( 6 )

பரபரப்பான புனைவு (1994)

குவெண்டின் டரண்டினோவின் பிரிகொலாஜ்

பின் நவீனத்துவக் கலை வடிவங்களில் “பிரிகொலாஜ்” (Bricolage) எனப்படும் முறையைப் பயன்படுத்துவது உண்டு. சுருக்கமாகச் சொல்வதானால், மிகமிகச் சாதாரணமான பொருட்களைப் பயன்படுத்தி அசாதாரணமான கலைப் படைப்பை உருவாக்குவது “பிரிகொலாஜ்” முறையாகும். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத, பல்வேறு உதிரிப் பொருட்களை, மதிப்பற்ற குப்பைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும், தரமான சிற்பங்களையும் ஓவியங்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். கரண்டிகளையும், சீப்பையும், இரும்புக் கம்பி மற்றும் பிளாஸ்டிக் வாளியையும் பயன்படுத்தி வாசிக்கப்படும் அற்புதமான இசைக்கோர்வையை நீங்கள் கேட்டிருக்கலாம். ஒரு பொது இடத்தையே மேடையாக்கி, இல்லாத பொருட்களைக் கற்பனையால் பயன்படுத்தி, சூழலுக்கேற்ப உருமாறி நிகழ்த்தப்படும் நாடகங்களையும் நீங்கள் கண்டு ரசித்திருக்கலாம். இவையெல்லாமே “பிரிகொலாஜ்” என்ற வகையைச் சார்ந்தவை. இந்தப் பின்நவீனத்துவ கலை வெளிப்பாட்டை திரைப்படங்களில் பயன்படுத்தி மிகப் பெரிய வெற்றிகண்டவர் குவெண்டின் டரண்டினோ.

“கிலிஷே” (Cliche) என்றழைக்கப்படும், முந்தைய படங்களில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி, பழக்கமாகிப் பழதாகிப்போன விஷயங்களை ஒரு நல்ல படைப்பாளி மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்னும் பொதுவான நம்பிக்கையை உடைத்து, முழுக்க முழுக்க கிலிஷேக்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு தரமான படத்தை எடுத்துவிடுவார் டரண்டினோ. தற்காப்புக் கலையை மையமாகக் கொண்ட சீனப் படங்கள், இத்தாலிய மாஃபியா படங்கள், ஜப்பானிய சாமுராய் படங்கள், ஸ்பானிய வெஸ்டர்ன் மற்றும் அமெரிக்க கௌபாய் படங்கள், பிரஞ்சு நியோ ரியலிசம், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குரலைப் பிரதிபலிக்கும் படங்கள், சைக்கோ படங்கள், கேங்ஸ்டர் படங்கள், ரத்தமும் வன்முறையும் நிறைந்த படங்கள், திகில் படங்கள், கல்ட் செவ்வியல்கள், ப்ளாக் காமெடிகள் மற்றும் போர், கொள்ளையடித்தல், சாலைப் பயணம் போன்ற வகைகளைச் சேர்ந்த படங்கள், ஸ்டைலான ஹீரோயிஸப் படங்கள், 70கள் மற்றும் 80களில் வந்த சண்டை-கவர்ச்சி கலந்த மூன்றாந்தரப் படங்கள் போன்ற எத்தனையோ விதவிதமான பிரிவுகளிலிருந்து- கதைச் சூழல்களையும், கதைமாந்தர்களையும், கதைப் பின்னல்களையும் மட்டுமில்லாது கேமராக் கோணங்கள், படச்சட்டங்கள், காட்சி நகர்வுகள், வசனங்கள், படத்தொகுப்பு, பின்னணி இசை என்று எல்லாவற்றிலும் அந்த வகைகளின் வழக்கமான தன்மைகள் சிறப்பாக வெளிப்படும்படி அமைத்து, ஒரு கொலாஜ் போலவும் பிரிகொலாஜ் போலவும் தன் படத்தைக் கட்டமைக்கிறார் டரண்டினோ.

.

