( 6 )

பரபரப்பான புனைவு (1994)

பாகம்-2

[முந்தைய பதிவின் தொடர்ச்சி இது, அதைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.]

.

இக்கட்டான சூழ்நிலை

பின்னணியில் ஜூல்ஸ்-யின் குரல் கேட்கிறது, ஒரு கழிப்பறைக்குள் துப்பாக்கியோடு பதுங்கியிருக்கும் இளைஞனிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. அவன் “கடவுளே தயவுசெய்யும், நான் சாக விரும்பவில்லை” என்று பிராத்திக்கிறான். வெளியே ஜூல்ஸ், மார்செல்லஸ் வாலஸ்-ஐ ஏமாற்றிய இளைஞர் குழுத் தலைவனிடம் பைபிள் வசனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஏற்கனவே நடந்த சம்பவத்தின் (“தலைப்புக்குப் பின்னால்” பகுதி) தொடர்ச்சிதான் அந்தக் காட்சி என்பது தெரியவருகிறது. பைபிள் வசனத்தைச் சொல்லி முடித்ததும் ஜூல்சும் வின்செண்டும், குழுவின் தலைவனைச் சுட்டுக் கொல்கிறார்கள். அவர்களுடைய ஆளான கறுப்பின இளைஞன், நடுங்கி அரற்றியபடி இருக்கிறான். அப்போது கழிப்பறையில் இருந்த இளைஞன் பாய்ந்து வெளியே வருகிறான், ஜூல்ஸையும் வின்செண்டையும் நோக்கி “செத்துத் தொலையுங்கள்” என்றபடி சுடுகிறான், தன் துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும்வரை சுட்டுக்கொண்டே இருக்கிறான். ஆனால் அதில் ஒன்று கூட ஜூல்ஸ் மீதோ வின்செண்ட் மீதோ படவில்லை, இருவரும் அதிர்ச்சியோடு தங்கள் உடலை சோதித்துவிட்டு, நம்பமுடியாமல் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, அந்த இளைஞனை சேர்ந்து சுடுகிறார்கள். பிறகு வின்செண்ட், அந்தக் குழுவைக் காட்டிக்கொடுத்த கறுப்பின இளைஞனிடம் வந்து, ஏன் கழிப்பறையில் இருந்தவனைப் பற்றிச் சொல்லவில்லை என்று விசாரிக்கிறான்.

ஜூல்ஸ் தான் நின்ற இடத்துக்குப் பின்னால் சுவரில் குண்டுகள் பதிந்திருப்பதைப் பார்க்கிறான். அத்தனைக் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டு, இருவரையும் தாண்டிச் சென்ற குண்டுகளில் ஒன்றுகூட மேலே படவில்லை என்பது அவனுக்கு மிகப்பெரிய அதிசயமாக இருக்கிறது. வின்சண்ட், “அது நம் அதிர்ஷ்டம்” என்று சொல்ல, ஜூல்ஸ், “இல்லை, இதுவொரு தெய்வச் செயல்” என்கிறான். “கடவுள் சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்து இந்த குண்டுகளைத் தடுத்தார் என்கிறாயா?” என்று வின்செண்ட் கேட்க, “ஆமாம் அப்படித்தான், கடவுள் நிகழ்த்திய ஒரு அற்புதச் செயலை நாம் இப்போது கண்முன் கண்டிருக்கிறோம், அதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்கிறான். வின்செண்ட், “நாம் இப்போது கிளம்பினால், இந்த வேதவியல் விவாதத்தைக் காரில் வைத்துக்கொள்ளலாம், அல்லது சிறையில்தான் விவாதிக்க வேண்டியிருக்கும்” என்கிறான். அவர்கள் மார்செல்லஸூக்குச் சொந்தமான விலைமதிப்பில்லாத அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு, காட்டிக்கொடுத்த இளைஞனையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

காரில் வின்செண்ட், “நடைமுறை வாழ்வில் எப்போதாவது இதுபோல அசாதாரணமான விஷயங்கள் நடந்துவிடுகின்றன, ஆனால் அதற்காக அதைக் கடவுளின் அற்புதச் செயல் என்று ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சொல்கிறான். ஜூல்ஸ் காரை ஓட்டியபடியே உறுதியாக, “நீ பார்வையற்றவனைப்போல் உன் கண்ணெதிரே நடந்த தெய்வச் செயலைக் காணமறுக்கிறாய், ஆனால் என் விழிகள் விரியத் திறந்துவிட்டன. இங்கிருந்து என் வாழ்க்கை மாறுகிறது, நான் இன்றே மார்செல்லஸ்-யிடம் சொல்லிவிட்டு, நிரந்தரமாக இந்தத் தொழிலிலிருந்து விலகப்போகிறேன்” என்கிறான். வின்செண்ட்டுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பின்னிருக்கையில் உட்கார்ந்திருக்கும் கறுப்பின இளைஞனிடம் “உன் கருத்து என்ன?” என்று கேட்கிறான். அவனிடம் பேசுவதற்கு வசதியாகத் திரும்பி உட்காரும் வின்செண்ட், கையிலிருக்கும் துப்பாக்கியை யதார்த்தமாக அந்த இளைஞனை நோக்கி  வைத்தபடி உட்கார்ந்திருக்கிறான். அப்போது காரின் ஓட்டத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்து இளைஞனின் தலை சிதறிவிடுகிறது. வின்செண்ட், ஜூல்ஸ் இருவர் முகத்திலும், காரின் உட்பக்கம் முழுவதும் ரத்தம் தெறிக்கிறது.

