George Lucas

இன்று “ஸ்டார் வார்ஸ்” படத்தின் வணிக சாத்தியங்கள் கண்கூடாகத் தெரிகின்றன, 1970களில் முதல் படத்தை எடுப்பதற்குச் சிரமப்பட்டீர்களா?

லூகாஸ்: என்னுடைய முதல் இரு படங்களை எடுக்கத்தான் அதிக சிரமப்பட்டேன். நான் “ஸ்டார் வார்ஸ்” வேலைகளை ஆரம்பித்தபோது, எனது இரண்டாவது படமான “அமெரிக்கன் கிராஃபிடி” வெளியாகியிருக்கவில்லை. ஆகவே ஆரம்பத்தில் யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை. நான் சில பட நிறுவனங்களை அணுகியபோது அவர்கள் அதை நிராகரித்தார்கள். பிறகு ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி “அமெரிக்கன் கிராஃபிடி” பார்த்தார், அவருக்கு மிகமிகப் பிடித்துவிட்டது. நான் அவரிடம் “ஸ்டார் வார்ஸ்” திரைக்கதையை எடுத்துச் சென்றேன். அவர் சொன்னார், “பாருங்கள், இந்தக் கதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் நீங்கள் ஒரு சிறந்த இயக்குனர் என்று நான் நினைக்கிறேன். ஆகவே நான் உங்களை நம்பி முதலீடு செய்யப்போகிறேன், அந்தக் கதையை நம்பி அல்ல” என்று சொன்னார். அப்படித்தான் அந்தப் படம் உருவாகியது.

“அமெரிக்கன் கிராஃபிடி” படத்திலிருந்து வெகுதூரம் விலகிய வேறுமாதிரிப் படமல்லவா “ஸ்டார் வார்ஸ்”?

லூகாஸ் : ஆமாம், உண்மைதான். மேலும் என்னுடைய எல்லாப் படங்களுமே, திரைக்கதை நிலையில், புரிந்துகொள்ள மிகக் கடினமானவை. ஏனென்றால் அவை வழமையிலிருந்து பெரிதும் மாறுபட்டவை. நான் அவைகளைச் செய்தபோது முன்னுதாரணங்களே இல்லை. எப்போதுமே படநிறுவன நிர்வாகிகள் தாங்கள் ஏற்கனவே பார்த்தவைகளை வைத்துத்தான் யோசிப்பார்கள். தாங்கள் அதற்கு முன் பார்த்திருக்காத ஒன்றை அவர்களால் யோசிக்கவே முடியாது.

George Lucas hanging out : Making of American Graffiti

வழக்கமான சிந்தனைகளுக்கு எதிர் திசையில் பயணித்ததுதான் உங்களுடைய சிறப்பு என்று சொல்லலாமா?

லூகாஸ் : ஆமாம், அதுதான் அதிக சிரமங்களுக்கும் காரணமாக அமைந்தது. இப்போது திரும்பிப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது, ஏனென்றால் அதன் பிறகு, அதைப் பின்பற்றி நிறையபேர் படங்கள் எடுத்துவிட்டார்கள். இப்போது அவை அமெரிக்கக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி போலவே கலந்துவிட்டன, ஒரு காலத்தில் இவையெல்லாம் அந்நியமாகவும் தனித்தும் பார்க்கப்பட்டன என்பதை இப்போது யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.

உண்மையில் “அமெரிக்கன் கிராஃபிடி” படம்தான் வெகுஜன சினிமாவுக்கான எனது முதல் முயற்சி. ஆனால் அந்த வகையான படங்கள் அப்போது மிகவும் கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்ட போதிலும், நான் சிறுவனாக இருந்தபோது மிகவும் நேசித்த வகையைச் சேர்ந்ததாகும். நான் எப்படி வளர்ந்தேனோ அந்த வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதால் அவ்வகையான கதைகளில் எனக்குக் கூடுதல் ஈடுபாடு இருந்தது. மேலும் புதுமையான ஒரு கதை சொல்லும் முறையையும் நான் பயன்படுத்தினேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு கதைகளை இடைவெட்டாக சொல்லும் யுத்தி அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டது. இப்போது அந்த யுத்தி தொலைக்காட்சித் தொடர்களில் வழமையான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் அந்தப் படத்தையே இசையால் நிரப்பியிருந்தேன், பின்னணி இசை மட்டுமல்ல, பழைய பாடல்களை நிறையப் பயன்படுத்தினேன், அதுவும் அப்போது அவ்வளவாக இல்லாத ஒன்று. அதனால் ஆரம்பத்தில் சிலர், மொத்தப் படமுமே ஒரு மாண்டாஜ் பாடல் போல இருப்பதாகக் கருதி படத்தை வாங்கி வெளியிடத் தயங்கினார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அது ஒரு இரண்டாம் தரப் படங்களின் வடிவத்தில் இருப்பதாகவே முதலில் கருதப்பட்டது.

