புகழ்பெற்ற இயக்குனரும், திரைக்கதையாசிரியரும், தயாரிப்பாளருமான ஜார்ஜ் லூகாஸ் அவர்கள் ஜூன் 19, 1999 அன்று அளித்த நேர்காணல்.

தமிழாக்கம் : சார்லஸ்

.

இறுதிப் பாகம்

.

உங்கள் தோல்விகளைப் பற்றிச் சொன்னீர்கள், ஆனால் மிகப் பிரமாண்டமான வெற்றிகளையும் கண்டவர் நீங்கள். அந்த மாபெரும் வெற்றிகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?

லூகாஸ் : வெற்றி மிகக் கடிணமான ஒன்று. நாம் நினைப்பதை விட அதன் தாக்குதலைச் சமாளிப்பது மிகமிகச் சிரமமானது. என்னுடைய முதல் வெற்றிப்படம் “அமெரிக்கன் கிராஃபிடி” என்றபோதிலும், அது அத்தனை பிரமாண்டமானது இல்லை. மேலும் அது மிகத் தாமதமாக வந்த வெற்றி என்பதால் ஓரளவுக்கு உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. “ஸ்டார் வார்ஸ்” தான் கடிணமாக இருந்தது. என்னுடைய நண்பர்களில் சிலர் ஏற்கனவே பெரிய வெற்றிகளைப் பார்த்திருந்தார்கள், அவர்கள் முதலிலேயே என்னை எச்சரித்தார்கள், “பையா, கவணமாக இரு. அது உன்னைத் தாக்கும்போது மிகப் பெரிய சுழலுக்குள் தூக்கி எறியப்படுவாய், எச்சரிக்கை.”. நான் அலட்சியமாக, “இல்லை இல்லை, நான் அமெரிக்கன் கிராஃபிடி வெற்றியை மிக எளிதாகக் கடந்துவந்தவன், ஆகவே இதையும் சமாளித்துவிடுவேன்” என்றேன். ஆனால், ஸ்டார் வார்ஸ் எத்தனை மகத்தான வெற்றி என்பது எனக்கு உறைத்தபோது, உளவியல் ரீதியாக அதை உள்வாங்க முடியாமல் திகைத்துவிட்டேன். அது போன்ற ஒரு நிகழ்வுக்குப் பிறகு சமநிலைக்குத் திரும்ப கொஞ்ச காலம் ஆகும். நமக்கு என்ன நடந்திருக்கிறது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எல்லாரும் நம்மைப் பார்க்கும் விதம் எப்படி மாறியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், அதனோடு சேர்ந்து வாழப் பழகுவதற்கும் சிறிது காலம் எடுக்கும்.

உளவியல் மாறுதல்களை விளக்கிச் சொல்வது கடினமானது. அதுவரை உங்களுக்கிருந்த எல்லா இடையூறுகளும் திடீரென்று இப்போது மாயமாகிவிட்டது. எதையாவது செய்துவிட எங்காவது வாய்ப்புக் கிடைக்காதா என்று நெருக்கியடித்துப் போராடிக்கொண்டிருந்த உங்கள் முன், இப்போது எதையும் செய்வதற்கு முடிவில்லாத வாய்ப்புகளின் வரிசை காத்து நிற்கிறது. எவராவது “சரி” என்று சொல்வார்களா என காத்திருந்தது மாறி. இப்போது எல்லாரிடமும் எப்படி “வேண்டாம்” என்று சொல்வது என தெரியாமல் விழிக்கும் நிலை. நிறைய பேர் அச்சமயத்தில் என்ன செய்துவிடுவார்கள் என்றால், வருகிற எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். ஏனெனில் அந்த எல்லா வாய்ப்புகளுமே சிறந்ததாகவே இருக்கும், நீங்கள் கிடைக்காதாவென ஏங்கியதாகவும் இருக்கும். ஆனால் உங்களால் அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்ய முடியாது. அப்படிச் செய்ய முயற்சித்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை மிகுந்த கவணச் சிதறல்கள் மிக்கதாக மாறிவிடும். உங்கள் செய்நேர்த்தி ஒரு மையத்தில் குவியாமல், இறுதியில் பெரும் சரிவுக்கே இட்டுச்செல்லும்.

