ஒரு சுய குறிப்பு:

“காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்” என்ற தலைப்பில் நான் கட்டுரை எழுத ஆரம்பித்தபோது அதை ஒரு தொடராக எழுதிச் செல்வது என் நோக்கம் இல்லை. ஒரே கட்டுரையில் நான்லீனியர் திரைக்கதை பற்றிச் சுருக்கமாக எழுதிவிட்டு, எனக்குப் பிடித்த பத்து படங்களைக் காலவரிசைப்படி பட்டியலிடவே எண்ணினேன். ஆனால் முதல் படமான ‘இண்டாலரன்ஸ்’ பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதத் தொடங்கியபோது, அதன் இயக்குனரான ‘திரைக்கலையின் தந்தை’ கிரிஃபித் பற்றியும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட ‘இண்டாலரன்ஸ்’ படத்தைப் பற்றிய பின்னணித் தகவல்களையும் கொஞ்சம் எழுதுவது அவசியம் என்று தோன்றியது. தமிழ்ச் சூழலில் அவ்வளவாகப் பேசப்படாத கிரிஃபித் பற்றித் தெரியாதவர்கள் நிறைய இருப்பார்கள் என்பதால் ஒரு அறிமுகம் கொடுக்கலாம் என்று நினைத்தேன். அவைகளையும் மிகச் சுருக்கமாகவே எழுதினேன் என்றாலும், பிறகு அப்படத்தின் திரைக்கதை அமைப்பு பற்றி எழுதி அது எப்படி ‘நான்லீனியர்’ என்று சொல்வதும் அவசியமாக இருந்தது. ஆனால் அந்த முதல் கட்டுரை மட்டும்தான் அப்படி, அடுத்த கட்டுரையில் மற்ற 9 படங்களையும் பட்டியலிட்டு முடித்துவிட வேண்டும் என்றே நினைத்தேன். இதை அந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடவும் செய்தேன்.

ஆனால் அந்த முதல் கட்டுரைதான் இருப்பதிலேயே சிறியது என்னும் அளவுக்கு மற்ற கட்டுரைகள் அமைந்துவிட்டன. சிட்டிஸன் கேன், ராஷொமன், அன்னிஹால், பல்ப் ஃபிக்ஷன் என்று அந்த வரிசையில் இருந்த படங்கள் எல்லாமே என்னுடைய பெருவிருப்பத்துக்கு உரியவை என்பதே காரணம். நான் எழுதியதை விடவும் அதிகமாக சொல்வதற்கு இன்னும் இருக்கிறது என்றே இப்போதும் தோன்றுகிறது. ஆனாலும் திரும்பிப் பார்க்கையில் நானா இவ்வளவும் எழுதினேன் என்று மலைப்பாகவும் இருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் நிறைய நேரம் செலவழித்து எழுதியிருக்கிறேன். இந்தப் பட்டியலில் மீதமிருக்கும் நான்கு படங்களும் கூட அந்த அளவுக்கு விஷயம் உள்ளவையே. எல்லாமே எனக்கு முக்கியமான படங்கள், விருப்பத்துக்குரியவை, முந்தைய கட்டுரைகளை விடவும் நீளமாக ஆகிவிடுவதற்கான வாய்ப்புள்ளவை. ஆனால் நடுவில் ‘இன்செப்ஷன்’ இரண்டு முறை பார்த்துவிட்டு நான்கு நாட்களாக வேறு எந்தப் படம் பற்றியும் சிந்திக்க முடியாதவனாக இருந்தேன்.

