“லாங் டேக்” பற்றிய எனது பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டத்துக்குப் பதில் எழுத ஆரம்பித்து, அது மிக நீளமாக ஆகிவிடும் என்று தோன்றியதால், தனியாக ஒரு இடுகையாகவே போட்டுவிடத் தீர்மானித்தேன்.

==

சார், வணக்கம். இப்போதுதான் உங்கள் வலைப்பூவைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அற்புதமான பதிவிது.

சத்யஜித்ரே’வின் ‘சாருலதா’ பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். அதில் வரும் தொடர்ச்சியான ஓர் ஊஞ்சல் ஷாட் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என பலவாறு யூகித்திருக்கிறேன். நீங்களும் அதைப் பார்த்திருந்தால் எப்படி என விளக்க முடியுமா? நன்றி.

சுரேஷ்கண்ணன்.

அன்புள்ள சுரேஷ் கண்ணன்

உங்களைப் போலவே எனக்கும் ‘சாருலதா’வின் ஊஞ்சல் காட்சி எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்பதைப் பற்றி யூகங்கள் மட்டுமே இருக்கின்றன. நிஜத்தில் எப்படி எடுத்தார்கள் என்பதை நான் எங்கும் படித்ததோ கேள்விப்பட்டதோ இல்லை.

சுப்ரதோ மித்ரா எனும் சத்யஜித் ரேவின் ஒளிப்பதிவாளர், ஏராளமான புதுமைகளைச் செய்த ஒரு முன்னோடி. “பவுன்ஸ் லைட்டிங்” என்று அழைக்கப்படும் ஒளியமைப்பை திரைப்படத்தில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். ரே மற்றும் மித்ரா இருவருக்குமே அவர்களின் படைப்பாற்றலின் உச்சகட்டமான இணைப்பும் ஒத்திசைவும் கூடிய படம் ‘சாருலதா’. அந்தப் படத்திலிருக்கும் பல காட்சிகள், சாதனைகள்.

குறிப்பாக அந்த ஊஞ்சல் காட்சி சத்யஜித் ரேவின் விருந்து. ஒவ்வொருமுறை அந்தக் காட்சியைப் பார்க்கும்போதும், சாருவின் முகபாவனையில் வெளிப்படும் ஏகாந்த மனநிலையும், அவளது பாடலின் இனிமையும், நானும் ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வையே ஏற்படுத்தியிருக்கின்றன. அல்லாமல் விலகி நின்று ஆராய்வதற்கு முடிந்ததே இல்லை. கேமரா ஒன்று அந்தரத்தில் ஊஞ்சலோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறது என்பதையும், ஒளிப்பதிவாளரும் சேர்ந்து ஊசலாடுகிறார் என்பதையும் கற்பனை செய்யவே முடியவில்லை. அதுதான் சத்யஜித் ரேவின் சிறப்பு இல்லையா? அவர் படங்களில் தொழில்நுட்பம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு உணர்வுகளும் மனநிலைகளுமே முன்னிலை பெற்றிருக்கின்றன. இப்போது நீங்கள் கேட்டதனால் மீண்டும் அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

முதலில் தோன்றுவது, சாரு ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலைவிட பெரிய அளவில் ஒரு ஊஞ்சலை செய்து அந்த ஷாட்டைப் படமெடுத்திருக்கலாம். அந்தப் பெரிய ஊஞ்சலில் ஒளிப்பதிவாளர் தன் கையில் அல்லது தோளில் கேமராவை வைத்தபடி நிற்க, அவர் விழுந்துவிடாதபடிக்கு இருபுறமும் இணைத்துக் கட்டியிருக்கலாம். ஆனால் இந்த யூகம் முற்றிலும் தவறானது என்றே நான் நினைக்கிறேன். காரணம் தோளில் வைத்திருக்கும் கேமரா எவ்வளவு உறுதியாகப் பிடிக்கப்பட்டிருந்தாலும் சிறிய அளவிலாவது காட்சிச் சட்டத்தைவிட்டு விலகி அசைவது தெரிந்துவிடும். ஆனால் இந்த ஷாட்டில் கேமரா மிகமிக நிலையாகப் பொருத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

ஆகவே ‘இருபது அடி கிரேன்’ என்று அழைக்கப்படும் சிறிய கிரேனில் கேமராவைப் பொறுத்தி, அதன் ஒரு நாற்காலியில் நாயகியை உட்காரவைத்து மற்றதில் ஒளிப்பதிவாளர் உட்கார்ந்து, கிரேனை மேலும் கீழுமாக அசைத்து அந்த ஷாட்டை எடுத்திருக்கலாம். சாருவின் கைகளோ ஊஞ்சலின் கயிறுகளோ காட்சிச் சட்டத்துக்குள் இல்லை என்பதும், முந்தைய ஷாட்டில் தன் தோளுக்கு மேல் கயிறைப் பிடித்திருப்பவள் இதில் கைகள் கீழே இறக்கியிருப்பதுபோல் தெரிவதும், அதை உறுதி செய்கின்றன. ஆனால் இந்த யூகத்திலும் ஒரு பிரச்சனை இருக்கிறது.

சாரு மேலே உயரும்போது எந்தப் பிரச்சனையும் இல்லை ஆனால் கீழே இறங்கும்போது, அவளுக்குப் பின்னால் தரை ஆழத்தில் தெரிகிறது. ஆனால் சாதாரணமாகப் பொறுத்தப்பட்ட 20அடி கிரேனில் அவ்வளவு ஆழம் போவது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். ஆகவே ஒரு மேடையின் மீதோ அல்லது ஒரு வாகனத்தின் மீதோ கிரேனை ஏற்றி, அதன்மீது ஒளிப்பதிவாளரும் நடிகையும் ஏறி அந்த ஷாட்டை எடுத்திருக்க வேண்டும். கிரேனை இயக்குபவர்கள் நின்று வேலை செய்யுமளவிற்குப் பெரியதாக அந்த மேடை இருக்க வேண்டும். ஆனால் அந்தக் காலத்து கிரேன் சமநிலை தவறி சரிந்துவிடுவதற்கே வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை மேடையே இல்லாமலும் கூட எடுத்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லலாம்.

ஆனால் இதெல்லாவற்றையும் மறந்து, கதாபாத்திரத்தின் உணர்வோடு ஒன்றி அந்தக் காட்சியை ரசிப்பதுதான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். தற்காலத்தில் இதுபோன்ற காட்சிகளை எடுப்பது மிக எளிது, நடிகரின் உடலிலேயே கேமராவைப் பொறுத்திவிடக் கூடிய உபகரணங்கள் இருக்கின்றன.

சார்லஸ்.