முந்தைய பதிவில், காலத்தைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் “நான்லீனியர்” திரைக்கதை அமைப்பு என்றால் என்ன என்பதையும், அவ்வகையில் கதைசொல்ல வேண்டிய தேவை என்ன என்பதையும் பார்த்தோம். எனக்குப் பிடித்த பத்து நான்லீனியர் படங்களைக் காலவரிசைப்படி பட்டியலிட ஆரம்பித்தேன். முதல் படம், 1916-யில் எடுக்கப்பட்ட, D.W. கிரிஃபித் இயக்கிய, “சகிப்புத்தன்மை இன்மை” (INTOLERANCE).

பட்டியல் தொடர்கிறது..

( 2 )

குடிமகன் கேன் (1941)

அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி (AFI) பத்தாண்டுக்களுக்கு ஒருமுறை, பலதரப்பட்டவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அதுவரை அமெரிக்காவில் எடுக்கப்பட்டவைகளில் மிகச் சிறந்த 100 படங்களைத் தேர்ந்தெடுத்துத் தரவரிசைப் பட்டியல் ஒன்றை வழங்குகிறது. இதுவரையில் அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் படம் “சிடிஸன் கேன்”. அதன் அழகியல், தொழில் நுட்பம், இயக்குனரின் நுணுக்கங்கள் எல்லாம் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக நடத்தப்படுகின்றன. நானும் படித்துத் தேர்வில் எழுதியிருக்கிறேன். சிக்கலான திரைக்கதை கொண்ட அந்தப் படத்தை ஆர்சன் வெல்ஸ் தனது முதல் படமாக இயக்கி, இளைஞன் முதல் கிழவன் வரை மாறவேண்டிய சவாலான மையக் கதாபாத்திரத்தில் தானே நடிக்கவும் செய்தபோது அவருடைய வயது வெறும் 25 தான்.

இப்படத்தைப் பற்றி சில அமெரிக்கத் திரைக்கலைஞர்களின் கருத்துக்கள் :

ஒரு புகழ்பெற்ற தினசரிப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும், அதன் முதலாளியும், பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், மாகாண கவர்னர் பதவிக்காகத் தேர்தலில் போட்டியிட்டவருமான ‘சார்லஸ் ஃபோஸ்டர் கேன்’, வயதான நிலையில், தனது அரண்மனை போன்ற வீட்டில், மரணப் படுக்கையில் “ரோஸ் பட்” (Rose Bud) என்று சொல்லிவிட்டுச் செத்துப்போகிறார்.

ஒரு பத்திரிகை நிருபர், ‘கேனி’ன் வாழ்க்கையைப் பற்றி வெளி உலகுக்குத் தெரியாத விஷயங்களைத் தேடி அறிய முயற்சிக்கிறான். ‘கேன்’ உயிர் பிரிவதற்குமுன் இறுதியாக நினைத்துப்பார்த்த அந்த “ரோஸ் பட்” யார் அல்லது எது என்று கண்டுபிடித்துவிட்டால் ‘கேன்’ பற்றிய பெரிய ரகசியம் ஒன்று வெளிப்படும் என்று பத்திரிகையாளன் நினைக்கிறான். அதனால் அவன் ‘கேனி’ன் நண்பர்கள், தினசரிப் பத்திரிகை நிறுவனத்தை வளர்ப்பதற்குத் துணை நின்றவர்கள், முன்னாள் மனைவியான ஒபரா பாடகி சூஸன் ஆகியோரைப் பேட்டி எடுக்கிறான். ஏழைக் குடும்பத்தில் பிறந்த கேனை தத்தெடுத்து வளர்த்த ‘தாட்சர்’ எழுதிவைத்த நினைவுக் குறிப்புகளையும் படிக்கிறான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரிந்த கேனின் வாழ்க்கைப் பகுதிகள் ஃப்ளாஷ் பேக்குகளாக வருகின்றன. உதாரணத்துக்கு, ஒருவர் கேனின் இருபது வயதில் ஆரம்பித்து நாற்பது வயதுவரை தனக்குத் தெரிந்ததை மட்டும் சொன்னால், மற்றொருவர் முப்பது வயதிலிருந்து ஐம்பத்தைந்து வரை தான் அறிந்த கேன் பற்றிச் சொல்வார்; தாட்சரின் குறிப்புகளில் அவனைப் பற்றி ஆறு வயதில் ஆரம்பித்தால், இன்னொருவர் எழுபது வயதில் ஆரம்பிப்பார். இப்படிக் காலவரிசை மாறி, ‘கேன்’ என்னும் ஆளுமையின் மொத்த வாழ்க்கையும் பகுதி பகுதியாகக் காட்டப்படுகிறது.