நல்ல வெளிச்சமான காலை நேரத்தில், மக்கள் போக்குவரத்து மிக்க சாலையில், காருக்குள் பிணத்தோடும், ரத்தப் பூச்சோடும் என்ன செய்வதென்ற சங்கடமான சூழ்நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள் வின்செண்டும் ஜூல்சும். திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை. நகரின் அந்தப் பகுதியில் மார்செல்லசுக்குத் தொடர்புடைய மறைவிடங்கள் எதுவும் இல்லை என்கிறான் ஜூல்ஸ், அப்பகுதியில் வசிக்கும் தன் நண்பன் ஜிம்மி என்பவனுக்குப் போன் செய்து, விஷயத்தைச் சொல்லாமல், அவனுடைய கார் நிறுத்துமிடத்தைக் கொஞ்ச நேரம் பயன்படுத்திக்கொள்ளலாமா என்று மட்டும் கேட்கிறான்.

ஜிம்மியின் வீட்டில், தங்கள்மேல் தெறித்திருக்கும் ரத்தத்தைக் கழுவுகிறார்கள் ஜூல்சும் வின்செண்டும், அவர்களது உரையாடலிலிருந்து அப்போது நேரம் காலை 8 மணி என்பது தெரிகிறது. பிணத்தைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கும் ஜிம்மி, அவர்களிடம் கோபமாக, நர்ஸ் வேலை செய்யும் தன் மனைவி இரவு ஷிஃப்ட் முடிந்து இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் வந்துவிடுவாள் என்றும், அவளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் உடனே தன்னை விவாகரத்துச் செய்துவிடுவாள் என்றும், எந்தக் காரணத்துக்காகவும் தான் அவளைப் பிரிய விரும்பவில்லை என்றும் அழுத்தமாகச் சொல்கிறான். வின்செண்ட், மார்செல்லஸ் வாலஸ்-க்கு போன் செய்து நிலைமையைச் சொல்கிறான். இப்போது மார்செல்லஸ், லாஸ் ஏஞ்சல்சின் குன்றின் மீதிருக்கும் தன் வீட்டின் நீச்சல் குளத்தில் மனைவி மியாவோடு மிக சொகுசாக இருப்பது காட்டப்படுகிறது, அவன் ஜூல்ஸிடம் தான் அங்கு உடனே “வுல்ஃப்”-ஐ அனுப்புவதாகச் சொல்கிறான். பிரச்சனைகளை மிக வேகமாகத் தீர்ப்பதில் நிபுணரான வுல்ஃப், ஜிம்மியின் வீட்டுக்கு வருகிறார். இப்போது அவர்களுக்கு 40 நிமிடங்களே இருக்கின்றன.

வுல்ஃப், அந்தக் குழப்பத்தை நிதானமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே தீர்க்கிறார். இறுதியில் ஜூல்ஸையும் வின்செண்டையும் குளிப்பாட்டி, ரத்தம் தோய்ந்த உடைகளை மாற்றுவது வரை செய்கிறார். ஜிம்மியின் பழைய உடைகளை அவர்கள் இருவரும் உடுத்துகிறார்கள். முன்பு வந்த காட்சித்தொடரில், வின்செண்டும் ஜூல்சும், ஏன் கடற்கரை சுற்றுலாப் பயணிகள் போன்ற உடையில் இருந்தார்கள் என்பது இப்போது தெளிவுபடுத்தப்படுகிறது. பிறகு பழைய கார்களை உடைத்தழிக்கும் இடத்துக்கு அந்தக் காரையும் பிணத்தையும் கொண்டுசென்று தடயமே இல்லாதவாறு செய்துவிடுகிறார் வுல்ஃப். இருவரும் அவருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிவைக்கிறார்கள், பின்பு சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்துக்குச் செல்ல முடிவெடுக்கிறார்கள்.

உணவகத்தில், வின்செண்டுக்கும் ஜூல்சுக்கும் இடையில் மீண்டும், ‘கடவுளின் அற்புதச் செயலை’ப் பற்றிய வாக்குவாதம் எழுகிறது. ஜூல்ஸ் கடவுள் அந்த அற்புதச் செயலை எவ்வாறு நிகழ்த்தினார் என்கிற ஆராய்ச்சிக்குள் தான் இறங்கப்போவதே இல்லை என்றும், அது தனக்கு அவசியமில்லாதது என்றும் சொல்கிறான். எது தனக்கு முக்கியமென்றால், அந்தச் சம்பவம் தன் மனதை எப்படி பாதித்தது, விழிகளைத் திறந்தது, வாழ்வை மாற்றியது என்பதே என்கிறான். தான் மார்செல்லஸ் வாலஸ்-யிடம் அந்தப் பெட்டியை ஒப்படைத்துவிட்டு, நிரந்தரமாக வெளியேறப்போவதாகவும், உலகம் முழுவதும் நடந்தே பயணித்து, பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, சாகஸங்களில் ஈடுபட்டபடி பயணிக்கும் ஒரு வழிப்போக்கனாகவே தன் வாழ்க்கையைக் கழிக்கப்போவதாகவும் சொல்கிறான். மேலும் அவன், கடவுள் என்னை ஏதாவது ஒரு இடத்தில் கொண்டு சேர்த்தால் அங்கேயே தங்கிவிடுவேன், ஒருவேளை அப்படி எதுவும் நடக்கவில்லையானால் இறுதிவரை பயணித்தபடியே இருப்பேன் என்கிறான். வின்செண்டுக்கு, இத்தனை அவசரமாக ஜூல்ஸ் தன் வாழ்வைப் பற்றிய மிக முக்கியமான முடிவை எடுத்ததைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஹெராயின் போதைப் பழக்கம் காரணமாக வின்செண்டுக்கு அடிக்கடி கழிப்பறை செல்லவேண்டிவருவதுபோல், அப்போதும் வருகிறது. வின்செண்ட் “திரும்பி வந்து நம் உரையாடலைத் தொடரலாம்” என்றுவிட்டுக் கழிப்பறைக்குச் செல்கிறான்.