டரண்டினோவின் திரைக்கதை

பார்த்துத் தேய்ந்த கிலிஷேக்களை ஒழுங்கமைத்துப் புதிய படைப்பை உருவாக்கும் ஒரு இயக்குனராக மட்டுமல்ல, எப்போதும் ‘எதிர்பாராத தன்மை’யைக் கையாண்டபடியிருக்கும் திரைக்கதையாசிரியராகவும் பின்நவீனத்துவராக விளங்குகிறார் டரண்டினோ. குறிப்பாக அவரது வசனங்கள், திரைப்படத்துக்காக ‘செதுக்கப்பட்டவை’யாக இல்லாமல், தன்னிச்சையாய் வளர்ந்து படரும் காட்டுப் புதர்கள் போல இருக்கின்றன. ஒரு காட்சிச் சூழலின் மையநோக்கத்துக்கும், கதை மாந்தர்கள் ஈடுபட்டிருக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாமல் எங்கோ தாவிச் சென்று சுற்றியலையும் உரையாடல் அமைப்புத்தான் அவரது சிறப்பம்சம். ஆனால் அவை செயற்கையாகவும் தோன்றிவிடாமல், நிஜ உலகின் ‘பேசுபொருட்களை’க் கையாண்டு மிக யதார்த்தமாகவும் எழுதும் திறமையுள்ளவர் டரண்டினோ. “ரிசர்வாய்ர் டாக்ஸ்” (Reservoir Dogs) என்னும் அவரது முதல் படத்தின் முதல் காட்சியில், ஒரு பெரிய கொள்ளைக்குப் புறப்படும் குழுவினர், ஒரு உணவகத்தில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடி பேசும் உரையாடலை, உலகின் எந்த மூலையிலும் இருக்கும் டீக்கடையிலோ உணவகத்திலோ நண்பர்கள் சேர்ந்து பேசிக்கொள்ளும் உரையாடல் போலவே வடிவமைத்துப் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திய டரண்டினோ அதன்பின் வந்த எல்லாப் படங்களிலும், எல்லாக் காட்சிகளிலும் அந்த ஆச்சர்யத்தைத் தக்கவைத்திருக்கிறார். ‘எதிர்பாராத தன்மை’யின் ரசிகர்கள் அவரது படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அவரது பெரும்பாலான திரைக்கதைகள், சீட்டுக்களைக் கலைப்பதுபோல காலத்தைக் கலைத்துப்போட்டவைதான். பொதுவாக நான்லீனியர் நாவல்களைவிட, நான்லீனியர் படங்கள் அதிகக் குழப்பத்தை உண்டாக்கக் கூடியன. ஏனெனில் எழுத்தில் காலஓட்டம் மாறுவதைப் புரியவைப்பது எளிது, ஆனால் காட்சி ஊடகத்தில் காலம் தடம்மாறித் தாவுகிறபோது, இலகுவாக இல்லாமல் பார்வையாளர்களுக்குத் திகைப்பையே உண்டாக்கும். இதற்கு டரண்டினோ ஒரு எளிய வழியை நாவல் வடிவத்திலிருந்தே பெற்று திரைக்கதைக்குள் பயன்படுத்திக்கொண்டார். அவர் பொதுவாகவே தனது படத்தை அத்தியாயங்களாகப் பிரித்துவிடுவார். நாவல்களில் வருவதுபோல அந்த அத்தியாயங்களுக்குத் தலைப்புகளும் கொடுப்பார். ஒரு காட்சித்தொடருக்கும் அடுத்த காட்சித்தொடருக்கும் இடையில், தனியாக உபதலைப்பை மட்டும் திரையில் காட்டிவிட்டு, முந்தய கால ஓட்டத்திலிருந்து தாவி, எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ நடந்த ஒரு சம்பவத்திலிருந்து புதிதாக ஆரம்பிப்பார்.

பல்ப் ஃபிக்ஷன்

இன்று “டரண்டினோ பாணி” என்று உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் தனித்துவமான படங்களை உருவாக்கி, திரைக்கலையை வளர்த்த மேதைகளின் வரிசையில் தனக்கும் ஒரு இடம் பிடித்து, என்னையும் சேர்த்து பெரும்பாலான இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார் குவெண்டின் டரண்டினோ. அவரது ஆகச் சிறந்த படைப்பு என்று பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல்ப் ஃபிக்ஷன் (Pulp Fiction) (1994) “புதிய காலத்தின் செவ்வியல்” படமாகவும் கருதப்படுகிறது. பல்ப் என்னும் ஒருவகையான மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மலிவான காகிதத்தில் அச்சிட்டு வெளியாகும் மூன்றாந்தர நாவல்களைக் குறிக்கும் சொல்லே ‘பல்ப் ஃபிக்ஷன்’. நம்மூர் பாக்கெட் நாவல் போன்ற இந்த வகை நாவல்களில், கதையை விறுவிறுப்பாக நகர்த்திச்செல்வதும், எதையும் ‘பரபரப்பாக’ ‘அதீதமாக’ ஆக்குவதுமே பொதுத்தன்மையாக இருக்கும். அந்த நாவல்களின் தன்மையையும் வடிவத்தையும் பின்நவீனத்துவ இலக்கியவாதிகள் எடுத்தாள்வது உண்டு. அதையே பின்பற்றுகிறார் குவெண்டின் டரண்டினோ. இந்த ஒரு படத்தில் மட்டுமல்ல, இதுவரை எழுதிய எல்லா திரைக்கதைகளையும் அப்படியே அமைத்திருக்கிறார். அவர் திரைக்கதை மட்டும் எழுதி, ஆலிவர் ஸ்டோன் இயக்கிய “நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ்” இந்த வகைக்கு மிகச் சிறந்த உதாரணம்.

தலைப்புக்கு முன்னால்

பல்ப் ஃபிக்ஷன் திரைப்படத்தின் ஆரம்பத்தில், டைட்டில் போடுவதற்கு முன்னால், ஒரு உணவகத்தில் காபி குடித்தபடி ஒரு இளம் கணவனும் மனைவியும் உரையாடுவது காட்டப்படுகிறது. அவர்களது உரையாடலின் மூலம், திருடுவதும் சிறுஅளவில் கொள்ளையடிப்பதும்தான் அவர்களது தொழில் என்பது தெரியவருகிறது. கணவன், “சிறிய அரசு வங்கிகளில் கொள்ளையடிப்பது மிக எளிது, அவை காப்பீடு செய்யப்பட்டவை என்பதால், அவர்களுக்கு எந்த இழப்புமில்லை, கொள்ளை நடந்து முடியும்வரை யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மோடு மோதப்போவதுமில்லை” என்கிறான். மனைவி, “வழக்கமாகக் கொள்ளையடிக்கும் மதுக்கடைகள், மது விடுதிகளுக்கு இனிச் செல்லப்போவதில்லையா?” என்று கேட்க, அவற்றை சீனர்களும் கொரியர்களுமே பெரும்பாலும் நடத்துவதால் மொழிப் பிரச்சனை குறுக்கிடுகிறது, அதோடு நம்மை எதிர்பார்த்துத் துப்பாக்கியோடு காத்திருப்பவர்களும் இருக்கிறார்கள், பணத்தை இழந்துவிடாமலிருக்க இறுதிவரைப் போராடுவார்கள், எப்போதும் உயிருக்கு ஆபத்திருக்கிறது என்கிறான் கணவன். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு தற்செயலாக ஒரு புதிய யோசனை தோன்றுகிறது, ஏன் இந்த உணவகத்தில் கொள்ளையடிக்கக் கூடாது என்று கேட்கிறான். இங்கு யாருமே ஒரு கொள்ளையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், இதுவும் காப்பீடு செய்யப்பட்டதென்பதால் அவர்களுக்கு இழப்பும் இல்லை, ஹீரோவாக முயற்சித்து யாரும் எதிர்த்துப் போரிடவும் மாட்டார்கள், வாடிக்கையாளர்களின் பர்ஸ்களைப் பறித்தாலே பெரும் பணம் சேரும் என்கிறான். இருவரும் அப்போதே முடிவெடுத்து, தங்கள் கைத்துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு, ஒருவரையொருவர் முத்தமிட்டுவிட்டு எழுகிறார்கள். கெட்ட வார்த்தைகளைச் சொல்லிக் கத்தியபடி இந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக எல்லாருக்கும் அறிவிக்கிறார்கள்.

