.

ரோமன் பொலன்ஸ்கியின் சில சொற்கள் :

 • “நாம் படத்தில் எந்தக் குறையும் இருக்கக்கூடாதென்று நினைத்தாலும், சிலசமயங்களில் அவை உண்டாகிவிடுகின்றன. ஒரு முழுநீளத் திரைப்படத்தில் சிறுகுறைகள் எப்படியோ மன்னிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் ஒரு குறும்படத்துக்கு அப்படி இல்லை, அது மிகமிக நேர்த்தியாக, நுண்மையாக செதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குறும்படங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எடுக்கப்பட்டபோதும், மிகச்சில நல்ல குறும்படங்களே உலகில் உள்ளன.”
 • “நான் விரும்பத்தக்க மனிதர்களைப் பற்றிப் படமெடுப்பதே இல்லை. பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரங்கள்தான் விரித்துரைப்பதற்கு ஏராளமான நுணுக்கங்களைக் கொண்டிருக்கின்றன.”

 • “வன்முறையை அது எப்படிப்பட்டதோ அப்படித்தான் படத்தில் காட்டவேண்டும். நீங்கள் அதை நிஜத்தன்மையோடு காட்டவில்லை என்றால், அதுதான் ஒழுக்கமின்மையும் கேடு விளைவிக்கக் கூடியதும் ஆகும். ஒரு வன்முறைக் காட்சியில் மக்கள் வருத்தமும் எரிச்சலும் அடையவில்லை என்றால், அதுதான் தடை செய்யப்படவேண்டிய காட்சி.”
 • “ஒரு படம் இயக்குவதென்பது கண்களை மூடிக்கொண்டு ஓவியம் வரைவதைப் போன்றது”
 • “படப்பிடிப்பின்போது, ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கிறோம். பகுதி பகுதியாகத்தான் திரையிலும் ‘ரஷ்’ பார்க்கிறோம். அவற்றை ஒன்றாக ஒரே படமாகச் சேர்க்கும்போதும், அவை சிறுசிறு பகுதிகளாகவே நன்றாக நினைவில் நீடிக்கும், அதனால் நம்மால் அதை ஒரே கோர்வையாக மொத்தமாகப் பார்க்கவே முடியாது. படத்தை இறுதி செய்யும் போதும், முழுப்படம் என்பது ஒரு உள்ளுணர்வாகத்தான் நமக்கு இருக்கும். முன்னோட்டத் திரையீடுகளிலும் நாம் அதை முழுப்படமாகப் ‘பார்க்க’வே முடியாது. காரணம், ஒரு படத்தின் பின்னாலுள்ள எத்தனையோ விஷயங்கள் நம் கவணத்தை சிதறடிக்கும். ஒவ்வொருமுறை முழுப்படத்தைப் போட்டுப் பார்க்கும்போதும், அதில் ஒன்றிரண்டு காட்சிகள் விடுபட்டுவிட்டதாக எனக்குத் தோன்றுவதுண்டு. “அந்தக் காட்சி படத்தில் வந்ததா?” என்று நான் யாரிடமாவது கேட்பேன், ஏனென்றால் அதைப் பார்த்ததாக நினைவே இருக்காது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தைப் புதிய பார்வையாளனைப்போல் பார்க்க முடியும், சிறுசிறு தகவல்களை மறந்து ஒரு முழுத் தொகுதியாக அப்போதுதான் நான் முதல் முறை பார்ப்பேன்.”
 • “கணநேரத்தில் தோன்றும் ஆசைகளின் வெளிப்பாடுகளே எனது படங்கள். நான் அதிகமும் எனது உள்ளுணர்வையே பின்தொடர்வேன், ஆனால் அதில் ஒரு ஒழுங்கான வழிமுறை இருக்கும்.”

 • “நீங்கள் திரையரங்கில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதை, திரைப்படம் கண்டிப்பாக மறக்கடிக்க வேண்டும்.”
 • “குறும்படம் என்பது சிறுகதை எழுதுவதைப் போன்றது, நீங்கள் ஒரு காட்சியிலோ ஒரு ஷாட்டிலோ கூடத் தவறிவிடக்கூடாது. ஒரு நீளமான வடிவம் மிகுந்த சகிப்புத்தன்மையுடையது, சில குறைகளை மறைத்துவிடும் அளவுக்குப் போதுமான விஷயங்கள் அதில் இருக்கும். ஒரு 80 சதவிகிதம் சரியாக இருந்தாலே முழுநீளப் படத்துக்குப் போதும், ஆனால் ஒரு குறும்படம் நூறு சதவிகிதம் சரியாக இருக்க வேண்டும்.”