Lucas and Spielberg

அப்படி வெற்றியின் உச்சத்தில் நீங்கள் இருக்கும்போது, உங்களைச் சமநிலையில் வைத்துக்கொள்ள, குடும்ப உறவினர்கள் நிறைந்த சூழலில் இருப்பது அவசியம். நிறைய நண்பர்கள் அவசியம், அவர்களே உங்களை நேர்மையாக மதிப்பிடுவார்கள். அவசரப்படாதீர்கள், ஒரு வருடம் கூட சும்மா இருங்கள், சூழலில் பரபரப்பு அடங்கும்வரைக் காத்திருங்கள். வெற்றியின் போதையிலிருந்து வெளியே வாருங்கள், சகஜ நிலைக்குத் திரும்புங்கள்.

நான் ஒரு பழக்கத்தை, அடுத்த படத்திலிருந்து ஏற்படுத்திக்கொண்டேன். எனது படம் வெளிவரும்போதெல்லாம் நான் எங்காவது கடற்கரைக்குச் சென்றுவிடுவேன். சில வாரங்களுக்கு புதுப் படம் தொடர்பாக நடக்கும் எல்லா பைத்தியக்காரத்தனமான பரபரப்புகளையும், கொண்டாட்டங்களையும், கருத்துத் தெறிப்புக்களையும் நான் தெரிந்துகொள்வதே இல்லை. வணிகத்தில் வென்றதா தோற்றதா என்பதையும் விசாரிப்பதில்லை, யாரிடமும் தொடர்புகொண்டு பேசவும்மாட்டேன். சில வாரங்கள் கழித்துத் திரும்பிவரும்போது எல்லா அலையும் ஓய்ந்திருக்கும். அதன் பிறகே அந்தப் படத்தின் விளைவு என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். வெற்றியோ தோல்வியோ நம்மைத் தாக்கி வீழ்த்திவிடாமல் இருப்பதற்கு இதுவொரு சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

Star Wars : Harrison Ford

உங்களுடையது ஒரு வெகுஜனக் கலை வடிவம், விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?

லூகாஸ் : ஆரம்பத்தில் நானும் எல்லாரையும்போல அனைத்து விமர்சனங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய படங்களைப் பற்றி மட்டுமல்ல, எல்லாருடைய படங்களைப் பற்றிய விமர்சனங்களையும் நான் படித்துவிடுவேன். தொடர்ந்து திரையுலகில் இருக்கும்போது, அந்த விமர்சகர்களை நேரில் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பங்கள் அமையும். காலப்போக்கில் நான் புரிந்துகொண்டது என்னவென்றால், தற்கால அமெரிக்க விமர்சனங்களின் தரம் மிகமிகக் குறைவானது என்பதையே. அந்தத் துறையே இப்போது, அது என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வதற்காக இல்லை என்பதையும், ஆகவே அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதையும் உணர்ந்தேன்.