டைட்டில் போடப்படுகிறது. எழுத்துக்கள் 70-80களில் வந்த மூன்றாந்தர திரைப்படங்களை நினைவூட்டுகின்றன, பின்னணி இசை மிகுந்த பரபரப்பாகவும் துள்ளலோடும் இருக்கிறது.

தலைப்புக்குப் பின்னால்

வின்செண்ட், ஜூல்ஸ் என்னும் இரு ஆண்கள் காரில் பயணித்தபடியே உரையாடுகிறார்கள். வின்செண்ட் சிலவருடங்கள் ஐரோப்பாவில் இருந்துவிட்டு திரும்பியிருக்கிறான், அங்குள்ள பழக்கவழக்கங்கள், உணவு குடி போதைப் பொருள் என்று எல்லாவற்றையும் பற்றி ஜூல்ஸிடம் சொல்லியபடி வருகிறான். ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, கைத்துப்பாக்கிகளை எடுத்து இடுப்பில் சொருகியபடியே, “நாம் செய்ய வந்திருக்கும் கொலைகளுக்கு இந்தத் துப்பாக்கிகள் போதாது” என்கிறான் ஜூல்ஸ். அவர்கள், தலைமறைவாயிருக்கும் 4-5 பேரைக் கொல்லப்போகிறார்கள் என்பதும், அந்தக் குழுவில் இவர்களுடைய ஆள் ஒருவனும் கலந்திருக்கிறான் என்பதும் தெரியவருகிறது. அவர்கள் ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து லிஃப்டில் ஏறிச் செல்கிறார்கள். இப்போது பேச்சு, அவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்களோ அந்த மார்செலஸ் வாலஸ் எனும் தாதாவின் இளம் மனைவி மியா பற்றி திரும்புகிறது. வின்செண்ட் சிலவருடங்கள் கழித்து வந்திருப்பதால் வாலஸ்ஸின் புது மனைவி பற்றி அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அவள் ஒரு நடிகை என்றும் தொலைக்காட்சித் தொடருக்கு முன்னோட்டமாக எடுக்கப்படும் ஒரு பைலட் எபிசோடில் மட்டும் அவள் நடித்திருக்கிறாள் என்றும் ஜூல்ஸ் சொல்கிறான். மேலும் அவன், மார்செலஸ் வாலஸ் தன் கூட்டத்திலிருந்த ஒருவன் மியாவின் பாதங்களுக்கு மசாஜ் செய்தான் என்பதற்காகவே அவனைக் கொன்றுவிட்டான் என்கிறான். பாதங்களை மசாஜ் செய்வது அவ்வளவு பெரிய துரோகமா என்று இருவரும் விவாதித்தபடியே, குறிப்பிட்ட ஃபிளாட்டின் வாசலுக்கு வந்துவிடுகிறார்கள். ஜூல்ஸ், “நீ ஏன் மியா பற்றி இத்தனை அக்கறையாக விசாரிக்கிறாய்?” என்று கேட்க, வின்செண்ட், மார்செலஸ் வாலஸ் சில நாட்கள் வெளியூர் செல்வதால் அந்தச் சமயத்தில் அவரது மனைவிக்கு தான் கம்பெனிகொடுக்க வேண்டுமென்று வாலஸ் பணித்திருப்பதாகச் சொல்கிறான்.

