நேர்காணல்: ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரும், திரைக்கதையாசிரியரும், தயாரிப்பாளருமான ஜார்ஜ் லூகாஸ், ஜூன் 19, 1999 அன்று அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.

பதின்ம வயதில் உங்களுக்கு ஒரு மோசமான சாலை விபத்து ஏற்பட்டதல்லவா, அது உங்கள் வாழ்க்கையை எந்த வகையில் மாற்றியது?

ஜார்ஜ் லூகாஸ்: நான் மேல் நிலைப் பள்ளியை முடிக்கும் சமயத்தில், வாழ்க்கையைத் தீர்மாணிக்கும் மிக முக்கியமான காலகட்டத்தில், அந்த விபத்து நடந்தது. அது எனக்கு எதைப் புரியவைத்தது என்றால், நம்முடைய உயிர் வாழ்க்கை எத்தனை மெல்லிய நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதையே. என் வாழ்க்கையிலிருந்து எதையாவது ஒன்றை உருவாக்கிவிட வேண்டும் என்கிற உந்துதல் அப்போதுதான் ஏற்பட்டது. எனக்கு நடந்த விபத்து எப்படிப்பட்டதென்றால், நியதிப்படி யாரும் உயிர் பிழைக்கவே முடியாதது. ஆகவே “இதோ நான் இருக்கிறேன்.. இனி ஒவ்வொரு நாளும் எனக்கு மேலதிகமாகக் கொடுக்கப்பட்டதே. எனக்கு மிகுதியாக ஒரு நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது அதனால் அதை நான் முழுக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்..” என்று தோன்றியது. அதற்கு முன்புவரை நான் ஒரு விளையாட்டுப் பையன், கார் மெக்கானிக்கிலும் கார் ரேஸிலும் மட்டுமே ஆர்வம். ஆனால் அந்த விபத்து எனக்குப் படிப்பில் கவணத்தை அதிகப்படுத்தி, தேர்வில் சிறப்பாக வெல்ல வழிவகுத்தது. படிப்படியாக எனக்கு மானுடவியலில் அதிக ஈடுபாடு ஏற்படவும், புகைப்பட ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், திரைப்படத்தைக் கண்டுகொள்ளவும், திரைப்படக் கல்லூரியில் சேரவும் காரணமாக அமைந்தது.

உங்களுக்குத் திரைப்பட ஆர்வம் எப்போதுமே உண்டல்லவா?

லூகாஸ்: இல்லை. நான் கலிபோர்னியாவின் மையத்தில் இருந்த ஒரு சிறுநகரில்தான் வளர்ந்தேன். அது ஒரு விவசாய சமூகம். இரு திரையரங்குகள் இருந்தன, எப்போதாவது படம் பார்ப்போம். எனக்கு 10-11 வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இல்லை. எனக்கு வேறு வகையான ஆர்வங்கள்தான் இருந்தன. மரவேலைப்பாடுகள் பிடிக்கும், எதையாவது கட்டி உருவாக்குவது பிடிக்கும். கார்கள் பிடிக்கும். ஓவியம் பிடிக்கும், வரைபடக் கலைஞனாகிவிட நிஜமாகவே விரும்பினேன், புகைப்படக் கலையும் பிடிக்கும். ஆனால் திரைப்படத்தில் எந்த ஆர்வத்தையும், நான் இளங்கலை மாணவனாவதற்கு முன்புவரை, கண்டுகொள்ளவே இல்லை.

திரைப்படத்தின் எந்த அம்சம் உங்களுக்கு ஆர்வமூட்டியது?

லூகாஸ்: அது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று நினைக்கிறேன். எனக்கு திரைப்படத்தில் ஆர்வமூட்டுவது அதன் ‘கவர்ச்சிகரம்’ அல்ல, தீவிரமான கடும் உழைப்பே. அது கட்டக்கடைசியில், எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு வழி, அவ்வளவே. நான் அடிப்படையில் வாய்மொழியை விட காட்சியையே அதிகம் சார்ந்தவன். நான் கதையை எப்படிச் சொல்ல விரும்புகிறேனோ அப்படிச் சொல்வதற்கான ஒரு வழியை, எனக்குக் கட்டுப்படக்கூடிய ஒரு ஊடகத்தை, நான் திரைப்படத்தில் கண்டுகொண்டேன் என்பதே என்னை ஆர்வம்கொள்ளவைத்தது.

