( 3 )

கோட்டை வாசல் (1950)

அகிரா குரோசாவா பற்றி அறியாத சினிமா ரசிகர்கள் யாரும் இன்று இருப்பார்கள் என்று தோன்றவில்லை. உலக சினிமாவின் கரையில் நின்று கால் மட்டும் நனைத்தவர்களும் அறிந்திருக்கும் இயக்குனர் அவர். 1960’களின் இறுதியிலும் 70’களிலும் ஹாலிவுட்டுக்குள் ஒரு இளைஞர் படையாக நுழைந்து அதைக் கைப்பற்றிய எல்லா இயக்குனர்களும், குறிப்பாக, ஸ்பீல்பெர்க், லூகாஸ், கொப்பலா ஆகியோர் குரோசாவாவின் ஏகலைவர்களே. இன்றும் அவருடைய தாக்கம் சிறிதும் இல்லாத ஒரு இயக்குனரை உலக அரங்கில் காணமுடியாது. குரோசாவாவை இந்த உயரத்துக்குத் தூக்கிக்கொண்டு சென்ற மாயக் கம்பளத்தின் பெயர், “ராஷோமொன்” (கோட்டை வாசல்). இத்தாலியின் “வெனிஸ் உலகத் திரைப்பட விழா”வில் 1951ஆம் ஆண்டு அந்தப் படத்தைக் கலந்துகொள்ள அனுமதித்த குழுவினர்கூட எதிர்பார்க்கவில்லை, அது உயரிய விருதான தங்கச் சிங்கத்தைத் தட்டிச் செல்லுமென்றும், அதன்பிறகு ஆஸ்காரின் சிறப்பு விருதைப் பெறுமென்றும், உலகத் திரைப்படச் சமூகமே ஜப்பான் என்னும் சின்னஞ்சிறு தீவை அன்னாந்து பார்க்குமென்றும்.. யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“ராஷோமொன்’-ஐ நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள், ஆகவே கதையை விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் இந்தக் கதையின் நான்லீனியர் வடிவத்தையும், படத்தை நான் எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்பதையும் சொல்வதற்கு, சிக்கலான இதன் கதையைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கதையிலிருக்கும் ஏராளமான சிறுசிறு முடிச்சுகள்தான் படத்தின் சிறப்பே.

திரைக்கதையின் வடிவம் :

12ஆம் நூற்றாண்டு ஜப்பானைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் திரைக்கதை, மூன்று அடுக்குகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று வெவ்வேறு இடங்களில், மூன்று காலங்களில் கதை நடக்கிறது.

முதல் இடம், காடு : அங்கு நடந்த ஒரு சம்பவம்தான் கதையின் மையமுடிச்சு. ஒரு கற்பழிப்பும், ஒரு கொலையும், ஒரு திருட்டும் அந்த சம்பவத்தில் நிகழ்கின்றன. ஒரு சாமுராய், அவனது மனைவி, அவளைக் கற்பழித்த ஒரு திருடன், மற்றும் அந்த சம்பவத்தை மறைந்திருந்து பார்த்த ஒரு மரம்வெட்டுபவன் ஆகியோர்தான் அதில் சம்பந்தப்பட்டவர்கள். சம்பவ முடிவில் சாமுராய் இறந்துபோகிறான். ஆனால் அந்த சம்பவம் பார்வையாளர்களுக்கு நேரடியாகக் காட்டப்படவே இல்லை. அதில் சம்பந்தப்பட்ட நான்கு நபர்களும் தனித்தனியாக, என்ன நடந்தது என்று விவரிக்கிறார்கள், முரண்பாடுகள் மிகுந்த அந்த நான்கு விவரிப்புகளும் தனித்தனிக் காட்சிகளாகப் பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகின்றன. அதாவது ஒரே சம்பவம் நான்கு வெவ்வேறு காட்சிகளாகக் காட்டப்பட்டிருக்கிறது, ஆனால் அவை அனைத்துமே முழு உண்மைகளோ, நம்பக்கூடியவையோ அல்ல.