அப்போது ஃப்ளாட்டின் கதவு திறக்கிறது. திறந்தவன் ஒரு கறுப்பின இளைஞன், அவன்தான் உளவு சொன்ன அவர்களது ஆள். உள்ளே இரு வெள்ளை இளைஞர்கள் இருக்கிறார்கள், வந்திருக்கும் இருவரையும் பார்த்துத் திகைக்கிறார்கள். அந்தக் காலையிலேயே பளிச்சென்று தயாராகி, காலையுணவோடு இருக்கும் ஒரு இளைஞன், படித்தவனாகவும் புத்திசாலியாகவும் காணப்படுகிறான், அவன்தான் அந்த குழுவுக்குத் தலைவன் என்பது தெரிகிறது. இன்னொருவன் சோபாவில் படுத்திருக்கிறான், இவர்களைப் பார்த்ததும் எழமுயல, ஜூல்ஸ் தண்மையாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் “சிரமப்படாதே, படுத்துக்கொள்” என்கிறான். “உங்களது வியாபாரத்தின் பங்குதாரரான மார்சலஸ் வாலஸின் உதவியாளர்கள் நாங்கள்” என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஜூல்ஸ், குழுத் தலைவனான இளைஞனிடமிருந்து பர்கரும் குளிர்பானமும் வாங்கி உண்கிறான், பிறகு படுத்திருக்கும் இளைஞனிடம் “நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்று தெரிந்திருக்கும், ‘அதை’ எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்கிறான். கறுப்பின இளைஞன் இடையில் குறுக்கிட்டு சொல்ல முயற்சிக்க, ஜூல்ஸ் திடீரென்று பெருங்குரலெடுத்து கத்தி, “உன்னிடம் கேட்கவில்லை” என்று அவனை அதட்டுகிறான். மூன்று இளைஞர்களுமே திகைத்துப்போகிறார்கள். படுத்திருப்பவன் எங்கிருக்கிறதென்று சொல்ல, வின்செண்ட் தேடி, அந்த பிரீஃப்கேஸை கண்டடைந்து, திறக்கிறான். பெட்டிக்குள் இருப்பது பார்வையாளர்களுக்குக் காட்டப்படவில்லை, ஒரு ஆரஞ்சு ஒளி வின்செண்டின் முகத்தில் பிரதிபலிக்க அவன் அந்தக் காட்சியில் உறைந்து தன்னை மறக்கிறான். ஜூல்ஸ் பலமுறை அழைத்த பிறகே, வின்செண்ட் சுதாரித்து, நாம் தேடிவந்த பொருள் இருக்கிறது என்கிறான்.

இளைஞர் குழுத்தலைவன், நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தாங்கள் வேண்டுமென்றே வாலஸை ஏமாற்ற நினைக்கவில்லை என்று பேசத்தொடங்க, ஜூல்ஸ் எதிர்பாராத ஒரு கணத்தில் தன் துப்பாக்கியை எடுத்துப் படுத்திருக்கும் இளைஞனைச் சுட்டுக் கொல்கிறான். குழுத்தலைவன் அதிர்ச்சியில் பேச்சற்றுப்போகிறான். அதலிருந்து தொடர்ந்து ஜூல்ஸ் பேசும் வசனங்கள் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த சாமுவேல் எல். ஜாக்ஸனை உலகம் முழுதும் அறியப்பட்ட நட்சத்திரமாக மாற்றியது. தாதா மார்செல்லஸ் வாலஸ்-ஐ அவர்கள் ஏமாற்ற நினைத்தது மாபெரும் தவறு என்று ஜூல்ஸ் அவனுக்குப் புரியவைக்கிறான். இறுதியில் தான் பைபிளிலிருந்து மனப்பாடம் செய்த ஒரு பகுதியை அவனுக்குச் சொல்கிறான், எசேக்கியேல் 25:17 வசனங்கள் என அவன் குறிப்பிட்டுச் சொல்வதில், கடைசி இரு வரிகள் மட்டுமே பைபிளில் உள்ளது, மற்றவை அவனது நினைவில் அப்படிப் பதிந்திருப்பது மட்டுமே. “..வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி, என் சீற்றத்தால் அவர்களைத் தண்டிப்பேன். அவ்வாறு அவர்களைப் பழிவாங்குகையில், நானே ஆண்டவர் என அவர்கள் அறிந்துகொள்வர்.” என்று சொல்லிவிட்டு, ஜூல்ஸ் சரமாரியாக அந்த இளைஞனைச் சுட ஆரம்பிக்கிறான், வின்செண்டும் இணைந்து சுடுகிறான்.

வின்செண்ட் வெகா & மார்செல்லஸ் வால்லஸ்-யின் மனைவி

குத்துச்சண்டை வீரன் புட்ச், தாதா மார்செல்லஸ் வால்லஸ்ஸின் எதிரில் உட்கார்ந்திருக்கிறான். வயதாக ஆரம்பித்துவிட்டதால் குத்துச் சண்டையில் பெரிய எதிர்காலமில்லாமல் அதன் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் புட்சை, தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு எதிர்வரும் போட்டியில் தோற்றுவிடும்படிக் கூறிக்கொண்டிருக்கிறான் தாதா. சூதாட்டத்திலும் மேட்ச் ஃபிக்ஸிங்கிலும் ஈடுபடும் தாதா, புட்ச்-யிடம் ‘தற்பெருமை’ நமக்குத் துன்பத்தைத்தான் கொடுக்கும், இப்போது உனக்குத் திறன் இருக்கலாம் ஆனால் சில வருடங்களில் ஒரு மூலைக்குப் போய்விடுவாய். இனி எந்தக் காலத்திலும் உன்னால் சம்பாதிக்கமுடியாத பணத்தை நான் தருகிறேன், கர்வத்தைத் துடைத்தழித்துவிட்டு ஐந்தாவது சுற்றில் நீ தோற்று விழுந்துவிட வேண்டும் என்கிறான். புட்ச், வாலஸ்ஸிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறான்.

