இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் முன் எனக்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சனை, ‘ஷாட்’ (SHOT) என்னும் ஆங்கில வார்த்தையை எப்படித் தமிழாக்கம் செய்வது என்பதுதான். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது கட்டுரையொன்றில் “படத்துளி” என்று பயன்படுத்தியிருந்ததாக நினைவு. அது ஒரு நல்ல சொல்தான். ஒரு திரைப்படத்தின் ஆகச்சிறிய கூறு என்ற அர்த்தத்தில் அது அழகாகப் பொருந்துகிறது. ஆனால் பொதுவாக ‘ஷாட்’ என்ற ஆங்கிலச் சொல், வில்லிலிருந்து அம்பை ஒரு இடத்துக்குச் செலுத்துவது, Gun Shot மற்றும் Shot Put போன்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. திரைப்படத்தில் ‘ஷாட்’ என்பதை, இரு வெட்டப்பட்ட முனைகளுக்கு இடைப்பட்ட ஒரே துண்டாக இருக்கும் படச்சுருள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். படப்பிடிப்பின் போதென்றால், கேமராவை ஒருமுறை இயக்கி, பின்பு நிறுத்துவது வரையில் அதில் பதிவாகும் படத்துண்டு என்றும் சொல்லலாம்.

ஒவ்வொரு ஷாட்டைப் படமெடுக்கும்போதும், இயக்குனர் “ஆக்.. ஷன்” என்று கத்தி, பின்பு “கட்” சொல்வதற்கு இடையில் ஆயிரத்தெட்டு தவறுகள் நடக்கும். பொதுவாக அவற்றைப் படத்தொகுப்பில் சரிசெய்யலாம், திருத்தமுடியாத தவறுகளுக்கு மட்டுமே ‘ரீடேக்’ எடுப்பதுண்டு. திட்டமிட்டுப் படமெடுக்கும் ஒரு இயக்குனருக்கு நிச்சயமாகப் படத்தொகுப்பில் முன் பின் என்ன வரும் இடைவெட்டாக என்ன வரும் என்பது பற்றி ஒரு மனக்கணக்கு இருக்கும், ஆகவே அவர் சிலசமயங்களில் ஷாட்களில் தவறு இருந்தால்கூட, அதைப் படத்தொகுப்பில் சரிபண்ணிவிடலாம் என்பதால் “ஓகே” சொல்லிவிடுவார். பல ஷாட்டுகளாகப் பிரித்து ஒரு காட்சியைப் படமெடுப்பதில் உள்ள பெரிய வசதியே, படத்தொகுப்பின்போது எத்தனையோ திருத்தங்களையும் மேம்படுத்தல்களையும் அந்தக் காட்சியில் செய்யமுடியும் என்பதுதான்.

ஆனால் ஒரே ஷாட்டில் ஒரு முழுக் காட்சியையும் எடுப்பதற்கு, அல்லது மிக நீளமான இடைவெட்டு இல்லாத ஷாட்டைத் திட்டமிடுவதற்கு, இயக்குனருக்கு மிகமிகத் தைரியம் வேண்டும். ஏனெனில் அதைப் படத்தொகுப்பில் சரிசெய்யவே முடியாது.

அதிலும் குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும், காட்சி ஓட்டத்தின் வேகம். இயக்குனர் ஒரு காட்சியைப் படமெடுப்பதற்கு முன்னால் தன்மனதுக்குள் அந்தக் காட்சியை வடிவமைத்துக்கொள்கிறார், காட்சியோட்டத்தின் வேகத்தையும் தீர்மானிக்கிறார். ஆனால் அதைக்கூட படத்தொகுப்பின்போது மாற்றிக்கொள்ள முடியும். ஒட்டுமொத்தப் படத்தோடு அந்தக் காட்சியின் வேகம் பொருந்திவரவில்லை என்று நினைத்தால், படத்தொகுப்பாளரின் உதவியோடு காட்சியை நிதானமாகவோ துரிதமாகவோ மாற்றிவிடலாம். ஆனால் ஒரே ஷாட்டில் ஒரு காட்சியை எடுக்கும்போது அப்படிச்செய்ய முடியாது, இயக்குனருக்கு ஒட்டுமொத்த படத்தின் வேகம் பற்றியும் அதில் இந்தக் காட்சியின் இடம் பற்றியும் முழுமையான தெளிவு படப்பிடிப்பின்போதே இருந்தாக வேண்டும்.

ஒரே ஷாட்டில் படமெடுப்பதற்கு, அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் தொழிலாளர்களும் இயக்குனரின் படைப்பாற்றல் மீது நம்பிக்கை வைத்து முழு ஒத்துழைப்புக் கொடுத்தாக வேண்டும். வழக்கத்தைவிட அதிக உழைப்பும், பின்னால் திருத்திவிட முடியாத ஆபத்தும் இருந்தபோதிலும், ‘லாங் டேக்’ என்று அழைக்கப்படும் இத்தகைய ஷாட்கள் மீது ஈர்ப்பு கொள்ளாத இயக்குனர்களோ ஒளிப்பதிவாளர்களோ இல்லை.

நீளமான ஷாட்களை ‘லாங் ஷாட்’ என்று சொல்லாமல், உலகம் முழுக்க ‘லாங் டேக்’ என்று அழைப்பதற்கு ஒரே காரணம், ‘லாங் ஷாட்’ என்றால் ‘தூரக் காட்சி’ என்ற அர்த்தம் ஏற்கனவே இருப்பதுதான் . இவற்றின் சிறப்பு என்ன என்று சொல்வதற்கு முன்னால், எனக்குப் பிடித்த சில ‘லாங் டேக்’குகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய பட்டியலில் முதலில் இருப்பது 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ (CHILDREN OF MEN) என்ற படத்தில் வரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி. இதை இயக்கியது, GREAT EXPECTATIONS, Y TU MAMA TAMBIEN, HARRY POTTER AND THE PRISONER OF AZKABAN போன்ற படங்களை எடுத்த மெக்ஸிகோவைச் சேர்ந்த சிறந்த இயக்குனரான அல்ஃபான்ஸோ கொரான் (Alfonso Cuaron). இந்தக் காட்சியில் ‘விசுவல் எஃபெக்ட்’களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றபோதிலும், அதையும் தாண்டி அதன் மிகமிகச் சிக்கலான அமைப்பும் இறுதி வெளிப்பாட்டில் இருக்கும் பூரணத்துவமும் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை. எதிர்காலத்தில் (2027ஆம் ஆண்டு) நடக்கும் கற்பனைக் கதையான இதில், குழந்தைப் பேறு முற்றிலும் நின்றுபோனால் மனித குலம் எத்தகைய குழப்பங்களில் அமிழ்ந்துபோகும் என்பதே பின்னணி. கதையைச் சொல்ல விரும்பவில்லை, நல்ல சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். இதன் ஆரம்பக் காட்சியும் மிகச் சவாலான ஒரு லாங் டேக்தான், இருந்தாலும் இந்தக் காட்சியே என்னுடைய தேர்வு..

ஒரே ஷாட்டில்.. 2