இரண்டாவது இடம், விசாரணை மன்றம் : மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த வழக்கின் விசாரணை நடக்கிறது. மரம்வெட்டுபவன் காட்டில் பிணத்தைப் பார்த்ததாக மாத்திரம் சொல்கிறான். ஒரு புத்த பிக்கு, இறந்துபோன சாமுராய் தன் மனைவியோடு காட்டு வழியாகச் சென்றதைப் பார்த்ததாகச் சாட்சி சொல்கிறார். பிடிபட்ட திருடன் தன்னுடைய கோணத்திலிருந்து நடந்ததை விவரிக்கிறான். பின்பு கற்பழிக்கப்பட்ட பெண்ணும் விசாரிக்கப்படுகிறாள். அதன்பிறகு ஆவி ஊடகமான ஒரு பெண்ணின் உடலில். இறந்துபோன சாமுராயின் ஆவியை வரவழைத்து சாட்சியம் பெறப்படுகிறது.

மூன்றாவது இடம், கோட்டை வாசல் : அந்த விசாரணைக்குப் பிறகு, மரம்வெட்டுபவனும் அந்த புத்த பிக்குவும் ‘ராஷோமொன்’ என்கிற ஒரு பாழடைந்த கோட்டை வாசலில், மழைக்காக ஒதுங்கியிருக்கிறார்கள். வேறொரு குடியானவனும் மழையில் நனைந்தபடி அங்கு வந்து சேர்கிறான். அவனிடம் இந்த இருவரும், விசாரணை மன்றத்தில் நடைபெற்ற அந்த விநோத வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள். இறுதியில் மரம்வெட்டுபவன், தான் காட்டில் நடந்த அந்த சம்பவத்தை ஒளிந்திருந்து பார்த்ததாகவும், அதை விசாரணை மன்றத்தில் சொல்லாமல் மறைத்ததாகவும் கூறி, நடந்ததை விவரிக்கிறான்.

இந்த மூன்று அடுக்குகளும், காலவரிசைப்படி இல்லாமல், திரைக்கதையோட்டத்தில் இணைகோடுகளாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும், நடந்த ஒரே சம்பவம் மீண்டும் மீண்டும் நான்கு முறை வெவ்வேறு கோணங்களில் விவரிக்கப்படுகிறது. இந்த இரு அம்சங்களும்தான் இத்திரைப்படத்துக்கு ‘நான்லீனியர்’ எனப்படும் காலவரிசை மாறிய திரைக்கதை அமைப்பைக் கொடுக்கின்றன.

மழை பெய்துகொண்டிருக்கும் கோட்டை வாசலில் இருந்துதான் படம் ஆரம்பிக்கிறது. அங்கிருந்து பின்னோக்கிக் காட்டுக்கும், பின்பு விசாரணை மன்றத்துக்கும் கதை நகர்கிறது. இவ்வாறு இடம் மாறிச் சுழன்றுகொண்டே இருக்கிறது கதை. பொதுவாக திரைக்கதையைப் பயிற்றுவிப்பவர்கள், ஃப்ளாஷ் பேக்கில் சொல்லப்படும் கதைப்பகுதிக்குள் மேலும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கக் கூடாது என்றே சொல்வார்கள். வெகுஜன சினிமாவில் அதை ஒரு கண்டிப்பான விதியாகவே கடைப்பிடிப்பவர்களும் உண்டு. தெளிவாக, வெகுஜனத்துக்குப் புரியும்படிக் கதை சொல்வதற்கு அந்த விதி அவசியம் என்றே நானும் நினைக்கிறேன். ஆனால் குரோசாவா மிக எளிய முறைகளைக் கையாண்டு, இந்த விதி மீறலால் காலஓட்டம் பற்றிய தெளிவின்மை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார். விசாரணை மன்றத்தில் சாட்சியளிப்பவர் சொல்லிக்கொண்டிருக்கும் விவரிப்புகள், காட்சியாகக் காட்டப்படும்போது, அது ஒரு மொத்தமான ஃப்ளாஷ் பேக் துண்டாகத் தனியாக வருவதில்லை. நடுநடுவே விசாரணை மன்றத்தில் சாட்சியளிப்பவர் காட்டப்படுகிறார், அதோடு அவரது சாட்சியமளிக்கும் குரல் காட்டில் நடக்கும் காட்சியின் மீதும் கேட்கிறது. அதாவது, சாட்சியமும் அதன் காட்சி விவரிப்பும் தனித்தனியாக இல்லாமல் ஒரே நிகழ்வாகவே இருக்கின்றன. மேலும் அந்த இரண்டுமே நல்ல வெயில் நேரத்தில் நடக்கின்றன, அதற்கு நேர்மாறாகக் கோட்டை வாசல் காட்சித் தொடரில் மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையும், வெயிலும் காட்சிகளின் கால மாற்றத்தை உள்ளுணர்வாக நமக்கு உணர்த்தி, குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன.