அப்போது வின்செண்டும் ஜூல்சும் அந்த பிரீஃப்கேஸ்-உடன் அங்கு வருகிறார்கள். ஆனால் இப்போது அவர்கள், முந்தின காட்சியில் அணிந்திருந்த கோட்-சூட்டில் இல்லை, கடற்கரையில் உலவும் சுற்றுலாப் பயணிகள் போல உடுத்தியிருக்கிறார்கள், நடுவில் என்ன நடந்தது என்பது இப்போதைக்குப் பார்வையாளருக்குக் காட்டப்படவில்லை. வால்லஸ் புட்சுடன் பேசிக்கொண்டிருப்பதால், அவர்கள் இருவரும் மதுபான பார்லரில் காத்திருக்கிறார்கள். வின்செண்ட் வேகாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் புதிய வேலையான வால்லஸின் மனைவி மியா-வை இரவுணவுக்கு வெளியே அழைத்துச் செல்வது பற்றி ஜூல்ஸ்சும் பாரில் இருப்பவனும் கிண்டலடிக்கிறார்கள். மியாவுக்குப் பாத மசாஜ் செய்ததற்காக நடந்த கொலையைப் பற்றி நினைத்து வின்செண்ட் பதட்டம் கொள்கிறான். அப்போது புட்ச், பாருக்கு வந்து சிகரெட் பாக்கெட் வாங்குகிறான். ஏனோ முதல் பார்வையிலேயே வின்செண்டுக்குப் புட்சைப் பிடிக்கவில்லை, முன்னறிமுகம் இல்லாத புட்சை வின்செண்ட் மிகக் கீழ்த்தரமாகத் தாக்கிப் பேசிவிட்டு செல்கிறான். புட்ச், அவன் ஏன் தன்னிடம் அப்படி நடந்துகொண்டான் என்று புரியாமல் கோபத்துடன் பார்த்தபடி நிற்கிறான்.

வின்செண்ட் அன்று மாலை, போதைப்பொருள் விற்பவனான லேன்ஸ் என்பவனின் இடத்துக்குச் செல்கிறான். அங்கு மிக விலையுயர்ந்த புதுவரவான ஹெராயின் போதைப்பொருளை வாங்கி, கொஞ்சத்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்கிறான். மிகுந்த போதையோடு மியாவின் வீட்டுக்குச் செல்கிறான். அவளுக்கும் போதைப் பழக்கமிருக்கிறது, அவள் அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் கொக்கேன் பொடியை மூக்கில் உறிஞ்சிக்கொள்கிறாள். பிறகு இருவரும், “ஜேக்ராபிட் ஸ்லிம்ஸ்” என்னும் பிரத்யேக உணவகத்துக்குச் செல்கிறார்கள், அங்கு ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களையும் கதாபாத்திரங்களையும் போல வேடமிட்ட ஆட்கள் பணியாளர்களாக இருப்பதை ஆச்சர்யமாகப் பார்க்கிறான் வின்செண்ட். மியா ஒரு கனவுலகத்தில் வாழ்பவள்போல் காட்சியளிக்கிறாள். தொலைக்காட்சியில் ஒரு எபிசோட் அளவிலேயே முடிந்துபோன அவளுடைய நடிப்பு வாழ்க்கையைப் பற்றி ஏக்கத்தோடு பேசுகிறாள். தான் ஆர்டர் செய்த மில்க் ஷேக்கை, அதிலென்ன விஷேசம் என்று தெரிந்துகொள்வதற்காக வின்செண்ட் ருசிபார்க்கக் கேட்கும்போது, அவள் கொடுப்பது மட்டுமல்ல, தனது ஸ்ட்ராவையே பயன்படுத்தச் சொல்லிவிட்டு, அதிலேயே தானும் குடிக்கிறாள். பிறகு இருவரும் பேசாமல் சில நொடிகள் மௌனமாக இருப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, “ஒருவேளை மனமொத்த ஜோடியாக இருந்தால், அசௌகரியமாக உணராமல் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியுமோ என்னவோ” என்கிறாள். அவளது பேச்சில் அவள் மார்செல்ல்ஸோடு விரும்பி வாழவில்லையோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது. அவள் மீண்டும் கழிப்பறைக்குச் சென்று கொக்கேனை மூக்கில் உறிஞ்சிவிட்டு வருகிறாள். வின்செண்ட் அவளிடம், அவளது பாதத்துக்கு மசாஜ் செய்த ஆளை, மார்செல்லஸ், நாலாவது மாடியிலிருந்து கீழே தள்ளியதைப் பற்றிக் கேட்கிறான். அவள், “அதை நீ நம்புகிறாயா? மார்செல்லஸ் ஏன் அவனைத் தள்ளினான் என்பது அவர்கள் இருவரைத் தவிற யாருக்கும் தெரியாது” என்கிறாள். அப்போது அந்த உணவகத்தின் நடனப் போட்டிக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. மியா வின்செண்டைக் கட்டாயப்படுத்தி ஆட அழைக்கிறாள், இருவரும் ஜோடியாக ஆடுகிறார்கள்.

இருவரும் மியாவின் வீட்டுக்குத் திரும்ப வரும்போது, ஆட்டத்தில் வென்றதற்கு அடையாளமாக வெற்றிக்கோப்பை அவர்களிடம் இருக்கிறது, முன்னைவிடவும் நெருக்கமாகக் காணப்படுகிறார்கள், மியாவால் அவனை இப்போது ஒன்றும் பேசாமல் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது. அவள் அவனைக் குடிப்பதற்கு அழைக்கிறாள், இசையைப் போட்டுவிட்டு ஆட ஆரம்பிக்கிறாள். வின்செண்ட் எச்சரிக்கை உணர்வோடு கழிப்பறைக்குச் செல்கிறான், தனக்குத்தானே “இங்கிருந்து சீக்கிரம் புறப்பட்டுவிடு, முதலாளிக்கு துரோகம் செய்துவிடாதே” என்று சொல்லிக்கொள்கிறான். இதற்கிடையில், மியா, வின்செண்ட்டின் கோட் பாக்கெட்டில் இருக்கும் சக்திவாய்ந்த ஹெராயின் பொட்டலத்தைப் பார்த்துவிடுகிறாள். அதைக் கொக்கேன் என்று நினைத்து மூக்கில் உறிஞ்சிவிடுகிறாள். மூக்கிலும் வாயிலும், ரத்தமும் நுரையும் தள்ள மயங்கிச் சரிகிறாள்.

