.

‘நிறுத்தல் நகர்வு’ என்றால் என்ன என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். அது எப்படி ஜடப் பொருட்களுக்கு உயிர்கொடுத்து நடமாடவிடுகிறது என்பதையும் சுருக்கமாகப் பார்த்தோம். அந்தத் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக, படமெடுக்கச் சிரமமான பெரிய விலங்குகளையும், அசாத்தியமான பூதங்களையும், ராட்சஸர்களையும், வேற்றுக் கிரகத்தவர்களையும் படத்தில் “நடிக்க”வைப்பதற்கும் அது பயன்படுத்தப்பட்டது.

மினியேச்சர் எனப்படும், துல்லியமான அளவு விகிதத்தில் சிறிய உருவமாகச் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து, “நிறுத்தல் நகர்வு” முறையில், வேண்டிய அசைவுகளையும், நகர்வுகளையும், முகபாவங்களையும் உருவாக்கிப் படம்பிடிப்பார்கள். பிறகு அதை “ஆப்டிகல் எஃபெக்ட்ஸ்” முறையில் மற்ற நிஜ நடிகர்கள் நடித்த படச்சுருளோடு சேர்த்து மறுஒளிப்பதிவு செய்வார்கள். இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, மிகப் பெரிய அளவில் வெற்றியையும், பாராட்டையும் பெற்ற முதல் படம் 1933-யில் வெளிவந்த முதல் “கிங் காங்”. மற்ற எல்லா நடிகர்களையும்விட அதிகம் புகழ் பெற்ற அந்தப் படத்தின் நாயகன், “நிறுத்தல் நகர்வு” முறையால் ஆட்டுவிக்கப்பட்ட ஒரு களிமண் பொம்மை.

.

Ray Harryhausen

.

இந்த யுத்தியைப் படமாக்கியதில், எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி “ஜேஸனும் அர்கணாட்களும்(Jason and the Argonauts) என்ற படத்தில் எலும்புக் கூடு வீரர்களோடு நடக்கும் சண்டைக் காட்சி. பின்னாளில் “தி மம்மி” உட்படப் பல படங்களில் இதே போன்ற காட்சிகள் பிரதி எடுக்கப்பட்டன. ஆனால் கணினித் தொழில்நுட்பமேதும் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட இந்தக் காட்சியின் நுட்பங்கள் வியக்கவைக்கின்றன. ‘நிறுத்தல் நகர்வு’ துறையின் ஆகப்பெரிய சாதனையாளராக இன்றுவரை கருதப்படும் ரே ஹாரிஹூசன், இந்த மூன்று நிமிடக் காட்சிக்காக, நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். யுடியூப்-யில் எனக்குப் பாதிக் காட்சிதான் கிடைத்தது அதைக் கீழே இணைத்திருக்கிறேன்.

.

.

இதே படத்தில் வரும் “டாலோஸ்” எனும் ராட்சஸன், கிங் காங்குக்கு அடுத்தபடியாக அதிகப் புகழ் பெற்றவன். அந்தக் காட்சியையும் கீழே இணைத்திருக்கிறேன். மேலே உள்ள காட்சி பிடித்திருப்பவர்கள் மட்டும் இதைப் பார்க்கலாம், மற்றவர்கள் தாண்டிச் சென்றுவிடலாம். காரணம், தற்கால கிராஃபிக்ஸ் உச்சங்களைப் பார்த்தவர்களுக்கு இவை சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம்.

.

.

முழுக்கக் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட ‘நிறுத்தல் நகர்வு” கார்ட்டூன் படங்களும் மிகப் பிரபலமாக இருந்திருக்கின்றன. வரைகலை கார்ட்டூன்கள் இருபரிமாணத்தில்தான் இருக்கும், மினியேச்சர்-ஸ்டாப் மோஷன் பயன்படுத்தும்போது முப்பரிமாணம் சாத்தியமானது. எனக்கு மிகப் பிடித்தது “பிங்கு” என்னும் தொலைக்காட்சித் தொடர், அதிலிருந்து ஒரு சிறு பகுதி..