“ஸ்டார் வார்ஸ்” படத்துக்கும் அதுதான் நடந்தது. அந்த வகையான படங்கள் அப்போது விரும்பப்படாததாகவும் தகுதி குறைந்ததாகவும் கருதப்பட்டது. மேலும் அக்காலத்தில் எந்த அறிவியல் புனைவுப் படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றதே இல்லை. இயந்திரன்களும் விநோத வாகனங்களும் நிறைந்த என் கதையை அவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் அது சிறுவர்களுக்கான படம் போலவும் அவர்களுக்குத் தோன்றியது. ஆகவே பெரும்பாலான பட நிறுவனங்கள் என்னிடம் சொன்னார்கள், “இதோ பாருங்க, இதெல்லாம் டிஸ்னிதான் செய்யும், மற்றவர்களால் அது முடியாது, அதனால் நாங்கள் அந்தப் பிரதேசத்துக்குள் நுழைவதே இல்லை.” நல்ல வேளையாக ஒரு நிர்வாகி என் திறமையை மட்டும் நம்பி, தனக்கு அந்தக் கதை பிடிக்காத நிலையிலும் தயாரிக்க சம்மதித்ததால் தான் அந்தப் படம் சாத்தியமாகியது.

இந்த மாதிரி குழப்பமான சூழ்நிலைகளில் உங்களது தீர்மாணங்களின் மீது உங்களுக்கே அவநம்பிக்கை தோன்றவில்லையா? தோற்றுவிடுவோமோ என்கிற பயம் வரவில்லையா?

லூகாஸ் : ஒரு படம் உருவாகும்போது, அதுவும் குறிப்பாக திரைக்கதை எழுதும்போது ஏராளமான சந்தேகங்கள் வந்தபடியேதான் இருக்கும். நான் எனது முதல் வெளிப்புறப் படப்பிடிப்பை துனிஷியாவில் செய்தேன். அங்கே திட்டமிட்டிருந்ததை முழுமையாக என்னால் எடுக்க முடியவில்லை, ஆனால் எது எப்படியானாலும் பத்து நாட்களில் அங்கிருந்து கிளம்பியாகவேண்டும் என்கிற சூழ்நிலை. அங்கே நான் எடுத்தவைதான் படத்தின் ஆரம்பக் காட்சிகள் என்பதால், மொத்தப் படத்தின் படைப்புத் தரம் எப்படி வருமோ என்று எனக்குப் பெரும் அவநம்பிக்கை வந்துவிட்டது.