படத்தின் ஆரம்பத்தில், டைட்டில் போடுவதற்கு முன்னால் காட்டப்பட்ட திருட்டுத் தம்பதிகள் பேசிக்கொண்டிருப்பதும் அதே உணவகத்தில்தான் என்பது காட்டப்படுகிறது. அவர்கள் இருவரும் துப்பாக்கிகளோடு எழுந்து, கெட்ட வார்த்தைகளைச் சொல்லிக் கத்தியபடி, அந்த உணவகம் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள். ஜூல்ஸ் அமைதியாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க, இருவரும் சாப்பிட வந்தவர்களையும், பரிமாறுபவர்களையும், சமையல் செய்பவர்களையும் ஒருசேர உருட்டி மிரட்டிப் பயமுறுத்திப் பணியவைக்கிறார்கள். உணவகத்தின் மேலாளரை திருடன் பிடித்துத் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறான், அவர் கைகளைத் தூக்கியபடி அனைவரையும் நோக்கி, “எல்லாரும் அமைதியாக திருட்டுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும், சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடும்” என்று கேட்டுக்கொள்கிறார்.

திருடனின் மனைவி துப்பாக்கியோடு எல்லாரையும் கண்காணித்தபடி சுற்றிவர, திருடன் பெரிய பாலித்தீன் பையை எடுத்து, கல்லாவில் இருக்கும் மொத்தப் பணத்தையும் அதனுள் கொட்டுகிறான். பின்பு, ஒவ்வொருவரிடமும் பையை எடுத்துவந்து அவர்களின் பர்ஸ்களையும் மற்ற விலையுயர்ந்த பொருட்களையும் அதனுள் போடச் சொல்கிறான். ஜூல்ஸ் தனது துப்பாக்கியைத் தயாராக வைத்துக்கொண்டு, பர்ஸை நீட்டுகிறான். திருடன் இறுதியில் ஜூல்ஸிடம் வந்து பர்ஸைத் தன் பையில் போடச்சொல்கிறான். அவன் போட்ட பிறகு, திருடனின் கண்ணில் அந்த பிரீஃப்கேஸ் படுகிறது, “அதில் என்ன இருக்கிறது, திறந்துகாட்டு” என்கிறான். மார்செல்லஸ் வாலஸ்-க்குச் சொந்தமான விலைமதிப்பில்லாத பொருளிருக்கும் அந்தப் பெட்டியைத் திறக்க ஜூல்ஸ் மறுக்கிறான். திருடனின் மனைவி “அவன் முகத்திலேயே சுடு” என்று கத்துகிறாள். மேலாளர், “எல்லார் உயிருக்கும் உன்னால் ஆபத்து, அதைக் கொடுத்து அவர்களைச் சீக்கிரம் இங்கிருந்து அனுப்பு” என்கிறார். திருடன் மூன்று எண்ணுவதற்குள் பெட்டியைத் திறக்காவிட்டால் சுடுவேன் என்று சொல்லிவிட்டு எண்ண ஆரம்பிக்கிறான். ஜூல்ஸ் ஏதோ நினைத்தவனாகப் பணிந்து, அவனிடம் பெட்டியைத் திறந்துகாட்டுகிறான். அதற்குள் இருப்பது இப்போதும் பார்வையாளர்களுக்குக் காட்டப்படவில்லை, இளஞ்சிவப்பு ஒளி பிரதிபளிப்பது மட்டுமே தெரிகிறது. திருடன் பிரம்மிப்போடு பார்த்தபடி, “இது என்னவென்று நான் நினைக்கிறேனோ, அதுவேதானா இது?” என்று கேட்கிறான், ஜூல்ஸ் ஆமென்று சொல்ல, அவன் “மிகவும் அழகாயிருக்கிறது” என்று சொல்லி லயித்து நிற்கிறான். அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, ஜூல்ஸ் அவனை இழுத்து, தனது துப்பாக்கியை அவனது கழுத்தில் வைக்கிறான்.

