RAY HARRYHAUSEN

சிறுவயதில் நான் அதிசயித்தவைகளில் ஒன்று, மாயாபஜார்-யில், “கல்யாண சமையல் சாதம்” பாட்டின் தொடர்ச்சியாக வரும் மாயாஜாலம். ரங்காராவின் கையசைப்பிற்கு உணவுப் பாத்திரங்கள் ஓடிவருவதும்; ஏற்கனவே குண்டாக இருக்கும் அவர், அவ்வளவையும் சாப்பிடுவதற்காகவே தன் உருவத்தை இன்னும் பெரிதாக்கிக்கொள்வதும்; லட்டுக்கள் புவியீர்ப்பை எதிர்த்து மேலெழுந்து அவர் வாய்க்குள் நுழைவதும், வசீகரமானவை. அதிலும் குறிப்பாக, பாத்திரங்கள் ஓடிவருகிறபோது பின்னால் வரும் ஒரு குடமும் செம்பும், ஆரம்பத்தில் தனித்தனியாக வந்து, நடுவில் செம்பு ஒரு குழந்தையைப் போலத் தாவி குடத்தின் மேலேறி சுழன்றபடியே செல்லும். இயக்குனர் கே.வி.ரெட்டி மற்றும் படப்பிடிப்பில் ஈடுபட்டவர்களின் நகைச்சுவை உணர்வும், ஈடுபாடும், நுணுக்கமும் அதில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

கீழே அந்தப் பாடலின் தெலுங்கு மூலத்தை இணைத்திருக்கிறேன். யுடியூப்-யில் தமிழில் இருக்கும் காட்சி பாடலோடு முடிந்துவிடுகிறது, தொடர்ந்துவரும் மாயாஜாலம் அதில் இல்லை. (கண்டசாலாவின் இசையும், குரலும், ரங்கா ராவின் பாவனைகளும் எந்த மொழியிலும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கிறது. இருந்தாலும் பாட்டைத் தவிர்த்து நேரே மாயாஜாலக் காட்சியைக் காண விரும்பினால், 2:25 நிமிடத்திலிருந்து பார்க்கலாம்)

.

.

இந்தக் காட்சியில் மூன்றுவிதமான ஸ்பெஷல் எஃபெக்ட் யுத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் கேமராவைக்கொண்டே செய்துவிடக் கூடிய யுத்தி, படத்தொகுப்பில் உருவாக்கப்படும் எஃபெக்ட், மற்றும் லேப்-யில் செய்யப்படும் ஆப்டிகல் எஃபெக்ட்.

ரங்காராவ் பெரிய உருவமாக வளர்வது போன்ற எஃபெக்ட், முழுக்கப் படப்பிடிப்பிலேயே செய்யப்பட்டிருக்கிறது. ஒரு ஆள் கேமராவை நோக்கி வந்தால், அருகில் வரவர அவரது உருவம் திரையில் பெரிதாகும் என்பது எல்லாருக்கும் தெரிந்தது. அதிலும், ‘வைட் ஆங்கிள் லென்ஸ்’ (Wide Angle Lens) உபயோகித்தால், அருகில் இருப்பது பிரம்மாண்டமாகவும், சற்றுத் தள்ளியிருப்பது சிறியதாகவும் தெரியும், மேலும் அனைத்தும் ஃபோகஸிலும் இருக்கும். முன்னணியிலும் பின்னணியிலும் எல்லாம் அப்படியே இருக்க நடிகர் மட்டும் “வளர்ந்து பெரிதாகிறார்” என்கிற தோற்றம் வரவேண்டுமானால், ஃபோகஸ் மாறாமல் நிலையாக இருப்பது அவசியம். கேமராவில் வைட் ஆங்கிள் லென்ஸ் மாட்டி, எதிரே டிராக் போட்டு, டிராலியில் நடிகரை உட்காரவைத்து, டிராக்கின் இறுதியிலிருந்து தள்ளிக்கொண்டு முன்னால் வந்தால், திரையில் அவர் சிறிது சிறிதாக வளர்வதுபோல் தெரியும். டிராலியை மறைக்க லோ ஆங்கிளில் கேமரா வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அதனால் மட்டும் மறைத்துவிட முடியாது, காரணம், போட்டிருப்பது வைட் ஆங்கிள் லென்ஸ், அதில் அனைத்தும் தெரியும். அதனால் முன்னணியில் பாத்திரங்களையும் உணவுக் குவியலையும் வைத்து மறைத்திருக்கிறார்கள். மேலும் லோ ஆங்கிள், அன்னாந்து பார்ப்பது போன்ற உணர்வைத் தரும், ஆகவே நடிகர் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்ட தோற்றத்தைத் தருகிறது. இப்போது மீண்டும் ஒருமுறை, ரங்கா ராவ் வளர்வதைப் பாருங்கள்..