பிறகு அடுத்த கட்டுரைக்காக ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ படத்தைப் பலவருடங்களுக்குப் பிறகு மீண்டும் பார்ப்பதற்காக உட்கார்ந்தபோது, ஹைதராபாத்திலிருந்து என் நெருங்கிய நண்பன் (என்னோடு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்து இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனராக இருப்பவன்) போனில் அழைத்தான். பத்து வருடங்களுக்கு முன்பு நான் அவனிடம் சொன்ன ஒரு திரைக்கதையை, இப்போது தெலுங்கில் தான் இயக்கத் தரமுடியுமா என்று கேட்டான். ஒரு தரமான வணிக சினிமாவுக்கான கட்டமைப்போடு உருவாகிவந்த கதை அது. ஆனால் இடையில் வந்த நிறைய படங்களில், குறிப்பாக சில பெருவெற்றி பெற்ற படங்களிலேயே அதன் சாயல் ஆங்காங்கே வந்துவிட்டது. இது தவிர்க்க முடியாததென்பதால் என்னை நானே நொந்துகொள்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமலிருந்தேன். நண்பன் இவ்வளவு நாள் அந்தக் கதையை ஞாபகம் வைத்திருந்ததே எனக்கு ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்ததனால் உடனே தருவதாக ஒப்புக்கொண்டேன். நண்பன் இன்னும் மூன்றே நாளில் நீ ஐதராபாத் வரவேண்டும், அதற்குள் காலத்திற்கேற்ப கதையைத் திருத்திக்கொள் என்று சொன்னான். இரு ஆண்டுகளுக்கு முன் நான் அந்தக் கதையை ஒரு தமிழ் நடிகருக்குச் சொன்னபோதே காலத்திற்கேற்ப நிறைய மாற்றங்களைச் செய்திருந்தேன். மேலும் கொஞ்சம் மாற்றுவது சிரமமல்ல என்றே முதலில் நினைத்தேன். ஆனால் மூன்றாம் நாள் ரயில் ஏறுவதற்கு ஒரு மணிநேரம் முன்புவரை நான் டைப் செய்து கொண்டிருந்தேன். வெகுநாள் கழித்துக் கணவன் வேலைக்குக் கிளம்பும் சந்தோஷத்திலோ என்னவோ என் மனைவியே பேகிங் முழுவதையும் செய்தாள். ஐதராபாத்தில் இறங்கிய பின்புதான் பையில் என்னென்ன இருக்கிறதென்று எனக்கே தெரிந்தது.

நண்பனுக்கு முழுக் கதையையும் நிறைய நேரம் எடுத்துச் சொன்னேன். மறுநாள் தயாரிப்பாளருக்கு மிகச் சுருக்கமாகச் சொன்னேன். எனக்குத் தெலுங்கில் ஒரு வார்த்தையும் தெரியாது, ஆங்கிலத்தில் சொல்லும்போது ஏதோ ஒரு அந்நியத்தன்மை வந்துவிடுகிறது, ஆகவேதான் சுருக்கமாகச் சொன்னேன், தயாரிப்பாளருக்குப் புரியாதவைகளை நண்பன் விரிவாக அவரிடம் விளக்கினான். திரைக்கதையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் மிக ரசித்துப் பாராட்டியபடியே அவர் கதை கேட்டவிதம் உற்சாகமூட்டுவதாக இருந்தது. கேட்டு முடித்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமல் மிக நன்றாயிருக்கிறது, படவேலைகளை ஆரம்பித்துவிடலாம் என்றார். நான் மேலும் சிலநாட்கள் இருந்து முழுக் கதையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த வேலை அவ்வளவு சீக்கிரம் முடிவதாயில்லை. நண்பன் மெதுவாக, உன் கதையில் நிறைய விஷயங்கள் புதுமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கிறது, ஆனால் மையக் கதையோட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்தாக வேண்டும், ஏனென்றால் தெலுங்கில் மிகப் பிரபலமான ஒரு படத்தை அது நினைவுபடுத்துகிறது என்றான். சரியென்று கதையின் போக்கிலேயே முக்கியமான மாற்றங்களைச் செய்தோம்.

நெருங்கிய நண்பர்கள் என்பதால் இது இலகுவாக நடந்தது. நான் கதையில் பல்வேறு வேரியேஷன்களை உருவாக்கிச் சொல்ல முடிந்தது, அவனும் என் அகங்காரத்தைச் சீண்டாமலே அவைகளை நிராகரிக்கவும் முடிந்தது. ஒருவழியாக எங்களுக்குள் ஒரு உடன்பாடு உண்டாகி இடைவேளை வரையான கதை தீர்மாணமாகியது. நண்பன் உற்சாகமாக, மிகச் சிறப்பாக வந்திருக்கிறது, இதற்கு முன்வந்த எந்தப் படம் போலவும் இது இல்லை என்றான். அதற்குள் தயாரிப்பாளர் கதையைப் பற்றித் தன் நண்பர்களிடம் தனியே கருத்துக் கேட்டிருக்கிறார். அதிலொருவர், ஒரு பிரபல இயக்குனர் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் கதை கிட்டத்தட்ட இதேதான் என்று சொல்லி எச்சரித்திருக்கிறார். ஒரு படத்தில் பல கோடிகளை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் ஒரு சிறு மனத்தடை வந்துவிட்டால் கூட அதில் இறங்கத் தயங்குவார்கள். அதனால், புதிதாக நாங்கள் மாற்றியமைத்த கதையோட்டத்தை கவணித்துக் கேட்கவோ, வாசித்துப் பார்க்கவோ கூட மனமின்றி அவர் இருந்ததை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே கதையின் இரண்டாம் பாதி எப்படி அமையலாம் என்பது பற்றி நண்பனோடு இருநாட்கள் விவாதித்துவிட்டு நான் சென்னைக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