சில வெளிநாட்டு விமர்சகர்கள் இருக்கிறார்கள், ஒரு படத்தை கலை நுணுக்கத்தோடு அணுகி ஆராய்ந்து எழுதுகிறார்கள். அவற்றைப் படிப்பது உண்மையிலேயே சில விஷயங்களை அறிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் நம் அமெரிக்க ஊடகத்துறை முழுக்க முழுக்க சிறுபேட்டிகளையும் விளம்பர வருவாயையுமே நம்பி வாழ்கின்றன. பத்திரிகைகள், விற்பனையைப் பெருக்குவதற்காக எதையும் எழுதும். பரபரப்பான ஒரு தலைப்புக்காக, வாசகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து கவணத்தை ஈர்ப்பதற்காக, அவர்கள் எந்தப் படத்தையும் விளாசித் தள்ளிவிடுவார்கள். வயதும் அனுபவமும் கூடியபோது, அந்தக் கருத்துகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவேண்டியதில்லை என்னும் பக்குவத்தை அடைந்துவிட்டேன். ஆனால் அதே சமயம், நான் எப்போதும் சுயவிமர்சனம் செய்தபடியே இருப்பவன். மேலும் எனது நெருங்கிய திரையுலக நண்பர்கள் எப்போதும் நேர்மையோடும் தீவிரமாகவும் விமர்சிப்பவர்கள். அவர்களது கருத்துக்கள் எதுவானாலும் மதிப்பளித்துப் பரிசீலிப்பேன்.

Francis Ford Coppola and George Lucas

புதிய தொழில்நுட்பங்களைத் தேடிச் செல்வது, ஒலியமைப்பிலும், ஒளிப்பதிவிலும் தரத்தைக் கூட்டுவதில் அதிக கவணம் செலுத்துவது, ஆகியவற்றுக்கு நீங்கள்தான் மற்ற இயக்குனர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறீர்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை விரிவுபடுத்தியபடியே இருப்பதற்கு எது உங்களுக்கு உந்துதலாக இருக்கிறது?

லூகாஸ் : பலரும் தொழில்நுட்பத்தை அதுதான் உச்சபட்சம், அதுவே இறுதி என்பதுபோலப் பார்க்கிறார்கள், ஆனால் நான் எதையும் முடிவாக நினைப்பதில்லை. திரைப்படம் என்னும் கலைவடிவத்தின் படைப்புச் செயல்பாடு, செய்நேர்த்தி, கலை நுணுக்கம் எல்லாம் முழுக்க முழுக்கத் தொழில்நுட்பம் சார்ந்தவை. முதன்முதலில் சலனப் படம் எடுக்கும்போது, அவர்கள் ஒரு ரயில் நிலையத்தில் கேமராவை வைத்து, ரயில் வருவதைப் படமாக்கினார்கள். அதைப் பார்த்து அந்தக்கால மக்கள் “அடடா என்னவொரு அதிசயமான தொழில்நுட்பம்” என்று வியந்தார்கள். ஆனால் அது ஒரு கலை வடிவமாகவும், படைப்பு மனத்தின் வெளிப்பாடாகவும் வளர்ச்சியடைந்தபோது, அதன் தொழில்நுட்பமும் மிகமிகச் சிக்கலானதாக மாறியது. அதன்பிறகு நாம் ஒலியை இணைத்ததோ, வண்ணத்தைச் சேர்த்ததோ அல்லது தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பமோ, எல்லாமே, கலைச் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்காக உருவானவை மட்டுமே. மிக நல்ல ரசனையுள்ள கதைகளைச் சொல்வதற்கும், நாம் நினைப்பதை மேலும் தெளிவாக வெளிப்படுத்துவதற்கும், நம் கற்பனைகளை மென்மேலும் விரிவுபடுத்துவதற்குமே இந்தத் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. இப்போது நாம் வளர்த்தெடுத்தபடி இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பமும், மற்ற நவீன கருவிகளும், யுத்திகளும் எல்லாமே, முன்பு எப்போதும் சொல்லியிருக்க முடியாத பிரம்மாண்டமான கதைகளைக் கையாள்வதற்கும், எல்லையற்ற கற்பனை வளத்தைப் பயன்படுத்துவதற்குமே உதவுகின்றன.

அடுத்த பத்து-இருபது ஆண்டுகளுக்கான உங்களின் கனவுகள் என்னென்ன?

