எதுவென்றால், அது நிச்சயமாக, புகழ்பெற்ற பிரஞ்சு இயக்குனரும் முன்னாள் பத்திரிகை விமர்சகருமான ‘ட்ரூஃபோ’ (FRANCOIS TRUFFAUT) ஹிட்ச்காக்கைப் பேட்டியெடுத்து வெளியிட்ட புத்தகம்தான். ஒருவார காலத்தில் கிட்டத்தட்ட 50 மணிநேரம் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் சுமார் 500 கேள்விகளுக்கும் மேல் ஹிட்ச்காக் பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனித்தனியாக மிக விளக்கமாகப் பேசியிருக்கிறார் ஹிட்ச்காக். அவர் ஒவ்வொன்றையும் எப்படி யோசித்து முடிவெடுத்தார், செயல்படுத்தினார், படைப்பாற்றலிலும், தொழில்நுட்பத்திலும், வியாபாரத்திலும் அவர் சந்தித்த சவால்கள் என்ன என்பதெல்லாம் ஒவ்வொரு வளரும் இயக்குனருக்கும் விலைமதிப்பில்லாத பாடங்கள்.

.

சில வருடங்களுக்கு ஹிட்ச்காக் முழுவதுமாக என்னை ஆக்கிரமித்திருந்தார். நான் எல்லாவற்றுக்கும் ஹிட்ச்காக்கை உதாரணங்களுக்கு எடுத்துப் பேசுபவனாக ஆனேன். பின்பு அவரது பாதிப்பிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகவே சுமார் ஆறு ஆண்டுகள் ஹிட்ச்காக்கின் எந்தப் படத்தையும் பார்க்காமல் அவரைப் பற்றிப் பேசாமல் தவிர்த்திருந்தேன். ஆனாலும் நான் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்கள், எழுதிய திரைக்கதைகள், பணிபுரிந்த திரைப்படங்களில் அவருடைய தாக்கம் இருந்தபடியேதான் இருந்தது.

.

.

‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று ஹிட்ச்காக் அழைக்கப்படுவதனால், அவர் ஏதோ ‘மர்மக் கொலை’ (Murder Mystery) அல்லது ‘யார் செய்தது?’ (‘Who Done It?’) வகைப் படங்களை எடுத்தார் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு கொலை நடக்கும், அதைச் செய்தது யார் என்னும் சந்தேகம் சுமார் ஏழு பேர் மீது விழும், இறுதியில் யார் குற்றவாளி என்பது துப்பறிந்து கண்டுபிடிக்கப்படும்- என்னும் வகையான கதைகள் ‘யார் செய்தது?’ வகை என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஹிட்ச்காக் அந்த வகையான ஒரு படம்கூட எடுத்ததே இல்லை. இத்தகைய படங்களில் உள்ள ஒரு பெரிய குறைபாடே அந்தப் படத்தின் முடிவு தெரிந்துவிட்டால் அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்க்கவே முடியாது. ஆனால் ஹிட்ச்காக்கின் படத்தைப் பலமுறை பார்த்தாலும் ஆர்வம் வற்றவே வற்றாது. அதற்குக் காரணம் ‘சஸ்பென்ஸ்’ அதாவது மர்மம் என்பது ஹிட்ச்காக்கைப் பொறுத்தவரை வேறொன்று. உதாரணத்துக்கு ஒரு கதைச் சூழலைப் பார்ப்போம், ஒரு வீட்டுக்குள் வெடிகுண்டு ஒளித்துவைக்கப்படுகிறது, கதாநாயகன் அதைத் தேடுவதற்காக வீட்டுக்குள் நுழைகிறான். எல்லாவற்றையும் திறந்துபார்த்துத் தேடுகிறான், அவனைப் போலவே பார்வையாளர்களும் வெடிகுண்டு எங்கிருக்கிறது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இறுதியில் நாயகன் அந்த குண்டை ஓரிடத்தில் கண்டுபிடிக்கிறான், ‘அட இங்கா இருந்தது, நாம் யோசிக்கவே இல்லையே’ என்று பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இதுதான் பொதுவாக மர்மம் எனப்படுகிறது.

