.

முன்னோடி இயக்குனர் செர்ஜியோ லியோனி பற்றி முந்தைய பதிவில் சுருக்கமாகப் பார்த்தோம். “ஸ்பாகட்டி வெஸ்டர்ன்” வகையில் அவர் இயக்கிய முதல் மூன்று படங்கள் “டாலர் முத்தொடர்கள்” (Dollars Trilogy) என்று அழைக்கப்படுகின்றன, “பெயரில்லா மனிதனின் முத்தொடர்கள்” (Man with No Name Trilogy) என்றும் அழைப்பதுண்டு. செர்ஜியோ இத்தாலியில் இருந்தபடியே தயாரித்த அந்தப் படங்கள் : “ஒரு கைப்பிடியளவு காசுகள்” (“A Fistful of Dollars” – 1964), “கொஞ்சம் அதிகக் காசுக்காக” (“For a Few Dollars More” – 1965), “நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்” (“The Good, the Bad and the Ugly” – 1966). ஒரே கதாநாயகன் பாத்திரம்தான் மூன்றிலும் வருகிறது என்ற அம்சமே, இந்த மூன்று படங்களையும் இணைக்கிறது. கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த அந்த கதாபாத்திரத்தின் சிறப்பம்சமே, அவனுக்கு எந்தப் பெயரும் இல்லை என்பதுதான். பெயரில்லாத அந்தக் கதாபாத்திரமே கிளிண்ட் ஈஸ்ட்வுட்-க்குப் பெயரையும் புகழையும் நட்சத்திர அந்தஸ்த்தையும் கொடுத்தது.

செர்ஜியோ லியோனி

குறைவான முதலீட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படங்கள், பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும், அதுதான் செர்ஜியோவின் பலம். அந்த முத்தொடரின் படப்பிடிப்புகளை சிக்கனத்துக்காக ஸ்பெயின் நாட்டில் நடத்தினர், பழைய அமெரிக்கா போல அவற்றைக் காட்டினார். முக்கியக் கதாபாத்திரங்கள் சிலரைத் தவிற மற்ற எல்லா துணை நடிகர்களையும் மிகக் குறைந்த சம்பளத்தில் ஸ்பெயினிலேயே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினார். “நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்” படத்தில் வரும், ஒரு போர்க்களக் காட்சி உள்ளிட்ட பெருங்கூட்டம் தேவைப்பட்ட படப்பிடிப்பு நாட்களில், ஸ்பெயின் அரசின் சிறப்பு அனுமதி பெற்று, ஆயிரத்தி ஐநூறு நிஜமான இராணுவ வீரர்களையே இலவசமாக நடிக்கவைத்துவிட்டார் செர்ஜியோ.

[கீழே, “ஒரு கைப்பிடியளவு காசுகள்” படத்தின் பல்வேறு காட்சிகளின் தொகுப்பு எனியோவின் இசையோடு..]

.

முக்கியப் பாத்திரங்களில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் போன்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர்களைப் பயன்படுத்தினார். தனது நண்பரான இசையமைப்பாளர் எனியோ மோரிகோன் உட்பட பல அற்புதமான தொழில்நுட்பக் கலைஞர்களை இத்தாலியில் தேடிப் பயன்படுத்தினார். தனது முதலீட்டுக் கட்டுப்பாடுகளும், அந்நியச் சூழலும் படத்தில் குறையாகத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, புதிய புதிய உத்திகளையும், தனித்துவமான நுட்பங்களையும் கையாண்டார் செர்ஜியோ. அவருடைய கதாபாத்திர வடிவமைப்புகளும், திரைக்கதை அமைப்பும் கூட செறிவுள்ளதாக இருக்கும். யதார்த்தமான நடிப்பும், அசாதாரனமான தருணங்களும், இயக்குனரின் தேர்ந்த திரைமொழியும் அந்தப் படங்களை இப்போதும் ரசிக்கக் கூடியதாகவே வைத்திருக்கின்றன.

இத்தாலிய மொழியிலிருந்து அப்படங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டபோது, மெல்ல மெல்ல அவை அமெரிக்காவிலும் உரிய கவணத்தைப் பெற்றன. பிறநாடுகளிலும் வெற்றிகரமாக ஓடின. சென்னை உட்பட இந்தியாவின் பலநகரங்களிலும் கூட வெற்றிகரமாக ஓடியிருக்கிறது “நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்” படம்.