Alec Guinness and George Lucas

அந்தப் படத்துக்குத்தான் முதல் முறையாக வெளிப் படத்தொகுப்பாளரை நான் பயன்படுத்தினேன், ஏனென்றால் நானே ஒரு படத்தொகுப்பாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவன் என்பதால் அதுவரை தேவைப்பட்டிருக்கவில்லை. ஒரு பிரிட்டிஷ் எடிட்டர் படத்தொகுப்புச் செய்தார், வார இறுதியில் நான் அவரோடு சேர்ந்து தொகுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தேன், எதுவுமே சரியாக வரவில்லை. மிகுந்த மனச் சோர்வு ஏற்பட்டது. எடிட்டரைக் குறை சொல்ல முடியாது, அவர் திறமைசாலிதான், ஆனால் எதுவோ சரியாக இல்லை. ஆகவே ஒரு இயக்குனராக நான் சரியாக எடுக்கவில்லையோ என்று வருந்தினேன். ஆகவே ஞாயிற்றுக் கிழமைகளில் நானே உட்கார்ந்து படத்தொகுப்புச் செய்து பார்த்தேன். முதலிலிருந்து என் பாணியில் ஷாட்களைத் தொகுத்தபோது, என்னை அறியாமலேயே நான் தொகுக்கும் புள்ளிகள், முந்தய எடிட்டர் தொகுத்த இடத்திலிருந்து ஒரு ‘அடி’ விலகி இருப்பதை நான் உணர்ந்தேன். அவருக்குக் கொடுத்த அதே ‘டேக்’குகளைத்தான் நானும் பயன்படுத்தினேன், என்றபோதிலும், சிறிதளவே நகர்த்த நகர்த்த படம் வேறொரு வடிவமெடுக்க ஆரம்பித்தது. திடீரென்று எல்லாம் சரியாகிவிட்டது, நன்றாகவும் இருந்தது. அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது, பெரிய பாரம் குறைந்ததுபோல் மனநிம்மதி ஏற்பட்டது.

“ஸ்டார் வார்ஸ்” படத்துக்குப் பிறகுதான், பிரபலப் படக் கதாபாத்திரங்களின் உருவ பொம்மைகள் மற்றும் படத் தொடர்புடைய இலவச இணைப்புகள் சந்தையில் நடமாட ஆரம்பித்தன. திரைப்பட வணிகத்தில் அதுவொரு புது முறை அல்லவா? அந்தத் திட்டம் உங்களுக்கு எப்படி உருவாகியது?

லூகாஸ் : எப்படியாவது தப்பிப் பிழைத்தாக வேண்டும் என்கிற உந்துதல்தான் என்னை அங்கு இட்டுச் சென்றது. நான் “ஸ்டார் வார்ஸ்”க்கு எழுதிய கதை, ஒரு படத்துக்குள் முடித்துவிட இயலாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது. அதனால் நான் முதல் பகுதியை (First Act) மட்டும் ஒரு படமாக எடுப்பதென்றும், பின்னுள்ள மூன்றில் இரண்டு பாகத்தை விட்டுவிடுவதென்றும் முடிவெடுத்தேன். முதல் பகுதியே முழுநீளப் படத்துக்கான விஷயங்களோடு இருந்தது. ஆனால் நான் ஒரு முழு வருடத்தைச் செலவு செய்து முழுக்கதையும் முடித்து வைத்திருந்ததால், அவற்றை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்துவிடவும் முடியவில்லை. ஆகவே நான் எப்பாடுபட்டாவது மூன்று படங்களாக மொத்தக் கதையையும் எடுத்துவிடுவதென்று உறுதி பூண்டேன்.

‘டுவண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்’ நிறுவனத்தோடு நான் முதலில் ஒப்பந்தம் போடும்போதே, படத்தின் அடுத்த பாகங்களை எடுக்கும் உரிமையை என்னிடமே வைத்துக்கொண்டேன். ஏனென்றால் அவர்கள் தொடர் பாகங்களுக்கான திட்டத்தைப் புதைத்துவிட்டால் என்ன செய்வதென்ற பயம் இருந்தது. அதனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முதல் பாகம் வணிக ரீதியாக வென்றாலும் இல்லையென்றாலும் தொடர் பாகங்களை நான் எடுத்துவிடத் திட்டமிட்டேன். அதன் பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து சந்தைப் பொருள் விளம்பர உரிமத்தையும் பெற்றேன். அது அப்போது ஒரு பணவரவுக்கான வழியாக இருக்கவே இல்லை. தொலைக்காட்சித் தொடர்பான பொருட்கள் சந்தையில் எடுபடும், ஆனால் திரையரங்கில் ஒரு படத்துக்கு வெகு குறைந்த வாழ்நாளே என்பதால் அதற்கு அப்படி ஒரு விற்பனை வாய்ப்பு இல்லை. வீட்டில் ஒட்டும் போஸ்டர்களிலும் டி-ஷர்ட்டுகளிலும் என் படத்தைப் பயன்படுத்த வியாபாரிகளிடம் நான் ஒப்பந்தம் போட்டது, உண்மையில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில்தான். தயாரிப்பு நிறுவனத்தினர் படத்தைத் திரையரங்குக்குக் கொண்டு செல்வதுவரை நிறைய செலவு செய்வதால், அவர்கள் விளம்பரத்துக்கு அதிக செலவு செய்யத் தயங்குவார்கள் என்று நான் நினைத்தேன். எனது படம் வழக்கத்துக்கு மாறான ஒன்று என்பதால், அது வெளிவருவதற்கு முன்பே மக்களிடம் அறிமுகப்படுத்துவது அவசியம், அதன் வணிக வெற்றிக்கு இந்த விளம்பரங்கள் உதவும் என்பதே என் திட்டமாக இருந்தது. மேலும் இந்தப் படம் போதுமான கவணிப்பைப் பெற்றால்தான் மற்ற பாகங்களை என்னால் எடுக்க முடியும் என்பதும் என் கவலையாக இருந்தது.


படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்த பிறகே, சந்தையில் எங்களால் பொம்மைகள் மற்றும் இலவச இணைப்புகளுக்கான ஒப்பந்தங்களையும் போடமுடிந்தது. அப்போதுதான் “ஆக்ஷன் ஃபிகர்ஸ்” எனப்படும் கதாபாத்திர உருவ பொம்மைகளை சந்தையில் விற்கும் புதிய வியாபார யுத்தி கண்டறியப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக நான் ஒரு சுதந்திரமான படைப்பாளியாகவும், எனது படங்களுக்கு நானே முதலீடு செய்பவனாகவும், திரை வணிகத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பவனாகவும் ஆனதற்கு, முக்கியமான ஒரு காரணம், இந்த சந்தை விற்பனை யுத்தி என்று நிச்சயம் சொல்ல முடியும்.

படைப்புச் சுதந்திரம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லுங்கள்.

லூகாஸ் : என்னைப் பொருத்தவரை அது மிகமிக முக்கியமானது. பொதுவாகவே சீரிய படைப்பாளிகள், இன்னொருவர் பின்னாலிருந்து எட்டிப் பார்த்து “அதிலேன் பச்சை பூசக் கூடாது? இதில் நீலம் போடலாமே? அதை ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? இதை இப்படிச் செய்யலாமா? எனக்கு அது பிடிக்கவில்லை. இது சரியில்லையென்று நினைக்கிறேன்.” என்று சொல்வதை நிச்சயம் விரும்பமாட்டார்கள். சிஸ்டின் தேவாலயத்தை, மைக்கேலேஞ்சலோவும் போப்பும் இணைந்து உருவாக்கியதைப் போன்றது அது. நிச்சயமாக மைக்கேலேஞ்சலோ, போப்பின் மேல் கடுமையாக எரிச்சல் அடைந்திருப்பார். நம்மை திருப்திப்படுத்தினால் போதும் என்கிற சூழ்நிலையே படைப்பூக்கத்துக்குச் சிறந்தது.

Lucas & Spielberg

நாம் மதிக்கும் ஆட்களிடம் கருத்துக் கேட்பதும், நம் ஆசிரியர்களிடம் விவாதித்துப் படைப்பைச் சீர்செய்துகொள்வதும் கூட அம்மாதிரி சூழ்நிலையில்தான் சாத்தியமாகும். நாம் செய்வது என்ன என்பதைப் புரிந்துகொள்ளாத, அதை வேறு ஒன்றாக மாற்ற முனைக்கிற, ஒரு ஆளோடு சேர்ந்து வேலை செய்வது மிகமிக வெறுக்கத்தக்கது. நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது, எப்போதும் அச்சூழலுக்குள் போக விரும்பவில்லை. திரைப்படத்தை என்னால் வெறும் வியாபாரமாகப் பார்க்க முடியாது, ஒரு கலைப் படைப்பாக, என் வாழ்க்கையின் அர்த்தமாகத்தான் பார்க்க முடியும். அது திரைப்படப் பள்ளி மூலம் எனக்குள் உருவாகிய மனநிலை.

