திரைக்கலை வரலாற்றின் முதல் ஐம்பது ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட நான்கு படங்களையே நாம் இதுவரை இந்தப் பட்டியலில் பார்த்தோம். எனக்குப் பிடித்த பத்து நான்-லீனியர் திரைக்கதையுள்ள படங்களின் கால வரிசையிலான பட்டியல், இப்போது நவீன காலத்துக்குள் நுழைகிறது, கறுப்பு-வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு..

( 5 )

அன்னி ஹால் (1977)

“வூடி அல்லென்” (Woody Allen), கட்டற்ற கிறுக்குத்தனங்களும், கூர்மையான அறிவும், தனித்துவமான நகைச்சுவையும், உளவியல் பார்வையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு உன்னதக் கலைஞன். பத்திரிகைகளுக்கு நகைச்சுவைத் துணுக்கு எழுதுபவராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்து, மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சி ( நம் தொலைக்காட்சிகளில் ஸ்டேண்ட்-அப் காமெடி என்று அழைக்கப்படுவது ) நடத்துபவராக வளர்ந்து, பின்பு திரைத்துறைக்கு வந்த பிறகும், சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும், புகழ்பெற்ற பிராட்வே நாடகாசிரியராகவும் பன்முக ஆளுமையாக விளங்குகிறார் அவர். திரைப்படங்களில், ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும், படித்த மேல்-நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையையும், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் அகவாழ்வையும், யூதர்களின் அடையாளச் சிக்கல்களையுமே அவர் அதிகமும் எடுத்தாண்டிருக்கிறார். உளவியல் ஆழங்களை நோக்கித் தீவிரமாக அவரது கதைகள் பயணிக்கும்போதும் நொடிக்கு நொடி நகைச்சுவையாக இருப்பதுதான் அவரது தனித்தன்மை. ஹாலிவுட்டின் இறுக்கமான அமைப்புக்குள் கட்டுப்படாமல் கூடுமானவரை சுதந்திரமான இயக்குனராக செயல்பட்ட மிகச் சிலருள் ‘வூடி’யும் ஒருவர்.

அவர் தானே திரைக்கதை எழுதி இயக்குவதாலும், சில ஆண்டுகளுக்கு முன்புவரை தானே மையக் கதாபாத்திரத்தில் நடித்ததாலும், யாரையும் சார்ந்து இருக்கவேயில்லை. மிகச் சிறிய பட்ஜெட்டிலேயே எப்போதும் படமெடுக்கும் அவர், நடிகர்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை முதலிலேயே ஒதுக்கிவிடுவார். அவர் எத்தனைப் பெரிய நடிகரானாலும், அவரது சந்தை மதிப்பு எதுவானாலும், தனது படத்தில் பங்கேற்க விரும்பினால் தான் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமென்று சொல்வார். ஆனால் அவர் படங்களில் நடிக்க முன்னணி நடிகைகள் எப்போதுமே போட்டிபோடுகிறார்கள், அவர் படங்களின் நாயகிகளுக்கு இதுவரை 5 முறை ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எப்போதுமே அவரது கதைக் களம், அவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான நியூயார்க் தான். அகலக்கால் வைக்காமல், திட்டமிட்டுப் படமெடுப்பதனால்தான் அவரால் 1969-யிலிருந்து 2010 வரை சராசரியாக ஆண்டுக்கு ஒரு படம் என்கிற முறையில் தொடர்ந்து இடைவெளியில்லாமல் படமெடுக்க முடிந்திருக்கிறது. ஹாலிவுட்டில் இதை ஒரு வரலாற்றுச் சாதனையாகவே பார்க்கிறார்கள்.