.

ஆனால் ஹிட்ச்காக் ஒருபோதும் இப்படிக் கதை சொல்லமாட்டார். அவர், வெடிகுண்டு எங்கே ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலிலேயே பார்வையாளர்களுக்குக் காட்டிவிடுவார். கதாநாயகன் வீட்டுக்குள் புகுந்து தேடும்போது, பார்வையாளர்களால் இப்போது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவே முடியாது. ‘அட அங்கே இருக்கிறது.. இவன் வேறு எங்கோ தேடுகிறானே.. அதோ பக்கத்தில் இருக்கிறது பார்.. சே தவறவிட்டுவிட்டானே..’ என்று பரபரத்தபடியே இருப்பார்கள், அவர்களால் நிம்மதியாக இருக்கையில் சாய முடியாது, ஏனென்றால் கதாபாத்திரத்துக்கே தெரியாத ஒன்று அவர்களுக்குத் தெரியும். இப்போது அவர்கள் வெறுமனே பார்வையாளர்கள் மாத்திரமில்லை பங்கேற்பாளர்களாகவே தங்களை உணர்வார்கள். இதுதான் ஹிட்ச்காக்கின் வெற்றி ரகசியம். மர்மம் என்பது பார்வையாளர்களுக்கு உண்மையை முழுக்க சொல்லாமல் மறைப்பது அல்ல என்னும் புத்திசாலித்தனத்தை அவர் முதல் முறையாக, ஊமைப்படக் காலகட்டத்திலேயே ‘தி லாட்ஜர்’(1927) எனும் தனது ஐந்தாவது படத்தில் பயன்படுத்தினார். அப்போதிருந்து 1976-யில் வெளிவந்த அவரது கடைசிப்படமான ‘ஃபேமிலி ப்ளாட்’ வரை சுமார் 50 ‘திரில்லர்’களை எடுத்திருக்கிறார். இன்றளவும் ‘மர்மத்தின் மன்னன்’ அவர்தான்.

.

.

ஹிட்ச்காக் கதையமைப்பில் பயன்படுத்திய பல்வேறு யுத்திகள், தொழில் நுட்பத்தில் செய்த புதுமைகள், அவருடன் பணிபுரிந்த நடிகர்கள் கலைஞர்கள், மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஹிட்ச்காக்கின் 10 படங்கள் பற்றி எழுதவேண்டும். அவற்றை இனிவரும் பதிவுகளில் எழுதலாம் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற சில வாசகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன்..

.

 • “சில யதார்த்த இயக்குனர்களின் திரைப்படங்களை ‘வாழ்க்கையின் துண்டுகள்’ (slices of life) என்று சொல்கிறார்கள், ஆனால் எனது படங்கள் கேக் துண்டுகள்.”
 • “வெடிப்பதில் எந்த பயங்கரமும் இல்லை, எதிர்பார்ப்பில்தான் அது இருக்கிறது.”
 • கதை என்பது வாழ்க்கைதான்.. ஆனால் வாழ்க்கையிலுள்ள எல்லா அலுப்பான விஷயங்களும் அகற்றப்பட்டது.”

 • “கதாசிரியரும் நானும் சேர்ந்து திரைக்கதையின் மிகச் சிறிய விவரங்கள் உட்பட எல்லாவற்றையும் திட்டமிட்டுவிடுவோம், அதன்பிறகு மிச்சமிருப்பது படம்பிடிக்க வேண்டியது மட்டும்தான். உண்மயில் ஒருவர் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போதுதான் சமரசத்துக்குள் நுழைகிறார். நிஜமாகவே ஒரு கதாபாத்திர வார்ப்பை (casting) நாவலாசிரியர் மட்டுமே முழுமையாகச் செய்யமுடியும் ஏனெனில் அவருக்கு நடிகர்களையும் மற்றவைகளையும் சமாளிக்கவேண்டிய அவசியமில்லை.”
 • “திரைப்படங்களுக்கு இயக்குனர்தான் கடவுள், ஆவணப் படங்களுக்குக் கடவுளே இயக்குனர்”
 • “என்வரையில் “சைக்கோ” ஒரு நகைச்சுவைப் படம், அப்படித்தான் இருக்கவும் முடியும்”

