காலத்தைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் “நான்லீனியர்” திரைப்படங்களில் எனக்குப் பிடித்த 10 படங்களைக் கால வரிசைப்படி பட்டியலிட்டுக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று படங்களை முந்தைய பதிவுகளில் பார்த்துவிட்டோம். நான்காவது படம், என்னுடைய ஆதர்ச இயக்குனர்களில் ஒருவரான ஸ்டேன்லி க்யூப்ரிக் இயக்கியது..

( 4 )

கொல்லுதல் (1956)

ஸ்டேன்லி க்யூப்ரிக் (Stanley Kubrick) என்னும் பெயர் வெளியில் தெரிவதற்கு முன்னால், ஹாலிவுட்டின் தலைசிறந்த படங்களை அவர் எடுப்பதற்கு முன்னால், வளர்வதற்காக முட்டி மோதிக்கொண்டிருந்த காலத்தில் அவர் இயக்கிய படம்தான் “தி கில்லிங்” (கொல்லுதல்). ஸ்டூடியோ அமைப்புக்குள் வந்து அவர் இயக்கிய முதல் படம் என்பதால் ஏராளமான சிரமங்களை அனுபவித்தார் க்யூப்ரிக். தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்துக்கு ஒதுக்கிய பட்ஜெட், மிகமிகக் குறைவானது, அதை வைத்துப் பாதிப் படம்கூட எடுக்க முடியாத அளவுக்குக் குறைவு. அதனால் அவர் இந்தப் படத்தில் சம்பளமே இல்லாமல் வேலை செய்தார். அதோடு மிகத் திறமையாகத் திட்டமிட்டு, கொஞ்சம் சமரசங்களும் செய்துகொண்டு, 24 நாட்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தார்.

பெருந்திரளாக மக்கள் பங்குகொள்ளும் குதிரைப் பந்தயத்தை மையமாகக் கொண்ட கதையென்பதால், நிஜப் பந்தயங்களைப் படமெடுத்து, அதைக் கதைக்குள் நடப்பதுபோல் பயன்படுத்திக்கொண்டார். அதற்கு முன்புவரை தனது படங்களைத் தானே ஒளிப்பதிவும் செய்துகொண்டிருந்த க்யூப்ரிக் முதன்முறையாக மைய ஓட்டத்திற்கு வந்ததால் தனியாக ஒளிப்பதிவாளரை வைக்கவேண்டிய கட்டாயமிருந்தது. அந்த ஒளிப்பதிவாளரோடு அவரால் ஒத்துப்போக முடியாமல் அவதிப்பட்டார். எப்படியோ 24 நாட்களில் எடுத்துமுடித்து ஸ்டூடியோ நிறுவனர்களுக்குப் போட்டுக் காட்டியபோது, ‘நான்லீனியர்’ வடிவம் காரணமாகப் படம் புரியவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.

ஆகவே காலவரிசைப்படி வருமாறு மாற்றிப் படத்தொகுப்பு செய்யும்படி அவர்கள் பணித்தார்கள். க்யூப்ரிக் வேறு வழியில்லாமல் அதையும் செய்து காட்டினார். ஆனால் இப்போது அது மேலும் குழப்புவதாக இருந்தது, ஏனென்றால் அதன் திரைக்கதையே நான்லீனியருக்காகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனால் முன்பிருந்த படத்தொகுப்பையே சிறு மாற்றங்களோடு ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் கதை புரிவதற்காக ஒரு கதைசொல்லியின் குரல் பின்னணியில் கேட்கவேண்டும் என்று சொன்னார்கள். க்யூப்ரிக்குக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை, அதனால் அவர் வேண்டுமென்றே பின்னணிக் குரலின் வசனங்கள் முரணாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் அமைத்துக்கொண்டார்.