எப்போதுமே விருதுகளில் நாட்டமில்லாதவரும், விருது வழங்கும் முறை பற்றிக் கடுமையான விமர்சனம் கொண்டவருமான அவர், மூலத் திரைக்கதைக்கான பிரிவில் மட்டும், ஆஸ்கார் விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு 14 முறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து, 21 முறை பரிந்துரைக்கப்பட்டு, மூன்று முறை வென்றிருக்கிறார். விருது, வியாபாரம் இரண்டிலுமே அவருக்குப் பெரிய வெற்றியை ஈட்டித்தந்த ஒரு படம் “அன்னி ஹால்” (1977). சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த படம் ஆகிய நான்கு பிரிவுகளிலுமே ஆஸ்கார் விருதைப் பெற்ற இந்தப் படம், வூடியின் திரைவாழ்விலும் ஒரு முக்கியத் திருப்புமுனை. “நான்-லீனியர்” திரைக்கதை அமைப்புக்கும் மிக முக்கியமான ஒரு படம்.

இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் “அன்ஹிடோனியா” (Anhedonia), உளவியல் மருத்துவச் சொல்லான அதன் அர்த்தம் ‘உண்பது, விளையாடுவது முதல் உடலுறவு வரையான உயிர்ச்செயல்பாடுகளில் இயல்பாக ஏற்படும் சுகம் மகிழ்ச்சி போன்றவற்றை உணரமுடியாமல் போகும் நிலை’ என்பதாகும். ஒரு மர்மமான கொலையைச் சுற்றிப் பின்னப்பட்ட காதல்கதையாகத்தான் முதலில் வூடி திரைக்கதை அமைத்திருந்தார். பிறகு அந்தக் கொலை மர்மம் சரியாகப் பொருந்திவரவில்லை என்று அதை உதறிவிட்டு முழுக்க நகைச்சுவைக் காதல் கதையாகவே வடிவமைத்தார். அப்போது பெயரையும் மாற்ற நினைத்தவர், கதாநாயகி பாத்திரத்தின் பெயரான ‘அன்னி ஹால்’ என்பதையே படத்துக்கும் வைத்தார். ஆனாலும் கதாநாயகனின் பாத்திரம் “அன்ஹிடோனியா” உளச்சிக்கல் உள்ளதாகவே வைத்துக்கொண்டார். கதை சொல்வதில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் மிக அடிப்படையான கட்டுப்பாடுகளையே உடைத்த படம் இது.

மையக் கதாபாத்திரம் நேரே கேமராவைப் பார்த்து, அதாவது பார்வையாளர்களை நோக்கிப் பேசுவது போல் படம் ஆரம்பிக்கிறது. ‘ஆல்வி சிங்கர்’ என்னும் நகைச்சுவையாளன், கிளப்புகளிலும் கல்லூரி போன்றவற்றில் நடக்கும் விழாக்களிலும் நகைச்சுவை உரைநிகழ்ச்சி நடத்துபவன், தொலைக்காட்சியிலும் தோன்றியிருப்பதால் ஓரளவுக்குப் பிரபலமானவன். நரம்புக் கோளாறுக்காகப் பதினாறு ஆண்டுகளாக மருந்துண்பவன். அவன், வாழ்க்கை பற்றிய தனது பார்வை என்ன என்று விளக்குவதற்காக முதலில் இரு ஜோக்குகளை நம்மிடம் சொல்கிறான். முதல் ஜோக், ஒரு ரெஸார்ட்டில் தங்கியிருக்கும் இரு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள், ஒருத்தி “இங்கு உணவு கொடூரமானது” என்கிறாள், அடுத்தவள் உடனே, “அதுவும் கொஞ்சமாகத் தருகிறார்கள்” என்கிறாள். ஆல்வி, வாழ்க்கை மிகுந்த துன்பங்களும் வேதனையும் நிறைந்ததுதான், ஆனால் வெகு சீக்கிரத்திலேயே எல்லாம் கடந்தும் போய்விடுகிறது, என்று அதற்கு விளக்கம் தருகிறான். அடுத்த ஜோக், “என்னைப் போன்ற ஒருவனையும் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் ஒரு கிளப்பில், நான் மெம்பராக சேரமாட்டேன்”. பெண்களுடனான உறவில் தனது அனுகுமுறையும் அதுதான் என்கிறான். தொடர்ந்து அவன் தன் வாழ்க்கையைப் பற்றி, சிறுவயதிலிருந்து உருவான உளச்சிக்கல் பற்றி, தனது யூத அடையாளத்தை மற்றவர்கள் குத்திக் காட்டுவதாக நினைத்துக்கொள்வது பற்றிச் சொல்கிறான். தான் பழகிய பெண்கள், குறிப்பாகத் தான் உண்மையாக நேசிக்கும் அன்னி ஹால் என்பவளைச் சந்தித்தது- பழகியது- முரண்பட்டது- பிரிந்தது- தவித்தது- மீண்டும் சேர்ந்தது- மீண்டும் பிரிந்தது- என்று சொல்லிச் செல்கிறான். ஆனால் அதையும் காலவரிசைப்படி இல்லாமல், அவன் பேசுவதற்குத் தோதான ஒரு கோர்வையில் கால வரிசையை மாற்றிக் கதை சொல்கிறான்.