நான் திரைக்கதைகளை எழுதியபோதிலும், ஒரு எழுத்தாளனாக என்னை நான் நினைக்கவில்லை. வரலாறையும், கலாச்சாரங்களையும், சமூக அமைப்பையும் பயில்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தபோதிலும், ஒரு கல்வியாளனாக என்னால் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்க முடியுமென்று நினைக்கவில்லை.

படமெடுப்பதில் உங்களுக்கு இயற்கையாகவே திறமை இருந்ததாக நினைக்கிறீர்களா?

லூகாஸ்: எல்லாருக்குமே திறமை இருக்கிறது, அது என்ன என்பதைக் கண்டறியும்வரை சுற்றித் தேடிக்கொண்டிருக்க வேண்டும். ‘திறமை’ என்பது இரு விஷயங்களின் கலவை. ஒன்று, எதை நீங்கள் மிகத் தீவிரமாக நேசிக்கிறீர்களோ, எதில் உங்களை முழுக்க இழந்துவிட முடியுமோ — எந்த வேலையை உங்களால் காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணிவரை நிறுத்தாமல் செய்யமுடியுமோ அது— மற்றும், உங்களுக்கு இயல்பாகவே அமைந்த ஒரு செயல்திறன், ஒன்றை நேர்த்தியாகச் செய்யும் ஆற்றல், ஆகியவற்றின் இணைப்பே திறமை என்பது. பொதுவாக அவை இரண்டுமே ஒன்றாகச் சேர்ந்து போகக்கூடியவை.

நிறைய பேர் ஒன்றைச் செய்ய விரும்புவீர்கள், ஆனால் அதில் அவ்வளவாக சிறந்து விளங்கமாட்டீர்கள். உங்களுக்கு நான் சொல்வதெல்லாம், நீங்கள் செய்ய விரும்புவதை விடாமல் தொடர்ந்து செய்யுங்கள் என்பதே. உங்களுக்குச் சிறப்பாகக் கைகூடும் ஏதோ ஒன்றை நிச்சயம் கண்டுகொள்வீர்கள். அது எதுவாகவும் இருக்கலாம். ஏராளம் ஏராளமாய் விதவிதமாய் எத்தனையோ இருக்கின்றன. உங்களுக்கானதை நீங்கள் கண்டடையும் வரை தேடியபடியே இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.

நீங்கள் படமெடுக்க ஆரம்பித்தபோது, அது உங்களுக்கு எளிதாகக் கைவந்ததா?

லூகாஸ்: படமெடுப்பதைக் கற்றுக்கொள்வது மிக எளியது. எதைப் பற்றிப் படமெடுப்பது என்பதைக் கற்றுக்கொள்வதுதான் கடிணமானது. நீங்கள் முதலில் படிக்க வேண்டியது வாழ்க்கையைத்தான். அதன் பிறகு படமெடுக்கும் தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொண்டால் போதும், ஏனென்றால் அவை மிக எளிதாகப் பயின்றுவிடக் கூடியவை. ஆனால் வரலாற்றைப் பற்றிய நல்ல புரிதலும், இலக்கியம், உளவியல், அறிவியல் ஆகியவையே படமெடுப்பதற்கு மிகமிக அவசியமானவை.

உங்களுக்கு ஏற்பட்ட தடைகளையும், வெற்றிகளையும் திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