 • “சைக்கோ படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, கத்தியால் குத்தினால் ரத்தத்தைப் பீய்ச்சும்படியான ஒரு போலி உடலைச் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் பிறகு நான் அதைக் கைவிட்டேன். கத்தி ஓங்கப்படுவது, பெண்ணின் முகம் மற்றும் கால்கள் என்று மிகவேகமாக, 45 விநாடிகளுக்குள் 78 தனித்துண்டுகளாகக் காட்சி எடுக்கப்பட்டதால், அதற்கான அவசியமே ஏற்படவில்லை.”
 • “என்னை ஒரு வகைப்படுத்தப்பட்ட இயக்குனராக ஆக்கிவிட்டார்கள். நான் ‘சிண்ட்ரல்லா’ கதையை எடுத்தால் கூட, ரசிகர்கள் உடனே, அந்தக் கூண்டு வண்டிக்குள் ஏதேனும் பிணம் இருக்கிறதா என்றுதான் தேடுவார்கள்”
 • “திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டவுடன் நான் படமெடுக்கக் கிளம்பிவிடுவதில்லை. எனக்குத் தீவிரமான காட்சிப்படுத்தும் மன அமைப்பு உண்டு. ஒரு படத்தை அதன் இறுதிக்கட்ட படத்தொகுப்புவரை முழுமையாக மனதுக்குள்ளேயே பார்த்துவிட முடியும். நான் அவை எல்லாவற்றையும் நுணுக்கமான விவரிப்புகளோடு திரைக்கதைக்குள் எழுதிச் சேர்த்துவிடுவேன். அதன்பிறகு படப்பிடிப்பின்போது நான் திரைக்கதை ஏட்டைப் பார்ப்பதே இல்லை. எப்படி ஒரு இசைக்குழுவை வழிநடத்துபவர் (orchestra conductor) இசைக் குறிப்புகளைப் பார்க்க வேண்டிய அவசியமிலையோ, அதேபோல எனக்கு மனப்பாடமாகவே தெரியும்.”

 • “திரைக்கதை வடிவத்தில் மட்டுமே ஒரு படம் முழுமையாக இருக்கிறது. படப்பிடிப்பில் 40 சதவீதம்வரை அது இழந்துவிடுகிறது”
 • “அது ஒரு சிறந்த படமாக இருக்குமென்றால், திரையரங்கில் ஒலியமைப்பு அறுபட்டுவிட்டால் கூட பார்வையாளர்களுக்குத் திரையில் என்ன நடக்கிறது என்பது முழுமையாகவும் மிகத் தெளிவாகவும் புரிந்திருக்கும்.”
 • “கொலைகளை நான் காதல் காட்சி போலவும், காதலைக் கொலைக் காட்சிபோலவும் எடுப்பதாகச் சொல்கிறார்கள்”