ஸ்டூடியோ முதலாளிகள் இந்தப் படத்தை வெளியிடுவதே விரயம் என்று நினைத்தார்கள். அந்தக் காலத்தில் ‘டபுள் ஃபீச்சர்’ எனப்படும் இருபடங்களைச் சேர்த்துத் திரையிடும் வழக்கமிருந்தது, அதாவது ஒரு டிக்கெட்டில் இருபடங்கள். அப்படி, முதன்மைப் படமாக வேறொன்றிருக்க, அதனோடு இலவச இணைப்பாக இந்தப் படம் சேர்த்து வெளியிடப்பட்டது. ஆனாலும் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, திரைப்படத் துறையின் முன்னணிக் கலைஞர்களின் கவணத்தை ஈர்த்தது. அதன்மூலம் க்யூப்ரிக்குக்கு நல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து, தான் நினைத்ததுபோல் படமெடுக்கும் சுதந்திரத்தையும் பெற்றார். இன்றும் விமர்சகர்களால், ஒரு குற்றச் செயலைப் பின்னணியாகக் கொண்ட நான்லீனியர் படங்களுக்கு, குறிப்பாக, குவெண்டின் டரண்டினோவின் “ரிசெர்வாய்ர் டாக்ஸ்” மற்றும் “பள்ப் ஃபிக்சன்” உள்ளிட்ட பல படங்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது இந்தப் படம்.

“கில்லிங்” (Killing) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு, பங்குச் சந்தை மற்றும் வர்த்தக மொழியில், ‘மிகக் குறுகிய காலத்துக்குள் அசாதாரணமான லாபம் அல்லது பணவரவு’ என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. படத்தின் தலைப்பு அதைத்தான் குறிக்கிறது. கதாநாயகன் ஜானி குற்றப் பின்னணி உடையவன், ஐந்தாண்டுகளாக சிறையிலிருந்து தற்போது விடுதலையாகி வந்திருக்கிறான். அவன் தன் காதலியைத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கை நடத்த நினைக்கிறான். அதற்கு முன்னால் கடைசியாக ஒரு மிகப் பெரிய பணத்தைத் திருடிவிட முடிவெடுக்கிறான். இதுவரை அவன் செய்திராத பெரிய கொள்ளை என்பதால் அவன் சிலரைக் கூட்டுச் சேர்த்துக்கொள்கிறான், மேலும் சிலருக்கு சம்பளம் கொடுத்து சில வேலைகளைச் செய்யவைக்கிறான்.

மிகக் குறுகிய நேரத்துக்குள் நடக்கும் சிறுசிறு செயல்களின் கூட்டுத் தொகையாக அந்தக் கொள்ளையைச் செய்துவிட்டு ஒரு தடயமும் இல்லாமல் தப்பிப்பதுதான் அவனது திட்டம். அந்த சிறு செயல்களைத் தனியாகப் பார்த்தால் பெரிய குற்றமாக இல்லாமலும், கொள்ளைக்குக் காரணமென்று நிரூபிக்க முடியாததாகவும் இருக்கும். ஒரு குதிரைப் பந்தய மைதானத்தில், முக்கியமான பந்தயங்கள் நடக்கும் நாளில், பணம் எண்ணும் அறைக்குள் புகுந்து கொள்ளையடிக்க நினைக்கிறான் ஜானி. அதற்காக, ஊழல் போலீஸ் அதிகாரியான ராண்டி என்பவனையே கொள்ளையில் கூட்டுச் சேர்த்துக்கொள்கிறான். அந்த மைதானத்தில் பந்தயக் கவுண்டரின் காசாளர் ஜார்ஜ் என்பவனையும், அங்கு மதுபானக் கடையில் வேலை செய்யும் மைக் என்பவனையும் தன்னுடைய கொள்ளையில் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள்கிறான். மேலும் அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி செய்வதற்காக மார்வின் என்பவரையும் சேர்க்கிறான்.

ஊழல் போலீஸ் ராண்டிக்கு, சூதாட்டத்தினால் உண்டான கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்படுகிறது. காசாளர் ஜார்ஜ்க்கு, அடங்காத மனைவியின் பேராசைகளை நிறைவேற்றவும், மதுபானக் கடை மைக்’குக்குத் தன் நோயாளி மனைவிக்கு மருத்துவம் செய்யவும் பணம் தேவைப்படுகிறது. பெரும் குடிகாரனான மார்வின்-க்கு, தனது மகனைப்போல் நினைக்கும் ஜானி இந்தக் கொள்ளையின் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகி மணமுடித்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதே நோக்கம்.