லூகாஸ்: கடின உழைப்பு மிக முக்கியம். தீவிரத்தோடு உடல்வருத்தி உழைக்காமல் நீங்கள் எந்த இடத்தையும் அடைந்துவிட முடியாது. நான் தொட்ட உயரங்களை விட அடைந்த வீழ்ச்சிகளே அளவில் மிக அதிகம். முதலில் நான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தபோதே எல்லாரும் என்னிடம், “நீ என்ன செய்கிறாய்? இது உனது கேரியரை முட்டுச் சந்தில் கொண்டு நிறுத்தும்” என்றுதான் சொன்னார்கள். ஏனென்றால் அக்காலத்தில் எவருமே திரைப்படக் கல்லூரியிலிருந்து நிஜமான திரையுலகத்துக்குள் நுழைந்ததே இல்லை. வேண்டுமானால் ஏதாவது ஒரு பெருவணிக நிறுவனத்தில் சேர்ந்து தொழில் விளக்கப் படங்களை எடுக்கலாம், மற்றபடி கேளிக்கை திரைத்துறைக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டதே இல்லை. ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவே இல்லை, ஏனென்றால் எனக்கு அப்போது கேளிக்கைத் துறைக்குள் நுழையும் எண்ணமே இருக்கவில்லை. எனக்குப் படமெடுக்க வேண்டும் அவ்வளவுதான், சான் ஃப்ரான்சிஸ்கோ திரும்பிச் சென்று சோதனை முயற்சிப் படங்களையும், ஆவணப்படங்களையுமே நான் எடுக்க விரும்பினேன். ஆகவே நான் அவர்களைப் பொருட்படுத்தாமல் திரைக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். படிப்பு முடிந்து நான் சான் ஃபிரான்சிஸ்கோ கிளம்பியபோது, எல்லாரும், “எதற்காக அங்கே செல்கிறாய்?” என்று கேட்டார்கள். “அங்குதானே நான் வசிக்கிறேன்” என்றேன். “சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்தபடி உன்னால் திரைத் துறைக்குள் செயல்படவே முடியாது” என்று சொன்னார்கள். நான் சொன்னேன், “நான் எங்கு வாழ விரும்புகிறேனோ அங்கு வாழ விரும்புகிறேன், அதோடு, நான் படமெடுப்பேன் ஏனென்றால் படமெடுப்பதை நான் நேசிக்கிறேன்” என்று.

முதல் ஆறு வருடங்கள் நம்பிக்கையற்றதாகவே இருந்தன. அப்போது பலசமயங்களில் நான் யோசித்ததுண்டு, “இதை ஏன் நான் செய்துகொண்டிருக்கிறேன்? நான் உருப்படப்போவதில்லை. இதனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. நான் வெளியே சென்று நல்ல வேலை ஒன்றைத் தேடிக்கொள்ள வேண்டும், பிழைக்கும் வழியைப் பார்க்க வேண்டும்”. ஏனென்றால் நான் என் பெற்றோரிடமிருந்து கடனாகப் பணம் வாங்கியிருந்தேன். என் நண்பர்களிடமும் கடன் பெற்றிருந்தேன். அவைகளை எப்போதாவது திருப்பிச் செலுத்திவிடுவேன் என்கிற நம்பிக்கை அப்போது எனக்கே இல்லை. ஆனால் பணத்தேவை தவிர்க்க முடியாதது. சாப்பிட வேண்டும், வாடகை கொடுக்க வேண்டும், வேலையில் உதவும் நண்பர்களுக்குக் கொஞ்சமாவது சம்பளம் கொடுக்கவும் வேண்டும். என்னுடைய முதல் முழுநீளப் படத்தை எடுக்க அத்தனை ஆண்டுகள் ஆயின.

ஆனால் இப்போது திரைப்படக் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றும்போது நான் வழக்கமாகச் சொல்வேன், “நீங்கள் பெறக்கூடிய மிக எளிய வேலைவாய்ப்பு, உங்களுடைய முதல் படம்தான்” என்று. முதல் படத்துக்கான வாய்ப்பைப் பெறுவது மிக எளியது எப்படியென்றால், உங்களால் ஒரு படம் எடுக்க முடியுமா என்றே அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது. குட்டி குட்டிப் படங்களையும் வேலைகளையும் செய்திருப்பீர்கள், அதைக் கடைவிரித்து, வேகவேகமாகப் பேசி, உங்களால் ஒரு முழுநீளப் படத்தை எடுக்க முடியும் என்று ஒருவரை நம்பவைத்துவிடலாம். அவர்களும் படமெடுக்க வாய்ப்பளிப்பார்கள். ஆனால் அந்தப் படத்தை எடுத்த பிறகு, இரண்டாவது படத்துக்கான வாய்ப்பைத் தேடுவதுதான் மிகப் பெரிய கஷ்ட காலமாக இருக்கும். அவர்கள் எனது முதல் படத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்கள், “ஓ சரி.. உன்னுடைய சேவை இனி எப்போதும் எங்களுக்குத் தேவையில்லை..”