இரண்டாவது, லேப்-யில் செய்யப்படும் ‘ஆப்டிகல் எஃபெக்ட்’ முறை இந்தக் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக இரு வெவ்வேறு படச்சுருள்களை இணைத்துத் தேவையான விளைவை, ஒரு புதிய படச்சுருளில் மறுஒளிப்பதிவு செய்வது எல்லாமே ஆப்டிகல் எஃபெக்ட்ஸ்தான். படத்தின் மேல் பெயர்களைப் போடுவதிலிருந்து, காட்சி மாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் Dissolve, Fade In-Out, Wipe, மற்றும் கனவின் அருவ நிலை, ஆவிகள் வரையில் ஒரு படக்காட்சியின் மேல் இன்னொன்று தெரிவது எல்லாமே ஆப்டிகல் எஃபெக்ட்தான். அதுவே, லட்டுக்கள் மேலே பறந்து தாங்களாகவே ரங்காராவின் வாய்க்குள் நுழைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

லட்டுக்களும் ரங்காராவும் தனித்தனியாகப் படம்பிடிக்கப்பட்டு, பின்பு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மிகச் சரியாக ரங்காராவின் வாய் இருக்கும் பகுதியிலிருந்து, லட்டுக்கள், மேலேயிருந்து கீழே தட்டுக்குக் கொட்டப்பட்டிருக்கிறது. பிறகு அது ரிவர்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் அந்தக் காட்சியைக் கூர்ந்து பாருங்கள், எப்போதும் தட்டில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் லட்டுக்கள், வாய்க்குள் நுழையும் ஷாட்களில் மட்டும் கலைந்திருக்கும். அதுவும், அந்த ஷாட்டில் வாய்க்குள் நுழைபவை மட்டுமே தட்டில் கலைந்து கிடக்கும் மற்ற லட்டுகள் வரிசையாகவே இருக்கும். மேலேயிருந்து அவை கொட்டப்பட்டதனாலேயே கலைந்திருக்கின்றன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு ஷாட்டை ‘மாஸ்க்’ செய்து ஒன்றுக்கு மேற்பட்டமுறை படம்பிடிக்க கேமராவிலேயே வசதியிருக்கிறது, அதேபோல ரிவர்ஸில் படம்பிடிக்கவும் முடியும். ஆனால் இந்த இரண்டையும் சேர்த்துச் செய்வது இயலாதது, அதனாலேயே இந்த எஃபெக்ட் கேமராவில் செய்யப்படவில்லை, ஆப்டிகல் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

மூன்றாவதாக, படத்தொகுப்பின் மூலம் உருவாக்கப்படும் “அனிமேஷன்” முறையில் உணவுப் பாத்திரங்களின் நடமாட்டம் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் பலருக்கும், ‘கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இல்லாமல் அனிமேஷன் இல்லை’ என்ற தவறான புரிதலே இருக்கிறது. கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பல ஆண்டுகள் முன்பே திரைப்படங்களில் அனிமேஷன் செய்யப்பட்டது. எந்த உயிரற்ற ஜடப் பொருளையும், உயிருள்ள ஒன்றைப் போல நடமாடவிட்டால் அதற்கு ‘அனிமேஷன்’ என்று பெயர். திரைப்படக் கல்லூரியில் ஒரு விசேஷத் திரையிடலில் நான் பார்த்த ஒரு மிகப் பழைய குறும்படத்தில், ஒரு முக்காலியை உயிரோடு நடமாடவிட்டிருந்ததைப் பார்த்து அசந்துபோனேன்.