ஜானி தனக்கு சிறையில் பழக்கமான முன்னால் மல்யுத்த வீரர் ஒருவரைச் சந்தித்து, அவருக்குப் பணம் தந்து, குதிரைப் பந்தய மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடிதடி ரகளை ஒன்றை நடத்தவேண்டும் என்று கேட்கிறான். பிறகு, மிக தூரத்தில் இருந்து குறி பார்த்து சுடுவதில் திறமைசாலியான நிக்கி என்பவனுக்குப் பணம் கொடுத்து, குறிப்பிட்ட நாளில், பந்தய மைதானத்திற்கு வெகுதூரத்திலிருந்து, மிகப் பிரபலமான பந்தயக் குதிரை ஒன்றைச் சுடவேண்டும் என்று சொல்கிறான். பிறகு தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து, துப்பாக்கி ஒன்றை அலங்கரிக்கப்பட்ட பரிசுப் பெட்டிக்குள் வைத்து எடுத்தபடி, விடுதி நிர்வாகியிடம் தனது நண்பனான போலிஸ் அதிகாரி ஒருவன் அங்கு வந்து தங்கிச் செல்வான் என்கிறான். பிறகு பொருட்களைப் பாதுகாக்கும் லாக்கரில் அந்தப் பரிசுப் பெட்டியை வைத்துவிட்டு, மதுக்கடையில் வேலைசெய்யும் ‘மைக்’கின் தபால் பெட்டிக்குள் லாக்கர் சாவியைப் போட்டுவிடுகிறான். மைக் அந்த சாவியைக்கொண்டு பரிசுப்பெட்டியை எடுத்து, பந்தய மைதானத்தில் ஊழியர்களுக்கான உடைமைகளை வைக்கும் அலமாரிக்குள் வைத்துவிடுகிறான். இதற்கிடையில், ஜானியும் அவனது காதலியும் குறிப்பிட்ட நாளில் விமானத்தில் வேறு ஊருக்குச் சென்றுவிட பயணச்சீட்டு எடுக்கிறார்கள்.

கொள்ளைக்கான திட்டங்களை மிக நுணுக்கமாக ஜானி கட்டமைத்துக்கொண்டு இருக்கும்போதே, அவனுடைய திட்டத்தில் விரிசல்களும் உடைப்புகளும் ஏற்பட்டுக்கொண்டிருப்பதையும் திரைக்கதை இணையாகக் காட்டுகிறது. பந்தயக் கவுண்டர் காசாளர் ஜார்ஜின் பேராசை கொண்ட மனைவிதான் முதல் உடைப்பு. அவளை திருப்திப்படுத்துவதற்காக ஜார்ஜ், மிக சீக்கிரத்திலேயே பெரும் பணம் வரப்போவதாக உளறிவிடுகிறான். உடனே அவள், அவன் என்ன செய்கிறான் என மோப்பம் பிடிக்கிறாள், கொள்ளைக் குழு சந்திக்கும் இடத்தின் முகவரியை அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுக்கிறாள். அவளுக்கு ஒரு கள்ளக் காதலன் இருக்கிறான், அவனிடம் இதைப் பற்றிச் சொல்கிறாள், கணவனின் பங்குப் பணத்தை நாம் எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்கிறாள். ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவனான அவன், “இது உண்மையானால், நீ நினைப்பதைவிடப் பெரிய கொள்ளையாகத்தான் இருக்கும்” என்று சொல்லி கொள்ளையடிக்கப்படும் மொத்தப் பணத்தையும் பறித்துக்கொள்ளத் திட்டமிடுகிறான்.

ஜானி தனது திட்டத்தில் பங்கேற்பவர்களை ரகசியமான ஒரு இடத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜார்ஜின் மனைவி அங்கு வேவு பார்ப்பதற்காக வந்து மாட்டிக்கொள்கிறாள். ஜானி, ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியவில்லை என்று ஜார்ஜை அறைகிறான். பிறகு அவனை அனுப்பிவிட்டு ஜார்ஜின் மனைவியைத் தனியாக விசாரித்து, கடுமையாக எச்சரித்து அனுப்புகிறான். ஆனால் இதையும் அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறாள், ஜார்ஜிடம் அவன் ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாதென்ற கரிசனத்தாலேயே தான் அங்கு வந்ததாகச் சொல்கிறாள். ஜார்ஜ் தனது மனைவியை நம்புகிறான், தன்னை அனுப்பிவிட்டு ஜானி அவளிடம் எதுவும் தவறாக நடக்க முயற்சித்திருப்பானோ என்று சந்தேகிக்கிறான். அதைப் பயன்படுத்தி, ஜார்ஜின் மனைவி கொள்ளை பற்றிய மேலும் சில விவரங்களையும் கேட்டுப் பெறுகிறாள்.