 • “நாம் எதற்காகப் படச்சுருளை வைத்துச் சோதனை செய்யவேண்டுமென்று எனக்குப் புரியவே இல்லை. எல்லாவற்றையும் காகிதத்திலேயே செய்துவிடவேண்டுமென்று நான் நினைக்கிறேன். இசையமைப்பாளர் ஏராளமான குறியீட்டுப் புள்ளிகளைக் காகிதத்தில் எழுதி இசையை வடிவமைக்கவில்லையா? நாம், திரை மாணவர்களுக்கு, மனதுக்குள் காட்சிப்படுத்துவதைக் கற்றுக் கொடுக்கவேண்டும், அதுமட்டுமே இங்கு குறையாக இருக்கிறது. மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முதன்மையான விஷயம் என்னவென்றால், ஒரு செவ்வகம் இருக்கிறது.. ஒரு பெரிய வெள்ளை செவ்வகம் திரையரங்கில் இருக்கிறது.. அது நிரப்பப்பட வேண்டும்.. அவ்வளவே”
 • “ஒரு சிறந்த படத்தை உருவாக்க மூன்று விஷயங்கள் தேவை.. திரைக்கதை, திரைக்கதை மற்றும் திரைக்கதை.”
 • “மென்மையான அழகிய பெண்கள்தான் கொலையில் பலியாவதற்குச் சிறந்தவர்கள். ரத்தப் பாதச்சுவடுகளைத் துல்லியமாகக் காட்டும் வெண்பனியைப் போன்றவர்கள் அவர்கள்.”

 • “எனது தோல்விப் படங்களும் பணம் சம்பாதிக்கின்றன, மேலும், ஒரு வருடத்திற்குப் பிறகு ‘க்ளாஸிக்’ என்றும் ஆகிவிடுகின்றன.”
 • [அமெரிக்க திரைப்படக் கல்லூரி ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியபோது ஹிட்ச்காக் பேசியது] “எனக்கு அன்பும் ஆதரவும் ஊக்கமும் வழங்கி தொடர்ந்து என்னோடு இணைந்து பணியாற்றிய நான்கு நபர்களின் பெயரைச் சொல்ல, இந்த அவை என்னை அனுமதிக்க வேண்டும். முதலாவது ஒரு படத்தொகுப்பாளர், இரண்டாவது ஒரு திரைக்கதை எழுத்தாளர், மூன்றாவது என் மகள் பேட்ரிசியாவின் தாய், நான்காவது வீட்டுச் சமையலறைக்குள் அதிசயங்களை நிகழ்த்தும் ஒரு சமையல் கலைஞர். அவர்களின் பெயர்கள்.. ‘அல்மா ரிவிலே’ [திருமதி ஹிட்ச்காக்]”
 • நான் மிக எளிதாகப் பயப்படக் கூடியவன், அட்ரெனலைன் (adrenaline)-யை என்னுள் சுரக்கச் செய்பவைகளின் பட்டியல் இதோ: 1. குட்டிக் குழந்தைகள் 2. போலீஸ்காரர்கள் 3. உயரமான இடங்கள் 4. என் அடுத்தப் படம் சொதப்பிவிடலாம் எனும் நினைப்பு.

 • “எந்த நடிகராவது என்னிடம் வந்து ‘இந்தக் காட்சியில் நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்’ என்று கேட்டால், நான் சொல்வென் “திரைக்கதையில் அப்படி இருக்கிறது, அதனால்’ என்று. அவர் விடாமல், “நான் இதைச் செய்ய வேண்டிய தூண்டுதல் (motivation) என்ன?’ என்று கேட்டால், என்னுடைய பதில், ‘உங்கள் சம்பளம்’.”
 • “நான் எப்போதும் எனது பார்வையாளர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வதைப்பேன்.”

 • “நான் ஒரு நல்ல கதை சொல்ல முயல்வேன், அழுத்தமான கதைப் பின்னல் ஒன்றை வளர்த்தெடுப்பேன். ‘கதையில் சொல்லப்படும் கருத்து’ என்பது போகப்போகத் தானாகவே உருவாகிவருவது.”
 • ஹிட்ச்காக் ஒருபோதும் பார்வையாளர்களோடு சேர்ந்து உட்கார்ந்து தன் படத்தைப் பார்த்ததே இல்லை. “அவர்கள் பயந்து அலறுவதைக் கேட்கும் வாய்ப்பை நீங்கள் இழக்கிறீர்களே?” என்று ஒருமுறை கேட்கப்பட்டபோது, ஹிட்ச்காக் சொன்னார், “இல்லை, அந்த அலறலை நான் படமெடுக்கும்போதே கேட்டுவிடுவேன்”.