[ பெரிதாக்கிப் படிப்பதற்கு சொடுக்கவும் ]

.

முரளி,

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

சென்ற கடிதத்தில், தமிழ் ரசிகர்கள் ஒரு படத்தின் வியாபார வெற்றிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். நீங்கள் சொல்வதுபோல் ‘மரபணு’வில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பழக்கத்தில் தான் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே ஒரு படத்தை இப்படித்தான் எடை போடவேண்டும் என்று சூழல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பள்ளிச் சிறுவர்களின் உரையாடல்களிலேயே ‘ஓடுமா’ ‘சூப்பர் ஹிட்’ ‘ஃப்ளாப்’ ‘ஓடாது’ போன்ற சொற்கள்தான் ஒரு படத்தை எடைபோட பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாகப் பலரும், ஒரு தரமான படம் வந்தால், அதைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு ‘இவ்வளவு நல்ல படம் ஓடவில்லையே’ என்று வருத்தப்படும் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் கூட உங்கள் கடிதத்தில் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நல்ல ரசனை உள்ளவர்கள் கூட, “படம் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சொல்வதில்லை, “நல்ல படம்.. ஆனா ஓடாது..” என்றே துக்க செய்தி சொல்வார்கள். உங்களுக்கு ஒரு படம் பிடித்திருந்தால் அதைத் தயங்காமல் மகிழ்ச்சியோடு வெளியில் நாலுபேருக்குத் தெரியப்படுத்துங்கள். நல்ல ரசனையை அடைவதுதான் ஒரு படத்தின் வெற்றி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எனக்குத் திரைப்படங்களின்மேல் ஆர்வம் ஏற்படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் என் ஒன்றுவிட்ட அண்ணன். எனக்கு 7-9 வயதிருக்கும் போது அவர் வாலிபராக இருந்தார், தீவிர சினிமா ரசிகர், ஏராளமான நல்ல படங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார். அதனாலேயே என் வயதொத்த மற்ற சிறுவர்களை விடவும் என்னுடைய ரசனை மேம்பட்டதாக இருந்தது. அவர் எப்போதுமே படத்தின் வியாபார வெற்றி பற்றி என்னிடம் பேசியதே இல்லை, அவர் ரசித்தது என்ன என்பதைப் பற்றியே அதிகமும் குறிப்பிடுவார். நானும் அதை ஒரு பழக்கமாகக் கற்றுக்கொண்டேன். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவதும் அதைத்தான், குறைந்தபட்சம் நீங்கள் மட்டுமாவது ஒரு படத்தைப் பற்றி ‘ஓடும், ஓடாது’ என்று பேசாமல் ‘பிடிச்சிருக்கு, பிடிக்கல’ என்று மட்டுமே பேச ஆரம்பியுங்கள். முடிந்தால் உங்கள் தம்பி தங்கைகளுக்கும், பிள்ளைகளுக்கும் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.

முந்தைய கடிதத்தில் நான் எடுத்துக்காட்டியது போல, எத்தனையோ மாபெரும் வெற்றிப் படங்கள் காலப்போக்கில் மறக்கப்பட்டுவிட்டன. ஓரளவுக்குத் தரமானவைகள் மட்டுமே மக்களின் நினைவுகளில் நீடிக்கின்றன. தமிழில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே, தரமான படங்கள் அவை வெளியாகும் காலத்தில் கவணிக்கப்படாமல் போவதுண்டு. மிகச் சிறந்த உதாரணம், 1994-யில் வெளிவந்த “ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்” என்ற படம். அது வெளியான காலத்தில் வியாபார நஷ்டம் அடைந்தது மட்டுமல்ல, ஊடகங்களாலும், விமர்சகர்களாலும், விருது அமைப்புகளாலும் கூட புறக்கணிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு அது வீடியோ பதிப்பாக வெளியானபோது ரசனையுள்ளவர்களின் கவணத்தை அது எட்டியது. வாய்மொழியாக அதைப் பற்றிய செய்தி பரவி, 1995-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வீடியோ விற்பனை மற்றும் வாடகையில் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டது. பின்பு இணையத்தின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. CD, DVD வடிவங்களிலும் இணையத் தரவிறக்குதலிலும் மிகப் பெரும்பான்மையான பார்வையாளர்களைச் சென்று சேர்ந்தது, இன்று வரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு புதிய பார்வையாளனைச் சென்று சேர்ந்துகொண்டே இருக்கிறது அந்தப் படம். ஆண்டுதோறும் அதைப் பற்றிப் புது விமர்சனங்களும், கட்டுரைகளும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறன. IMDB எனப்படும் திரைப்படங்களுக்கான இணைய தகவல் தளத்தில், ரசிகர்களின் வாக்குகளை அதிகம் பெற்று, 250 மிகச் சிறந்த உலகப் படங்களின் தரப் பட்டியலில் முதல் இடத்தை அடைந்திருக்கிறது “ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்”

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதன் வியாபார நிலவரம் குறித்துப் பேசுவது இயல்புதான். ஆனால் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏன் அந்தக் கவலை என்பதுதான் புரியவில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை “தமிழகத்தின் முக்கால்வாசி இளைஞர்களின் ரகசியக் கனவு சினிமாதான்” என்று என்னிடம் சொன்னார். அதுதான் அவர்களின் வியாபாரக் கவலையின் காரணமா என்றும் தெரியவில்லை. சிலர் ஒரு புது இடத்துக்குப் போனால் “இங்க கிரவுண்டு என்ன ரேட் போகுது?” என்று விசாரிப்பார்கள், அதன்மூலம் அவரது ரகசியக் கனவை நாம் அறிந்துகொள்ள முடியும். அதுபோலவே கவிதைப் புத்தகங்களை வாசிப்பவர்களில் அனேகமாக அத்தனை பேரும் வெளிப்படையாகவோ ரகசியமாகவோ கவிஞர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் அந்தப் புத்தகத்தின் வியாபார வெற்றியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒருவேளை சினிமா ஒரு பெரும் முதலீடு தேவைப்படும் கலைவடிவம் என்பதால், அதன் படைப்பாற்றல், தொழில்நுட்பம் ஆகியவற்றை விடவும் வியாபாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் இணையம் போன்ற பொதுவெளிகளில் ஒரு படத்தின் தரம் முன்னிலை பெற்று அதன் வியாபாரக் கணக்குகள் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும் என்பதே என் ஆசை. பொதுவாக வெளியில் பேசப்படும் வெற்றி-தோல்வி பற்றிய செய்திகளுக்கும், திரையுலகின் உண்மையான வரவு-செலவுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை என்பதே நான் கண்டது. ஒரு படத்தின் உண்மையான செலவை எந்தத் தயாரிப்பாளரும் வெளியில் சொல்வதில்லை, உண்மையான வசூலை எந்த விநியோகஸ்தரும் வெளியில் சொல்வதில்லை. ஊடகங்களில் நீங்கள் வாசிப்பவை எல்லாமே கலப்பட உண்மைகள்தான். அப்படி உங்களுக்கு நேரடியாகத் தெரியாத, ஊடகங்களால் ‘திணிக்கப்படும்’ கணக்குகளை நம்பி, அதைப் பேசி நேரத்தை வீணாக்குவதை விட, ஒரு படம் நேரடியாக உங்களுக்குக் கொடுத்த ‘அனுபவம்’ பற்றிப் பேசினால், சூழலில் நல்ல ரசனை வளரும் அல்லவா?

சார்லஸ்.