இந்த படத்தொகுப்பு என்பது எனக்கு புரியவே புரியாத விசயம். சில ப்ரேம்களை கட் செய்வதின் மூலம் பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம் என்பது உண்மை தான் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் என்றாலும் என்னால் visualize செய்து பார்க்க முடியவில்லை (சில சேசிங் காட்சிகளைத் தவிர). ஏதேனும் உதாரணத்துடன் விளக்க முடியுமா?

மணிவண்ணன்.

அன்பின் மணிவண்ணன்,

படத்தொகுப்பை எழுதிப் புரியவைப்பது அத்தனை எளிய காரியமில்லை. செய்துகாட்டி ஓரளவு புரியவைக்கலாம். முழுக்கப் புரியவேண்டுமானால் நீங்களே செய்து பார்த்தால்தான் உண்டு. உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதற்குமுன், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் படத்தொகுப்பின் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரியவைப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.

‘படத்தொகுப்பு’ என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, திரைப்படம் ஒரு தனிக் கலை வடிவமாக (Art Form) உருவாகியது. சலனப் படம் ஒரு காட்சியைக் காட்டும் அவ்வளவே, அதை ஒரு கதையைச் சொல்ல, கருத்தைச் சொல்ல பயன்படுத்த முடியும் என்று கண்டது படத்தொகுப்பின் மூலம்தான். எழுத்துக் கலை, புகைப்படக் கலை, நடிப்புக் கலை எல்லாம் திரைப்படக் கலை தோன்றுவதற்கு முன்பே இருந்தவை, அவைகளைத் திரைப்படம் பயன்படுத்திக்கொண்டது. ஆனால் திரைப்படத்துக்காகவே உருவாகிவந்த ஒரே தொழில்நுட்பம் படத்தொகுப்புத்தான்.

பொதுவாக எல்லாருக்குமே, “ஷூட்டிங்” எனப்படுகிற படப்பிடிப்பு மட்டும்தான் ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் என்கிற புரிதலே இருக்கிறது. கேமராவில் காட்சிகளைப் பதித்துவிட்டால் படம் தயார் என்றே பலரும் நினைக்கிறார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். எனது பள்ளி நாட்களில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட UGC கல்வித்திட்ட நிகழ்ச்சியில், புனே திரைப்படக் கல்லூரி வழங்கிய “சினிமாவைப் புரிந்துகொள்ளுதல்” (Understanding Cinema) என்ற தொடரை நான் தொடர்ந்து பார்த்தேன். அதன் மூலமே நான் படத்தொகுப்பு என்றால் என்ன என்று முதலில் தெரிந்துகொண்டேன்.

தமிழரான ஹரிஹரன் (“ஏழாவது மனிதன்” திரைப்படத்தின் இயக்குனர், தற்போது சென்னை எல்.வி.பிரசாத் திரைப்படக் கல்விக்கூடத்தின் முதல்வராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்) எளிய ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கிய அந்த தொலைக்காட்சித் தொடர் வகுப்புகளில், என்னை அதிகம் கவர்ந்தவை படத்தொகுப்பு பற்றிய பாடங்களே. “Our Daily Bread” படத்தில், ஒரு மொத்த கிராமத்தினரும் சேர்ந்து, வெகுதொலைவிலிருக்கும் ஆற்றிலிருந்து ஒரு கால்வாயை வெட்டி ஊருக்கு நீர் கொண்டுவரும் காட்சித்தொகுப்பு பற்றிய வகுப்பும்; எனக்குப் பெயர் மறந்துபோன ஒரு ரஷ்யப் படத்தில், ஏராளமான பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் ஒரு ரயில் நிலையத்தில் காத்திருக்க, அவர்களின் குடும்பத்து ஆண்களைப் போருக்கு அழைத்துச் செல்லும் இராணுவ ரயில், முகம் பார்க்க முடியாத மின்னல் வேகத்தில் கடந்துசெல்லும் காட்சித்தொகுப்பு பற்றிய வகுப்பும்; எனக்கு மிகப் பெரிய விழித் திறப்பாக இருந்தன.