கொள்ளை நடக்கவிருக்கும் நாளில், ஜார்ஜ், தன் நண்பர்களின் மீது அவநம்பிக்கை கொண்டுவிட்டதால், தனது கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு பந்தய மைதானத்துக்குப் புறப்படுகிறான். ராண்டி தன் போலீஸ் சீருடையோடு, போலீஸ் காரில் மைதானத்துக்கு வருகிறான். பணம் வைக்கப்பட்டிருக்கும் அலுவலகக் கட்டிடத்துக்கு அருகில் காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்கிறான்.

நிக்கி காலையிலேயே, குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் தனியார் கார் நிறுத்துமிடத்துக்கு வருகிறான். அங்கு காவலாளியாக வேலைசெய்யும் கறுப்பின இளைஞன், திறப்பதற்கான நேரம் வரவில்லை என்கிறான். நிக்கி, குதிரைகளின் ஓடுபாதை நன்றாகத் தெரியும்படியான இடத்தில் காரை நிறுத்துவதற்காகவே சீக்கிரமாக வந்ததாகச் சொல்லி லஞ்சமாகப் பணம் கொடுக்கிறான். அவனை ஒரு குதிரைப் பந்தய வெறியன் என்று புரிந்துகொள்ளும் காவலாளி, அவன் விரும்பும் இடத்தில் காரை நிறுத்த அனுமதித்து, அவ்வப்போது வந்து பேச்சுக்கொடுக்கவும் செய்கிறான். இது நிக்கிக்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. காவலாளி, அவன் பந்தயம் கட்டியிருக்கும் குதிரை பற்றி விசாரிக்க, நிக்கி தனக்குத் தெரிந்த ஒரே குதிரையான, ஜானி சுடச் சொல்லியிருக்கும் ஏழாவது பந்தய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் குதிரையின் பெயரைச் சொல்கிறான்.

குதிரைப் பந்தய மைதானத்தில், பணம் வைக்கப்பட்டிருக்கும் அலுவலக வாசலுக்கு வெளியே ஜானி வந்து நின்றுகொள்கிறான். அந்த வாசல், பந்தய கவுண்டர்கள் வரிசையாக அமைந்திருக்கும் பகுதிக்கும், மதுக்கடைக்கும் நடுவில் இருக்கிறது. அவனது திட்டப்படி, சரியாக குதிரைப் பந்தயத்தின் ஏழாவது ஓட்டம் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு வந்தவுடன், முன்னாள் மல்யுத்த வீரர் அங்கு வந்து மதுக்கடையில் வேலைசெய்யும் மைக்-உடன் சண்டையை ஆரம்பிக்கிறார். தடுக்க வந்த காவலர்களையும் பந்தாடுகிறார், இறுதியில் அலுவலகத்துக்கு உள்ளே இருக்கும் காவலர்களும் வெளியே வந்து அவரைப் பிடித்துக் கொண்டுபோகிறார்கள்.

அந்தச் சமயத்தில் ஜார்ஜ், அலுவலகக் கதவை உள்பக்கத்திலிருந்து திறந்துவிடுகிறான். சட்டென்று உள்ளே நுழைந்துவிடும் ஜானி, ஊழியர்களின் உடமைகளை வைக்கும் அலமாரிகளில் ‘மைக்’கினுடையதில் இருக்கும் பரிசுப் பெட்டியைத் திறந்து துப்பாக்கியை எடுக்கிறான், ஜோக்கர் போன்ற முகமூடியையும் போட்டுக்கொள்கிறான். பின்பு பணம் எண்ணுகிற அறைக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கிருக்கும் மொத்தப் பணக்கட்டுக்களையும் பெரிய மூட்டையாகக் கட்டச்சொல்கிறான்.