செர்ஜியோவின் பாணியில் மிகப் பிரபலமான ஒன்று, அவர் ‘குளோஸ் அப்’ எனப்படும் முகத்தருகு கோணங்களை மாறிமாறித் தொடர்ந்து காட்டியே ஒரு சூழலின் இறுக்கத்தையும், பதட்டத்தையும் பார்வையாளர்களுக்கு உணரவைக்கும் விதம். நடிகர்களின் மெல்லிய முக அசைவுகளையும் கண்களையும் வைத்தே பரபரப்பான நாடகத் தருணங்களை அரங்கேற்றிவிடுவார் அவர். உதாரணத்திற்கு, “கொஞ்சம் அதிகக் காசுக்காக” படத்தில் வரும் ஒரு காட்சியைக் கீழே இணைத்திருக்கிறேன்.

.

.

இந்தக் கட்டுரையை நான் எழுத ஆரம்பித்ததற்கு வேறு காரணமொன்று இருப்பதாக சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை நோக்கி இப்போது நகரலாம் என்று நினைக்கிறேன்.

செர்ஜியோ லியோனி, தனது கோட்டையான “வெஸ்டர்ன்” வகைக்குள் முதலில் காலடி எடுத்து வைத்தது, அவரது இரண்டாவது படமான, “ஒரு கைப்பிடியளவு காசுகள்” (“A Fistful of Dollars” – 1964) மூலம்தான். அந்தப் படத்தின் கதை, அச்சு அசலாக அப்படியே ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவாவின் “யோஜிம்போ” (“Yojimbo” – 1961) படத்தின் கதையேதான். அதை அவர் மேற்கு உலகுக்கேற்ப மாற்றியிருந்தார். சில கதாபாத்திர மாற்றங்கள், காட்சி மாற்றங்கள், கலாச்சாரத்திற்கேற்ப மாற்றப்பட்டவை, வாளுக்கு பதில் துப்பாக்கிச் சண்டை என்னும்படியான மாற்றங்கள் போன்றவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் இரண்டும் ஒரு கதைதான். ஆனால் குரோசாவாவிடம் அனுமதி பெறாமலே அது செய்யப்பட்டிருந்தது, அவருடைய பெயரையும் போடவில்லை.

குரோசாவா, உலகின் கவணம் பெற்ற பல முக்கியப் படங்களை எடுத்து, ஒரு ‘உலக இயக்குனராக’ அங்கீகாரமும் பெற்றிருந்த காலகட்டம் அது. “கைப்பிடியளவு காசுகள்” அதன் இயக்குனரோ தயாரிப்பாளரோ எதிர்பார்க்காத அளவுக்குப் பெரும் வெற்றி பெற்றபோதுதான் சிக்கல் ஆரம்பித்தது. குரோசாவாவின் கவணத்துக்கு அந்தப்படம் சென்றதும், அவர் சட்டப்படியான நடவடிக்கை எடுத்தார். அதில் வென்று பெரிய நஷ்டஈடும் பெற்றார் குரோசாவா.

ஆனால் அந்தக் காப்பியடிக்கப்பட்ட படமே, திரைக்கலைக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைப்பதற்கு வித்தாக அமைந்தது என்பது எத்தனை ஆச்சர்யம். ஸ்பாகட்டி வெஸ்டர்ன் படங்களின் கேமராக் கோணங்கள், படத்தொகுப்பு முறை, இசையைப் பயன்படுத்தும் விதம், கதாபாத்திர வடிவமைப்பு, கதைச் சூழல், காட்சிப்படுத்தும் விதம் எல்லாம் இன்றைக்கும் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. டரண்டினோ உட்பட பல முன்னணி இயக்குனர்கள் அந்த வடிவத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

[“கொஞ்சம் அதிகக் காசுக்காக” படத்திலிருந்து ஒரு காட்சி]

.

அந்தக் காப்பியடிக்கப்பட்ட படத்தின் மூலமே, செர்ஜியோ லியோனி என்னும் மேதை புறப்பட்டு வந்து, ஒரு புதிய திரைமொழியை உலகுக்கு அளித்தார். ஆகச் சிறந்ததாக என்றென்றைக்கும் விளங்கக் கூடிய, “Once Upon a Time in the West”, “The Good, the Bad, and the Ugly”, “Once Upon a Time in America” ஆகிய திரைப்படங்களை பின்னாளில் எடுத்த அவர், காலூன்றி எழுவதற்கு உதவியது, அந்தக் காப்பியடிக்கப்பட்ட படமே.

[“முன்பு ஒரு காலத்தில் அமெரிக்கா” படத்தின் முன்னோட்டம் கீழே]

.