வந்ததும் இந்தத் தளத்தில் எழுதப்பட்ட பின்னூட்டங்களுக்கு மறுமொழி மட்டும் செய்தேன். திரைக்கதையின் பிற்பாதியை முடித்து மின்னஞ்சல் செய்வது வரை பதிவு ஏதும் எழுதக்கூடாது என்றிருந்தேன். கதை விவாதம் இப்போது இணையம் வழி எளிதாகிவிட்டிருக்கிறது. ‘ஸ்கைப்’ மூலம் ஒளிஒலிக் காட்சியாக முகம் பார்த்து ஐதராபாத் நண்பனோடு கதைபேச முடிந்தது. ஒருவழியாக நேற்றுக் கதையின் இறுதி வடிவத்தை மின்னஞ்சல் செய்தேன்.

பதிவெழுத உட்கார்ந்தபோது, நான்லீனியர் படப் பட்டியலின் மீதிருந்த ஆர்வம் எனக்கு முற்றிலும் வடிந்துவிட்டிருந்ததை உணர்ந்தேன். வருகைப் புள்ளிவிவரங்களைப் பார்த்தபோது, பலர் தினமும் என் தளத்தின் முகப்புப் பக்கத்துக்கு வந்து ஏதாவது புதிதாக எழுதப்பட்டிருக்கிறதா எனப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆகவே பட்டியலில் மீதமிருக்கும் படங்களை ஒரே பதிவில் போட்டுவிடத் தீர்மாணித்தேன். மேலும் இந்தப் படங்கள் ‘டிவிடி’ யுகத்தில் வந்தவை என்பதால் பெரும்பான்மையானவர்கள் பார்த்திருக்கக் கூடியவை, பெரிய அறிமுகம் தேவையில்லாதவை. இப்படங்களில் நான் ரசித்ததென்ன என்று பின்பு ஒரு சமயம் தனியாக எழுதுவேன் என்றே நினைக்கிறேன்.

பட்டியல் தொடர்கிறது..

காலத்தைக் கலைத்துக் கதைசொல்லும் ‘நான்லீனியர்’ திரைக்கதை அமைப்புள்ள படங்களில், எனக்குப் பிடித்தவைகளின் கால வரிசையிலான பத்துப் பட்டியலில் முதல் ஆறு படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டோம். ஏழாவது இடத்தை ஒரே ஆண்டில் வந்த இரண்டு படங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். ‘ரன் லோலா ரன்’ படமும் அதே ஆண்டில் வந்திருந்தாலும், உலக அளவில் வெளியிடப்பட்டது அதற்கு அடுத்த ஆண்டில்தான் என்பதால் அதற்குத் தனியிடம் கொடுத்திருக்கிறேன். மெமெண்டோவும் 2001 ஆம் வருட “சன் டான்ஸ் உலகத் திரைப்பட விழா”வில் அங்கீகரிக்கப்பட்ட பின்பே பொதுப் பார்வையாளர்களுக்கு வெளியிடப்பட்டது என்பதால் தனியிடம் பெறுகிறது..

( 7 )

Sliding Doors (1998)

Snake Eyes (1998)


( 8 )

Run Lola Run (1998)

( 9 )

Amores Perros (2000)

( 10 )

Memento (2000)

இந்தப் பட்டியலைக் காலவரிசையில் அமைத்ததாலேயே மெமெண்டோவோடு 10 என்ற எண்ணிக்கை முடிந்துவிட்டது. இந்த வரிசையில் இடம்பெறக்கூடிய என் விருப்பத்துக்குரிய மற்ற படங்கள்..

