எனக்குப் பிடித்த சில ‘லாங் டேக்’குகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பட்டியலில் முதலில் இருப்பது 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ (CHILDREN OF MEN) என்ற படத்தில் வரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி. இதை இயக்கியது, GREAT EXPECTATIONS, Y TU MAMA TAMBIEN, HARRY POTTER AND THE PRISONER OF AZKABAN போன்ற படங்களை எடுத்த மெக்ஸிகோவைச் சேர்ந்த சிறந்த இயக்குனரான அல்ஃபோன்ஸோ கொரான் (Alfonso Cuaron). இந்தக் காட்சியில் ‘விசுவல் எஃபெக்ட்’களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றபோதிலும், அதையும் தாண்டி, காட்சியின் மிகமிகச் சிக்கலான அமைப்பும் இறுதி வெளிப்பாட்டில் இருக்கும் பூரணத்துவமும் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை. எதிர்காலத்தில் (2027ஆம் ஆண்டு) நடக்கும் கற்பனைக் கதையான இதில், குழந்தைப் பேறு முற்றிலும் நின்றுபோனால் மனித குலம் எத்தகைய குழப்பங்களில் அமிழ்ந்துபோகும் என்பதே பின்னணி. கதையைச் சொல்ல விரும்பவில்லை, நல்ல சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். இதன் ஆரம்பக் காட்சியும் மிகச் சவாலான ஒரு லாங் டேக்தான், இருந்தாலும் இந்தக் காட்சியே என்னுடைய தேர்வு..

.

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் 1948-யில் எடுத்த ‘ரோப்’ (ROPE) படம், சாதாரன ‘கயிறு’ அல்ல, ‘லாங் டேக்’குகளின் பூச்சரம். மொத்தப் படத்தையுமே அவர் வெறும் 11 ஷாட்களில் எடுத்துவிட்டார். ஒவ்வொரு ஷாட்டும் சுமார் பத்து நிமிடம் ஓடக் கூடியது. இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் சிலாகித்துப் பேசும் பலரும், ஹிட்ச்காக் தனது திறமையைக் காட்டுவதற்காகவே அப்படி எடுத்ததாகச் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் ஹிட்ச்காக்கின் நோக்கம் ‘வித்தை காட்டுவது’ அல்ல. ‘ரோப்’ எனும் நாடகத்தைத் தழுவித்தான் அவர் படத்தை எடுத்தார். அந்த நாடகத்தின் சிறப்பே அது மொத்தமும் ஒரே ஒரு காட்சியாக இருந்ததுதான். அதாவது நாடகத்தின் ஆரம்பத்தில் திரையை மேலிழுத்த பிறகு, இறுதியில் நாடகம் முடியும் போதுதான் திரையை இறக்குவார்கள், நடுவில் காட்சிமாற்றமே இல்லாது தொடர்ந்து ஒரே காட்சியிலேயே நடந்து முடியும் திரில்லர் அது. ஹிட்ச்காக், அதைப் பார்த்தபோது தனக்கு உண்டான தாக்கம் தன் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் உண்டாகவேண்டுமென்று நினைத்தார். அதனால் மொத்தப் படமும் இடை நிறுத்தம் இல்லாமல் ஒரே ஷாட்டில் நடப்பது போல பார்வையாளர்களுக்குக் காட்ட விரும்பினார். ஆனால் திரைப்படக் கேமராவில் அதிகபட்சமாக 1000 அடி நீளமுள்ள படச்சுருளை மட்டுமே ஏற்ற முடியும். அது கிட்டத்தட்ட 10 நிமிடம் ஓடக் கூடியது. ஆகவே அதற்கேற்ப ஷாட்டுகளாகப் பிரித்து, ஒரு ஷாட் முடியுமிடத்திலிருந்து அடுத்த ஷாட் ஆரம்பிப்பது போலவும், அந்த ஷாட் மாற்றம் கூட சாதாரனமாகக் கண்ணில் படாதவகையிலும் அமைத்துப் படமெடுத்தார் ஹிட்ச்காக்.