 • [“தி பியானிஸ்ட்” சுயசரிதைப் புத்தகத்தைப் பற்றி] “இந்தக் கதையைத்தான் நான் இத்தனை வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்தேன்..”
 • “திரைப்பட வேலைகளின் மீதான காதல் முக்கியக் காரணம்தான், ஆனால் அதைவிடவும் படைப்பு மனத்தின் உந்துதலாலேயே நான் தொடர்ந்து படமெடுக்கிறேன்”
 • “என்னை முழுமையாகத் திருப்திப்படுத்திய ஒரு படத்தை நான் இதுவரை எடுக்கவில்லை.”

 • “நான் பார்த்த நடிகர்களிலேயே உடன்பணியாற்றுவதற்கு மிக எளிதானவர் ஜாக் நிகல்ஸன் மட்டுமே. முதலில் அவர் மிகுந்த தொழில்முறையானவர், இரண்டாவது நீங்கள் என்ன சொன்னாலும் அவர் மிக எளிதாக அதைச் செய்துவிடுவார். அவர் இயக்குனரையும் எழுத்தாளரையும் கெடுத்துவிடக்கூடியவர், ஏனென்றால் நீங்கள் ஒரு உரையாடலைத் தவறாகவோ, கேட்பதற்கு விகாரமாக இருக்கும்படியோ எழுதிக்கொடுத்தாலும் அவர் பேசும்போது அது சரியாகவே ஒலிக்கும். அவர் எதைப் பேசினாலும் கச்சிதமாக இருக்கும். அவர் எதையும் மாற்றும்படிக் கேட்பதே இல்லை. நான் உடன்பணியாற்றிய மற்ற எல்லா நடிகர்களும், ஏதாவது ஒரு சமயத்தில் என்னிடம், “இதை நான் மாற்றிக்கொள்ளலாமா?” அல்லது “இந்த சொல்லை எடுத்துவிடட்டுமா?” என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஜாக் அப்படிச் சொன்னதே இல்லை. நிஜமாகவே ஆச்சர்யம்தான்.”
 • “சாதாரன காதல் ஆர்வமூட்டுவதாக இருக்காது. என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அது மிகுந்த சலிப்பூட்டுவதாகவே இருக்கும்”

 • “ஆகச்சிறந்த படங்கள் வேறு யாராலும் அல்ல இயக்குனரால் மட்டுமே உருவாகின்றன.”
 • “இந்தக் காலத்தில் முழுக்க அற்புதமான ஒரு மனிதரைப் பற்றி வாரஇதழில்கூட எழுத முடியாது. அவரில் ஒரு சிறு குறையாவது காண முடியுமா என்றுதான் பார்ப்பார்கள். அதுபோலவே, ஒரு கதாபாத்திரத்தின் பலவீனங்களின் மூலமும் குறைகளின் மூலமும் அவற்றை நம்மோடு அடையாளப்படுத்திக் கொண்டால்தான் படமெடுக்க முடியும். ‘திருவாளர் அற்புத’த்தைப் பற்றிப் பேசுவது மிகுந்த சலிப்பானது.”

 • “நான் ஒவ்வொரு படத்தை ஆரம்பிக்கும்போதும் அது எனக்கு ஒரு புறப்பாடு போன்றதுதான். ஒரு படத்தை எடுத்து முடிக்க நெடுங்காலம் ஆகிறது, ஆகவே அடுத்த படத்துக்குள் நுழையும்போது ஏற்கனவே ஒரு வித்தியாசம் ஏற்பட்டிருக்கும், ஒன்றிரண்டு ஆண்டுகள் வளர்ந்திருப்பேன்.”
 • “நான் ஏன் எப்போதும் தீயசக்தியைப் (Devil) பற்றிப் படமெடுக்கிறேன் என்று எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் நான் அப்படிப்பட்ட படங்கள் இரண்டு மட்டுமே எடுத்திருக்கிறேன் அதுவும் 30 வருட இடைவெளியில்”

 • “நைன்த் கேட்” கதையில் என்னைக் கவர்ந்த அம்சமே, அதன் ஹீரோ ஒரு புத்தகம் என்பதுதான். நான் அதை ஒரு கதாபாத்திரமாகவேதான் பார்த்தேன். அட்டையில் உள்ள வேலைப்பாடுகளை நானே வடிவமைத்தேன், அதன் நிறத்தையும் அளவையும் தீர்மானித்தேன், எப்படி ஒரு நடிகரைத் தேர்ந்தெடுத்து கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாற்றுவேனோ அப்படி”
 • “எனக்குத் தனிப்பட்ட முறையில் சூனியத்திலோ பேய்பிசாசுகளிலோ சுத்தமாக நம்பிக்கை இல்லை. சாத்தான் என்றால் எனக்கு சிரிப்புத்தான் வரும். படமெடுப்பதற்கு அவை சிறந்த மூலப் பொருட்கள் என்ற வகையில், ஒரு திரைப்பட இயக்குனராக மட்டுமே என்னால் அவற்றை விரும்ப முடியும்.”