திருடன் தனது சாட்சியத்தில், காட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவனை சட்டென்று ஒரு தென்றல் காற்று வருடிச் சென்றதாகவும், கண் திறந்து பார்த்தபோது, அந்தப் பெண் கடந்து சென்றுகொண்டிருந்ததாகவும், அந்தத் தருணத்தில் உலகின் பேரழகி அவள்தான் என்று தோன்றித் தன்னைமீறி அவள்பால் ஈர்க்கப்பட்டதாகவும் சொல்கிறான். அவளை அடைவது மட்டுமே தனது நோக்கம், கொலை செய்வது அல்ல என்பதால்தான், கணவனான சாமுராயைக் கொல்லாமல் கட்டிப்போட்டதாகவும் சொல்கிறான். அந்தப் பெண் முதலில் முரண்டு பிடிக்கிறாள், கத்தியால் அவனைத் தாக்க வருகிறாள், ஆனால் திருடனின் ஆண்மையால் அடக்கப்பட்டு இறுதியில் அவனது இச்சைக்கு இணங்குகிறாள்.

ஆனால் அதற்குப் பிறகு அந்தப் பெண், ஒரே சமயத்தில் இரு ஆடவர்களுக்கு உரிமையுடையவளாய் இருப்பது தனக்குப் பெரிய அவமானம் என்று சொல்கிறாள். அதனால் திருடன், சாமுராயின் கட்டை அவிழ்த்துவிட்டு, அவனுக்கும் ஒரு வாளைக் கொடுத்து, ‘உயிரோடிருப்பவர்கள் அந்தப் பெண்ணை அடையலாம்’ என்பதுபோல நேருக்கு நேர் நின்று மோதுகிறான். மிகுந்த தீரத்தோடுப் போரிட்ட சாமுராயை தனது வீரத்தால் தோற்கடித்துக் கொல்கிறான். அதைப் பார்த்து அஞ்சி அந்தப் பெண் ஓடிவிடுகிறாள். விசாரணையை நடத்துபவர்கள், ‘அந்தப் பெண்ணின் வேலைப்பாடு மிக்க கத்தி எங்கே?’ என்று கேட்க, திருடன் தனக்கு அது அத்தனை விலை உயர்ந்ததென்று தெரியாததால் எடுக்காமல் விட்டுவிட்டதாகச் சொல்கிறான்.

தொஷிரோ மிஃபுனியின் தேர்ந்த நடிப்பாற்றலால் சட்டென்று நம் கவணத்தை ஈர்த்துவிடும் கதாபாத்திரம் திருடனுடையது. அவன் சொல்லும் இந்தக் கதையும் சிறந்த வெகுஜனத் தன்மையோடு இருக்கிறது. அவன் எல்லாவகையிலும் தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறான். தான் சாமுராயின் மனைவி மேல் ஆசைகொண்டதுகூடத் தன் குற்றமாகச் சொல்லாமல், இயற்கையின் குற்றமாகச் சொல்கிறான். தான் அவளை எல்லை மீறி வன்புணர்ச்சி செய்யவில்லை, ஒரு வலுக்கட்டாயமான முத்தத்துக்குப் பிறகு அவள் பணிந்துவிட்டாள் என்கிறான். சாமுராயை நேருக்கு நேர் சண்டையிட்டுக் கொன்றதால் தன்னை வீரனாகவும் நிரூபித்துக்கொள்கிறான்.

பெண்ணின் சாட்சியத்தின்படி, திருடன் அவளைக் கற்பழித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறான். பிறகு அவள் தன் கணவனிடம் வந்து அழுகிறாள். ஆனால் அவன் தன் மனைவியின் மேல் பரிதாபப்படாமல், விஷமத்தனமாகப் பார்க்கிறான். அது அவளை மிகவும் காயப்படுத்துகிறது. “அப்படிப் பார்க்காதே..” என்று அவள் திரும்பத் திரும்பச் சொன்னபடி, கத்தியால் கணவனின் கட்டுக்களை அவிழ்க்கிறாள். பிறகு தன்னைக் கொன்றுவிடும்படி கத்தியை அவனிடம் நீட்டுகிறாள். அவன் அதை வாங்கிக்கொள்ளாமல், தொடர்ந்து அவளை ‘ஒழுக்கங்கெட்டவள்’ என்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்க, அவள் கத்தியோடு அவனை நோக்கிச் செல்கிறாள். பிறகு தனது மனம் கலங்கி நடந்தது எதுவும் நினைவில்லை என்றும், பிறகு சுயநினைவுக்கு வந்தபோது தன் கத்தி கணவனின் நெஞ்சில் குத்தியிருந்ததை உணர்ந்து அதிர்ந்ததாகவும் விசாரணை மன்றத்தில் சொல்கிறாள் அவள்.