அந்தத் துண்டுப் பகுதிகளிலிருந்து நாமும் பத்திரிகையாளனோடு சேர்ந்து, கேனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஒருகாலத்தில் இலட்சியங்களும், கனவுகளும், பொது நலனில் அக்கறையும் உள்ள இளைஞனாக இருக்கிறான் கேன். அவனே இன்னொரு காலத்தில் பணவெறியும், புகழ் போதையும், அதிகார வேட்கையும் கொண்டவனாக இருக்கிறான். கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியுமாகத் திருமண வாழ்க்கையில் நுழையும் அவன், காலப்போக்கில் பணமும் வசதியும் பெருகப் பெருக மனைவியிடமிருந்து விலகுகிறான். அதை ஒரே சாப்பாட்டு மேசை மாண்டாஜில் விளக்குகிறார் ஆர்சன் வெல்ஸ், கணவன் மனைவிக்குள் அரம்பத்தில் அன்பும் காதலுமான உரையாடல், பின்நாட்களில் விவாதமாக மாறிப் பின்பு பேச்சே நின்றுபோகிறது.

அந்தக் காட்சி :

ஆனால் அதே கேன், சூசன் என்கிற இன்னொரு இளம் பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டதும் கீழிறங்கி உருகுகிறான். குரல்வளமில்லாத பாடகியான அவளுக்காகப் பெரும் செலவில் தனியாக ஒரு ஒபெரா அரங்கத்தையே கட்டி அவளை அரங்கேற்றுகிறான். காட்டமாக அவளை விமர்சனம் செய்யும் தனது பத்திரிகையின் இசை விமர்சகனான தன் நண்பனை வேலையிலிருந்து வெளியேற்றுகிறான்.

இறுதியில் தன் சொத்துக்கள் முழுதையும் சேர்த்து ஒரு பெரிய கோட்டையைக் கட்டுகிறான். அதனுள் உலகின் அரிய சிற்பங்கள் ஓவியங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை வாங்கிக் குவிக்கிறான். விலங்குகள் தாவரங்களின் பெருந்தொகையையும் அந்தக் கோட்டைக்குள் சேர்க்கிறான். ஆனால் அவனால் திட்டமிட்டபடி முழுவேலைகளையும் முடிக்க முடியவே இல்லை. சூஸன் அங்கு தான் சிறைவைக்கப்பட்டதுபோல் உணர்கிறாள். இருவருக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாகின்றன. ஒருமுறை சூஸன் தற்கொலைக்கு முயல அப்போதுதான் அதன் தீவிரத்தை உணர்ந்து, அவளுக்கு விவாகரத்து கொடுக்கிறான் கேன். பிறகு இறுதிவரை அந்தக் கோட்டைக்குள் தனிமையில் உழன்று செத்துப்போகிறான் அவன்.

சுயநலமும் பேராசைகளும் உந்தித் தள்ள, அவன் நட்பையும் உறவுகளையும் தாண்டிக் குதித்து, கடின உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் பெற்ற வெற்றிகளையும், பிறகு அடைந்த தோல்விகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இறுதியில் மிஞ்சுவது என்ன என்கிற கேள்வி எழுகிறது. அந்தப் பத்திரிகையாளனால் இறுதிவரை “ரோஸ் பட்” என்றால் என்ன என்று அறிய முடியவில்லை. ஆனால் அவன் இறுதியில், “அந்த சொல்லின் அர்த்தம் தெரிந்தால் கூட கேனின் வாழ்க்கையை முழுக்கப் புரிந்துகொள்ள முடியாது..” என்றே சொல்கிறான்.