அதன்பின்னான பரபரப்பான காட்சித்தொடரில், வின்செண்ட் அவளைத் தூக்கிக்கொண்டு, தனக்கு போதைப்பொருள் விற்ற லேன்சின் இடத்துக்குச் செல்கிறான். அவள் உயிர் பிழைப்பது சிரமம் என்றே லேன்ஸ் சொல்கிறான். மருந்துள்ள ஊசியை நேரே நெஞ்சில் குத்தி, அவசரகாலத்தில் செய்யப்படும் சிகிச்சையை செய்கிறார்கள். மியா உயிர் பிழைக்கிறாள். அவளை வீட்டில் கொண்டுவிடும்போது, வின்செண்ட், நடந்ததெல்லாம் மார்செல்லஸ் வாலசுக்குத் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். அவள், இந்த விஷயம் தெரிந்தால் மார்செல்லஸ் முதலில் அவளைத்தான் தண்டிப்பான், ஆகவே இது நமக்குள்ளேயே இருக்கட்டும் என்கிறாள். நல்ல நண்பர்களாகக் கைகுலுக்கிப் பிரிகிறார்கள் இருவரும்.

.

தங்கக் கடிகாரம்

புட்ச் சிறுவனாக இருக்கும்போது அவனைப் பார்ப்பதற்காக இராணுவக் கேப்டன் ஒருவர் வருகிறார். வியட்நாம் சிறையில் இறந்துபோன அவனது அப்பாவின் நண்பர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒரு தங்கக் கடிகாரத்தை அவனுக்குக் காட்டுகிறார். அது புட்ச்சின் தாத்தாவின் தந்தைக்குச் சொந்தமானது என்றும், முதலாம் உலகப்போரில் அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது கையில் கட்டியிருந்தது என்றும் சொல்கிறார். அதை அவர் தனது மகன், அதாவது புட்ச்யின் தாத்தா, இரண்டாம் உலகப்போருக்குச் சென்றபோது கொடுத்தனுப்பினார். போர்க்களத்தில் குண்டடிபட்டு மரணப் படுக்கையில் கிடந்தபோது, புட்ச்யின் தாத்தா அந்தத் தங்கக் கடிகாரத்தைத் தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு விமானியிடம் கொடுத்து, தனக்குப் புதிதாய்ப் பிறந்திருக்கும் – முகம் கூடப் பார்த்திராத மகனிடம் எப்படியாவது ஒப்படைக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அந்த நபரும் புட்ச்யின் தந்தையைத் தேடிக் கண்டடைந்து கடிகாரத்தை ஒப்படைத்தார். வியட்நாம் போருக்கு புட்சின் தந்தை போனபோது, இந்தக் கடிகாரத்தைக் கட்டியிருந்தார். போரில் தோற்று சிறைப்பிடிக்கப்பட்ட அவர், தன் கடிகாரம் எதிரிகளின் கையில் கிடைப்பதை விரும்பவில்லை, ஏனென்றால் அந்தக் கடிகாரம் தன் மகனின் ‘பிறப்புரிமை’ என்று அவர் நினைத்தார். ஆகவே அதை ஒளித்துவைப்பதற்கு இருந்த ஓரே இடமான தனது ஆசன வாயில் ஐந்து ஆண்டுகள் வைத்திருந்தார். பிறகு அவர் வயிற்றுக் கோளாரால் நோய்வாய்ப்பட்டு இறப்பதற்கு முன் அதைக் கேப்டனிடம் கொடுத்து, எப்படியாவது தன் மகனிடம் கொண்டு சேர்க்கும்படிக் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு அந்தக் கேப்டன் இரண்டு ஆண்டுகள் அந்தக் கடிகாரத்தைத் தனது ஆசன வாயில் ஒளித்துவைத்திருந்தார். விடுதலையாகித் தான் தனது குடும்பத்தைக் காணச் செல்வதற்கு முன்னால் அந்தத் தங்கக் கடிகாரத்தை புட்ச்சிடம் ஒப்படைக்கும் கடமையை நிறைவேற்றவே வந்திருப்பதாகச் சொல்கிறார். சிறுவன் புட்ச் அந்தத் தங்கக் கடிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறான்.

குத்துச் சண்டை வீரர்களுக்கான ஓய்வறையில், நிகழ்கால புட்ச் ஒரு கொடுங்கனவிலிருந்து விழிப்பவனைப் போல எழுகிறான். முந்தைய காட்சி முழுவதுமே, அவன் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி மீண்டும் கனவாக வந்ததுபோல் இருக்கிறது. போட்டியின் அமைப்பாளர்கள் வந்து அவனது சண்டை ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லி அழைக்கிறார்கள். தாதா அவனுக்குப் பணம் கொடுத்துப் போட்டியில் தோற்றுவிடும்படிக் கட்டாயப்படுத்தியிருக்கும் நிலையில், புட்ச் வெறியோடு உறுமியபடி குத்துச் சண்டைக்குச் செல்கிறான்.