திருடனின் மனைவி பாய்ந்து மேசை மீது ஏறி, ஜூல்ஸை நோக்கி துப்பாக்கியை நீட்டி, பதட்டமும், மிரட்சியுமாகக் கத்துகிறாள். ஜூல்ஸ் அவர்கள் இருவரையும் அதட்டி அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, தற்போதைய நிலைமை என்ன என்பதை விளக்குகிறான். “இன்னொரு சமயமாக இருந்திருந்தால் நீங்கள் இருவரும் எப்போதோ செத்திருப்பீர்கள், இப்போது நான் மனம் திருந்தி நல்லவனாக மாறிக்கொண்டிருக்கும் காலம் என்பதாலேயே நீங்கள் இருவரும் பிழைத்திருக்கிறீர்கள்” என்கிறான். மேலும் அவன் திருடனை நோக்கி, “நான் உன்னைக் கொல்ல விரும்பவில்லை, உதவவே நினைக்கிறேன். ஆனால் இந்த ப்ரீஃப்கேஸை உனக்குக் கொடுக்க முடியாது, ஏனென்றால் இதிலிருப்பது எனக்குச் சொந்தமானதல்ல, மேலும் இதை அடைவதற்காக ஏராளமான பிரச்சனைகளை ஏற்கனவே நான் சந்தித்துவிட்டேன்” என்கிறான். அப்போது வின்செண்ட் கழிப்பறையிலிருந்து திரும்பி வந்து, துப்பாக்கியை திருடனின் மனைவியை நோக்கி நீட்ட, அவள் பதறுகிறாள். ஜூல்ஸ் வின்செண்டை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, திருடனிடம் அவனது பையிலிருந்து தனது பர்ஸை எடுக்கும்படிச் சொல்கிறான். அந்தப் பர்ஸிலிருக்கும் பணத்தை எண்ணச் சொல்கிறான், அதிலிருக்கும் 1,500 டாலர்களையும் திருடனையே வைத்துக்கொள்ளச் சொல்கிறான், “இதுவும் மற்ற எல்லாப் பணமும் சேர்த்தால் உனக்கு மிக வெற்றிகரமான கொள்ளைதான் இல்லையா?” என்கிறான். வின்செண்ட் குறுக்கிட்டு, “நீ கொடுக்கும் பணத்துக்காகவே இவர்களை நான் சுடலாம்” என்று சொல்ல, திருடனும் மனைவியும் பதைபதைக்கிறார்கள். ஜூல்ஸ் மூவரையும் அமைதிப்படுத்திவிட்டு, திருடனை நோக்கி, “இந்தப் பணத்தை நான் சும்மா கொடுக்கவில்லை, நான் ஒன்றை விலைகொடுத்து வாங்குகிறேன், என்ன தெரியுமா? உன் உயிர்! இந்தப் பணத்தைக் கொடுப்பதன் மூலம், உன்னைக் கொல்லவேண்டிய கட்டாயத்திலிருந்து தப்பிக்கிறேன்” என்கிறான். அதன் பின் ஜூல்ஸ் எப்போதும் சொல்லும் பைபிள் வாசகத்தை மீண்டும் சொல்கிறான்,

“The path of the righteous man is beset on all sides by the inequities of the selfish and the tyranny of evil men. Blessed is he who, in the name of charity and good will, shepherds the weak through the valley of darkness, for he is truly his brother’s keeper and the finder of lost children. And I will strike down upon thee with great vengeance and furious anger.. those who attempt to poison and destroy My brothers. And you will know I am the Lord.. when I lay My vengeance upon you.”

ஜூல்ஸ், ஒருவனைக் கொல்வதற்கு முன்னால் இதைச் சொல்வதில் இருக்கும் பரவசத்துக்காகவே இதுவரை சொல்லிவந்ததாகவும், அதன் அர்த்தத்தை முழுவதும் உணரவில்லை என்றும், ஆனால் காலையில் நடந்த சில சம்பவங்களே அதைப் பற்றி யோசிக்க வைத்தது என்றும் சொல்கிறான். மேலும் அவன் திருடனை நோக்கி, “இதன் ஒருவகையான புரிதல் என்னவென்றால், நீ தீயவன் (evil man), நான் நேர்மையாளன் (righteous man), இந்த துப்பாக்கிதான் மேய்ப்பன் (shepherd).. இந்த நேர்மையாளனை இந்த மேய்ப்பனே இருளின் பள்ளத்தாக்கில் (the valley of darkness) வழிநடத்துபவன். இன்னொருவகைப் புரிதல் என்னவென்றால், நீ நேர்மையாளன், நானே மேய்ப்பன், இந்த உலகம்தான் தீமையானது, சுயநலமானது.. இது நன்றாக இருக்கிறது, ஆனால் இந்த விளக்கமும் உண்மையில்லை. எது உண்மையென்றால், நீ பலவீனமானவன் (the weak), நானே தீயவர்களின் அதிகாரம் (tyranny of evil men). ஆனால் நான் மிகத் தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் ..ஒரு நல்ல மேய்ப்பனாக மாற.” என்று சொல்லிவிட்டு அவனை அனுப்பிவைக்கிறான். திருடன் தன் மனைவியை அணைத்தபடி அங்கிருந்து செல்கிறான். அதன் பிறகு வின்செண்டும் ஜூல்சும் பெட்டியோடு உணவகத்திலிருந்து வெளியேறுவதோடு திரைப்படம் நிறைவடைகிறது.