இதில் முன்வைக்கப்படும் பெண்ணின் கோணம் மிக சிக்கலானது. அவள் வழக்கிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை, கொலைப் பழியையும் தானே ஏற்றுக்கொள்கிறாள். சாமுராயாலேயே திருடனை ஒன்றும் செய்ய முடியாமல் அவனிடம் மாட்டிக்கொண்டு, கைகள் கட்டப்பட்ட நிலையிலிருக்கும்போது, அந்தப் பெண்ணால் என்ன செய்திருக்க முடியும் என்கிற கேள்வி உள்ளுக்குள் ஒளிந்திருக்கிறது. தன்னையும் தன் மனைவியையும் தற்காத்துக்கொள்ளத் தெரியாத சாமுராய், தன் கையாளாகாத்தனத்தை மறைக்கவே மனைவியிடம் அப்படி நடந்துகொண்டான் என்றும், ஆகவே அவள் அவனைக் கொன்றது நியாயம்தான் என்றும் வாதிட இடமிருக்கிறது.

இறந்த சாமுராய் தனது சாட்சியத்தை, ஆவி ஊடகமான ஒரு பெண்ணின் உடலுக்குள் இறங்கி அளிக்கிறான். திருடன், சாமுராயின் மனைவியைக் கற்பழித்த பின்னர், தன்னோடு வந்துவிடும்படி அவளை அழைக்கிறான். அவளும் அதற்குச் சம்மதிக்கிறாள். ஆனால் திடீரென்று அவள், தன் கணவனைக் கொன்றுவிடும்படிச் சொல்கிறாள், அப்போதுதான் குற்றவுணர்வு இல்லாமல் அவனோடு வரமுடியும் என்கிறாள். அந்த வார்த்தைகள் சாமுராயை மட்டுமல்ல திருடனையும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. திருடன் அவளைத் தன் காலின் கீழே போட்டு மிதித்து, சாமுராயை நோக்கி, “இவளை இப்படியே விடவா, இல்லை கொன்று போடவா? நீயே சொல்” என்று கேட்கிறான்.

விசாரணை மன்றத்தில் சாமுராயின் ஆவி, “அப்படி திருடன் கேட்டவுடனேயே நான் அவன் செய்த எல்லாவற்றையும் மன்னித்துவிட்டேன்” என்கிறது. அதன் பிறகு மனைவி தப்பித்து ஓடிவிட்டாள் என்றும், திருடன் சாமுராயின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு சென்றுவிட, சாமுராய் கத்தியால் தன்னைத் தானே குத்தி தற்கொலை செய்துகொண்டான் என்றும், அதற்குச் சிறிது நேரத்துக்குப் பின்பு யாரோ வந்து அந்த வேலைப்பாடு மிக்க விலையுயர்ந்த கத்தியை உருவி எடுத்துவிட்டார்கள் என்றும் ஆவி சொல்கிறது.

இறந்துபோனவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஆகவே இதுதான் உண்மையில் நடந்தது என்று வாதிடலாம். ஆவியை நம்பாதவர்கள், இது அந்த ஆவி வேடமிடும் பெண், உயிரோடிருக்கும் மற்ற இருவர் மேலும் கொலைப் பழி விழாமல் காப்பாற்றுவதற்காகச் சொன்னது என்றும் வாதிடலாம். எது எப்படியோ சாமுராயின் ஆவி தன்னைப் பரிதாபத்துக்குரியவனாக, மனைவியாலும் வஞ்சிக்கப்பட்டவனாகக் காட்டிக்கொள்கிறது, சண்டையில் தோற்றவனாக இல்லாமல் விரக்தியால் தற்கொலை செய்துகொண்டவனாகவே சொல்லிக்கொள்கிறது. மனைவியைக் காப்பாற்ற முடியாத இயலாமையை மறைப்பதற்காகவே அவன் அவளை ஒழுக்கம்கெட்டவளாகக் கற்பித்துக்கொள்கிறான் என்றே நான் நினைக்கிறேன்.

