.

திரைப்படம் ஒரு காட்சிக்கலை. அதன் கதை, வசனங்கள் எல்லாம் இரண்டாமிடத்தையே பெறமுடியும், காணொளியாக வரும் காட்சிவடிவமே அதன் அழகியலை நிர்ணயிக்கிறது. அதனாலேயோ என்னவோ, எனக்கு மிகவும் பிடித்த காட்சியமைப்பு எது என்று நான் யோசிக்கும் போதெல்லாம், என் நினைவுக்கு முதலில் வரும் காட்சிகள் எல்லாமே வசனங்கள் அற்றவையாகவோ, அல்லது மிகமிகக் குறைந்த வசனங்கள் கொண்டவையாகவோ இருக்கின்றன. முழுக்க அதன் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தின் மூலமே, தூய கலை வடிவமாக மாறும், ஒளிஒலிக் கவிதைகள் அவை.

அத்தகைய காட்சிகளில் ஒன்று “நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்” (THE GOOD, THE BAD, AND THE UGLY – 1966) படத்தில் வரும் ஒரு மயானக் காட்சி. ‘அசிங்கமானவ’னாக அறியப்படும் கதாபாத்திரம், நூற்றுக்கணக்கான கல்லறைகளுள் எதிலோ ஒன்றில் புதைக்கப்பட்டிருக்கும் தங்கத்தைத் தேடி ஓடும் காட்சி அது. அவனது கண்களில் தெரியும் பேராசை மெல்லமெல்ல அதிகரித்து வெறியாகவே மாற அவன் ஓடுகிறான். அவனைச் சுற்றி இருப்பவைகளோ இறந்த மனிதர்களின் கல்லறைகள், வாழ்க்கை நிலையில்லாதது என்பதை அறிவிக்கும் சாட்சியங்கள். ஆனால் புதையலைத் தேடியலைபவனின் கண்களில் மட்டும் ஆசை குறையவேயில்லை. மெல்ல மெல்ல வேகம் அதிகரித்து, இறுதியில் காட்சிச் சட்டத்துக்குள் அவன் ஓரிடத்திலிருக்க, அவனைச் சுற்றி உலகம் சுற்றுவது போலத் தெரியும் கட்டம், அற்புதமானது. இயக்குனர் செர்ஜியோ லியோனி (Sergio Leone) வெறுமொரு சண்டைப்பட வணிக இயக்குனராகப் பார்க்கப்படாமல், திரைக்கலையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுவதற்கு, இத்தகைய காட்சிகளை அவர் உருவாக்கியதே காரணம். அந்தக் காட்சி இதோ:

.

.

திரை இசையின் ஆகப் பெரிய சாதனையாளராகக் கருதப்படும் “எனியோ மோரிகோன்” (Ennio Morricone) இந்தக் காட்சிக்கான பின்னணி இசைக்கோர்வைக்கு வைத்த பெயர் “தங்கத்தின் பேரானந்தம்” (THE ECSTASY OF GOLD) என்பதாகும். இயக்குனர் செர்ஜியோ எப்போதும் முக்கியமான காட்சித்தொடர்களைப் படம் பிடிப்பதற்கு முன்பு, தனது நெருங்கிய நண்பரான மோரிகோனிடம் அந்தக் காட்சியை விளக்கி, பின்னணி இசையைப் பதிவுசெய்து வாங்கிக்கொள்வார். பிறகு அந்த இசையைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒலிக்கச் செய்து, நடிகர்கள் ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு அந்த மனநிலையை உருவாக்கிப் படம்பிடிப்பார். இதனாலேயே அவர் படத்தில் பல காட்சிகள், பாடலைப் படமாக்கியது போல இருப்பதைக் காணமுடியும். மேலே கண்ட காணொளி, ஒலிக் குறைபாடு உடையது. அதனால், எனியோ மோரிகோன் சிம்பொனி இசைக் கலைஞர்களோடு சேர்ந்து அரங்கேற்றிய “தங்கத்தின் பேரானந்தம்” காட்சிப் பதிவையும் கீழே இணைத்திருக்கிறேன்.

.

.

முதலில் கண்ட கல்லறைக் காட்சியின் தொடர்ச்சியாக வரும் உச்சக் காட்சியிலும், இதேபோல வசனங்களே இல்லாத மிகச் சிறந்த பகுதி ஒன்று உண்டு. உண்மையில் என் விருப்பமாக நான் முதலில் சொன்னதைவிடவும் அதிகப் பிரபலமான காட்சியும் இசையும் இதுதான். இதன் படத்தொகுப்பு முறையும், கேமராக் கோணங்களும் கூட பின்னாட்களில் இந்தப் படத்தின் பெயராலேயே அடையாளப்படுத்தப்படும் அளவுக்குப் புகழ்பெற்றது. அதையும் கீழே இணைத்திருக்கிறேன்..

.

.