பெட்டிக்குள் இருப்பது என்ன

உலகம் முழுவதும் ஏராளமான பல்ப் ஃபிக்ஷன் ரசிகர்களால் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும் விஷயம், அந்த பிரீஃப்கேஸ்க்குள் இருக்கும் மார்செல்லஸ் வாலஸ்-க்குச் சொந்தமான பொருள் என்ன என்பதுதான். ஐதீகத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு விளக்கம் மிகப் பிரபலமானது. அந்த ஐதீகத்தின்படி, ஒருவர் செல்வத்துக்காகவோ அல்லது வேறு ஏதோவொரு வெற்றியை அடையவோ, தனது ஆன்மாவை சாத்தானிடம் அடகுவைக்க முடியும். சாத்தான், ஒரு மனிதனின் ஆன்மாவை அவனது பின்மண்டையின் கீழ்ப்பகுதியில் ஒரு துளை போட்டு எடுத்துக்கொள்வான். மார்செல்லஸ் வாலஸின் அறிமுகக் காட்சியில், அவனது முகத்தைக் காட்டுவதற்கு முன்னால், அவனது பிந்தலையையே நாம் முதலில் பார்க்கிறோம். அவனது பின்கழுத்துப் பகுதி முழுவதையும் மறைக்கும் வகையில் பெரிய பேண்டேஜ் ஒன்று ஒட்டப்பட்டிருக்கிறது. மேலும் வின்செண்ட் அந்த ப்ரீஃப்கேஸைத் திறப்பதற்கு ‘666’ என்ற இலக்கத்தையே பயன்படுத்துகிறான், அது சாத்தானுக்குத் தொடர்புள்ள இலக்கம். வாலஸ் தன் ஆன்மாவைத் திரும்பப் பெறுவதற்காகவே அந்த இளைஞர் குழுவை அனுப்பியிருந்தான், ஆனால் அவர்கள் அதை வைத்து அவனிடமே பேரம் பேசினார்கள்… என்று தொடர்கிறது யூகம். ஆனால் இந்த விளக்கம் முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில், கற்பனையால் விஷயங்களைப் பொருத்தி உருவாக்கப்பட்டது என்றே நான் நினைக்கிறேன். டரண்டினோவும் ஒரு பேட்டியில் இதை உறுதிசெய்திருக்கிறார், வாலஸின் பின்தலை பேண்டேஜ்க்கு எந்த தொடர்புமில்லை- பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பொறுத்தவரை ‘விலை மதிக்க முடியாதது’, ‘அழகானது’ என்பதற்குப் பொருத்தமாக எதை வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்வதற்கு ஏதுவாகத்தான், அது என்ன என்பதைக் காட்டவே இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அப்படி எளிதாக எடுத்துக்கொள்ளவும் முடியாத வகையில் ஏதோ ஒன்று தடுக்கிறது. ஒட்டுமொத்தப் படத்தின் கருவோடு அது சம்பந்தப்பட்டிருப்பதாகவே உலகப் பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் நினைக்கிறார்கள். அந்த விடுபடல் ஒரு திறப்பு, அது ஒரு வாசல், அதில் நுழைந்து பார்வையாளன் தனக்கான பதிலைத் தேடிச்செல்ல முடியும்.

பெருமையும் ஆணவமும்

மார்செல்லஸ் வாலஸ் பற்றி மிக உயர்வாகவே எல்லாரும் பேசுவதுபோல் படத்தில் வருகிறது. குறிப்பாகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நிபுணரான வுல்ஃப், வாலஸ் பற்றிச் சொல்லும்போது பெரும் பணக்காரன் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவன் என்றே சொல்கிறார். மார்செல்லஸ் முன்னால் பணிவோடும் மரியாதையோடுமே எல்லாரும் நடந்துகொள்கிறார்கள். அவனுக்குத் துரோகம் இளைப்பது மாபெரும் குற்றமாகக் காட்டப்படுகிறது. இளைஞர்கள் குழு ஆரம்பத்தில் கொல்லப்படுவது, மார்செல்லஸ்க்குத் துரோகம் செய்ததால்தான். அவனது கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்றே, வின்செண்ட், மியாவிடம் பழக பயப்படுகிறான், அவளுக்கு ஒரு ஆபத்து நேரும்போதும் அத்தனை பதட்டமடைகிறான். மற்றவர்கள் அவன்மேல் வைத்திருக்கும் மரியாதையைத் தாண்டி, மார்செல்லஸ் வாலஸ் தன்னைப் பற்றியே மிகவும் திமிரோடுதான் பேசுகிறான். தன்னுடைய அளவில்லாத வல்லமை, அதிகார பலம் பற்றி கர்வம் கொண்டவனாகவே, அவன் பேசும் ஒவ்வொரு வசனமும் இருக்கிறது. ஆனால் இறுதியில், அவனுடைய ஆணவம் கிழித்தெறியப்படும் விதம், மிகக் கொடுமையானதாகவும், அதைவிடக் கேவலமான ஒன்றிருக்க முடியாது எனும்படியும் அமைந்திருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில், ஜூல்ஸ், ஏமாற்றிய இளைஞனைக் கொல்வதற்கு முன்னால், “மார்செல்லஸ் வாலஸ் என்ன பார்ப்பதற்குப் பெட்டை நாய் போலவா இருக்கிறான்?.. அவனைப் புணர்ந்துவிட நினைத்தாயே..” என்று ஏசுகிறான். ஆனால் அந்த வார்த்தைகள் இறுதியில் பலித்தேவிடுகிறது. மார்செல்லஸ், ஒரு வெறிபிடித்த ஓரினச்சேர்க்கையாளனால் வன்புணர்ச்சி செய்யப்படும்போது, அவனது ஆணவத்துக்கும் கர்வத்துக்கும் ஒரு அர்த்தமும் இல்லை என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது. சிக்கலான இந்த சமூக அமைப்பில், ஓரிடத்தில் மிகுந்த செருக்கோடு இருப்பவன், மற்றொரு இடத்தில் தலைதாழ்ந்தே ஆகவேண்டும் என்பதே விதிவிலக்கில்லாத நியதி.