‘அன்னி ஹால்’ திரைப்படத்தின் மிகுந்த புதுமையான அம்சம், காட்சி நடந்துகொண்டிருக்கும்போது ஆல்வி எப்போது வேண்டுமானாலும் பார்வையாளர்களை நோக்கிப் பேச ஆரம்பித்துவிடுவான் என்பதே. ஏனென்றால் மொத்தக் கதையுமே அவன் சொல்லிக்கொண்டிருக்கும் விவரிப்புத் தானே. அந்தக் காட்சி சூழலுக்கு நடுவிலேயே அவன் நேரே கேமராவைப் பார்த்து, தான் நினைப்பது என்ன என்று சொல்லுவான். அதுமட்டுமல்ல, அந்தக் காட்சியில் இருக்கும் மற்ற சில பாத்திரங்களும் கூட அப்போது அவனிடம் விவாதிக்க ஆரம்பிப்பார்கள். சிலசமயங்களில் அவர்களும் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசுவார்கள். ஒரு காட்சியில், ஆல்வியும் அன்னி ஹாலும் திரையரங்கில் சீட்டு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது, அவர்களுக்குப் பின்னால் நிற்கும் ஒருவன் தன் தோழியிடம் சத்தமாக எல்லா விஷயங்களைப் பற்றியும் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறான். அது ஆல்வியை எரிச்சலூட்டுகிறது, அவனது கருத்துக்கள் தவறானது, அவனுக்கு எதுவுமே தெரியவில்லை, ஆனால் எல்லாம் தெரிந்தவனைப்போல் அதுவும் சத்தமாக வேறு பேசுகிறானே என்று ஆல்வி, அன்னி ஹாலிடம் பொறுமுகிறான். ஒரு கட்டத்தில் ஆல்வி நேரே கேமராவின் அருகில் வந்து பார்வையாளர்களிடம் முறையிடுகிறான். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த ஆளும் அருகில் வந்து ‘நீ எப்படி எனக்கு எதுவும் தெரியாதென்று சொல்லலாம், நான் கல்லூரியில் அந்தக் குறிப்பிட்ட துறையில் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியன்’ என்கிறான். பிறகு அந்த ஆளும் பார்வையாளர்களை நோக்கித் தன் தரப்பை வாதிடுகிறான். ஆல்வி சட்டென்று விளம்பரத் தட்டிக்குப் பின்னால் சென்று, அந்த அதிகப் பிரசங்கி மேற்கோள் காட்டிய பிரபலமான சிந்தனையாளரையே கையைப் பிடித்து அழைத்துவந்து “நீங்களே சொல்லுங்கள், இவர் சொல்வது சரியா?” என்று கேட்கிறான். Marshall McLuhan என்கிற நிஜ சிந்தனையாளரே அந்தக் காட்சியில் தோன்றுகிறார், “The medium is the message” மற்றும் “Global Village” போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கியவர் அவர்தான். அவர், அந்த அதிகப் பிரசங்கியிடம், “நீங்கள் பேசியதைக் கேட்டேன், என்னுடைய சிந்தனைகளை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, உங்களுக்கு எதுவும் தெரியவில்லை” என்று சொல்கிறார். வூடி பார்வையாளர்களைப் பார்த்து “வாழ்க்கை இப்படி அல்லவா இருந்திருக்க வேண்டும்” என்கிறான். இதை ஃப்ளாஷ் பேக் என்று சொல்லிவிட முடியாது, பாதிதான் நிஜத்தில் நடந்தது, மீதி ஆல்வியின் அதீதமான கற்பனை.

