லாங் டேக்குகள் நம்மை வசீகரிப்பதன் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கலாம்..

முதலாவதாக, லாங் டேக்கில் ஒரு காட்சி எடுக்கப்படும்போது, அது நடைபெறும் காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அதனால் ஒரு நிஜ உலகுக்குள் கதாபாத்திரங்கள் நடமாடுகிறார்கள் என்ற உணர்வு முழுமையாக ஏற்படுகிறது. ஒரு காட்சி (Scene) என்று நாம் கதையின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிப்பதே, அது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தொடர்ச்சியான ஒரு காலத்துக்குள் நடக்கிறது என்பதன் அடிப்படையில்தான். ஒரு காட்சியில், கதாபாத்திரங்களுக்கு இடையில் என்ன நடை பெற்றாலும், அது நடக்கும் மேடை அல்லது காட்சியின் பின்னணி என்பது, காலமும் இடமும் தான். அவை எந்த அளவுக்கு நிஜமாகத் தோன்றுகின்றனவோ அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களின் செயல்களும் நிஜமாகத் தோன்றும். அதனால் லாங் டேக், ஒரு காட்சியின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறது எனலாம்.

இந்தக் காரணத்திற்காகவே பல பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களின் ஆரம்பத்தில், முக்கியக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு லாங் டேக்குகளைப் பயன்படுத்துவார்கள். முதலில் ஒரு புதிய சூழலை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, அதற்குள் அவர்களை இயல்பாக நுழையவிட்டு, பிறகு தங்கள் கதாபாத்திரத்தைக் கூட்டத்தில் ஒருவராகக் காட்டி, அதன் பின்பு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவார்கள்.

உதாரணமாக, அமெரிக்காவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான “ராபர்ட் அல்ட்மேன்” (Robert Altman), அவருடைய “தி ப்ளேயர்” (The Player) படத்தின் ஆரம்பத்தில் ஒரே ஷாட்டில் அமைத்திருக்கும் 8 நிமிடக் காட்சியைச் சொல்லலாம். இது ஹாலிவுட் ஸ்டூடியோ அமைப்பைக் கிண்டல் செய்யும் படம் என்பதால், ‘லாங் டேக்’ மற்றும் ‘எம் டி.வி. வகை வேகமான கட்கள்’ பற்றிய உரையாடலை காட்சிக்குள்ளேயே சேர்த்திருக்கிறார் அல்ட்மேன்.

.

ஒரு இடத்தையும் சூழலையும் காட்டுவதற்கு உதாரணமாக, “ஸ்டேன்லி க்யூப்ரிக்” (STANLEY KUBRICK) தனது “ஷைனிங்” (THE SHINNING) படத்தில் எடுத்த மிகப் பிரபலமான ஸ்டடி கேம் ஷாட்டைச் சொல்லலாம். பனிமலை மீது தனித்திருக்கும் ஒரு நட்சத்திர விடுதி, பனிக்காலம் முழுவதும் மூடப்படுவது வழக்கம், அப்போது எல்லா பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். அந்த ஐந்து மாதங்களுக்கு அதைப்பார்த்துக்கொள்வதற்காக நியமிக்கப்படும் நாயகன் தனது மனைவி மற்றும் மகன் “டேனி”யோடு அங்கு குடியேறுகிறான். டேனி சிறுவர்களுக்கான மூன்று சக்கர வண்டியில் விடுதிக்குள் சுற்றி வருவதை லாங் டேக்காக எடுத்தார் க்யூப்ரிக். அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்துக்குள் முற்றிலும் தனியாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை மிக அழுத்தமாகப் பார்வையாளர்களின் மனதில் பதித்தது அந்தக் காட்சி

.

இரண்டாவது காரணம், லாங் டேக்குகளில் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி அறுபடாமல் தொடர்ச்சியாக இருக்கும். நடிகர்கள் உணர்ச்சியின் பல்வேறு படிநிலைகளையும் மாறுபாடுகளையும் சிறப்பாக நடிக்க முடியும். ஒரு காட்சி பல ஷாட்டுகளாகப் பிரித்து எடுக்கப்படும்போது, நடிகர்கள் முக பாவனைகளிலும் உடலசைவுகளிலும், முன் பின் ஷாட்டுகளோடு ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துவதற்கே அதிகம் உழைக்க வேண்டியிருக்கும், சுதந்திரமாக நடிக்க முடியாது. எவ்வளவு பெரிய நடிகரானாலும் நிறுத்தி நிறுத்தி ஷாட்டுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளின் தொடர்ச்சி சிறிய அளவுக்கேனும் அறுபடத்தான் செய்யும்.