லூகாஸ் : திரைப்படங்கள் எடுப்பதுதான் எனது வாழ்க்கை. எனக்குக் கதை சொல்வது பிடிக்கும், ஏராளமான கதைகள் என் தலைக்குள் அடைந்துகிடக்கின்றன, அவைகளை என் காலம் முடிவதற்குள் வெளியில் கொண்டுவந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு மிச்சமிருக்கும் வாழ்நாளுக்குள் இத்தனையையும் செய்துவிட முடியுமா என்பதே எப்போதும் மலைப்பாக இருக்கிறது. ஆனால் எப்படியாவது அதைச் செய்துவிட வேண்டும் என்பதே என் கனவு.

எனது இளவயதில், எப்படியாவது படமெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டும், நான் விரும்பியதைச் செய்ய வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு விரும்பியதைச் செய்யும் வாழ்க்கை அமைந்தது, பெரிய பெரிய நிறுவனங்களை நான் ஆரம்பித்திருக்கிறேன், வல்லுனர்களை வைத்துப் புதிய தொழில்நுட்பங்களைக் கட்டியெழுப்பியிருக்கிறேன், நான் செய்ய விரும்பும் படங்களுக்குத் தேவையான புற விஷயங்களிலும் தனிப்பட்ட முறையில் கவணம் செலுத்தி அவற்றை வளர்த்திருக்கிறேன். அப்போதைக்கு என் மனம் எதில் ஈடுபடுகிறதோ அதையே நான் செய்வேன். எனக்கு எப்போதுமே நீண்டகாலத் திட்டங்கள் எதுவும் இருந்ததில்லை. நான் அப்போது எதைச் செய்துகொண்டிருக்கிறேனோ அதில்தான் முழுக்கவணமும் இருக்கும்.

.

உங்கள் தலைமுறையின் முன்னணி இயக்குனர்கள் எல்லாருமே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள். மிகுந்த தொழில் போட்டியுள்ள திரைத்துறையில் இந்த இணைப்பு எப்படிச் சாத்தியமாகியது?

From left to right: Steven Spielberg, Martin Scorsese, Brian De Palma, George Lucas, Francis Ford Coppola.

லூகாஸ் : எங்கள் தலைமுறையின் மிகப் பெரிய பலமே அதுதான் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலேயே எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. நாங்கள் திரையுலகத்துக்குள் நுழைய முயற்சித்தபோது, அதன் கதவு இறுக்கமாக மூடியிருந்தது. அது மிகமிக உயரமான சுவராகவும் யாராலும் நுழைய முடியாததாகவும் இருந்தது. அதன் வாசலில், உதவி கேட்டு நிற்கும் பிச்சைக்காரர்களைப் போல நாங்களெல்லாரும் நின்றிருந்தோம். அப்போதுதான் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தோம், இணைந்து ஒரே அணியாக நின்று போராடினால்தான் எங்களால் பிழைத்திருக்க முடியும் என்று தீர்மானித்தோம். எங்களில் ஒருவரால் திரையுலகத்துக்குள் நுழைய முடிந்தாலும், அவர் மற்றவர்களுக்கு உதவிசெய்து அவர்களையும் உள்ளிழுக்க முயற்சிக்க வேண்டும், எல்லாரும் நுழைந்த பிறகும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவேண்டும். அப்படித்தான் எங்களுக்குள் உறுதியான அந்த இணைப்பு உருவாகியது. அப்படிப்பட்ட ஒரு பிணைப்பின் மூலம்தான் ஆதி மனிதர்கள் பிழைத்திருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு சமூக அமைப்பும் இப்படிப்பட்ட பிணைப்பின் மூலமே முதன்முதலில் தோன்றியிருக்கும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, போட்டி போட்டுக்கொண்டு இருப்பதை விட, ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் எல்லாரும் வெற்றிகரமாக வாழமுடியும் என்பதே உண்மை. விவசாய சமூகமோ, வேட்டைச் சமூகமோ, நகரங்களோ, அரசுகளோ எல்லாம் இப்படித்தான் ஆரம்பித்திருக்க முடியும். ஆனால் பலசமயங்களில், நாம் தனித்தனியாக இருப்பதைவிட குழுவாக மிகப் பலத்தோடு இருப்போம் என்பதை, மறந்துவிடுகிறோம். நமக்கே எல்லாம் வேண்டும், மற்றவர்களுக்கு உதவக்கூடாது, மற்றவர்கள் வெற்றி பெறக்கூடாது என்ற நினைப்பு எப்போதும் இறுதியில் அழிவையே தரும். எனது நண்பர்களும் நானும் இத்தனை வெற்றிகரமாக ஆனதற்கு, நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டோம் என்பது ஒரு முக்கியமான காரணம்.