வாலஸ், “எதிர்வரும் குத்துச்சண்டை போட்டியில் தோற்கவேண்டும்” என்று புட்ச்-யிடம் சொல்லும்போது, “தற்பெருமை அழிவையே தரும்” என்கிறான். ஆணவத்தின் உச்சியில் நின்றபடி அவன் சொல்லும் இந்த அறிவுரை எத்தனை முரணானது. புட்ச்-யின் தந்தை-தாத்தா-பூட்டா என்று மூன்று தலைமுறை கடந்து புட்ச்-யிடம் வந்துசேரும் அந்தத் தங்கக் கடிகாரம், ‘பெருமை’ ‘கௌரவம்’ போன்ற சொற்கள் உணர்த்தும் ஒன்றின் பரும வடிவமல்லாது வேறொன்றுமில்லை. அந்தத் தங்கக் கடிகாரத்துக்காகத் தன் உயிரையும் பணயம்வைக்கிறான் புட்ச், ஆனால் இறுதி வெற்றி அவனுக்கே கிடைக்கிறது. வன்புணர்ச்சியாளர்களிடமிருந்து அவன் மட்டும் தப்பிப் போயிருக்க முடியும், ஆனால் அவன் திரும்பிச் சென்று, யாரிடமிருந்து அவன் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறானோ அந்த மார்செல்லஸ் வாலஸையே காப்பாற்றுகிறான். கௌரவம் என்னும் அந்தத் தங்கக் கடிகாரம் அவனை மட்டும் காப்பாற்றாமல் மற்றவர்களையும் காக்கச் செய்து, அவனை ஒரு நாயகனாகவே உயர்த்துகிறது.

‘கௌரவம்’ ஒருவனை நாயகனாக்குகிறது, அவன் வெற்றியும் பெறுகிறான். அதுவே ‘தலைக்கணம்’ ‘ஆணவம்’ என்று ஆகும்போது, ஒருவனை எதிர்நாயகன் ஆக மாற்றுகிறது, அவன் இறுதியில் தோல்வியும் அவமானமுமே அடைகிறான்.

ஆணும் பெண்ணும்

சமூக அமைப்பில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது, வெளியிலிருந்தோ, ஒருவரினால் மற்றவருக்கோ வரும் பிரச்சனைகளை, அவர்கள் இணைந்து சமாளித்து மீண்டாகவேண்டும் என்பதும், எல்லாருக்கும் பொதுவானது. இந்தப் படத்தில் மூன்றுவிதமான ஜோடிகள் வெவ்வேறு சிக்கல்களில் மாட்டி அதிலிருந்து மீண்டுசெல்வது காட்டப்பட்டிருக்கிறது.

உணவகத்துத் திருட்டுத் தம்பதி, மற்ற எல்லாரிடமும் மிக மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், வன்முறையாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் தங்களுக்குள், தேனொழுகும் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மிக அபூர்வமான அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். உணவகத்தில் திருடும் திட்டத்தைச் சொல்வதும், ஜூல்ஸின் பிரீஃப்கேஸைக் கேட்டு பிரச்சனையில் மாட்டுவதும் கணவன்தான். ஆனால் மனைவி இறுதிவரைத் தன் கணவனை விட்டுக்கொடுக்கவே இல்லை, மிரட்சியோடு அலைபாய்ந்தபடி அவனுக்குப் பாதுகாப்பாக நிற்கிறாள்.

இன்னொரு காதல் ஜோடி புட்ச்-உம், அவனது காதலியும். அவள் அவனது தங்கக் கடிகாரத்தை மறந்து வீட்டிலேயே விட்டுவிட்டு வருவதால்தான், புட்ச்-யின் திட்டம் கெட்டு, அவன் பெரிய பிரச்சனைகளுக்குள் சிக்கவும், தொடர்ந்து கொலைகளைச் செய்யவும் காரணமாகிறது. அவனுக்குத் தன் காதலியின் முட்டாள்த்தனம் பற்றிக் கடும்கோபம் வருகிறது, ஆனால் அதை அவன் இறுதிவரை அவள்மேல் காட்டவே இல்லை. அத்தனைச் சிக்கலிலும் அவளை விட்டுவிடாமல் தன்னுடனேயே அழைத்துச் செல்கிறான்.