எந்த ஒரு தனிமனிதனின் வாழ்வையும் இன்னொருவர் முழுவதும் அறிந்துவிட முடியாது என்பதுதான் படத்தின் மையக் கருத்து. கேனின் கோட்டை போன்ற வீட்டின் நுழைவு வாயிலிலிருக்கும் “வெளியாட்கள் நுழையக்கூடாது” என்கிற அறிவிப்புப் பலகை,  படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப்படுகிறது, அது ஒரு குறியீடு.

“ரோஸ் பட்” என்றால் என்னவென்று பார்வையாளர்களுக்கு இறுதியில் காட்டுகிறார் இயக்குனர். ‘கேன்’ தத்தெடுக்கப்படுவதற்கு முன்னால், மகிழ்ச்சியான சிறுவனாகப் பனியில் சறுக்கி விளையாடப் பயன்படுத்திய சறுக்குப் பலகையின் பெயர்தான் “ரொஸ் பட்”. அதை வேலையாட்கள் தேவையற்ற பொருட்களோடு சேர்த்துத் தீயிலிட்டுக் கொளுத்திவிடுகிறார்கள் என்பதோடு படம் முடிகிறது.

அந்த இறுதிக் காட்சி இங்கே:

நாம் இந்தப் பட்டியலில் முதலில் பார்த்த கிரிஃபித் அவர்களின் “சகிப்புத்தன்மை இன்மை” திரைப்படம், வரலாற்றின் நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சகிப்புத்தன்மையற்ற சூழலில் எளிய மனிதர்கள் அன்பின் காரணமாக சிரமங்களுக்கு உள்ளாவது, இணையாகக் காட்டப்பட்டிருக்கிறது. அதில் கால மாற்றம் என்பது 2500 வருட வரலாற்றுக் காலத்துக்குள் நடக்கிறது. ஆனால் “குடிமகன் கேன்” படத்தில் ஒரு மனிதனின் வாழ்நாளுக்குள் நிகழ்ந்த சம்பவங்கள் கால மாற்றத்தோடு சொல்லப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் மனித வாழ்வின் அர்த்தம் என்ன?, செல்வமும் புகழும் அதிகாரமும் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துவிடுமா? உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? என்கிற கேள்விகளை அது எழுப்பியிருக்கிறது.

தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் :

படத்தின் ஆரம்பத்தில், “நியூஸ் ரீல்” எனப்படும் செய்தித் தொகுப்பு ஒன்று காட்டப்படுகிறது. அதில் இறந்துபோன ‘கேன்’ பற்றிய பொதுவான தகவல்கள், அவரது பேட்டியின் ஒரு பகுதி முதலியவை வருகின்றன. ‘கேன்’ கோட்டை போன்ற பண்ணை வீட்டைக் கட்டியதைப் பற்றியும், நோவாவின் பேழையைப் போன்று அணைத்துவகை உயிரினங்களையும் அங்கு பராமரிப்பதைப் பற்றியும், புராதனப் பொருட்களையும், கலைப்பொருட்களையும் பெரும் பொருட் செலவில் கொண்டுவந்து சேர்த்தது பற்றியும் அந்த ஆவணப் படம் சொல்கிறது. அந்தக் காலத்தின் நிஜமான ஒரு செய்திப்படம் போலவே அது அமைந்திருப்பதற்குக் காரணம் படத்தொகுப்பாளர் “ராபர்ட் வைஸ்”. அவர் அந்தக் காட்சியின் படச்சுருளை வேண்டுமென்றே தரையில் தேய்த்தும் மண்ணில் புரட்டியும் பழையதுபோல் ஆக்கிப் படத்தில் சேர்த்தார். பொதுவாக “நியூஸ் ரீல்” திரையில் தூரல் பொழிவதுபோலக் கோடுகளோடும் கீறல்களோடும் இருக்கும் என்பதாலேயே அப்படிச் செய்தார். ராபர்ட் வைஸ் பின்னாளில் இயக்குனராகி “சவுண்ட் ஆஃப் மியூஸிக்” “வெஸ்ட் சைட் ஸ்டோரி” போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கினார்.