.

நீங்கள் ஏற்கனவே நிறைய சாதித்துவிட்டீர்கள், இனி கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

லூகாஸ் : நான் இதை சற்று வேறு விதமாகப் பார்க்கிறேன். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது, ஆனால் காலம் குறைவாக இருக்கிறது, ஆகவே ஓய்ந்துவிடக் கூடாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தொலைக்காட்சியில் வரும் சவால் நிகழ்ச்சியொன்றில், போட்டியாளருக்கு ஐந்தே நிமிடங்கள் கொடுத்துப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் விட்டுவிடுவார்கள். அவர், கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அதிகமான பொருட்களை எடுத்துத் தள்ளுவண்டியில் சேர்க்க வேண்டும். இப்போது என்னுடைய நிலைமையும் அதுதான். ஏராளமான ஐடியாக்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நான் நின்றுகொண்டிருக்கிறேன், எனது காலம் முடிவதற்குள் நான் எத்தனையை எடுத்துச் சேர்க்கப்போகிறேன் என்பதே என்முன் உள்ள சவால்.

.

திரையுலகத்துக்கு உங்களுடைய மிகமுக்கியமான பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்?

லூகாஸ் : திரைப்படம், வேதியல் சார்ந்த ஊடகத்திலிருந்து, டிஜிட்டல் சார்ந்த ஊடகத்துக்கு நகர்ந்ததில் என்னுடைய பங்களிப்பும் இருக்கிறது. அது ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகப் பின்னாளில் கருதப்படும். அடுத்தது என்னுடைய கதைகள், எதிர்காலத்தில் அவை ரசிக்கப்படுமோ இல்லையோ தெரியாது, ஆனால் என்னால் முடிந்தவரைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன். அவை என் காலத்தில் மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதைப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் வரலாற்றைக் கூர்ந்து பார்த்தால், ஒருவரின் வாழ்நாளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படும் ஒரு விஷயம், காலப்போக்கில் மறக்கப்படலாம். அதேபோல, அவர் முக்கியமானதாகக் கருதாத ஒரு பங்களிப்பு, அவருக்குப் பின் ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி நாம் கவணம்கொள்ள வேண்டியதில்லை, ஏனென்றால் காலம் எதை வைத்திருக்கும் எதை நிராகரிக்கும் என்பதை நாம் அறியவே முடியாது.

ஆகவே, நாம் செய்துகொண்டிருப்பதை முடிந்தவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் அவ்வளவே. கல்வித்துறைக்குள் சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை என்னால் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன். திரைப்படத் தொழிலில் ஏற்கனவே சில மாற்றங்களை என்னால் செய்ய முடிந்திருக்கிறது. இன்னும் சில அற்புதங்கள் நிகழவிருக்கின்றன, அவற்றைப் பற்றி மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறேன். என் பெயர் சொல்லும்படியாக அவை அமையும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

(முற்றும்)

சுட்டிகள் :

ஜார்ஜ் லூகாஸ் பற்றி அறிய

ஜார்ஜ் லூகாஸ்-யின் தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிய

லூகாஸ்-யின் விசுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனம்

லூகாஸ்-யின் ஒலி அமைப்பு நிறுவனம்

லூகாஸ்-யின் கல்வி நிறுவனம்

.

.