அதை அனுபவிக்க முழுப்படத்தையும்தான் பார்க்க வேண்டும், கீழே இருக்கும் வீடியோவில் அதன் டிரெயிலர் மட்டுமே இருக்கிறது. படத்தில் இல்லாத காட்சியொன்றை தன் உதவியாளர்கள் மூலம் எடுத்து டிரெயிலரின் ஆரம்பத்தில் சேர்த்திருக்கிறார், அந்தக் காட்சி பல ஷாட்டுகளாகப் பிரித்து எடுக்கப்பட்டிருகிறது மற்றும் ‘லாங் டேக்’ பற்றிய எந்தத் தடயமும் டிரெயிலரில் இல்லை என்பதிலிருந்தே ‘வித்தை காட்டுவதற்காக’ அவர் இப்படத்தை எடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

.

‘வித்தை காட்டுவதில்’ விருப்பமுள்ள ஒரு இயக்குனரும் இருக்கிறார், அவர் “பிரயன் டி பால்மா” (BRIAN DE PALMA), தன் படங்களில் புதுமைகளைச் செய்வதற்கு மெனக்கெடுவார். அவருடைய “ஸ்நேக் அய்ஸ்” (SNAKE EYES) படத்தின் ஆரம்ப 20 நிமிடங்களும் ஒரே ஷாட் போல தோன்றக் கூடியது. ஆனால் அவர் ‘ரோப்’ படத்தைப் போன்றே பல லாங் டேக்குகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுவது தெரியாமல் எடுத்திருக்கிறார். ஆனால் மிக சிக்கலான களத்தில் மிக நேர்த்தியாக அதைச் சாதித்திருக்கிறார். இதன் திரைக்கதையும் மிகச் சிக்கலான அமைப்பை உடையது, ஆனால் எளிதாக விளங்கிக்கொள்ளும் வகையில் படமாக்கியிருக்கிறார். தொழில் நுட்ப வித்தகத்துக்காக மட்டுமே கூட இப்படத்தைப் பார்த்து ரசிக்க முடியும்.

.

TAXI DRIVER, RAGING BULL முதல், தற்போது வெளியான THE AVIATOR, SHUTTER ISLAND வரை பல்வேறு அற்புதமான படங்களை எடுத்த “மார்டின் ஸ்கார்சஸே” (MARTIN SCORSESE)-யின் மிக முக்கியமான ஒரு படம், “குட் ஃபெல்லாஸ்” (GOODFELLAS). அதில் வரும் ஒரு “ஸ்டடி கேம்” ஷாட், லாங் டேக்’கின் அழகுக்கு மிகச் சிறந்த உதாரணம். தன் தோழியை முதல் டேட்டிங்குக்கு அழைத்துவரும் ஒருவன், கார் பார்க் செய்வதற்கு டிப்ஸ் கொடுப்பதிலிருந்து, வெளியே பெரும் கூட்டம் வரிசையில் காத்திருக்க பின் வாசல் வழியாக அவளை அழைத்துச் செல்வதும், அவனை எல்லாரும் அன்போடு வரவேற்பதும், எல்லாருக்கும் டிப்ஸ் கொடுத்தபடியே உள்ளே வர அவனுக்காக விசேஷமாக மேசை ஒன்று அமைத்துக் கொடுக்கப்படுவதும், வைன் பாட்டிலொன்று பரிசாகக் கொடுக்கப்படுவதும்.. எல்லாமே அந்தப் பெண்ணை அசத்துகிறது, இவன் சாதாரண ஆள் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது, இதுதான் காட்சி. கீழே அந்தக் காட்சியின் வீடியோ இருக்கிறது, இதைப் பல ஷாட்டுகளாகப் பிரித்து எடுத்திருந்தால் எத்தனை சலிப்பூட்டுவதாக இருந்திருக்கும் என்று நீங்களே யோசித்துப் பார்க்கலாம்.