அந்தக் காப்பியடிக்கப்பட்ட படமே, எனியோ மோரிகோன் என்னும் திரை இசை மேதையை உலகுக்கு வெளிப்படுத்தியது. அந்த மகாகலைஞன் செர்ஜியோவின் எல்லாப் படங்களிலும் மாயம் செய்ததோடு நிற்கவில்லை, இன்றுவரை ஏராளமான படைப்புகளில் பங்காற்றித் தன் இசையால் ரசிகர்களை ஆட்சிசெய்தபடியே இருக்கிறார். “சினிமா பாரடிஸோ”, “மலீனா”, “தி லெஜண்ட் ஆப் 1900” உட்பட இத்தாலிய இயக்குனர் டோர்னெடோர்-யின் எல்லாப் படங்களையும் இன்னொரு உயரத்துக்குத் தூக்கிச் செல்வது அவரது இசையே. “தி மிஷன்” படத்தின் இசையை நினைக்கும்போதே நெகிழ்ச்சியால் என் உள்ளம் நிறைகிறது.

[“நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்” மைய இசை – எனியோ மோரிகோன்]

.

அந்தக் காப்பியடிக்கப்பட்ட படத்தின் மூலமே, கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்னும் ஒரு மாபெரும் நட்சத்திரம் ஒளிபெற்று எழுந்தது. பின்னாளில் இயக்குனராக மாறி, “அன்ஃபர்கிவன்”, “பிரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கவுண்ட்டி”, “மிஸ்டிக் ரிவர்”, “மில்லியன் டாலர் பேபி” போன்ற அற்புதமான படங்களை அவர் எடுத்தார். அவருடைய வாழ்வில் பெரிய திருப்பு முனையாகவும், புதிய தொடக்கமாகவும் அமைந்தது, “கைப்பிடியளவு காசுகள்” தான்.

.

என்னைப் பொருத்தவரை அகிரா குரோசாவா, செர்ஜியோ லியோனி இருவருமே முக்கியமான முன்னோடிகள். தனிப்பட்ட முறையில் இருவரின் மீதும் பெரிய அபிமானமும் மரியாதையும் எனக்குண்டு. ஆனால் அதே சமயம் “யோஜிம்போ” படத்தின் தீவிர ரசிகன் நான். “ராஷமோன்”, “செவன் சாமுராய்” போன்ற மாஸ்டர்பீஸ்கள் உட்பட, அனேகமாக அவருடைய எல்லாப் படங்களும் பிடிக்குமென்றாலும், குரோசாவாவின் “துரோன் ஆஃப் பிளட்”, “ஹிட்டன் ஃபோர்ட்ரஸ்”, “யோஜிம்போ” ஆகிய படங்களே மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. “யோஜிம்போ”விற்கு இணையாக “கைப்பிடியளவு காசுகள்” படத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

.

ஆனால் இதில் கவணிக்க வேண்டியது, குரோசாவா ‘சாமுராய்” படங்களை எடுத்ததே, அமெரிக்க “வெஸ்டர்ன்” படங்களைப் பார்த்துத்தான். ‘சட்டம் ஒழுங்கற்ற சூழலில், தனித்தலையும் ஆயுதம் ஏந்திய வீரர்கள்’ என்ற ‘வெஸ்டர்ன்’ கதைக்களத்தை, ஜப்பானிய வரலாற்றுக் காலமொன்றில் தன் கற்பனையால் பொருத்தி குரோசாவா உருவாக்கியதே, அவரது முதல் படமான “சன்ஷிரோ சுகாட்டா” (“Sanshiro Sugata” – 1943). பிறகு அதைத் தொடர்ந்து பல படங்களை, திக்கற்று அலையும் சாமுராய்களை மையப்படுத்தி உருவாக்கினார். உண்மையில் ஜப்பானிய வரலாற்றிலிருந்தோ, இலக்கியத்திலிருந்தோ, நாட்டார் வழக்குகளிலிருந்தோ அதை அவர் உருவாக்கவில்லை. மேகம் மழையாகப் பெய்து கடலில் சேர்ந்து, மீண்டும் ஆவியாகி மேகமாவதைப் போன்ற ஒரு சுழற்சியே இங்கே நடந்திருக்கிறது. வெஸ்டர்ன் பாதிப்பில் குரோசாவா சாமுராய் படங்களை உருவாக்க, அந்தப் படங்களின் பாதிப்பில் பிறகு வெஸ்டர்ன் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

செர்ஜியோ லியோனியின் “கைப்பிடியளவு காசுகள்” படம் “யோஜிம்போ”வின் தழுவல் என்ற சர்ச்சை இருப்பதுபோலவே, “யோஜிம்போ” கதையும் “சிவப்பு அறுவடை” (Red Harvest) என்ற புகழ்பெற்ற ஆங்கில நாவலைத் தழுவியது என்று சொல்லப்படுவதுண்டு. குரோசாவா ஒரு பேட்டியில் “கண்ணாடிச் சாவி” (The Glass Key) என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பிலேயே யோஜிம்போவின் மையக் கதையை உருவாக்கியதாகச் சொல்லியிருக்கிறார். அந்த “கண்ணாடிச் சாவி” அதே பெயரிலான நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நாவலையும், முதலில் குறிப்பிட்ட “சிவப்பு அறுவடை” நாவலையும் எழுதியது ஒரே எழுத்தாளர், “டாஷியேல் ஹேம்மெட்” (Dashiell Hammett). ஆனால் இவருடைய பெயரை குரோசாவா தனது படத்தில் போடவேயில்லை.