எது உங்களுக்கு இரண்டாவது பட வாய்ப்பைப் பெறத் தடையாக இருந்தது? ஒரு இயக்குனராக உங்கள் மேல் நம்பிக்கையில்லாததா அல்லது உங்கள் கதைக்கருக்களா?

லூகாஸ்: நான் தீவிரமான கலைப்படங்களையும், பரிக்ஷாத்த படங்களையும், ஆவணப் படங்களையும் எடுக்கும் உலகத்திலிருந்து வந்தவன். “சினிமா வேரித்தே” தான் எனக்கு விருப்பமானது. கதை இல்லாத, கதாபாத்திரங்கள் இல்லாத, தொனிக் கவிதைகள் (Tone Poems) தான் பிடித்திருந்தது, அப்போது சான் ஃபிரான்சிஸ்கோவில் அம்மாதிரிப் படங்கள்தான் எடுக்கப்படும்.

எனக்கு ஒருவகையில் குருவாக மாறிய ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்பலா, அப்போது ஒரு கதாசிரியராகவும், நடிகர்களை வைத்துப் பணிபுரியும் நாடக இயக்குனராகவும் இருந்தார், “நீயும் என்னைப்போல் இதையெல்லாம் செய்ய வேண்டுமானால் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொன்னார். நான் அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டேன். சொந்தமாகத் திரைக்கதைகளை எழுதிப்பார்த்தேன். எழுதுவதையும், நடிகர்களைப் பயன்படுத்துவதையும் நான் பயின்றேன்.

பல கதவுகளைத் தட்டி, பல மனிதர்களிடம் வாய்ப்புக் கேட்டு, முதல் படத்திலிருந்து இரண்டாவது படத்தைச் சென்றடைவதற்கு எனக்கு மூன்று நான்கு வருடங்கள் ஆயிற்று. வங்கியில் எந்தப் பணமும் இல்லாமல், திரைக்கதை எழுதிக்கொண்டும், வாய்ப்புக்காக அலைந்துகொண்டும், ஒரு பக்கத்தில் படத்தொகுப்பாளராக வேலை செய்துகொண்டும், இன்னொரு பக்கம் ஒளிப்பதிவாளனாக வேலை பார்த்துக்கொண்டும் இருந்தேன். சின்னச் சின்ன வேலைகள்செய்து, உயிரோடிருக்கவே போராடியபடி, யாரும் விரும்பாத ஒரு திரைக்கதையைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்தேன்.

அந்த நெருக்கடிகளை எப்படிச் சமாளித்தீர்கள்?

லூகாஸ்: முந்தைய காலடிக்கு முன்னால் இன்னொரு அடியை எடுத்துவைத்து முன்னே போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். குதிரைக்குக் கண்களின் பக்கவாட்டில் பார்க்காமலிருக்கப் போடப்படும் கவசத்தைப் போல ஒன்றை நாமும் போட்டுக்கொண்டு முன்னேறுவதும் அவசியம்.