மற்றொரு புதுமை, ஒரு காட்சி நடந்துகொண்டிருக்கும் காலத்துக்குள் வேறொரு காலத்தைச் சேர்ந்த கதாபாத்திரம் நுழைந்து பேசும். உதாரணத்திற்கு, ஆல்வி சிறுவனாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சியில், அவன் ஒரு சிறுமியை முத்தமிட்டுவிடுகிறான், ஆசிரியை அவனைக் கடுமையாகத் திட்டுகிறாள். அப்போது அங்கு திடீரென்று நுழையும் நிகழ்காலத்து 40 வயது ஆல்வி, ஆசிரியையிடம் ‘அதில் என்ன தவறு’ என்று வாதிடுகிறான். அந்த மாணவி, முதிர்ந்த ஆல்வியிடம் “ஃப்ராய்ட் கூட பருவமடைவதற்கு ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்” என்கிறாள். அந்த விவாதம் நடைபெறுவது முழுக்க முழுக்க ஆல்வியின் கற்பனை வெளியில்தான். அந்த 6 வயதுச் சிறுமிக்கு ஃப்ராய்ட் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, அந்தக் கேள்வியை எழுப்புவதும் அதற்குப் பதில் சொல்வதும் வளர்ந்த ஆல்வியின் மனம்தான். முன்பு தன்னால் எதிர்த்துப் பேசமுடியாததை இப்போது மீண்டும் மனதுக்குள் நிகழ்த்திக்கொள்கிறான் என்று புரிந்துகொள்ளலாம்.

அதேபோல், அன்னிஹால் தனது முதல் காதலைப் பற்றி ஆல்வியிடம் சொல்லும்போது, ஃப்ளாஷ்பேக் காலத்துக்குள் அன்னியும் ஆல்வியும் நடந்து சென்று, ஓரிடத்தில் தனியாகப் பேசிக்கொண்டிருக்கும், முன்னாள் அன்னியையும் அவளது காதலனான நாடக நடிகனையும் பார்க்கிறார்கள். அவர்களின் நடவடிக்கையை மிக அருகில் நின்று அலசுகிறார்கள். மற்றொரு காட்சியில், அன்னி ஹாலையும் தன் நெருங்கிய நண்பனையும், தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் ஆல்வி. அங்கு பழைய காலத்தில், அவனது தாயும் தந்தையும் சிறிய காரணங்களுக்காக சண்டை போட்டுக்கொள்வதை, அந்தப் படச்சட்டத்துக்கு உள்ளேயே நின்றபடி அவர்கள் மூவரும் நேரில் பார்க்கிறார்கள். பிறகு அந்த வீட்டில் ஒரு பார்ட்டி நடப்பதையும், சிறுவயது ஆல்வி எதிர்கொள்ளும் பெரிசுகளையும் அவர்கள் பார்க்கிறார்கள், கடந்த காலத்துக்குள் நின்றபடியே கடந்த காலத்தை விமர்சிக்கிறார்கள்.