கருமை மட்டுமே படர்ந்த திரையில், அந்தப் போட்டியின் நேரடி வானொலி ஒலிபரப்பை நாம் கேட்கிறோம், புட்ச் அடித்த அடியில் எதிராளி செத்துப்போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது என்று வர்ணனையாளர் சொல்கிறார். ஒரு டாக்ஸியின் பெண் ஓட்டுனர் அந்த வானொலி வர்ணனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த டாக்ஸி போட்டி மைதானத்துக்குப் பின்புறம் நிற்கிறது. புட்ச் தப்பித்து வெளியே வர, அந்தப் பெண் வானொலியை அணைக்கிறாள். புட்ச்சை அவள் தன் டாக்ஸியில் ஏற்றிச்செல்கிறாள். அதேஇரவில் மார்செல்லஸ் வாலஸ் தன் ஆட்களிடம் (ஜூல்ஸ் இப்போது அங்கு இல்லை), புட்ச் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிக்கண்டுபிடிக்கும்படி ஆணையிடுகிறான். மறுபுறம் புட்ச், டாக்ஸியில் இருந்தபடியே குத்துச் சண்டைக்கான உடையிலிருந்து மாறுகிறான், பெண் டாக்ஸி டிரைவர் அசாதாரனமான ஆர்வத்தோடு, “கொலை செய்யும்போது எப்படி உணர்ந்தாய்?” என்று மீண்டும் மீண்டும் கேட்கிறாள். புட்ச், “எதிராளி செத்தே போனான் என்பது நீ சொல்லித்தான் எனக்குத் தெரியும், ஆனால் இப்போதும் எந்தக் குற்றவுணர்வும் எழவில்லை” என்கிறான். பிறகு அவன் போன் பூத்துக்குச் சென்று நண்பனுடன் தொலைபேசி, பந்தயம் கட்டி வென்ற பணத்தை எடுத்துவிட்டானா என்று விசாரிக்கிறான், மறுநாள் காலையில் தானும் காதலியும் புறப்பட்டுத் திட்டமிட்ட ஊருக்குச் சென்றுவிடப்போவதாகச் சொல்கிறான்.

புறநகரில் இருக்கும் சாலையோரத் தங்கும் விடுதிக்கு வந்து சேரும் புட்ச், அங்கு ஏற்கனவே, அவசியமான பொருட்களை எல்லாம் எடுத்துவந்து தங்கியிருக்கும் தன் காதலியிடம், திட்டமிட்டபடியே தான் வென்றுவிட்டதாகவும், இனி குத்துச் சண்டையிலிருந்து நிரந்தர ஓய்வு பெறுவதாகவும் சொல்கிறான். காதலி, சிறுபெண்ணாகவும் வெகுளியாகவும் இருக்கிறாள், அவனை ஆபத்து சூழ்ந்திருக்கும் நிலையில் தன்னையும் உடன் அழைத்துச் செல்வது வீண் சுமையா என்று தயக்கத்தோடு கேட்கிறாள், அவன் மறுக்கிறான். இருவருக்குள்ளும் பேரன்பும் பெருங்காதலும் கொப்பளிக்கிறது.

மறுநாள் காலையில், புட்ச் தன் பெட்டியைத் திறக்கும்போதே அதில் தன் தந்தையின் தங்கக் கடிகாரம் இல்லை என்பதை அறிகிறான், காதலியிடம் “குறிப்பாக அதை எடுத்துவரும்படிச் சொன்னேனே, எங்கே?” என்று கேட்கிறான். அவள் மறந்துவிட்டதற்காகக் கடும் கோபம் கொள்கிறான், ஆனால் அந்தக் கோபத்தை அவளிடம் காட்டாமல் பொருட்களைப் போட்டு உடைக்கிறான். பிறகு அவனே சமாதானமாகி, ‘அந்தக் கடிகாரம் தனக்கு எத்தனை முக்கியமானது என்பதை அவளிடம் சொல்லாமல்விட்டது தனது தவறுதான்’ என்று சொல்லிக்கொள்கிறான். அந்தக் கடிகாரத்தை எடுத்து வருவதற்காகத் தான் மீண்டும் வீட்டுக்குச் செல்லவேண்டும் என்கிறான். அவனைத் தேடி அடியாட்கள் அங்கே வருவார்களே என்று காதலி பயப்பட, அவன் தன்னால் தந்தையின் தங்கக் கடிகாரத்தை இழக்க முடியாது என்று சொல்லிப் புறப்படுகிறான்.

காதலியின் காரை எடுத்துவரும் புட்ச், வீட்டிற்கு வெகு தூரத்திலேயே நிறுத்திவிட்டு, சாலை விழியில் நடக்காமல் மற்ற வீட்டு வளாகங்களுக்குள்ளும் சந்துகளிலும் புகுந்து தன் வீட்டுக்கு எதிரே சாலையின் மறுபுறம் வந்து, ஒளிந்து நின்று, யாராவது தன் வீட்டைக் கண்கானிக்கிறார்களா என்று பார்க்கிறான். பிறகு தன் வீட்டைத் திறந்து உள்நுழைகிறான். தந்தையின் தங்கக் கடிகாரத்தை எடுக்கிறான், யாரும் அங்கு வரவில்லை என்று உறுதிசெய்துகொண்டு அமைதியடைக்கிறான். காலை உண்ணவில்லை என்பதால் பசிக்கிறது, சமையலறையில் நுழைந்து, பிரட் டோஸ்ட் செய்வதற்காகப் போட்டுவிட்டு திரும்புபவன், அங்கு ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். யாரோ அதை அங்கே வைத்துவிட்டுக் கழிவறைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதைக் கையில் எடுக்கிறான். கழிவறையிலிருந்து வின்செண்ட் வேகா வெளியே வருகிறான், கையில் துப்பாக்கியோடு புட்ச் நிற்க, அவன் உறைகிறான். அப்போது டோஸ்டர் ‘டப்’ என்ற ஒலியோடு பிரட்களைத் துப்ப, அனிச்சையாக புட்ச் சரமாறியாகச் சுடுகிறான். வின்செண்ட் கண நேரத்துக்குள் செத்துப்போகிறான்.