அது ஒரு ஜெர்மானிய மௌனப்படம் என்று நினைவு, அப்பா வீட்டை விட்டுப் புறப்படுகிறார், முக்காலி (மூன்று கால் உள்ள ஸ்டூல்) ஒன்று தானும் அவரோடு உடன்செல்ல விரும்புகிறது. அவர் பாசமாக ‘உன்னைக் கூட்டிச் செல்ல முடியாது’ என்பதுபோல் சொல்ல, அது ஏமாற்றமடைகிறது. அப்பா வாசலுக்கு வர, முக்காலியும் கூடவே வருகிறது, அவர் ‘சொன்னால் புரிந்துகொள், நீ வரக்கூடாது’ என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடக்க, முக்காலி வருத்தத்தோடு வாசலில் நிற்கிறது. பிறகு என்ன நினைத்ததோ, சட்டென்று குடுகுடுவென்று ஓடி அப்பாவைப் பிந்தொடர்கிறது. அவர் அதைப் பார்த்துவிடுகிறார், கோபமாக அதட்டி வீட்டுக்குப் போகச் சொல்கிறார். அது பயந்து திரும்பி வீட்டுக்கு ஓடுகிறது. அப்பா நிம்மதியடைந்து தொடர்ந்து நடக்க, முக்காலி மீண்டும் வேகமாக ஓடிவருகிறது, அவருக்குத் தெரியாமல் ஒளிந்தபடி அவர் பின்னாலேயே வருகிறது. ஒரு திருப்பத்தில், அதைப் பார்த்துவிடுகிறார், கடுமையாக எச்சரித்து வீட்டுக்குப் போகும்படி அதட்டுகிறார் அப்பா. அது அடம்பிடித்தபடி அங்கேயே நிற்கிறது. அப்பா எரிச்சலடைகிறார், இறுக்கமாக அதைப் பார்த்தபடி நிற்க, முக்காலி தயங்கி, பின்பு திரும்பி மெதுவாக நடந்து வீட்டுக்குச் செல்கிறது. அரங்கில் மொத்தப் பேரும் உச்சுக்கொட்டியதும், கைதட்டியதும் இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அந்த முக்காலி, படம் ஆரம்பித்துச் சிறிது நேரத்திலேயே, ஒரு குட்டிப் பையனாகவோ அல்லது செல்ல நாய்க்குட்டியாகவோதான் தோன்றியது, அது ஒரு ஜடப் பொருள் என்பதே மறந்துவிட்டது. வரைகலையின் பயன்பாடே இல்லாமல், ஒரு நிஜமான மர முக்காலியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது அந்தப் படம். “டாய் ஸ்டோரி” வெளிவந்தபோது, படம் ஆரம்பிப்பதற்கு முன் பிக்ஸார் நிறுவனம் முதலில் தயாரித்த குறும்படத்திதைக் காட்டினார்கள். இரு மேசை விளக்குகள், தாயும் குழந்தையுமாக உயிர்பெற்று எழுந்ததைப் பார்த்தபோது, அந்தக் கலைப் பாரம்பரியம் முழுக்க அழிந்துவிடவில்லை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

மாயாபஜாரில் பாத்திரங்கள் நகர்ந்துவருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அதாவது அவற்றை அனிமேஷன் செய்ய, பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பெயர் STOP MOTION (நிறுத்தல் நகர்வு).

.

.

நமது ‘பார்வை’ எப்படி நிகழ்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். கண்ணிலிருக்கும் ‘ரெட்டினா’வில் பிம்பங்கள் விழுந்து, அந்தத் தகவல்கள் நரம்புகள் மூலம் மூளைக்குக் கடத்தப்பட்டு, அதன்மூலம்தான் நாம் எதையும் “காண்கிறோம்”. ஒவ்வொரு பிம்பமும், ஒரு விநாடியில் 125யில் ஒரு பங்கு நேரம் ரெட்டினாவில் ‘நின்று’ செல்கிறது. அப்படி ஒரு பிம்பம் ரெட்டினாவில் நிற்கும் அந்த நுண்நொடிப் பொழுதில், உலகில் எது நடந்தாலும் கண்ணுக்குத் தெரியாது. கண்ணின் இந்தத் தன்மைக்கு Persistence of vision என்று பெயர். ஆக நாம் உலகையே ஃப்ரேம் ஃப்ரேமாகத்தான் பார்க்கிறோம். இரு பிம்பங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் நடப்பதை நம் மூளை கற்பனையால் நிரப்பி முழுமை செய்கிறது. ஆகவே நாம் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாகவே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வை அடைகிறோம்.