பின்பு நான் சென்னையிலிருக்கும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தபோது, ஆசிரியர், “ஒரு திரைப்படம், எழுத்தாளர் மற்றும் படத்தொகுப்பாளரின் மேசைகளில்தான் உருவாக்கப்படுகிறது” என்று சொன்னபோது, சகமாணவர்கள் மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளானதைக் கவணித்தேன். ஆனால் எத்தனைப் படித்தாலும், கேட்டுத் தெரிந்துகொண்டாலும், படம் பார்த்துப் புரிந்துகொண்டாலும்; நாமே ஒன்றை எழுதி, படம் பிடித்து, தொகுத்துப் பார்த்து, மீண்டும் மீண்டும் திருத்தி, மூவியாலாவிலும் பெரிய திரையிலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கற்றுக்கொள்வதற்கு இணையே இல்லை. எனது இரண்டாம் ஆண்டில் இயக்கிய சிறியசிறிய பயிற்சிப் படங்களின் போதும், மூன்றாம் ஆண்டின் இறுதியில் குறும்படத்தை இயக்கும்போதும்தான் உண்மையில் படத்தொகுப்பு எத்தகைய மாயத்தை உருவாக்குகிறது என்பதை நான் ஓரளவுக்கு உணர்ந்தேன்.

பார்வையாளர்களை கனவு நிலையில் வைத்திருக்க ஒரு மேஜிக் நிபுணர் பயன்படுத்தும் வித்தைகளுக்கு இணையானது படத்தொகுப்பு. மிகச்சரியாக தொகுக்கப்பட்டால் மட்டுமே ஒரு காட்சித்தொடர் நம்பகத் தன்மையோடு இருக்கும். தொகுப்புப் புள்ளிகள் என்பவை இசையின் தாளக்கட்டு போன்றவை, அவற்றின் சிறிய மாற்றங்கள் கூட ஒன்றை ரசிப்புக்குரியதாகவும், ரசிக்க முடியாததாகவும் மாற்றிவிடும். ஒரு காட்சியின் மனநிலை (Mood) மற்றும் உணர்ச்சிகரம் (Emotion) சரியாக அமைவதற்கு, நடிப்பு, வசனம், ஒளியமைப்பு, கேமராக் கோணம் மட்டும் சரியாக இருந்தால் போதாது, படத்தொகுப்பின் சிறிய பிழை கூட காட்சியின் அழகை முழுக்கச் சிதைத்துவிடும்.

படத்தொகுப்பை அறிந்துகொள்ள ஆர்வமிருந்தால் The Cutting Edge: The Magic of Movie Editing (2004) என்கிற ஒன்றரை மணிநேரம் ஓடும் ஆவணப் படத்தை அவசியம் பாருங்கள். (அது இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது, ஆனால் தயவுசெய்து அதற்கான இணைப்பை என்னிடமே கேட்காதீர்கள்) மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம், படத்தொகுப்பின் நுணுக்கங்களை விளக்குகிறது, அதன் வரலாற்றையும் முன்னோடிகளைப் பற்றியும் விரிவாகச் சொல்வதோடு, தேர்ந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பேட்டிகளையும் கொண்டுள்ளது. திரைக்கலையைப் பயிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகப் பயனுள்ளது. மற்றவர்களும் ஒரு புரிதலுக்காக சும்மா பார்த்துவைக்கலாம்.

அந்த ஆவணப்படத்தின் ஒரு சுருக்கமான முன்னோட்டத்தைக் கீழே இணைத்திருக்கிறேன்.

மணிவண்ணன், சில பிரேம்கள் குறைக்கப்படுவதாலோ சேர்க்கப்படுவதாலோ என்ன பெரிய மாற்றம் வந்துவிடும் என்றும், அதை உதாரணங்களோடு விளக்குமாறும் கேட்டிருந்தீர்கள். உங்களுக்குப் பதிலளிக்க இதோ.. டரண்டினோவும் ஸ்பீல்பெர்க்கும் வருகிறார்கள்.. பாருங்கள்..

சார்லஸ்.

.

.