ஒரு அஞ்சல் அட்டை:

[பெரிதாக்கிப் பார்ப்பதற்கு சொடுக்கவும்]

.

அன்புள்ள முரளி

உங்கள் கடிதம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். குறிப்பாக வரைகலை கண்ணைக் கவர்வதாக அமைந்திருந்தது. “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்” தொடரில் எனக்கும் மிக திருப்தியாக அமைந்த கட்டுரை “ராஷோமொன்” பற்றியதுதான். ஏனென்றால் அந்தக் கட்டுரை எழுதியதன் வாயிலாகத்தான் அந்தப் படத்தைப் பற்றி நானே ஒரு தெளிவுக்கு வந்தேன். வலைப்பதிவுகளை எழுதுவதற்கான தனிப்பட்ட காரணமே நான் அறிந்தவற்றை மேலும் கூர்தீட்டிக்கொள்வதுதான்.

அந்தக் கட்டுரையை எழுதுவதற்காக நான் “ராஷோமொன்”-ஐ மீண்டும் மீண்டும் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். ஏராளமான தகவல்களைத் தலையில் ஏற்றி, பிறகு அதை டைப் செய்து முடிப்பது பெரும்பாடாகிவிட்டது. அதைப் பதிப்பித்துப் பார்த்தபோது மிகவும் மனநிறைவாக இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தபோது, நான் எழுத நினைத்திருந்த சில விஷயங்களை மறந்துவிட்டிருக்கிறேன் அல்லது ரொம்பவும் சுருக்கமாக எழுதியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அதில் மிக முக்கியமான ஒரு விடுபடலை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

விசாரணை மன்றத்தில் சாட்சியம் அளிக்கப்படுவதுதான் கதையின் மையமான பகுதி. விறகு வெட்டுபவன், புத்த பிக்கு, திருடனைப் பிடித்தவன், திருடன், சாமுராயின் மனைவி, சாமுராயின் ஆவி (ஊடகப் பெண்ணின் மூலமாக) ஆகிய ஆறு பேரின் சாட்சியங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. ஆனால் அத்தனைக் காட்சிகளிலும் விசாரணை மன்றத்தின் நீதிபதியையோ அல்லது அந்த மன்றத்திலிருக்கும் மற்ற பார்வையாளர்களையோ நமக்குக் காட்டவே இல்லை குரோசாவா. காட்டுவது மட்டுமல்ல நீதிபதியின் குரலைக் கூட நாம் கேட்பது இல்லை. சிலமுறைகள் சாட்சிகளிடம் நீதிபதி கேள்வி கேட்பதுபோல் வருகிறது, குறிப்பாக விறகுவெட்டியிடமும், திருடனைப் பிடித்தவனிடமும், திருடனிடமும், நீதிபதி விலைமதிப்புள்ள கத்தியைப் பற்றி விசாரிக்கிறார். ஆனால் அப்போதெல்லாம், அந்த சாட்சிகள் தூரத்திலிருந்து வரும் மெல்லிய ஒலியைக் கேட்பது போல, சிறிது முன்னகர்ந்து கூர்ந்து எதையோ கேட்டுவிட்டு “என்ன.. என்ன கேட்டீர்கள்.. கத்தியா? கத்தி.. இல்லை நான் பார்க்கவில்லை” என்பதுபோல் சொல்கிறார்கள். அந்தப் பதிலின் மூலம்தான் என்ன கேட்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். சாட்சியளிப்பவருக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும் விறகுவெட்டி மற்றும் புத்த பிக்குவைத் தவிர வேறு யாரையுமே நாம் அந்த மன்றத்தில் பார்க்கவில்லை. ஏன்?

அகிரா குரோசாவா இதன்மூலம் தெளிவாக உணர்த்துவது ஒன்றைத்தான், திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்தான் நீதிபதிகள். சாட்சியங்கள் எல்லாமே பார்வையாளர்களை நோக்கியே சொல்லப்படுகின்றன. இறுதியில் உண்மை எதுவென்று முடிவு செய்யவேண்டியவர்களும் பார்வையாளர்கள்தான். கோட்டை வாசலில் குடியானவனிடம், பிக்குவும் விறகுவெட்டியும் விசாரணை மன்றத்தில் நடந்தவைகளை எல்லாம் விரிவாகச் சொல்கிறார்கள், ஆனால் இறுதியில் விசாரணையின் முடிவு என்னாயிற்று, நீதிபதிகளின் தீர்ப்பு என்ன என்பதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. ‘தீர்ப்பு உங்கள் கையில்’ என்று பார்வையாளர்களை நோக்கிச் சொல்லாமல் சொல்கிறார் குரோசாவா.

சார்லஸ்.