எனக்கு அப்போது சில தயாரிப்பாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தபடிதான் இருந்தன. எனது முதல் முழுநீளத் திரைப்படமான THX, எந்தக் “கதை”யும் இல்லாதது, முழுமையான கதாபாத்திரங்கள் இல்லாதது, ஒரு வகையான “ஆவண்ட் கார்ட்” (Avant-Garde) படம். ஆகவே என்னைத் தொலைபேசியில் அழைக்கும் இந்தத் தயாரிப்பாளர்கள் எல்லாருமே, “நீங்கள் மிகச் சிறந்த திறமைசாலி என்று கேள்விப்பட்டோம். கதையில்லாத மெட்டீரியலை வைத்துச் சிறப்பாகக் காட்சிப்படுத்தத் தெரிந்த இயக்குனர் என்று சொன்னார்கள். நாங்கள் ஒரு சிறந்த இசைக் கோப்பு ஒன்றைத் தயாரித்திருக்கிறோம். அதற்குக் காட்சி வடிவத்தை நீங்கள் படமாக்க வேண்டும்” என்று கேட்பார்கள். அவர்கள் ஒரு பெரும்தொகையையும் சம்பளமாக முன்வைப்பார்கள். ஆனால் அவை எல்லாமே மிக மோசமான வேலைத் திட்டங்களாகவே இருக்கும். ஆகவே நான் வறுமையில் வாடியபடியே அந்தப் பெரும் தொகைகளையும் வேலைவாய்ப்புகளையும் நிராகரித்துக்கொண்டிருந்தேன். இறுதியில் ஒருவழியாக நான் எழுதிய “அமெரிக்கன் கிராஃபிடி” (American Graffiti) படமாவதற்கான வாய்ப்பு அமைந்தது.

படமெடுப்பது எளிய வேலை அல்ல. ஏராளமான இன்னல்களைச் சந்திக்கவேண்டிவரும். நான் சந்திக்கும் திரைப்பட மாணவர்களுக்குச் சொல்வேன், நீங்கள் எத்தனை சிறப்பாகப் படமெடுப்பீர்கள் என்பது முக்கியமல்ல, பிரச்சனைகளுக்கு நடுவில் உங்களால் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதே முக்கியம், ஏனென்றால் எப்போதுமே பிரச்சனைகள் சூழ்ந்தே இருக்கும். அதை ஒரு சாக்காக சொல்லவே முடியாது. நீங்கள் படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் கார்டில் காட்ட முடியாது “எங்களுக்கு நிஜமாகவே மோசமான பிரச்சனை ஏற்பட்டது. அந்தக் காட்சியின்போது நடிகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மேலும் அந்த குறிப்பிட்ட நாளில் மழை வந்து விட்டது. திடீரென்று கேமரா கோளாறாகிவிட்டது..” என்றெல்லாம் பார்வையாளர்களுக்கு எழுதிக்காட்ட முடியாது. நீங்கள் படத்தை மட்டுமே காட்ட முடியும், அது அவர்களுக்குப் பிடிக்க வேண்டும், எந்த சாக்குபோக்குக்கும் இடமே இல்லை. அதனால், உங்கள் வேலையில் மிகுந்த கவணத்தோடு செயல்பட வேண்டும், எத்தனைத் தடைகளை உங்கள் முன் கொண்டுவந்து கொட்டினாலும் அவற்றை நசுக்கிச் சமன்செய்தபடி போய்க்கொண்டே இருக்கவேண்டும்.

அமெரிக்கன் கிராஃபிடி வெளியாகி வெற்றி பெற்றபோது, அது எனக்கு ஒரு மிகப் பெரிய தருணமாக இருந்தது. நான் ஓரிடத்தில் தனியாக உட்கார்ந்து எனக்கு நானே நிஜமாகவே சொல்லிக்கொண்டேன், “சரி, நான் இப்போது ஒரு இயக்குனர். இனி வாய்ப்புகள் கிடைத்துவிடும். நான் திரைத்துறைக்குள் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டேன். எனது வணிகத்தை நான் தீர்மானிக்கலாம், மேலும் எனது எண்ணங்களைப் படமாக்கலாம், மனநிறைவான வகையில் படைப்பாற்றலைச் செலவிடலாம். இனி வெற்றி ஏதும் வராமல் போனாலும், நான் தொலைக்காட்சி விளம்பரங்களையோ ஆவணப்படங்களையோ எடுத்தபடி வாழ்ந்துவிட முடியும். எனக்கு எங்காவது ஒரு வேலை கிடைத்துக்கொண்டே இருக்கும். என்னால் இனி முதலீட்டுக்குப் பணத்தைத் திரட்டிவிட முடியும், நான் செய்ய விரும்புவதை மட்டும் செய்யலாம்.” அது ஒரு மிகச் சிறந்த உணர்வு. நான் வென்றுவிட்டேன், இனி நான் படமெடுப்பதை எதுவுமே தடுக்க முடியாது என்னும் உணர்வு.

( தொடரும் )