இதைப் பயன்படுத்திக்கொண்டே திரைப்படம் உருவாகியது. ஒரு விநாடிக்கு 16 முதல் 24 உறைந்த படத்துண்டுகள் என்ற விகிதத்தில் திரையில் காட்டிக்கொண்டு சென்றால், நமது கண்ணும் மூளையும் அந்தக் காட்சியைத் தொடர்ச்சியான அசைவாக மாற்றிப் பார்த்துக்கொள்ளும். ஒரு குழந்தை பத்து விநாடிகள் படத்தில் ஓடிவருகிறது என்றால், தொடர்ச்சியான 240 ஸ்டில்களாகத்தான் அது திரையில் காட்டப்படுகிறது. ஒரு குலவிக் கல்லையும் சிறிது சிறிதாக நகர்த்தி, அந்த ஒவ்வொரு நகர்வையும் தனித்தனியாகப் படம் பிடித்து, அதே 240 ஃப்ரேம்களாக ஓடவிட்டால், பத்து விநாடிகளுக்கு அந்தக் குலவிக் கல்லும் குழந்தை போல ஓடிவரும். இதுதான் ‘நிறுத்தல் நகர்வு’ (Stop Motion) தொழில்நுட்பம்.

Ray Harryhausen

எந்த ஜடப் பொருளையும் இந்த முறையின் மூலம் உயிரோடு நடமாடவிடலாம். தேவையான மொத்த நகர்வை முதலிலேயே திட்டமிட்டு, பிறகு அதைச் சிறுசிறு அசைவுகளாகப் பிரித்துக்கொண்டு, பிறகு ஒவ்வொரு சிறு அசைவையும் முதல்-இடை-கடை என்று பிரித்து, அதைப் பல உறைந்த புகைப்படங்கள் போலக் கற்பனைசெய்து அமைத்து, அவற்றைத் தனித்தனியாக ஒளிப்பதிவு செய்துகொள்வார்கள். அப்போது மிகமிக முக்கியமாகக் கவணிக்க வேண்டியது, ஒளியமைப்பிலோ கேமராவிலோ சிறிய மாற்றம் நடந்தால் கூட, இறுதி விளைவு நேர்த்தியாக இருக்காது. ஆகவே ஆரம்பத்திலேயே கேமராவிலும், ஒளிக் கருவிகளிலும், செட்டிலும் உள்ள எல்லா திருகிமாற்றும் விசைகளையும் பிடிகளையும் ஒரு குறிப்பிட்ட அலகை இறுதிசெய்து வைத்துவிடுவார்கள், பிறகு இறுதிவரை யாரும் எதிலும் எந்த மாற்றமும் செய்யக்கூடாதென்ற அறிவிப்பு கொடுக்கப்படும். அந்தக் காட்சியில் நடிகர் இருந்தால் அவரும் அசையக் கூடாது. இப்படிக் காட்சிச் சட்டத்துக்குள் எல்லாவற்றையும் நிறுத்திவைப்பதற்கு “ஸ்டாப் பிளாக்” என்று பெயர். அப்படி எடுக்கப்பட்ட உறைந்தநிலைப் படத்துண்டுகளிலிருந்து ஒன்று முதல் சில ஃப்ரேம்கள் வரை தேவைக்கேற்ப எடுத்துத் தொகுப்பார்கள். திரையிட்டால், ஜடப் பொருள்கள் உயிரோடு நடமாடும் மாயத்தைப் பார்க்கமுடியும். இப்போது மாயாபஜாரில் தட்டுக்களும் உணவுப் பாத்திரங்களும் தவழ்ந்து செல்வதையும், செம்பு குடத்தின் மேல் தாவி ஏறிச் சுழன்றபடியே செல்வதையும், மற்றப் பாத்திரங்கள் விலகி வழிவிட முதலில் சாப்பிட வேண்டிய பதார்த்தம் ரங்காராவின் எதிரில் வந்து நிற்பதையும், மீண்டும் ஒருமுறை பாருங்கள்.

உலகின் சிறந்த “நிறுத்தல் நகர்வு” படங்களைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

.

(தொடரும்)

.

.