மரம் வெட்டுபவன், பிக்குவிடமும் குடியானவனிடமும் சாமுராயின் ஆவி சொன்னது முழுவதும் பொய் என்று சொல்லி, தான் ஒளிந்திருந்து பார்த்தவைகளை விவரிக்கிறான். அதன்படி, திருடன் கற்பழித்த பின்பு அந்தப் பெண்ணைத் தன்னோடு வந்துவிடும்படி அழைக்கிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவளுக்காகத் தன் திருட்டுத் தொழிலையும் விட்டுவிடுவதாகக் கெஞ்சுகிறான். ஆனால் அவள், “ஒரு பெண் என்ன சொல்ல முடியும்?” என்றபடி ஓடிச்சென்று தன் கத்தியை எடுத்துக் கணவனின் கட்டுகளை அவிழ்க்கிறாள். ஆனால் கணவனோ சண்டையிட மறுத்துத் திருடனை நோக்கி, “ஒரு ஒழுக்கம்கெட்ட பெண்ணுக்காக நான் உயிரைப் பணயம்வைக்க முடியாது, நீயே இந்த விபச்சாரியை எடுத்துக்கொள்ளலாம்” என்கிறான், தன் மனைவியைப் பார்த்து, “நீ ஏன் இன்னும் உயிரோடிருக்கிறாய்?” என்று கேட்கிறான். அதற்குப் பிறகு திருடனுக்கு அந்தப் பெண்ணின் மீதிருந்த எல்லா ஆர்வமும் வடிந்துவிடுகிறது, அவளை விட்டுவிட்டுச் செல்ல நினைக்கிறான். அந்தச் சூழல் பெண்ணை வெறிகொண்டவளாக ஆக்குகிறது, அவள் இருவரையும் “நீங்கள் உண்மையான ஆண்களே இல்லை” என்பதுபோல் திட்டி சண்டைக்குத் தூண்டுகிறாள்.

சாமுராய்க்கும் திருடனுக்கும் இடையில் சண்டை நடக்கிறது. ஆனால் அது திருடன் முன்பு விவரித்தது போல இரு மாவீரர்களின் யுத்தம் அல்ல, உயிருக்குப் பயந்த இருவர் நிர்பந்தத்தின் காரணமாகச் சண்டை போடுவது போலவே இருக்கிறது. இறுதியில் திருடன் சாமுராயைக் கொல்வது கூட சந்தர்ப்பம் காரணமாகத்தான். அதன்பின் திருடன், பெண் தன்னோடு வந்துவிடுவாள் என்று நினைக்கிறான். ஆனால் அவள் அவனைவிட்டு ஓடிவிடுகிறாள்.

அகிரா குரோசாவா, மரம்வெட்டுபவனின் கதை விவரிப்பில், அவன் ஒளிந்திருந்து பார்ப்பதுபோல் ஒரு ஷாட் கூடக் காட்டவில்லை. ஆனால் ஆரம்பத்தில் மரம்வெட்டுபவன் பிணத்தை மட்டும் பார்த்ததாகச் சொன்னபோது, அதை மிகமிக விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆகவே இயக்குனர், இப்போது அவன் சொல்வது முழுக்க இட்டுக்கட்டியது என்று காட்டுவதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.