படத்தில் அதிக கவணத்தை ஈர்க்கும் ஜோடி, வின்செண்டும் மியாவும். அவர்கள் காதலர்களோ தம்பதிகளோ இல்லை, அதுதான் அவர்களது முதல் சந்திப்பு. எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சட்டென்று உருவாகிவிடக் கூடிய கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு விசையைப் பற்றிய அவதானிப்பாகவே அந்தக் காட்சித்தொடர் அமைந்திருக்கிறது. மார்செல்லஸ் வாலஸ், தான் வெளியூர் செல்லும் நாளில் தனது மனைவி மியாவை, மாலை வெளியே அழைத்துச் செல்லும்படி வின்செண்ட்டைப் பணிக்கிறான். அவள் ஏன் ஒரு ஆணைத் துணைக்குக் கேட்டாள் என்பது மிக நுணுக்கமானது. காமம் அவளுடைய நோக்கமே இல்லை, ஆனால் சாதாரண பழக்கத்துக்குக் கூட ஒரு பெண்ணுக்கு ஆண் துணையாவது போல, ஆணுக்குப் பெண் துணையாவது போல பிரிதொன்றில்லை. பாதத்துக்கு மசாஜ் செய்வதைப்பற்றிய விவாதத்தில், ஜூல்ஸ், “அதிலெங்கே காமம் வந்தது, நான் என் அம்மாவுக்குக் கூட பாத மசாஜ் செய்வேன்” என்று சொல்ல, வின்செண்ட், “உன்னால் ஒரு ஆணுக்கு அந்த மசாஜ்-ஐ செய்ய முடியுமா?” என்று கேட்க, ஜூல்ஸ் கடுமையாகக் கோபப்படுகிறான். ஒரு ஆணின் இடத்தைப் பெண்ணாலும், பெண்ணின் இடத்தை ஆணாலும் நிரப்ப முடியாத தருணங்கள், காமத்துக்கு வெளியிலும் இருக்கின்றன. மியா தவறுதலாக ஹெராயினை மூக்கில் உறிஞ்சி, சாகும் நிலைக்குப் போகும்போது அவளைக் காப்பாற்ற வின்செண்ட் படும்பாடும், இறுதியில் இந்தச் சம்பவத்தை மார்செல்லஸ்சுக்குத் தெரியாமலே மறைத்துவிடலாம் என்று மியா சொல்லிவிட்டுச் சென்றபிறகு, வின்செண்ட் கொடுக்கும் பறக்கும் முத்தமும் எந்தக் காதல் கதைக்கும் இணையானது.

தற்செயலா தெய்வச்செயலா

பல்ப் ஃபிக்ஷன் மிக மையமாக எதைக்கொண்டிருக்கிறது என்னும் கேள்விக்கான விடை மிக எளியது, ‘உலக நிகழ்வுகள் தற்செயலானதா அல்லது ஒரு தெய்வீக சக்தி எல்லாவற்றையும் நடத்துகிறதா’ என்னும் விவாதமே அதன் மையம். கதையை ஆரம்பித்த இடத்திலேயே முடிக்கும் வட்டவடிவக் கதையாடலை (circular narrative) கொண்டது பல்ப் ஃபிக்ஷன். முதலும் முடிவும் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதை வைத்து, கதையின் சுழற்சி எதை மையமாகக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தலாம். முதல் காட்சியில் கணவனும் மனைவியும் சாப்பிடுவதற்காகத்தான் அந்த உணவகத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தற்செயலாக அங்கேயே கொள்ளையடிக்க முடிவெடுக்கிறார்கள். மற்ற எல்லா இடத்தையும்விட பாதுகாப்பானது, ஆபத்தில்லாதது என்பதற்காகவே அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மிகமிக ஆபத்தான கொலைகாரர்களிடமே இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள். இது, அவர்கள் முற்பகல் செய்ததின் பிற்பகல் விளைவே என்று கொண்டால், நமக்கு அப்பாற்பட்ட சக்தியின் பங்களிப்பு அதில் இருக்கிறது என்று அர்த்தமாகிறது.

இந்தத் திரைக்கதை நான்லீனியராக அமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம் என்னவாக இருக்க முடியும் என்று நாம் யோசித்துப்பார்த்தால், அது சொல்லவந்த செய்தியை இறுதியில் முத்தாய்ப்பாகக் கொண்டுவந்து சேர்க்கவே என்பது புரியும். படத்தின் இறுதிப் பகுதியான ‘இக்கட்டான சூழ்நிலை’ அத்தியாயம் முழுவதும் முக்கிய விவாதமாக இடம்பெறுவது ‘தற்செயலா? தெய்வச்செயலா?’ என்பதே. ஜூல்ஸ், அசாதாரணமான முறையில் உயிர்பிழைக்கும்போது, அந்தக் கணத்தில் அதைக் கடவுள் நிகழ்த்திய ஒரு அற்புதச் செயல் என்று நம்பிவிடுகிறான், அது அவன் மனதை மாற்றிவிடுகிறது, உடனே தன் கொலைத் தொழிலைவிட்டு நாடோடியாக உலகைச் சுற்றியலையும் முடிவை எடுக்கிறான், என்பதாகவே மேம்போக்காகப் பார்த்தால் தோன்றுகிறது. ஆனால் ஒரு தொழில்முறைக் கொலைகாரன் ஏன் இத்தனை ஆண்டுகளாக அந்த பைபிள் வசனத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான் என்கிற கேள்வி எழுகிறது. டரண்டினோ நுட்பமாக ஒரு மர்மத்தை அதில் ஒளித்துவைத்திருக்கிறார்.

