.

சென்ற இடுகையில் நான் குறிப்பிட்ட “நம் தினசரி உணவு” (“Our Daily Bread”) படத்தின் அந்த உச்சக் காட்சியை யூ ட்யுப்-யில் எதேச்சையாகக் கண்டடைந்தேன். அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷனில் பார்த்தபிறகு, மீண்டும் இப்போதுதான் பார்க்கிறேன் என்றபோதிலும், அதன் பல ஷாட்கள் எனக்கு அப்படியே நினைவில் தங்கியிருந்திருக்கிறது என்பதை ஆச்சர்யமாக உணர்ந்தேன்.

.

1934ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கப் படமான இதை, அக்காலத்தின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவரான கிங் விதோர் (King Vidor) இயக்கியிருக்கிறார். இவருடைய ஒரு படத்தை நான் பார்த்திருக்கிறேன், சென்னையின் ஏதாவதொரு திரைப்பட அமைப்போடு தொடர்புடையவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய அந்தப் படம், டால்ஸ்டாயின் “போரும் அமைதியும்” இலக்கியத்தின் அமெரிக்கத் திரைப்பதிப்பு. அவர் இன்னொரு புகழ்பெற்ற இலக்கியத்தையும் படமாக்கியிருக்கிறார், அது, அயன் ராண்ட் எழுதிய “தி ஃபவுண்டன்ஹெட்”. கிங் விதோர் தனது முதல் குறும்படத்தை 1913-யில் எடுத்திருக்கிறார், இறுதியில் 1980யில் ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார், இத்தனை நீண்ட காலம் இயக்குனராக இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே.

.

.

பஞ்சத்தைப் போக்குவதற்கு, அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட, ‘நமக்கு நாமே’ திட்டம்தான் சிறந்தது, என்பதே “நம் தினசரி உணவு” படத்தின் ஒரு வரிக் கதை.

.

மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி (Great Depression) நடந்த காலத்தில், மாநகரில் வேலையிழந்த தொழிலாளிகள் சிலர் குடும்பத்தோடு கிராமப்புறத்துக்குத் திரும்பி, சமத்துவமுள்ள ஒரு லட்சியக் குடியிருப்பை உருவாக்கி, ஒன்றுகூடி விவசாயம் செய்து வாழ முனைகிறார்கள். ஆனால் மழையில்லாத அந்தப் பஞ்சகாலத்தில், அரசின் எந்த உதவிகளும் கிடைக்காத நிலையில், தங்கள் பயிர்கள் வாடாமல் காக்க அவர்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சிறிது தொலைவிலிருக்கும் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் வெட்டி, நீரை ஊருக்குக் கொண்டுவர வேண்டும்..

.

.

ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல, ஆற்றிலிருந்து நீரைக் கொண்டுவருவதற்காக ஒரு ஊரின் மொத்தப்பேரும் சேர்ந்து உழைப்பதைப் பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கிறது. முதல், இடை, கடை என்று எல்லாமே நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சித்தொடரில், பல்வேறு மனிதர்கள் பல்வேறு விதமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதையும், புவியியல் அமைப்பையும், காலத்தையும், தூரத்தையும் பார்வையாளர்களுக்குப் புரியவைத்திருக்கும் விதம் ஆச்சர்யமூட்டுகிறது. மேலும் ஆண்களின் உடலுழைப்பையும், பெண்களின் ஒத்துழைப்பையும், குழந்தைகளையும் காட்சியில் பயன்படுத்தியிருக்கும் விதமும் மிக நன்றாக இருக்கிறது. ஒன்றுபட்டு உழைத்தால் வாழலாம், என்கிற நம்பிக்கையை, வார்த்தைகளின் உதவியில்லாமல் காட்சிப்படுத்தலின் மூலமே வழங்கியிருப்பதுதான் இதன் சிறப்பு. திரைக்கலையின் தனித்தன்மையும் அதுதானே.

.

நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட, (எனக்குப் பெயர் மறந்துபோன) ரஷ்யப் படத்தையும் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சி, சிறந்த தாளக் கட்டுமானமுள்ள படத்தொகுப்புக்கு ஆகச் சிறந்த உதாரணம். முதல் அல்லது இரண்டாம் உலகப் போர் நடக்கும் காலம், ஒரு சிற்றூரின் பெரும்பாலான ஆண்கள் கட்டாயத்தின்பேரில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பல மாதங்களுக்குப் பின்பு, அவர்களது படைப்பிரிவு நாட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது என்றும், அவர்கள் செல்லும் இராணுவ ரயில் அவர்களது சொந்த ஊர் வழியாகத்தான் செல்லும் என்றும், கடிதங்கள் மூலம் சொந்தங்களுக்குத் தெரியவருகிறது. அந்தக் குறிப்பிட்ட காட்சி, ஒரு பெண் முகத்து ஒப்பனையை சரிபார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.. அது அந்த சிற்றூரின் ரயில் நிலையம்.. ஏராளமான பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் காத்திருக்கிறார்கள்.. அவர்களது கண்களில் ஆர்வமும், எதிர்பார்ப்பும், தவிப்பும் கலந்திருக்கின்றன.. ரயில் வருகிறது.. ஆனால் மிக மிக வேகமாக.. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கணவர்களை, அப்பாக்களை, பிள்ளைகளை ஒரு முறை பார்த்துவிட அலைபாயும் விழிகளோடு பரிதவிக்க.. அந்த ரயில் முகம் பார்க்க முடியாத மின்னல் வேகத்தில் அந்த ரயில் நிலையத்தைக் கடந்து செல்கிறது.. இறுதியில் மொத்தப்பேரும் ஏமாற்றத்தோடு நிலையத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதோடு அந்தக் காட்சி முடியும்.

.

யாருக்காவது இந்தக் காட்சி எந்தப் படத்தில் என்று தெரிந்தால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். மீண்டும் பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறது.

.

.

Advertisements