இந்த ஒரு படத்துக்குள்ளேயே, ஏராளமான புது முயற்சிகளைப் பரிட்சித்துப் பார்த்திருக்கிறார் வூடி ஆல்லன். தற்காலத் தமிழ்ப் படங்களில் சில பாடல் காட்சிகளில், கதாநாயகனுடன் அந்தச் சூழலில் இருக்கும் பிறரும் இடையிடையே கலந்துகொண்டு பாடுவதுபோல் வருவதுண்டு, குறிப்பாக சேது படத்தின் “மாலை என் வேதனை கூட்டுதடி” பாடலின் சரணங்களைச் சொல்லலாம். இந்த முறையை உரையாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் வூடி. ஒரு காட்சியில், அன்னி ஹால் ஆல்வியிடம் சண்டையிட்டுப் பிரிந்து செல்ல, அவன் ஆற்றாமையோடு சாலையில் நடந்துபோகிறவர்களிடமெல்லாம் தன் சந்தேகங்களைக் கேட்டு உரையாடியபடி வருவது லாங் டேக்காக ஒரே ஷாட்டில் வருகிறது. அதன் இறுதியில், ஒரு காவலர் குதிரையில் வர, ஆல்வி அந்தக் குதிரையிடம் சென்று பேசுகிறான், “பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதுமே நான் தவறிவிடுவேன், சிறுவயதில் ‘ஸ்நோ வைட்’ படம் பார்த்தபோது, எல்லாரும் ஸ்நோ வைட்டை விரும்பினார்கள், ஆனால் எனக்கு சூனியக்காரியான வில்லியைத்தான் பிடித்திருந்தது” என்கிறான். உடனே காட்சி கார்ட்டூன் படத்துக்குள் தாவுகிறது, சூனியக்காரியும் ஆல்வியும் கார்ட்டூன் ஓவிய வடிவில், கணவன் மனைவி போல சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அங்கு கார்ட்டூனாகவே வரும் அவனது நண்பன் “வேறு பெண்ணா இல்லை, வா” என்று அழைத்துச் செல்கிறான். அடுத்த காட்சி நிஜ உலகில் நடக்கிறது, நண்பனால் அறிமுகப்படுத்தப்பட்ட வேறொரு பெண்ணோடு பேசியபடி வருகிறான் ஆல்வி. நிஜமும் கற்பனையும் பிரிக்க முடியாதபடி கலந்து, உளச்சிக்கல் உள்ள நாயகனின் மனவெளியையே திரைக்கதையின் களமாகக் கொண்டிருக்கிறது இப்படம், அதற்கு மேற்சொன்ன காட்சித்தொடரே சிறந்த உதாரணம்.

இந்தப் படத்தின் கதையைச் சுருக்கிச் சொல்வதும், அதை எளிமைப்படுத்த முயல்வதும், படத்தின் அழகை இல்லாமலாக்குவதோடு அதைப் புரியாமலும் ஆக்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். முழுவதும் வசனங்களாலேயே கட்டியெழுப்பப்பட்ட படம் இது. நிறைய தகவல்களும், பார்வைக் கோணங்களும், சிறந்த விவாதங்களும், கூர்மையான கிண்டல்களும், அரசியல் சமூக விமர்சனங்களும், “சுயஇன்பம் செய்வதை எதிர்க்காதீர்கள், அதுமட்டும்தானே உண்மையாக நேசிப்பவரோடு கொள்ளும் உடலுறவு” என்பது போன்ற நகைச்சுவை துணுக்குகளும் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கும் படம் இது.