Irreversible (2002)

Kill Bill vol.1 (2003)

Old Boy (2003)

Eternal sunshine of the spotless mind (2004)

Kill Bill vol.2 (2004)

Saw (2004)

Crash (2004)

Sin City (2005)

Babel (2006)

The Prestige (2006)… என்று நிறைய இருக்கின்றன.

80’களில் வந்த படங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இல்லாததற்குக் காரணம் என்னுடைய அறிதல் குறைபாடே. குறிப்பாக 80’களில் வந்த, போலந்து இயக்குனர் கீஸ்லோவ்ஸ்கியின் BLIND CHANCE என்ற படமே ‘ஸ்லைடிங் டோர்ஸ்’, ‘ரன் லோலா ரன்’ போன்ற படங்களுக்கு முன்னோடியாகக் கருதப்படுவது. அந்த இயக்குனரின் “மூன்று வண்ணங்கள்” எனும் தொடர்படங்களான “நீலம்” “வெள்ளை” “சிவப்பு” மற்றும் பத்துக் கட்டளைகளை விளக்கும் 10 அத்தியாய தொலைக்காட்சித் தொடரும் எனது விருப்பத்துக்குரியவை என்றபோதும், இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. ஆகவே இந்தப் பட்டியல் முழுமையானதும் இறுதியானதும் அல்ல.

‘காலத்தோடு விளையாடிய’ இந்தப் படங்களைப் பற்றி எழுதக் காரணமே, நான் தனிப்பட்ட முறையில் அவைகளைப் பற்றி ஒரு விரிவான அறிதலை ஏற்படுத்திக்கொள்ளவும், நான் எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் சில நான்லீனியர் திரைக்கதைகளைச் சீர்செய்துகொள்ளவும்தான்.

‘ஸ்லைடிங் டோர்ஸ்’ படத்தையும், தமிழில் ஜீவா இயக்கிய ‘12B’ படத்தையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதவேண்டுமென நினைத்திருக்கிறேன். 12B திரைக்கதையில் இருக்கும் மாபெரும் பிழை என்ன என்பதைப் பற்றியும், ஒரு படத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல், அது கையாளும் கருத்தாக்கத்தைப் பற்றி எந்தத் தெளிவும் இல்லாமல், மேலோட்டமாகப் பார்த்து காப்பியடித்துவிட்டு, தமிழ் ரசிகர்கள் இன்னும் வளரவில்லை என்று சொல்லும் அபத்தத்தைப் பற்றியும் எழுத எனக்கு சில விஷயங்கள் இருக்கின்றன.

பிரையன் டி பால்மா’ பற்றி நிச்சயம் ஒரு கட்டுரை எழுதுவேன், அப்போது ‘ஸ்நேக் ஐஸ்’ பற்றியும் கொஞ்சம் எழுதலாம். தீராத விவாதங்களை உருவாக்கிய ‘ரன் லோலா ரன்’ படத்தின் உட்கருத்து பற்றிய என் புரிதலை ஒரு தனிக் கட்டுரையாக எழுத வேண்டும். ‘அமொரெஸ் பெரோஸ்‘ பற்றி இணையத்தில் எழுதப்பட்ட நல்ல பதிவு எது என்று யாராவது சொன்னால் உதவியாக இருக்கும். நண்பர் சுரேஷ் கண்ணனின் தளத்தில் ஏராளமான நல்ல படங்கள் பற்றி எழுதப்பட்டுள்ளன, ஆனால் எனது பட்டியலுக்குத் தேவையான படங்கள் எதுவும் இல்லை. “மெமெண்டோ” பற்றி நான் எழுதாமல் விடுவதில் எந்தக் குற்றவுணர்வும் இல்லை, காரணம் தமிழ்ப் பதிவுலகில் மிகச் சிறப்பாகவே அந்தப் படம் அலசப்பட்டிருக்கிறது. சகபதிவர் ஜெய் மிகுந்த உழைப்போடு உருவாக்கியிருக்கும் 4 தொடர் பதிவுகள், அந்தத் திரைப்படத்தைத் தீவிரமாக அணுக விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது. அதற்கான இணைப்புகள் கீழே..

Christopher Nolan-னும் அரை டஜன் குழப்பங்களும்

Memento, இது வெறும் படமல்ல.. ஒரு அனுபவம்

Memento (2000) படத்தின் கதை

Memento-வின் புதிர்கள். பாகம் 3