திரைப்படம் ‘இயக்குனர்களின் ஊடகம்’ என்று சொல்லப்படுவதுபோல், ‘நடிகர்களின் ஊடகம்’ நாடகம்தான். ஒரு நாடகக் காட்சியில் திரை விலகியதிலிருந்து ஒரு நடிகர் அந்தக் கதாபாத்திரமாகவே முழுவதும் வாழ்கிறார். கற்பனை வீச்சு தடையின்றி இருக்கும், நடிப்புத்திறனை மேம்படுத்திக்கொள்ள (Improvise) முடியும். அந்த எல்லா சாத்தியங்களையும் திரைப்படத்தில் ஒரு “லாங் டேக்” காட்சி நடிகர்களுக்கு வழங்குகிறது.

.

மூன்றாவதாக, திடீரென்று ஏற்படும் ஒரு மாறுதல் ஒட்டுமொத்த சூழலையும் மாற்றிவிடுவதைக் காட்ட லாங் டேக்குகளே சிறந்தவை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் இப்போது உயிரோடு இல்லை என்னும் அதிர்ச்சியை உருவாக்குவதற்கும் லாங் டேக்குகளே மிகச் சிறந்த வழி. முந்தைய பதிவில் இணைத்திருந்த “சில்ட்ரன் ஆஃப் மென்” படக்காட்சியே நல்ல உதாரணம். ஆரம்பத்தில் விளையாட்டாகப் பேசியபடி வரும் கதாநாயகி, அந்த ஷாட்டுக்குள்ளேயே கொல்லப்படும்போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதே படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் லாங் டேக்கில், போக்குவரத்து மிகுந்த சாலையில் திடீரென்று வெடிக்கும் குண்டு, அந்தக் காலகட்டித்தில் நிலவும் பயங்கரவாதத்தை மிகத் தீவிரமாக உணரச் செய்கிறது.

.

நான்காவதாக, ஒன்றை எவ்வளவு பெரியது, எத்தனை உயரமானது, ஆழமானது, நீளமானது என்ற வியப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த லாங் டேக்குகளே பொருத்தமானவை. “ஸ்டார் வார்ஸ்” படத்தின் ஆரம்பத்தில் எழுத்துக்கள் மெல்ல விண்வெளியின் முடிவிலாத தொலைதூரத்துக்குள் சென்று மூழ்கியபடியே இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஒரு பெரிய விண்கலம் திரையில் கடந்துபோவது வெகுநேரம் காட்டப்படுகிறது, அது எத்தனைப் பெரியது என்னும் வியப்பை உண்டாக்குகிறது.

ஆனால் அதைவிடவும் சிறந்த உதாரணம், “கார்ல் சாகன்” (CARL SAGAN) எழுதி, “ராபர்ட் செமிகிஸ்” (ROBERT ZEMECKIS) இயக்கிய, “காண்டாக்ட்” (CONTACT) படத்தின் ஆரம்பக் காட்சி. முழுக்க கணினியின் துணைகொண்டு உருவாக்கப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சி என்ற போதிலும், லாங் டேக்கின் எல்லா அழகையும் தீவிரத்தையும் கொண்ட காட்சி அது. ரேடியோ அலைவரிசைகளின் சத்தங்கள் பின்னணியில் கேட்க, சுழன்றுகொண்டிருக்கும் பூமியையும் அதைத் தொடர்ந்து நிலவையும், சூரியக் குடும்பத்தின் கோள்களையும் காட்டியபடி போய்க்கொண்டே இருக்கிறது கேமரா, ரேடியோ சத்தங்கள் நின்று முழு அமைதியில் பால்வெளி மண்டலத்தையும் தாண்டி, பிரம்பஞ்சத்தின் முடிவிலியை நோக்கிப் போய்க்கொண்டே இருக்க, அவையெல்லாம் கதாநாயகியின் கருவிழியில் தெரியும் பிரதிபலிப்பென்றாகி முடியும்போது, அந்த லாங் டேக் ஒரு கவிதையின் இடத்தைத் தொடுகிறது.

.