ஆண் பெண் உறவின் பல்வேறு நுணுக்கமான சிக்கல்களை இப்படம் விவாதிக்கிறது. படுக்கையறையே எல்லா சிக்கல்களுக்கும் மையம் என்று காட்டுகிறது. ஆல்வியின் முதல் இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தது படுக்கையறைக் காட்சிகளாலேயே விவரிக்கப்பட்டிருக்கின்றன. முதல் மனைவி அழகாகவும் இளமையாகவும் இருக்க, அவன் ‘தன்னையும் ஏற்கும் கிளப்பில் மெம்பராக முடியாது’ என்ற மனச்சிக்கலால், இரவு படுக்கையில், ஜனாதிபதி கென்னடி கொலையின் பின்னால் இருக்கும் சதி பற்றிப் பேசி உடலுறவைத் தவிர்க்க முனைகிறான். இன்னொரு சிறந்த காட்சி, உடலுறவுக்கு முன் கஞ்சா புகைக்கும் பழக்கமுள்ள அன்னிஹாலை திருத்துவதற்காக, ஆல்வி அவளது கஞ்சா சிகரெட்டைத் தூக்கிப்போட்டுவிட்டுப் படுக்கைக்கு அழைக்கிறான். உறவு நடந்துகொண்டிருக்கும்போதே, அவள் ஆன்ம வடிவில் எழுந்துசென்று நாற்காலியில் உட்காருகிறாள். ‘நீ விலகிச் சென்றுவிட்டதுபோல் உணர்கிறேன்’ என்று ஆல்வி சொல்ல, அவள் மறுக்கிறாள். பிறகு அவள் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, அவன் ‘இதைத்தானே சொன்னேன், நீ வேறெங்கோ இருக்கிறாய்’ என்கிறான். அவள் “ஆனால் என் உடல் உன்னிடம்தானே இருக்கிறது” என்கிறாள், அவன், “அது எப்படிப் போதும், மனமும் ஈடுபட வேண்டுமே” என்கிறான். இன்னொரு காட்சியில், அவர்கள் இருவரும் தனித்தனியாக மனநல ஆலோசகர்களைச் சந்தித்து உரையாடுவது ஒரே படச்சட்டத்துக்குள் ஒன்றாகவே காட்டப்படுகின்றன. ‘ஸ்பிலிட் ஸ்க்ரீன்’ என்றழைக்கப்படும் படச்சட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு காட்சிகளை ஒன்றாகத் திரையில் ஓடவிடும் முறையில், ஆல்வியும் அன்னியும் தத்தம் மனநல பரிசோதனைகளில் பதில் சொல்வதைத் திரையின் இருபக்கங்களிலும் நாம் சேர்த்தே பார்க்கிறோம். ஒரே விஷயத்தை அவர்கள் இருவரும் எப்படி வெவ்வேறு விதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறது அந்தக் காட்சி.

உறவுகளின் தேவையையும் அதன் பயன்களையும் கூட மிகச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார் வூடி. சராசரியான பெண்ணாக இருக்கும் அன்னிஹால் வாழ்வில் உயர்வதற்கு ஆல்வியே காரணமாக இருக்கிறான். குறைவாகவே படித்திருக்கும் அவளை, ஆல்வி வற்புறுத்தி மேற்படிப்பில் சேரவைக்கிறான். முதலில் விருப்பமில்லாமல் சேரும் அவள் பிறகு ஆர்வம் கொண்டு படித்து தன்னை வளர்த்துக்கொள்கிறாள். வெளியுலகை அவள் ஆல்வி மூலமே அறிகிறாள், இலக்கியம் திரைப்படம் ஆகியவற்றில் அவளது ரசனை வளர்ச்சியடைவதும் அவனால்தான். தாழ்வு மனப்பான்மையுள்ள பாடகியான அவளை உற்சாகப்படுத்தி, ஒரு சிறந்த பாடகியாக மாற்றுவதும் அவன்தான். அவளுடைய உலகம் விரிய விரிய, மெல்ல அவள் அவனைவிட்டு விலகவும் ஆரம்பிக்கிறாள். ஆல்வி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அன்னிஹாலை அழைத்துக்கொண்டு லாஸ் ஏஞ்சல்சுக்குச் செல்கிறான். அங்கு ஒரு கிறிஸ்துமஸ் பார்ட்டியிலும் கலந்துகொள்கிறான். அது அன்னிக்குப் பெரிய திறப்பாக அமைகிறது, அவள் அங்குள்ள வாழ்க்கையை விரும்புகிறாள், தனது எதிர்காலத்தை அங்கு அமைத்துக்கொள்ள முடிவெடுக்கிறாள். திரும்பும் வழியில், விமானத்தில் இருவரும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது எண்ணங்கள், மனக் குரல்களாக நமக்குக் கேட்கின்றன. ஒரே முடிவுக்கு இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக வந்தடைகிறார்கள். அன்னி நேரடியாகவே அவனிடம் “நம் உறவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது” என்கிறாள், ஆல்வியும் அதை ஆமோதித்து, “எந்த உறவும் ஒரு சுறாவைப் போன்றது, அது தொடர்ந்து முன்னகர்ந்து செல்லவேண்டும், இல்லையென்றால் இறந்துவிடும். நம்முடைய உறவு ஒரு இறந்த சுறா” என்கிறான்.