.

‘யோஜிம்போ’ படப்பிடிப்பில் அகிரா குரோசாவா, தொஷிரோ மிஃபுனி

.

குரோசாவா, செர்ஜியோ ஆகியோரை இன்று நாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிப் பழி சுமத்துவதைப் போல ஒரு மோசமான செயல் வேறு இருக்க முடியாது. திரைக்கலையை வளர்த்தெடுத்த பெரும் படைப்பாளிகள் அவர்கள். தங்கள் சூழலில், தங்கள் மொழியில் இல்லாத புதிய முயற்சிகளைச் செய்யும் எந்தக் கலைஞனும் வெளியிலிருந்தே தனக்கான ஊற்றுக்கண்களைப் பெறமுடியும். ஒன்றிலிருந்தே மற்றொன்று உருவாக முடியும், இல்லாத ஒன்றை யாரும் உருவாக்க முடியாது. மரபுக் கலைகள் மட்டும்தான் தங்கள் சொந்த ஊற்றிலிருந்தே மீண்டும் மீண்டும் பெற்று நீடித்திருக்க முடியும். திரைப்படம் ஒரு பரப்புக்கலை (Popular Art), அது உலகம் முழுவதிலுமான பல்வேறு ஊற்றுமுகங்களிலிருந்து புறப்பட்டு வந்து கலந்து, மாறி, விரிந்தபடியே இருக்கும் கடல். அது புதிய புதிய அலைகளைப் பிறப்பித்தபடியே இருக்கிறது. குரோசாவா ஒரு அலை, செர்ஜியோ ஒரு அலை, ஆனால் கடல் ஒன்றுதான். உலகத் திரைக்கலைஞர்கள் எல்லாருமே ஒருவருக்கொருவர் கடன்கொடுத்தபடி, வாங்கியபடி தான் புதிய அலைகளை உருவாக்குகிறார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை “உலகப் பார்வையாளர்கள்” என்பவர்கள் மிகக் கொஞ்சமாகத்தான் இருந்தார்கள். உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்பவர்கள் மட்டுமே பன்னாட்டுத் திரைஅலைகளை அறிந்து வைத்திருந்தார்கள். நல்ல ரசிகர்களும், நல்ல படைப்பாளிகளும், திரைப்பட மாணவர்களும் மட்டுமே அந்த விழாக்களில் அப்போது பங்குகொண்டார்கள். ஆனால் சிடி, டிவிடி போன்ற தொழில்நுட்பப் பெருக்கமும், இணையத்தின் விஸ்வரூப வளர்ச்சியும் உலகத் திரைப்படங்களை மிகப் பெரும்பாலானவர்களின் கைகளில் கொண்டு சேர்த்தது. ஆகவே இனி எப்போதும் ஒரு படத்தின் கதையைத் திருடி அப்படியே மீண்டும் எடுப்பது சாத்தியமில்லை. குறைந்த பட்சம் மூலக்கதையை உருவாக்கியவரின் பெயரைப் போடாமல் யாரும் படமெடுக்க முடியாது. இல்லையென்றால் படம் வெளியான அன்றே இணையத்தில் குற்றம் சுமத்தப்பட்டுவிடும். படம் எடுக்கப்படும் போதே, அதைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், விளம்பரங்களை வைத்து அது இந்தப் படத்தின் ‘காப்பி’ என்று எழுதிவிடுவார்கள். இந்த அச்சம் திரைப் படைப்பாளிகளுக்கு இருப்பது அவசியமே.

ஆனால் இணையப் பதிவர்கள் ஒன்றை மறக்கக் கூடாது. இணையம் அளிக்கும் இந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு, தற்காலப் படைப்புகளையும் கலைஞர்களையும் விமர்சிப்பதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு இந்த “உலக சினிமா அறிவு” வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட எந்தப் படைப்பையும், இப்போது சிறுமைப்படுத்தி எழுத அதிகாரம் இல்லை. முன்னோடியாக மாறிவிட்ட ஒரு கலைஞரைப் பற்றி ‘நல்லவர், கெட்டவர், அசிங்கமானவர்’ என்றெல்லாம் தீர்ப்புச் சொல்ல பதிவர்கள் நீதிபதிகள் அல்ல.

.

முந்தைய பதிவு :

நல்லவன், கெட்டவன், அசிங்கமானவன்

.