அதேசமயம் நிக்கி, சுடுவதற்குத் தயாராகும்போது, கறுப்பின காவலாளி வந்து குதிரை லாடம் ஒன்றைக் கொடுத்து, அது இருந்தால் நல்ல ராசி என்று பேசியபடி இருக்கிறான். அவனை அனுப்ப வேண்டிய கட்டாயத்தால், கடுமையாகப் பேசி அவனைத் துரத்தப் பார்க்கிறான். இறுதியில் கறுப்பினத்தை தாழ்த்தும் சொல்லான “நிக்கர்” என்பதைப் பயன்படுத்த, காவலாளி கோபித்துக்கொண்டு, லாடத்தை எறிந்துவிட்டு, செல்கிறான். நிக்கி, டெலஸ்கோப் துப்பாக்கி மூலம், ஏழாவது பந்தய ஓட்டத்தில் அதிகமாகப் பணம்கட்டப்பட்ட குதிரையைச் சுட்டு வீழ்த்துகிறான். அப்போது அதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த காவலாளி அவனை நோக்கிச் சுட, நிக்கி காரை எடுக்க முயற்சிக்க, கீழே கிடக்கும் லாடத்தால் கார் டயர் பஞ்சராகிறது. நிக்கி, குண்டடிபட்டு இறந்துபோகிறான்.

அதிகமாகப் பந்தயம் கட்டப்பட்ட குதிரை சுடப்பட்டதால், மைதானத்தில் களேபரமும் குழப்பமும் சூழ்கிறது. ஜானி பணம் எண்ணுகிற ஊழியர்களை மற்றொரு அறைக்குள் போகச் சொல்லிவிட்டு, தனது துப்பாக்கியையும் முகமூடியையும் உடைகளையும் (அந்த உடைக்குள் வேறு ஒரு உடையை ஏற்கனவே போட்டிருக்கிறான்) அதே மூட்டைக்குள் போட்டுக்கட்டுகிறான். அந்த மூட்டையை ஜன்னல் வழியாக வெளியே போட்டுவிடுகிறான். வெளியில் காரோடு காத்திருக்கும் போலீஸ்காரன் ராண்டி, அந்த மூட்டையை எடுத்துச் செல்கிறான். அவன் போலீஸ் என்பதால் கார் சோதனை செய்யப்படவில்லை. மைதானத்திலுள்ள மொத்த பேரின் கவணமும் சுடப்பட்ட குதிரையின் மேல் இருக்க, ஜானி மிகச் சாதாரணமாக நடந்து வெளியேறுகிறான். ராண்டி மூட்டையை, விடுதி அறைக்குக் கொண்டுசென்று வைத்துவிடு, ஜானியின் அபார்ட்மெண்டுக்கு வருகிறான்.

விடுதியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஜானி வருவான் என்று, அவனது அப்பார்ட்மெண்டில் ஜார்ஜ், மைக், ராண்டி, மார்வின் ஆகியோர் காத்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று துப்பாக்கிகளோடு (ஜார்ஜின் மனைவியினுடைய) கள்ளக் காதலனும் அவனது நண்பனும் அங்கு வருகிறார்கள். ஜார்ஜ் கோபத்தோடு தன் கைத்துப்பாக்கியை எடுக்க, இருபக்கமும் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஐந்து உயிர்கள் மடிகின்றன, ஜார்ஜ் மட்டுமே பிழைக்கிறான். அவன் தன்னை ஏமாற்றிய மனைவியைத் தேடிச் செல்கிறான்.

பணத்தை எடுத்துவரும் ஜானி, சாலையில் ரத்தத் தெறிப்புகளோடு கடந்து செல்லும் ஜார்ஜைப் பார்க்கிறான். விபரீதமாக ஏதோ நடந்திருக்கிறதென்று புரிந்துகொள்கிறான். ஆகவே தனது அபார்ட்மெண்டுக்குப் போகாமல், நேரே ஒரு கடைக்குச் சென்று பெரிய பெட்டி ஒன்றை வாங்குகிறான், அதற்குள் மொத்தப் பணத்தையும் அடைக்கிறான். ஆனால் அந்தப் பெட்டி தரமற்றதாகவும் பூட்டு உறுதியாக இல்லாமலும் இருக்கிறது. இதற்கிடையில் ஜார்ஜ் தன் வீட்டுக்குச் சென்று, அங்கு கள்ளக் காதலனோடு ஓடிப்போகத் தயாராக இருக்கும் மனைவியைக் கொல்கிறான்.