சிலகாட்சிகளில், மினியேச்சர் செட்டில் ஆரம்பிக்கும் ஒரு ஷாட் நிஜ செட்டுக்குள் நுழைந்து தொடர்ந்திருக்கிறது. இது இப்படத்தின் மிகப் பிரபலமான தொழில்நுட்பப் புதுமை. உதாரணத்துக்கு ஒரு காட்சி கீழே..

முதலில் காட்டப்படுவது மினியேச்சர். அந்தக் காலத்துக் கேமராவால் பெயர்ப்பலகைக்குள் நுழைந்து செல்ல முடியாது, உண்மையில் கேமரா நெருங்கியதும் அந்த பெயர்ப்பலகையைப் பிய்த்துவிடுவார்கள். கண்ணாடிக் கூரையை நெருங்குவதுவரை மினியேச்சர் செட்டில்தான் மழை பெய்கிறது. அந்த ‘எஃபெக்ட் ஷாட்’டின் இறுதியில் பெரிய மின்னல் ஒன்று வெட்டுவதுபோல் செய்து, அதனோடு நிஜ செட்டுக்குள் எடுக்கப்பட்ட ‘ஒரிஜினல் ஷாட்’டை ஒட்டியிருக்கிறார்கள், அதன் மூலம் கேமரா கண்ணாடிக்குள் நுழைந்து தொடர்வது போன்று காட்டியிருக்கிறார்கள். இப்போது இது சாதாரணமாகத் தெரிந்தாலும் 70 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை அதிசயமாய் இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

இப்படத்தில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மேலும் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பொது வாசகர்களுக்கு ஆர்வமூட்டுவதாக இருக்காது. நீங்கள் நிஜமாகவே தெரிந்துகொள்ள விரும்பினால், நவீன காலத்தின் அற்புத விளக்காக இருக்கும் இணையத்தைக் கொஞ்சம் தீவிரத்தோடு தேய்த்தால் கிடைத்துவிடும்.

[உதவிக் குறிப்புகள்: ‘மாண்டாஜ்’களை அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கும் விதம். / தேர்தல் பிரச்சாரக் காட்சியில் காட்டப்படும் பெரும் கூட்டம் ஒரு புகைப்படம் மட்டுமே, இப்படி செலவைக் குறைத்து அதேசமயம் பிரம்மாண்டமாகவும் தெரியச்செய்திருக்கும் விதம். / ‘டிரான்சிஷன்’ எனப்படும் ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்குக் கடந்துபோவதற்குப் பயன்படுத்தப்படும் யுத்திகளில் புதுமைகள்.. குறிப்பாக கடித மற்றும் தட்டச்சு எழுத்துக்களிலிருந்து காட்சிமாற்றம். / ஒளிப்பதிவில் ஆர்வமுள்ளவர்கள் “கிரெக்” (Gregg Toland) பற்றிப் படித்தே ஆக வேண்டும். “டீப் ஃபோகஸ்” ‘யூனிவர்சல் ஃபோகஸ்’ என்பது போன்ற யுத்திகள்.. சில காட்சிகளில் ஃபோகசுக்காகவே கேமராவில் மாஸ்க் செய்து ஒரு ஷாட்டை இருமுறை எடுத்திருக்கிறார். வேறு சில காட்சிகளில் படப்பிடிப்புக்குப் பிறகு ‘லேப்’யில் ‘ஆப்டிகள் எஃபெக்ட்’ மூலம் ஃபோகஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.. ஏன்? எதற்காக? எப்படி? / படம் நெடுகிலும் மேற்கூரை சிறிது தெரியும்படி “லோ ஆங்கிளி”ல் எடுத்தது ஏன்.. என்ற கேள்விகளோடு தேடலாம்..]

ஆர்சன் வெல்ஸ் சிறந்த இயக்குனராக மட்டுமின்றி, சிறந்த நடிகராகவும் இந்தப் படத்தின் மூலம் வெளிப்பட்டார். அவருடைய ஆளுமை திரை முழுவதும் நிறைந்திருந்தது. ஆர்சனோடு சேர்ந்து திரைக்கதையமைத்த ஹெர்மன் (Herman J. Mankiewicz) படம் முழுவதும் சிறப்பான வசனங்களை எழுதியிருக்கிறார். ஒரு சோறு பதமாக..