ஆனால் அன்னிஹால் பிரிந்து சென்று பலமாதங்களுக்குப் பிறகும் ஆல்வியால் அவளை மறக்க முடியவில்லை, அதுவரை திருமணம் என்ற பந்தத்தைத் தவிர்த்துவந்த அவன், முதன்முறையாக அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகப் போனில் சொல்கிறான். நேரில் சம்மதம் பெறுவதற்காக நியூயார்க்கிலிருந்து மூவாயிரம் மைல் பறந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறான். ஒரு சாலையோர உணவகத்தில் அந்தச் சந்திப்பு நடக்கிறது, ஆனால் அவன் அங்கு பார்க்கும் அன்னி பலவகையிலும் வேறொருத்தியாக இருக்கிறாள், மிகச் சாதாரணமாக அவனை நிராகரிக்கிறாள்.

ஆனால் ஆல்வியின் வாழ்விலும் ஒரு நேர்மறையான மாறுதலை அந்த உறவும்-பிரிவும் உருவாக்குகிறது. அவன் ஒரு எழுத்தாளனாக மாறுகிறான். அன்னிஹாலுடனான உறவை மையப்படுத்தி அவன் ஒரு நாடகம் எழுதுகிறான். நாடக ஒத்திகையில், அதே லாஸ் ஏஞ்சல்ஸ் உணவகக் காட்சியை, அதே வசனங்களோடு வேறு நடிகர்கள் நடிப்பது காட்டப்படுகிறது. ஆனால் அந்த நாடக முடிவில் அன்னிஹால் ஆல்வியுடன் இணைவதாக மாறி வருகிறது, “கலையில் மட்டும்தான் உறவுமுறைகள் முழுமையடைகின்றன, நிஜ வாழ்வில் அது அபூர்வம்” என்று பார்வையாளர்களிடம் சொல்கிறான் ஆல்வி.

அதற்குப் பிறகும் அவளை ஒருமுறை அவளது புதுக் காதலனோடு சந்திக்கிறான், நட்போடு அன்றைய ஒருநாள் முழுவதும் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சுற்றிவிட்டுப் பிரிகிறார்கள். ஆல்வி இறுதியிலும் பார்வையாளர்களுக்கு ஒரு ஜோக் சொல்கிறான், ஒருவன் “ஐயோ என் சகோதரன் பைத்தியமாகிவிட்டான், அவன் தன்னை ஒரு கோழி என்று நினைத்துக்கொண்டிருக்கிறான்.” என்கிறான், “அவனை மாற்ற வேண்டியதுதானே” என்று கேட்கப்பட, “இல்லை, அவன் கொடுக்கும் முட்டைகள் எனக்கு உபயோகமாக இருக்கிறது” என்கிறான் அவன். உறவுமுறைகள் எத்தனைப் பைத்தியக்காரத்தனமாக இருந்த போதிலும் அவற்றை நாம் இழக்க விரும்புவதில்லை, ஏனென்றால் அவை கொடுக்கும் முட்டைகள் நமக்குத் தேவையாய் இருக்கின்றன என்று சொல்லி நிறைவடைகிறது திரைப்படம்.