.

.

எண்பதுகளுக்குப் பிறகும், ஏராளமான பிரபலப் படங்களில் “நிறுத்தல் அசைவு” பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் முழுக்காட்சியையும் அதைக்கொண்டு செய்யாமல், கணினித் தொழில்நுட்பத்தோடு இணைத்தே பயன்படுத்தப்பட்டது. அதனால் அந்தக் கலை அதற்குப் பிறகு பெரிய வளர்ச்சி ஏதும் இல்லாமல் தேக்கமடைந்தது.

.

Tim Burton

.

மீண்டும் அதற்கு உயிர் கொடுத்தவர் இயக்குனர் டிம் பர்டன் (Tim Burton) என்றே சொல்லலாம். அவர் தனது “கிறிஸ்மசுக்கு முந்தைய கொடுங்கனவு” (The Nightmare Before Christmas – 1993), மற்றும் “பிண மணமகள்” (Corpse Bride – 2005) ஆகிய, பெரியவர்களுக்கான கார்ட்டூன் படங்களை, முழுவதும் நிறுத்தல் நகர்வைப் பயன்படுத்தி எடுத்தார். அற்புதமான கலையம்சம் கொண்ட படங்கள் அவை. சாகஸங்களை மையப்படுத்தாத கார்ட்டூன் படங்களுக்கு, இந்தத் தொழில்நுட்பமே ஆகச் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். “பிண மணமகள்” படத்தின் முன்னோட்டம் கீழே

.

.

திரைப்பட ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் துறையில் கணினித் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக, பின்னடைவை சந்தித்தவைகளில் மிக முக்கியமானது “நிறுத்தல் நகர்வு” (Stop Motion). ஆனாலும் ஏதொவொரு வகையில் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டும் இருக்கிறது அது.

சமீப காலமாக, இசைத் தொகுப்புகளைக் காட்சிப்படுத்தும் முன்னணி இயக்குனர்கள் தொடர்ந்து நிறுத்தல் நகர்வைப் பயன்படுத்துகிறார்கள். ஆழமான தீவிரமான உளவெளிப்பாடுகளை நிறுத்தல் நகர்வின் மூலம் காட்டி அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். கவித்துவத்தைக் காட்சிப்படுத்தவும், மனவோட்டத்தைப் பிந்தொடரவும், கனவுக்கும் நனவுக்குமாகத் தாவவும் நிறுத்தல் நகர்வைப் பயன்படுத்தும்போது அற்புதமான அழகியல் கைகூடுகிறது. உதாரணத்துக்குக் கீழே ஒரு பாடலை இணைத்திருக்கிறேன். கடந்த ஓராண்டாக கிட்டத்தட்ட நூறு முறை பார்த்துவிட்டேன் என்றாலும், இன்னும் தீராததாக இருக்கிறது..

.

.

இந்தப் பாடலில் துளியும் கணினி பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் சொன்னபோதெல்லாம் நண்பர்கள் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். முழுப்பாடலும் ஒரே இடத்தில், ஒரே காட்சிச் சட்டத்துக்குள் எடுக்கப்பட்டிருந்தாலும், நாம் அந்தப் பெண் தனது கனவில் நடந்து செல்வதை, படியிறங்குவதை, ரயிலில் பயணிப்பதை, வானத்தில் பறப்பதை, கடலில் மூழ்கி நீந்துவதை, மீன்களோடு விளையாடுவதை, காதல் கொள்வதை எல்லாம் தொடர்பு அறுபடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வைப் பெறுகிறோம். என்னவொரு கற்பனை, படைப்பாற்றல் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

இறுதியாக மற்றொரு பாடலையும் இணைத்திருக்கிறேன். இதுவும் ஒரு சிறந்த கலையனுபவம். தரையில் கிடந்தபடி மூவுலகையும் சுற்றிவரும் நாயகன். தேர்ந்த ஓவியர்கள் சேர்ந்து உருவாக்கியது.

.

.

(முற்றும்)

..

..