புட்ச் காரில் திரும்பிவரும் வழியில் ஒரு சாலை சந்திப்பில், போக்குவரத்தின் சிகப்பு விளக்கினால் நிறுத்தப்படுகிறான். அப்போது தற்செயலாகச் சாலையைக் கடக்கும் மார்செல்லஸ் வாலஸ் அவனைப் பார்த்துவிடுகிறான். புட்ச் காரைக் கிளப்பி, மார்செல்லஸ்-ஐ மோதித் தள்ளிவிட்டுச் செல்ல, குறுக்குச் சாலையில் வரும் மற்றொரு கார் இந்தக் காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. பெருத்த அடியோடு மயக்கத்திலிருந்து விழிக்கும் மார்செல்லஸ், சாலையின் மறுபுறத்தில் கார் விபத்தில் பலமாக அடிபட்ட புட்ச்-ஐப் பார்க்கிறான், துப்பாக்கியை எடுத்துச் சுட ஆரம்பிக்கிறான். புட்ச் நொண்டியபடியே சந்துகளுக்குள் நுழைந்து ஓட, மார்செல்லஸ் தள்ளாடியபடியே துரத்திவருகிறான். ஆளரவமற்ற தெருவிலிருக்கும் ஒரு அடகுக் கடைக்குள் புட்ச் நுழைகிறான். மார்செல்லஸ்-உம் உள்ளே வர, புட்ச் அவனைத் தாக்கிக் கீழே தள்ளி, தனது பலம் வாய்ந்த குத்துச்சண்டையிடும் கையால் மாறிமாறிக் குத்துகிறான். மார்செல்லஸ்க்கு அந்தச் சிறுமையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, “இதற்கு நீ என்னைக் கொன்றுவிடலாம்” என்கிறான். புட்ச், மார்செல்லஸ்-யின் துப்பாக்கியை எடுத்து அவனைச் சுடத் தயாராக, எதிர்பாராத திருப்பமாக, அடகுக் கடைக்காரன் நீளத் துப்பாக்கி ஒன்றை நீட்டி அவர்கள் இருவரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறான். புட்ச்-யின் பின்மண்டையில் துப்பாக்கியால் அடித்து அவனை மயக்கமுற வைத்துவிட்டு, கடைக்காரன், ‘ஸெட்’ என்பவனுக்குப் போன் செய்து, “இங்கே சிலந்தி வலையில் இரு பூச்சிகள் சிக்கியிருக்கின்றன” என்கிறான்.

அடகுக் கடைக்காரனும் ஸெட் என்பவனும், தொடர் வன்புணர்ச்சிகளையும் கொலைகளையும் செய்யும் இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தெரியவருகிறது, அடகுக் கடைக்குக் கீழே இருக்கும் ரகசியத் தளத்தில் புட்ச்சையும் மார்செல்லஸ்-ஐயும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே இன்னொரு ஆளும் தலைமுதல் கால்வரை தோலாடை உடுத்தப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு வாழ்ந்து வருகிறான். ஸெட் “இங்கி பிங்கி பாங்கி” சொல்லி, மார்செல்லஸ் புட்ச் ஆகிய இருவரில் மார்செல்லஸ்-ஐ முதலில் வன்புணர்ச்சி செய்வதென்று முடிவெடுக்கிறான். ஸெட்டும் கடைக்காரனும் மார்சல்லஸ்-ஐ அடுத்த அறைக்கு அழைத்துச் சென்ற பிறகு, புட்ச் தன் புஜங்களின் வலிமையைப் பயன்படுத்தி கட்டுக்களை அவிழ்த்துத் தப்பிக்கிறான். மேல் தளத்துக்கு வந்து கதவைத் திறந்து வெளியேற நினைப்பவனின் காதுகளில், வேதனையில் அலறும் மார்செல்லஸ்-யின் குரல் கேட்டபடியே இருக்கிறது. புட்ச் நினைத்தால் மிக எளிதாகத் தப்பிப்போய்விட முடியும். ஆனால் அவன் மீண்டும் உள்ளே திரும்புகிறான், அடகுக் கடையிலிருக்கும் ஏராளமான பொருள்களிலிருந்து ஆயுதங்களைத் தேடி, ஒரு ஜப்பானிய வாளைத் தேர்ந்தெடுக்கிறான்.

புட்ச் கீழ்த் தளத்துக்குச் சென்று, வாளால் கடைக்காரனைக் கொல்கிறான். மார்செல்லஸ்-ஐ வன்புணர்ச்சி செய்துகொண்டிருக்கும் ஸெட் பயந்து விலகுகிறான். மார்செல்லஸ் எழுந்து, கடைக்காரனின் நீளத் துப்பாக்கியால் ஸெட்-யின் குறியிலேயே சுடுகிறான். மிகுந்த அவமானத்தோடும் சினத்தோடுமிருக்கும் மார்செல்லஸ், புட்ச்-ஐ தப்பிப்போக அனுமதிக்கிறான். அடகுக் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் ஸெட்-யின் விஷேச வடிவமைப்புள்ள மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, புட்ச் தன் காதலி இருக்கும் சாலையோர விடுதிக்கு வருகிறான். நெடுநேரம் அவன் வராததால் கலங்கிப்போயிருக்கும் அவளை, சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு, ஊரைவிட்டுப் புறப்படுகிறான் புட்ச்.

[திரைக்கதையின் தொடர்ச்சியும், படத்தைப் பற்றிய

எனது பார்வையும் அடுத்த பதிவில்] தொடரும்