.

லாங் டேக்குகளில் ஒரு க்ளாஸிக் என்று கருதப்படுவது, 1958ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட “டச் ஆஃப் ஈவில்” (TOUCH OF EVIL) படத்தில் வரும் ஒரு காட்சி. திரைக் கலையின் மாபெரும் சாதனைப் படைப்பாகக் கருதப்படும் “சிடிஸன் கேன்” (CITIZEN KANE) படத்தை இயக்கிய “ஆர்சன் வெல்ஸ்” (ORSON WELLES) அவர்களின் மற்றுமொரு படைப்பு “டச் ஆஃப் ஈவில்”. அதன் முக்கியமான துவக்கக் காட்சியை மூன்றரை நிமிட நீளமான ஷாட்டாக எடுத்திருக்கிறார் ஆர்சன் வெல்ஸ். வெடிகுண்டு பொருத்தப்பட்ட காரையும், சாலையில் உல்லாசமாக நடந்துவரும் புதிதாகத் திருமணமான தம்பதிகளையும் மாறிமாறிப் பிந்தொடரும் கேமரா, பல சாலைகளைக் கடந்து நகர்ந்தபடி இருப்பதுதான் அதற்கு ஒரு அதிசயத் தன்மையைக் கொடுத்திருக்கிறது. அதன் வீடியோ கீழே..

.

பிரஞ்சுப் படமான “இர்ரிவர்ஸிபிள்” (IRREVERSIBLE) (2002) பற்றிச் சொல்லாமல் லாங் டேக்குகளைப் பட்டியலிடவே முடியாது. காரணம் “ரோப்” படத்துக்குப் பிறகு மொத்தப் படமுமே லாங் டேக்குகளாக அமைந்தது அதுதான். “மெமண்டோ” போல, முடிவிலிருந்து தொடங்கி ஆரம்பம் நோக்கிச் செல்லும் கதையமைப்புக் கொண்டது. இப்படத்தின் பல லாங் டேக்குகளில் அனைவராலும் மறக்க முடியாதது, சுரங்க நடை பாதையில் வைத்து, மோனிகா பெலூஸி கற்பழித்துக் கொலை செய்யப்படும் காட்சிதான். அத்தனை அருவெறுப்பும், பரிதாபமும், திகிலும் ஒருங்கே உருவாகி நம்மைத் திக்குமுக்காடச் செய்வதற்க்கு ஒரே காரணம் அந்தக் காட்சி லாங் டேக்காக எடுக்கப்பட்டதுதான்.

அந்தப் படத்தில் இன்னொரு பிரம்மிப்பூட்டும் லாங் டேக்கும் இருக்கிறது. படத்தின் மூன்று முக்கியக் கதாபாத்திரங்களும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பேசியபடி நடந்துவந்து, அப்போது அங்கு வரும் ஒரு ரயிலில் ஏறி, பேசியபடியே பயணித்து, அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிப் பேசியபடியே செல்லும் காட்சி, படமாக்குவதற்கு மிகமிகக் கடினமானதாக இருந்திருக்க வேண்டும். இரண்டு ரயில் நிலையங்களை மூடி படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும், சரியான நேரத்தில் ரயிலை வரவழைத்து, அத்தனை துணை நடிகர்களை நடமாடவைத்து, நிறைய உரையாடல்கள் உள்ள அந்தக் காட்சியை எப்படி எடுத்தார்கள், எத்தனை முறை ரிகர்ஸல் பார்த்திருப்பார்கள், என்று நினைக்க நினைக்க ஆச்சர்யமாகவே இருக்கிறது. அந்தக் காட்சியின் வீடியோ எனக்குக் கிடைக்கவில்லை, தெரிந்தவர்கள் லிங்க் அனுப்பலாம். கீழே படத்தின் டிரெய்லர் மட்டுமே இருக்கிறது..

ஒரே ஷாட்டில்.. 3

.