ஜானியும் காதலியும் விமான நிலையத்துக்கு வருகிறார்கள், உள்ளூர் விமானம் என்பதால் எவ்வித சோதனையும் இன்றி பெட்டியைக் கொண்டுபோக நினைக்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் அந்தப் பெட்டி பெரியதாக இருப்பதால் கையில் எடுத்துச் செல்ல முடியாது, பயணப் பொதிகளோடு சேர்க்கவேண்டும் என்கிறார்கள். ஜானிக்கு அதில் விருப்பமில்லை, அவன் நிலைய அதிகாரியிடம் பேசிப் பார்க்கிறான். அவர் சாதாரனமாக, மற்றப் பொருட்களோடு போட்டால் உடைந்துவிடும் என்று நினைத்தால், வழியனுப்ப வந்தவரிடம் கொடுத்தனுப்பிவிட்டு வாருங்கள் என்கிறார். ஜானி, வேறு வழியின்றி அந்தப் பெட்டியைப் பொதிகளோடு சேர்ப்பதற்குக் கொடுக்கிறான்.

அந்தக் காலத்தின் அதிசயங்களுள் ஒன்றான பயணிகள் விமானத்தைக் காணவும், தெரிந்தவர்களை வழியனுப்பவும் ஒரு சிறு கூட்டம், விமான ஓடுபாதைக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களோடு சேர்ந்து ஜானியும் காதலியும் நின்றுபார்க்க, பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் அந்தப் பெட்டி சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் சிறிய நாய், சட்டென்று வேலிக்கு வெளியே பாய்ந்து ஓட ஆரம்பிக்கிறது. அதை மோதிவிடாமலிருக்க, பொருட்களைக் கொண்டுசெல்லும் வண்டியின் ஓட்டுனர் வண்டியை வேகமாகத் திருப்புகிறார். ஓரத்திலிருக்கும் ஜானியின் பெட்டி நழுவி கீழே விழுகிறது, விழுந்த வேகத்தில் திறந்துகொள்கிறது. ஏராளமான பணத்தாள்கள் காற்றில் சிதறிப் பறக்கின்றன. அதிர்ச்சியடையும் ஜானி, காதலியோடு, விமான நிலையத்தின் வெளிவாசல் நோக்கி நடக்கத்தொடங்குகிறான். காவலர்களுக்குத் தகவல் தெரிந்து அவர்கள் ஜானியை நோக்கிச் சந்தேகத்தோடு வருகிறார்கள். அதற்குள் இருவரும் நிலையத்துக்கு வெளியே வந்துவிடுகிறார்கள். ஆனால் திடீரென்று ஜானி நின்றுவிடுகிறான். காதலி அவனை அவசரப்படுத்தி, தப்பித்து ஓடிவிடலாம் என்கிறாள். ஜானி அமைதியாக, சிறையிலிருப்பதற்கும் பணமில்லாமல் வெளியிலிருப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை என்கிறான். காவலர்கள் அவனை நெருங்குகிறார்கள், படம் முடிவடைகிறது.