அவன் “எசேக்கியேல் 25:17” என்று குறிப்பிட்டுச் சொல்லும் அந்த வசனம் உண்மையில் பைபிளில் உள்ளதே அல்ல. அதன் கடைசி இருவரிகள் மட்டுமே கிட்டத்தட்டப் பொருந்தி வருகிறது. “I will carry out great vengeance on them and punish them in my wrath. Then they will know that I am the Lord, when I take vengeance on them” என்பதே மூல பைபிள் வசனம். அதனுள் கூட, “those who attempt to poison and destroy My brothers” என்ற இடைச்சேர்க்கை இருக்கிறது. அந்த இரு வரிகளை மட்டும் கொலை செய்வதற்கு முன் சொன்னாலே போதுமானது. ஆனால் அவன் அதற்கு முன்னால் சொல்லும் “The path of the righteous man is beset on all sides by the inequities of the selfish and the tyranny of evil men. Blessed is he who, in the name of charity and good will, shepherds the weak through the valley of darkness, for he is truly his brother’s keeper and the finder of lost children” என்கிற ‘இட்டுக்கட்டப்பட்ட’ வசனமே, இறுதிக் காட்சியில் அவன் மனத்தை மாற்றுகிறது. இந்தக் காரணத்துக்காகவே இது கிறிஸ்தவ மதத்தையோ பைபிளையோ நேரடியாக ஆதரிக்கவில்லை என்று சொல்லிவிடலாம். மேலும், இத்தனை ஆண்டுகளாக அவனது மனதுக்குள் தங்கி, அவனைத் திருத்துவதற்காகக் காத்திருந்த அந்த வசனங்கள், அவனுள் வந்து சேர்ந்தது எப்படி, எப்போது என்பது படத்தில் சொல்லப்படவேயில்லை. ஆகவே அவன் அந்தக் ‘கணத்தில்’ திருந்தினான் என்று சொல்ல முடியாது. மேலும் அந்தக் காட்சியின் ஆரம்பத்தில் கழிப்பறைக்குள் இளைஞன், “கடவுளே என்னைக் காப்பாற்று, நான் சாக விரும்பவில்லை” என்று பிரார்த்திக்கிறான். ஆனால் கடவுள் அவனது துப்பாக்கியிலிருந்து இரு தொழில்முறைக் கொலைகாரர்களைக் காப்பாற்றிவிட்டு, அந்த இளைஞனை சாகடிக்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? “தெய்வச்செயல்” என்று இப்படம் குறிப்பிடுவது, எந்தக் கடவுளையோ மதத்தையோ அல்ல, என்றே நான் நினைக்கிறேன்.

வின்செண்ட், ‘உலகம் முழுக்க முழுக்கத் தற்செயலாலேயே இயங்குகிறது’ என்று சொல்கிறான். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே தற்செயலாக அவனது துப்பாக்கி வெடித்துக் காரின் பின்சீட்டில் இருப்பவன் செத்துப்போவது ஒரு ‘கரும் நகைச்சுவை’. ஆனால் வின்செண்டின் மரணமும், இதே போன்றதொரு “தற்செயல் துப்பாக்கிச் சூட்டினால்” நடக்கும்போதுதான், இரண்டுக்கும் தொடர்பே இல்லையா என்னும் கேள்வி எழுகிறது. புட்ச்-யின் வீட்டுக்கு அவனைக் கொல்ல அனுப்பப்பட்ட வின்செண்ட், கழிப்பறையில் இருக்கும்போது, புட்ச் வந்துவிடுகிறான். அவன் வின்செண்டின் துப்பாக்கியைப் பார்த்து, அதை எடுக்கிறான், அதேசமயம் வின்செண்டும் கழிப்பறையிலிருந்து வெளியில் வர, தற்செயலாக, ரொட்டித் துண்டுகளைப் பொறிக்கும் டோஸ்டர் ‘டப்’ என்ற ஒலியெழுப்ப, புட்ச் அணிச்சையாகச் சுட்டுவிடுகிறான், வின்செண்ட் சாகிறான். முதல் தற்செயல் துப்பாக்கிச் சூட்டில் வின்செண்ட் கொல்கிறான், இரண்டாவதில் அவனே சாகிறான்.. இரு தற்செயல்களும் தற்செயலாக ஒருவனுக்கே நடந்ததா..?

புட்ச்-யின் கையால் வின்செண்ட் சாவதும் தற்செயல் என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் இருவரும் முதல்முறையாக மார்செல்லஸ் வாலஸ்-யின் பாரில் சந்தித்துக்கொள்ளும்போதே, அவர்களுக்குள் ஒத்துப்போகவில்லை. காரணமே இல்லாமல், வின்செண்ட், தனக்கு முன்னறிமுகம் இல்லாத புட்ச்-ஐ விரோதத்தோடு அவமானப்படுத்துகிறான். அதை, அவர்களை இயற்கையே எதிரிகளாகத்தான் படைத்திருக்கிறது என்றே விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேபோல், “புட்ச் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடியுங்கள், அவன் இந்தோசீனாவுக்குப் போனால் கூட, சோற்றுக் கிண்ணத்துக்குள் ஒளிந்தபடியாகிலும் நமது ஆள் அவனைக் கொல்லக் காத்திருக்கவேண்டும்” என்று ஆணையிடும் மார்செல்லஸ் வாலஸ், அடுத்த காட்சியில், மிகச் சாதாரணமாக, காலை உணவைக் கையில் ஏந்தியபடி சாலையைக் கடக்கும்போது, வெகு அருகில் புட்ச் காருக்குள் அமர்ந்திருப்பதைப் பார்ப்பது, தற்செயல் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்தப் படத்தின் திரைக்கதை, நான்-லீனியர் அமைப்பின் மூலம் மட்டுமே தான் சொல்ல வந்த செய்தியை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு கொலைகாரனின் மனநிலை மாற்றத்தைப் படத்தின் இறுதியில் சொல்வதன் மூலம், அதை முக்கியத்துவப்படுத்துகிறது. ‘நான்-லீனியர்’ திரைக்கதை அமைப்பின்மேல் ஒரு புதிய வெளிச்சம் உண்டாவதற்கும், இளம்தலைமுறை திரைக்கலைஞர்கள் அதன்மேல் ஆர்வம்கொள்வதற்கும் காரணமாக அமைந்தது ‘பல்ப் ஃபிக்ஷன்’ என்பதை மறுக்க முடியாது.