இந்தப் படம், திரைப்படத் தகவல் இணையதளமான IMDB (The Internet Movie Database) ஆரம்பித்ததிலிருந்தே, உலக ரசிகர்களின் வாக்குகளைப் பெற்று முதல் ஐந்து இடத்துக்குள்ளேயே தொடர்ந்து இருந்துவருகிறது. “நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்” படத்திற்குப் பிறகு, இத்தாலி இயக்குனரான செர்ஜியொ லியோனி, அமெரிக்க ஹாலிவுட்டுக்குள் நுழைந்தார். அங்கு அவர் இயக்கிய “Once Upon a Time in the West” (1968), “Once Upon a Time in America” (1984) ஆகிய படங்களும் இந்தப் படத்தைப் போலவே மாஸ்டர் பீஸ்கள்தான்.

“வெஸ்டர்ன்” அல்லது “கௌபாய்” கதைகள் நடக்கும் காலகட்டம், அமெரிக்க வரலாற்றில் வெறும் ஐம்பது ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீடித்தது என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு இல்லாத சூழல்; தற்போது செல்போன் வைத்திருப்பதைப் போல ஆளுக்கொரு துப்பாக்கி வைத்திருந்த காலம்; வெறுப்பும், அவநம்பிக்கையும், பயமும், பேராசையும், துரோகமும் நிறைந்த மனிதர்கள்; நல்லதோ கெட்டதோ எதையும் வன்முறையாலேயே செய்யமுடியும் என்கிற நிலைமை; உயிர்பிழைத்திருப்பதே ஒரு போராட்டமாக மாறிய காலகட்டம் அது. அந்தக் காரணத்தினாலேயே, வரலாற்றின் அந்தக் குறுகிய காலம், எத்தனையோ விதவிதமான கதைகளைப் பின்னுவதற்கு முடிவில்லாத சாத்தியங்களை வழங்கியபடி இருக்கிறது. அந்தப் பின்னணியில் ஏராளமான நாவல்களும் படங்களும் வந்தபடியே இருக்கின்றன. ஊமைப்பட காலத்திலிருந்தே “வெஸ்டர்ன்” படங்கள் அமெரிக்காவில் ஏராளமாக எடுக்கப்பட்டன. ஆனால் செர்ஜியோவின் வருகை அந்த வகைப் படங்களின் அமைப்பை என்றென்றைக்குமாக மாற்றியது. அவர் தனது படங்களை இத்தாலிய மொழியிலேயே எடுத்தார், ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்தினார், ஆனால் கதைகளோ அமெரிக்கக் கௌபாய்களைப் பற்றியன. இந்த விநோதக் கலவை காரணமாக, அவரது படங்கள் “ஸ்பாகட்டி வெஸ்டர்ன்” (Spaghetti Western) என்ற தனிப் பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

செர்ஜியோ லியோனி

இத்தாலியில் இருந்தபடி ஒரு இயக்குனர் தன் தனிப்பட்ட முயற்சிகளால் அமெரிக்க சினிமாவை மாற்றியமைத்தார் என்பது ஒரு ஆச்சர்யமே. அழுக்கும் குப்பையும் நிறைந்த இடங்கள், சவரம் செய்யப்படாத முகங்கள், பசியிலும் தாகத்திலும் வறண்ட உதடுகள், பூஞ்சை படிந்த கண்கள், தூசு மூடிய உடைகள், போன்ற பல அடையாளங்கள் ‘வெஸ்டர்ன்’ படங்களுக்கு வந்தது அவர் மூலம்தான். அதற்கு முன்புவரை அமெரிக்க வெஸ்டர்ன்களில் நடிகர்கள், சுத்தமான புதிய உடையோடும், பளபளக்கும் சப்பாத்துகளோடும், அழகிய ஒப்பனையோடும்தான் வலம்வந்துகொண்டிருந்தார்கள். செர்ஜியோ உருவாக்கிய தாக்கம், அவருக்குப் பிறகு, இன்றுவரையில் கூட எடுக்கப்படும் எல்லா ‘வெஸ்டர்ன்’ படங்களிலும் இருக்கிறது. புதுவித அணுகுமுறையோடு ‘மாற்று வெஸ்டர்ன்’ படங்களை எடுத்த சில இயக்குனர்கள் கூட, செர்ஜியோ லியோனியை தங்களுக்கு எதிர் துருவத்தில் நிறுத்தி அவரது நுணுக்கங்களை கவணமாகத் தவிர்த்துப் படமெடுத்தார்கள். அல்லாமல், அவரை முற்றிலும் மறந்துவிட்டு ஒரு ‘வெஸ்டர்ன்’ படம் எடுக்கவே முடியாது.

இந்தப் பதிவை நான் எழுதத் துவங்கியதற்குக் காரணம், செர்ஜியோ லியோனியைப் பற்றிச் சொல்வது மட்டுமல்ல. இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பதிவுலகில் சமீபத்தில் உண்டான ஒரு சர்ச்சையே அதற்குக் காரணம். அது என்னவென்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

(தொடரும்)

.

.