இந்தப் படத்தின் நான்லீனியர் கதையமைப்பு, பிறகு வந்த பல படங்களுக்கு முன்னோடியானது. கொள்ளைத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் அந்தக் குறிப்பிட்ட நாளில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஒன்றுக்கொன்று இணையாகக் காட்டாமல், தனித்தனித் தொகுதிகளாகவே காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, நிக்கி தனியார் கார் நிறுத்துமிடத்துக்கு வந்ததிலிருந்து ஆரம்பித்து, அவன் இறப்பது வரை ஒரே காட்சித்தொடராக வருகிறது. அதேபோல் மல்யுத்த ஆள் அடிதடியில் ஈடுபட்டுக் காவலர்களின் கவணத்தை ஈர்ப்பது ஒரு தனித் தொகுதியாகவும், ஜானி பணத்தைக் கொள்ளையடிப்பது தனியாகவும் வருகிறது. ஜானியின் காட்சித்தொடரில் மல்யுத்த வீரர் சண்டையிழுப்பது மீண்டும் ஒருமுறை சுருக்கமாகக் காட்டப்படுகிறது. இந்த எல்லாக் கதைத் தொகுதிகளுக்கும் பொதுவான ஒன்று, குதிரைகளின் ஏழாவது பந்தய ஓட்டத்துக்கான அறிவிப்புதான். ஏனெனில் ஜானியின் திட்டப்படி அந்த ஏழாவது பந்தயத்தின்போதுதான் எல்லாரும் செயல்பட்டு கொள்ளையை நடத்த வேண்டும். ஆகவே, அறிவிப்பாளரின் குரலும், ஏழாவது பந்தயத்துக்காகக் குதிரைகள் வரிசையாகக் கொண்டுவந்து நிறுத்தப்படுவதும், ஒவ்வொரு கதைத் தொகுதியிலும் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டு, எதற்குப்பின் எது நடந்தது என்கிற காலக் கணக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் தன் மனைவியின் கள்ளக் காதலனைக் கொல்வதும், அந்தச் சண்டையில் மற்ற கூட்டாளிகள் பலியாவதும், ஜார்ஜ் வீட்டுக்குச் சென்று மனைவியைக் கொல்வதும் ஒரே தொடராகக் காட்டிமுடிக்கப்படுகிறது. அதன்பிறகே ஜானியின் பார்வைக் கோணத்திலிருந்து, ஜார்ஜ் ரத்தக் கறையோடு ஜானியின் அப்பார்ட்மெண்டிலிருந்து தன் வீட்டுக்குச் செல்வது காட்டப்படுகிறது.

பலர் சம்பந்தப்பட்ட ஒரு திட்டம், அது எத்தனை நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழலில் இருக்கும் ஏராளமான காரணிகளின் சிக்கலான அமைப்பு காரணமாக அது சிதைந்து விடுவதற்கான வாய்ப்பே அதிகம், என்பதே இந்தப் படத்தின் மையக்கருத்து என்று நான் நினைக்கிறேன். மேலும், ஒரு திட்டம் சிதைவதற்கு மூன்று விதமான காரணிகள் இருப்பதாகக் காட்டுகிறது. முதலாவது, நீண்டகால உறவுகள், உதாரணமாக ஜார்ஜின் மனைவி. இரண்டாவது குறுகியகால நட்பு, உதாரணம் நிக்கியிடம் காலையில் அறிமுகமாகி, நட்பாகிப் பின்பு அவனைக் கொல்லும் கார்நிறுத்துமிடத்தின் பொறுப்பாளன். மூன்றாவது, நமக்கு முன்பின் தெரியவே தெரியாதவர்கள், உதாரணம் விமான நிலையத்துக்கு வந்த பெண்மணியும் அவளது நாயும்.

மனிதர்கள் ஒரு குழுவாக இயங்கும்போதும், அவர்கள் தனித்தன்மையுள்ளவர்களாகவும் வெவ்வேறு சவால்களைச் சந்திப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லாவிதமான குழுச் செயல்பாட்டுக்கும் இது பொருந்தும். ஒரு மொத்தக் குழுவின் சவாலுக்கும், தனித்தனியாக அவர்கள் சந்திக்கும் சவால்களுக்கும் சம்பந்தமேயில்லாமல், அவை தனிக் கதைகளாகவே இருக்கின்றன.

ஸ்டேன்லி க்யூப்ரிக்கின் சிறந்த படங்களின் வரிசையில் இதற்கு இடமேயில்லை. அவருடைய ஆரம்பகாலத்தில், மிகுந்த சமரசங்களுக்கு மத்தியில், குறைந்த செலவில், அவசர அவசரமாக செய்யப்பட்ட ஒரு முயற்சி மட்டுமே. ஆனால் இந்தப் படம், நெடுங்காலத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட பல நல்ல நான்லீனியர் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது என்பதே இதன் சிறப்பு. குவெண்டின் டரண்டினோ (Quentin Tarantino) ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் தாக்கம் தனது முதல் படமான Reservoir Dogs உருவாக்கத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.