Indiana Jones

நான் எடுத்த எல்லாப் படங்களையும் பற்றி எனக்கு மிகுந்த பெருமையே இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது படங்களை நான் இப்போதும் விரும்பிப் பார்க்கிறேன். அவற்றில் சில ஓடின, சில ஓடவில்லை. மக்களுக்கு சில படங்கள் பிடித்திருந்தன, சில பிடிக்கவில்லை.

அப்படிப் பிடிக்காமல் போவது உங்களுக்குப் பரவாயில்லையா?

லூகாஸ் : பரவாயில்லை. எனது விருப்பம் படங்களை உருவாக்குவதில்தான் இருக்கிறது, அவற்றின் வளர்ச்சிப் படிநிலைகளே எனக்கு நிறைவைக் கொடுக்கின்றன. நான் சில புதுமைகளை முயற்சித்துப் பார்க்கிறேன், அது மக்களுக்குப் பிடிக்கவில்லையானால், பிடிக்கவில்லை அவ்வளவுதான். நான் பல திசைகளிலும் பண வரவை உருவாக்குவதன் முதல் காரணமே, புதிய முயற்சிகளைச் செய்வதற்குத்தான். அதற்குத்தான் நான் பணத்தைச் செலவு செய்கிறேன்.

திரைப்படக் கலை வருங்காலத்தில் எப்படி இருக்கும், எது முதன்மை பெறும்? அடுத்த சவால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

லூகாஸ் : டிஜிட்டல் யுகத்துக்குள் நுழைவதே திரைப்படத்தின் அடுத்த நகர்வு என்று நான் நினைக்கிறேன். நம் காலத்தில் திரையுலகில் நடக்கும் மிகப் பெரிய மாற்றம் இதுவே. பேசும் படங்கள், வண்ணப் படங்கள் வந்ததிற்கு இணையான மாற்றமாகவே இதை நான் பார்க்கிறேன்.

இணையம், சில சமூக மாற்றங்களை உருவாக்கப் போகிறது என்று நான் கணிக்கிறேன். அது ஏராளமான மக்களின் கைகளில் படக் கருவிகளைத் தரப்போகிறது. ஒரு படத்தை ஏராளமான வெளி ஆட்கள் தங்கள் விருப்பம்போலப் படத்தொகுப்பு செய்து, உருமாற்றி, தங்களுடைய படமாகவே மாற்றிக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள். அவற்றின் விளைவுகளை இப்போது சொல்ல முடியாது. விநியோக முறையும் மிக மிகப் பெரிய அளவில் மாறுதலடையும். ஆனால் ஒரு படத்தின் அடிப்படையான வேலைகளைப் பொருத்தவரை, டிஜிட்டல் யுகத்திலும் இப்போது இருக்கும் வழிமுறையே தொடரும் என்று நினைக்கிறேன், குறைந்தது 20-30 வருடங்களுக்கு அதில் பெரிய மாற்றம் இருக்காது.

Samuel L.Jackson & George Lucas

இப்போது சொல்வது கடிணம் என்ற போதிலும், வரும் காலத்தில் மிகப் பெரிய பிரச்சனையாக எது இருக்கும் என்றால், திரைபடங்கள் எப்படி சந்தையை சென்றடையும் என்பதும், சந்தைக்கு வந்த பிறகு அதன் நிலை என்னவாகும் என்பதுமே. படம் வெளியானதும், உதறிவிட்டு இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்க இனி படைப்பாளிகளால் எப்போதும் முடியாது என்றே நினைக்கிறேன். படம் வெளிவந்த பின்பு மக்கள் அதை ஒருவகையில் மறு உருவாக்கம் செய்துகொள்வார்கள் என்று தோன்றுகிறது. அது கலைஞனை எவ்வகையில் பாதிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அது சந்தை நிலவரத்தை எப்படியெல்லாம் மாற்றும் என்பதும் தெரியவில்லை. நாம் ஒரு மிகுந்த பரபரப்பான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லாம் எப்படிப் பரிணமிக்கப் போகின்றன என்பதைக் காண்பதற்கு மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.

(தொடரும்)

ஜூன் 19, 1999 அன்று ஜார்ஜ் லூகாஸ் அளித்த நேர்காணலின் தமிழாக்கம்.

சார்லஸ்.

.