இறுதியில், புத்த பிக்கு மிகவும் சோர்ந்து போகிறார், சுயநலமும் வன்மமும் நிறைந்த மனித குலத்தின் மீது, தான் நம்பிக்கை இழந்துவிட்டதாகச் சொல்கிறார். அப்போது பாழடைந்த கோட்டை வாசலின் வேறொரு பகுதியில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு கைக்குழந்தை விலை உயர்ந்த பட்டாடையால் சுற்றப்பட்டுக் கிடக்கிறது. குடியானவன் ஓடிச்சென்று, அந்தக் குழந்தையிடமிருந்து பட்டாடையைத் திருடுகிறான். மரம்வெட்டுபவன், குடியானவனைத் தடுக்க முனைய, அவன் திருப்பி, “நீயும் திருடன்தான், நீ சொன்ன கதையில் சாமுராயின் மனைவியின் கத்தி எங்கே போனது? வேலைப்பாடுகள் மிக்க விலை உயர்ந்த அந்தக் கத்தியைத் திருடியது நீதான்” என்று சொல்ல, மரம்வெட்டுபவன் தலை குனிந்து நிற்கிறான். குடியானவன் சென்றுவிட, பிக்கு அந்தக் குழந்தையைக் கையில் வைத்தபடி நிற்கிறார். மழை நின்றபிறகு மரம்வெட்டுபவன் பிக்குவிடம் குழந்தையைக் கேட்கிறான், “இனி இதனிடம் திருட என்ன இருக்கிறது?” என்று அவர் தர மறுக்கிறார். மரம்வெட்டுபவன் கண்கலங்கியபடி “எனக்கு ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களோடு சேர்த்து இதையும் வளர்ப்பது சிரமமில்லை” என்கிறான்.

அவனுடைய அந்த வார்த்தைகளே அவன் ஏன் திருடினான் பொய் சொன்னான் என்பதை நியாயப்படுத்திவிடுகின்றன. வறுமையில் கஷ்டப்பட்டு ஆறு குழந்தைகளை வளர்க்கும் அந்த எளிய மனிதன், அந்த அநாதைக் குழந்தையை ஏற்றுக்கொள்வதாகச் சொல்வது புத்த பிக்குவை நெகிழவைக்கிறது. மனிதகுல எதிர்காலத்தின் குறியீடான அந்தக் குழந்தையை அவர் மரம்வெட்டுபவனிடம் கொடுத்து அனுப்புகிறார். கயமையும், பொய்மையும், அப்பட்டமான சுயநலமும் நிறைந்த உலகில், மனிதாபிமானம் எனும் நம்பிக்கையின் ஒளி இன்னமும் மிச்சமிருக்கிறது என்று காட்டி படம் நிறைவடைகிறது.

விசாரணை மன்றத்தில் சாட்சியம் அளிக்கப்படுவதுதான் கதையின் மையமான பகுதி. விறகு வெட்டுபவன், புத்த பிக்கு, திருடனைப் பிடித்தவன், திருடன், சாமுராயின் மனைவி, சாமுராயின் ஆவி (ஊடகப் பெண்ணின் மூலமாக) ஆகிய ஆறு பேரின் சாட்சியங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. ஆனால் அத்தனைக் காட்சிகளிலும் விசாரணை மன்றத்தின் நீதிபதியையோ அல்லது அந்த மன்றத்திலிருக்கும் மற்ற பார்வையாளர்களையோ நமக்குக் காட்டவே இல்லை குரோசாவா. காட்டுவது மட்டுமல்ல நீதிபதியின் குரலைக் கூட நாம் கேட்பது இல்லை. சிலமுறைகள் சாட்சிகளிடம் நீதிபதி கேள்வி கேட்பதுபோல் வருகிறது, குறிப்பாக விறகுவெட்டியிடமும், திருடனைப் பிடித்தவனிடமும், திருடனிடமும், நீதிபதி விலைமதிப்புள்ள கத்தியைப் பற்றி விசாரிக்கிறார். ஆனால் அப்போதெல்லாம், அந்த சாட்சிகள் தூரத்திலிருந்து வரும் மெல்லிய ஒலியைக் கேட்பது போல, சிறிது முன்னகர்ந்து கூர்ந்து எதையோ கேட்டுவிட்டு “என்ன.. என்ன கேட்டீர்கள்.. கத்தியா? கத்தி.. இல்லை நான் பார்க்கவில்லை” என்பதுபோல் சொல்கிறார்கள். அந்தப் பதிலின் மூலம்தான் என்ன கேட்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். சாட்சியளிப்பவருக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும் விறகுவெட்டி மற்றும் புத்த பிக்குவைத் தவிர வேறு யாரையுமே நாம் அந்த மன்றத்தில் பார்க்கவில்லை. ஏன்?

