மீண்டும் ஒரு அஞ்சல் அட்டை :

[பெரிதாக்கிப் படிப்பதற்கு சொடுக்கவும்]

.

அன்புள்ள முரளி,

நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழகத்தில் இப்போது நகரத்துக்கும் பெருநகரத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை ஆகவே, ‘பி’ செண்டரே இப்போது இல்லை ‘ஏ’ மற்றும் ‘சி’ மட்டும்தான் இருக்கிறதென்று சொன்னேன், அவரும் ஆமோதித்தார். ஆனால் ஏராளமான பிரதிகளைப் போட்டு, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம், நகரங்கள் என்றால் பல திரையரங்கங்களில், ஒரே நாளில் படத்தை வெளியிடும் இந்தக் காலத்தில் ஏ பி சி என்றெல்லாம் பிரிப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன், என்னுடைய ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்டுவிடுகிறேன்.

(அ) ஒரு படம் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை என்பது, அதை நீங்கள் ரசிப்பதற்கு எந்த வகையில் தடையாய் இருக்கிறது?

(ஆ) ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி, அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளரை விடவும் அதிகமாக, தமிழ் ரசிகர்கள் கவலைப்படுகிறார்களே ஏன்?

காலவரிசை மாறிய கதைகளைவிட, நேரடியான கதைகளே எல்லாருக்கும் புரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக நேரடியான கதைகள் மட்டுமே போதும் என்று சொல்வது என்ன நியாயம்? தினத்தந்தி தானே எல்லாருக்கும் புரிகிறது நிறையவும் விற்கிறது, பிறகு எதற்காக வேறு இதழ்களை பதிப்பிக்க வேண்டும் என்று கேட்பீர்களா?

வில்லு, வேட்டைக்காரன், ஆழ்வார், ஏகன், சுறா எல்லாம் நான்-லீனியர் படங்களா என்ன? அந்தப் படங்களை விமர்சித்தவர்கள் எல்லாருமே தமிழ் திரைத்துறையின் உயிர்காக்க அவசரமாகத் தேவைப்படும் ரத்தம் பிரானவாயு போல ‘புதுமை’ ‘வித்தியாசம்’ என்கிற வஸ்துக்களைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள். ஆனால் நீங்களோ கதையில் எதுவும் மாறிவிடக் கூடாது, வழக்கம் போல இருக்க வேண்டும் என்கிறீர்கள். திரைப்படத்தின் எல்லாத் துறைகளும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், திரைக்கதைத் தொழில்நுட்பத்தில் எந்தப் புது யுத்தியும் கூடாது என்பது சரியா?

தமிழில் எடுக்கப்பட்டு பெரிய வியாபார வெற்றியை அடைந்த எத்தனையோ பழைய படங்களின் பெயர்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டன. உங்களுக்குத் தெரிந்த 60 வயதைக் கடந்த சினிமா ரசிகர்களிடம் பேசிப்பாருங்கள், அவர்கள் ‘நான் 10 முறை பார்த்தேன்’ ‘14 முறை பார்த்தேன்’ ‘அந்தக் காலத்தில் மிகப் பெரிய வெற்றி’ என்று குறிப்பிடும் சில படங்களின் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள், ‘அப்படி ஒரு படம் வந்ததா? சிவாஜி அதில் நடித்தாரா?’ என்று நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அவ்வளவு ஏன் சிவக்குமார், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜெய்கணேஷ் நடித்த பல வெற்றிப் படங்கள் வெள்ளிவிழாப் படங்களெல்லாம் இன்று மறக்கப்பட்டுவிட்டன. ஆனால் அவ்வப்போது யாராவது ஒருவர், எஸ்.பாலச்சந்தர் இயக்கிய “அந்த நாள்” (1954) படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதை நான் கவணித்திருக்கிறேன். அந்த நான்லீனியர் படம் யாருக்கும் புரியவில்லையா என்ன? என்வரையில், 1965-யில் ஏ.பி.நாகராஜன் இயக்கிய “திருவிளையாடல்” படம் கூட நான்லீனியர்தான். அதற்கு இணையான ஒரு வெற்றிப் படம் உண்டா?

டிஜிட்டல் சினிமா பற்றிக் கேட்டிருந்தீர்கள், பழக்கத்தை மாற்ற முடியாத தன்மைதான் இங்கு இன்னும் டிஜிட்டல் ஒளிப்பதிவு வளராததற்குக் காரணம். இருந்தபோதும், படச்சுருளுக்கு இணையான தரத்தில் டிஜிட்டலில் எடுக்க வேண்டுமானால் அதற்குப் படச்சுருளில் எடுப்பதை விட அதிகமாகச் செலவாகும் என்பதே உண்மை. சென்ற ஆண்டில் “உன்னைப்போல் ஒருவன்” “திருதிரு துறுதுறு” போன்ற முழுவதும் டிஜிட்டலிலேயே எடுக்கப்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. டிஜிட்டல் சினிமா செல்லுலாய்டை வெற்றிகொண்டுவிட்டதா என்றால் இல்லை, ஒரு இணையான போட்டியாளராகக் கூட இன்னும் ஆகவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அது முந்திச் சென்றுவிடும் என்றே நினைக்கிறேன். டிஜிட்டலுக்குப் பத்து வயதுதான், அதைவிட நூறு வயது மூத்தது செல்லுலாய்டு, ஏன் அவசரப்படுகிறீர்கள்? கிழம் மெல்லச் சாகட்டுமே. ஒளிப்பதிவில் மெதுவாக வளர்ந்தாலும், டிஜிட்டல் புரஜக்ஷன் ஏற்கனவே பரவலாகிவிட்டது. என்னுடைய ‘நஞ்சு புரம்’ ஒரு டிஜிட்டல் படம்தான்.

சார்லஸ்.