 • “ட்ரூஃபோ (Francois Truffaut), லெலோச் (Claude Lelouch), கொடார்ட் (Jean-Luc Godard) போன்ற இயக்குனர்கள் தங்களைப் புரட்சியாளர்களாகக் கற்பனை செய்து விளையாடும் சிறுபிள்ளைகளைப் போன்றவர்கள். நான் அந்தக் கட்டத்தை எப்போதோ தாண்டிவிட்டேன். அந்த விஷயங்கள் மிகுந்த தீவிரத்தோடு நடைபெற்ற நாட்டைச் சேர்ந்தவன் நான்.”
 • “சிறுவர்களுக்கு தாங்கும் சக்தி அதிகம். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அதற்குக் காரணம் ஒருவேளை அவர்களுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியாது என்பதால் இருக்கலாம். அவர்கள் எப்படியோ அதிக நெகிழ்த்தன்மையோடு இருக்கிறார்கள், பெரியவர்களைவிட மிக வேகமாக நிலைமைக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.”

 • “ஹாலிவுட் எப்படிப்பட்டதென்றால், செல்லத்தால் கெட்டுப்போன வால்பையனைப் போன்றது. ஒரு புது பொம்மையைப் பார்த்ததும் உடனே அதை அடைவதற்காக அடம்பிடிப்பான். கிடைத்ததும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுத் தூர எறிந்துவிடுவான்.”
 • “எது அதிர்ச்சிகரமானது என்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை. தலை துண்டிக்கப்பட்ட ஒருவனின் கதையை நீங்கள் சொல்லவேண்டுமென்றால், அவனது தலையை எப்படித் துண்டித்தார்கள் என்று காட்டத்தானே வேண்டும். இல்லையென்றால் அது, நகைச்சுவைத் துணுக்கு ஒன்றைச் சொல்லி அதன் உச்ச வரியை மட்டும் விட்டுவிடுவதற்குச் சமம்.”

 • “ஹாரிசன் ஃபோர்ட் ஒரு வசனத்தைச் சொன்னால், அது எப்போதுமே நான் எதிர்பார்த்ததிற்கு முரணாகத்தான் இருக்கும், ஆனால் அது எப்படியோ வேலை செய்தும்விடும். அது நான் நினைத்ததைக் காட்டிலும் பார்வையாளர்களைத் தொடுவதாகவும், நிஜமானதாகவும் இருக்கும்.”
 • “நகைச்சுவை என்பது ஒவ்வொரு சமுதாயத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்ப வேறுபடக்கூடியது. பிரஞ்சுக்காரர்கள் வெடித்துச் சிரிக்கும் ஒரு விஷயம் அமெரிக்கர்களுக்கு நகைச்சுவையாகவே தோன்றாமல் போகலாம்.”

 • “எனக்கு வயதாகிவிட்டதாகத் தோன்றுவதே இல்லை. சிலசமயம், சவரம் செய்யும்போது கண்ணாடியில் தெரியும் முகம் மெல்லிய அதிர்ச்சியை உருவாக்கும். எது என்னை அதிகம் பயமுறுத்துகிறது என்றால், நான் சாதாரன நேரத்தில் காணாத என் தந்தையின் சாயல் அப்போது என் முகத்தில் தெரிவதுதான்.”
 • “ஒவ்வொரு தோல்வியும் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையையே ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் அதைப் பழிதீர்த்து வெற்றிகொள்ள, என்னாலும் முடியும் என்று காட்ட, எனக்கு அதிக தன்னம்பிக்கை தேவையாயிருந்தது”

 • “எப்போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அபாயகரமாக உணர்வேன்.”
 • “என்னுடைய கலைப் படைப்புகளை வைத்தே என்னை மதிப்பிட வேண்டும், என் வாழ்க்கையை வைத்து அல்ல. நடக்கப்போவதை உங்களால் மாற்ற முடியும் என்றால், அது உங்கள் கலை வாழ்வில் மட்டுமே சாத்தியமாகலாம், நிச்சயமாக உங்கள் நிஜ வாழ்க்கையில் அல்ல.”

Advertisements