அகிரா குரோசாவா இதன்மூலம் தெளிவாக உணர்த்துவது ஒன்றைத்தான், திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்தான் நீதிபதிகள். சாட்சியங்கள் எல்லாமே பார்வையாளர்களை நோக்கியே சொல்லப்படுகின்றன. இறுதியில் உண்மை எதுவென்று முடிவு செய்யவேண்டியவர்களும் பார்வையாளர்கள்தான். கோட்டை வாசலில் குடியானவனிடம், பிக்குவும் விறகுவெட்டியும் விசாரணை மன்றத்தில் நடந்தவைகளை எல்லாம் விரிவாகச் சொல்கிறார்கள், ஆனால் இறுதியில் விசாரணையின் முடிவு என்னாயிற்று, நீதிபதிகளின் தீர்ப்பு என்ன என்பதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. ‘தீர்ப்பு உங்கள் கையில்’ என்று பார்வையாளர்களை நோக்கிச் சொல்லாமல் சொல்கிறார் குரோசாவா.

“ரஷோமொன்” (கோட்டை வாசல்)-ஐப் புரிந்துகொள்வதற்குச் சிறந்த வழி, மீண்டும் மீண்டும் படத்தைப் பார்ப்பதுதான். உங்களுக்கு அதிலிருந்து கிடைக்கும் அனுபவமும் புரிதலும் முற்றிலும் வேறாகவும் இருக்கலாம். ஏனெனில் நீங்கள் பார்க்கும் படமும் நான் பார்ப்பதும் ஒன்றாக இருக்கவே முடியாது. இதுதான் இப்படத்தின் மையக் கருத்தும்.

நான்கு சாட்சிகளும் தங்களை நியாயப்படுத்திக்கொள்ளவே முயல்கிறார்கள், உண்மையை மாற்றிச் சொல்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர்களது மனம் சில விஷயங்களை அப்படித்தான் உள்வாங்கியிருக்கிறது என்பதும் உள்ளுறையாக இருக்கிறது. முன்பு நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி நம் நண்பர் சொல்லும்போது, நம் நினைவில் அதே விஷயம் சில விடுபடல்களோடோ உதிரித் தகவல்களோடோ இருப்பதை, அல்லது நிகழ்வுகள் மாறியிருப்பதை அறியலாம். அதாவது நாம் அந்தச் சம்பவத்தை உள்வாங்கிக் கொண்ட விதம் வேறாகவும், நண்பர் உள்வாங்கிக்கொண்டது வேறாகவும் இருக்கிறது. ஒரே சம்பவத்தை எந்த இருவரும் வெவ்வேறாகத்தான் பார்க்கிறார்கள். ஒருவர் ‘உண்மை’ என்று நம்புவது, அடுத்தவர் ‘உண்மை’யென்று நினைப்பதிலிருந்து வேறுபடலாம்.

மேலும், ஒரு எதிர்மறையான நிகழ்ச்சி நம் வாழ்வில் நடக்கும்போது, எப்போதுமே நாம் நமது குறைகளை மறைத்து அதன் மீது சில கற்பிதங்களைக் கட்டமைத்துக் கொள்கிறோம். நாளடைவில் அந்தக் கற்பிதங்களையே நாம் உண்மையென்று நம்பவும் ஆரம்பித்துவிடுகிறோம். அந்த நினைவு கொடுக்கும் அழுத்தத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக நம் மனம் போடும் வேடம் அது.

ஆகவே முழுமையான உண்மை என்று ஒன்றில்லை, உண்மை சார்புத்தன்மை உடையது. ஒப்பிட்டுத்தான் உண்மையை அறிய முடியும், முழுமுதலான உண்மையென்று ஒன்றை நிரூபிக்கவே முடியாது. இதுதான் படத்தின் மையக் கருத்து.

இப்படத்தின் தொழில்நுட்பச் சிறப்புகளைச் சொல்வதானால் தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். இந்தக் கட்டுரைக்காக நான், 2008ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் புதுப்பதிப்புச் செய்யப்பட்ட படத்தின் Blu-ray பிரதி ஒன்றைப் பார்த்தேன். அசந்துபோனேன். ஆர்வமுள்ளவர்கள், ஏற்கனவே பலமுறை பார்த்தவர்கள் கூட இந்தப் பிரதியை அவசியம் பார்க்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நான்லீனியர் எனப்படும் காலவரிசை மாறிய திரைக்கதை கொண்ட படங்களில் எனக்குப் பிடித்த பத்துப் படங்களின் பட்டியலை காலவரிசைப்படி அமைத்திருக்கிறேன். அப்படி இல்லாமல் தரவரிசையில் போட்டிருந்தால், அதில் முதல் இடத்தில் இருந்திருக்கக் கூடிய படம் இதுதான்.