.

எனது பதின்ம வயதுகளில் நான் மிகவும் ரசித்த கதாநாயகிகளில் ஒருவர் அமலா. அநேகமாக அவர் நடித்த எல்லாப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அவரை அறிமுகப்படுத்திய ஒரே காரணத்துக்காக, டி.ஆர்.-ஐ தமிழின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவேகூட நான் ஒப்புக்கொள்வேன். கோவில்பட்டியில் (தூத்துக்குடி மாவட்டம்) நான் மேல்நிலை படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஓர்நாள் அமலாவின் முகம்பதித்த சுவரொட்டிகள் ஊர்முழுவதும் ஒட்டப்பட்டிருப்பதையும், கதாநாயகனாக ஒரு முகம்தெரியாத நடிகன் இருப்பதையும் பார்த்தேன். நான் பொதுவாக எனது குடும்பத்தினரோடோ, அல்லது அம்மாவின் அனுமதி பெற்றுக்கொண்டு நண்பர்களோடோதான் திரையரங்குக்குச் செல்வது வழக்கம், தனியாகப் போனதில்லை. ஆகவே எனது நண்பர்களிடம் அந்தப் படம் பார்க்கச் செல்லலாமா என்று கேட்டபோது, அவர்கள் “அது ஒரு தெலுங்கு டப்பிங் படம்.. அதையெல்லாம் மனுஷன் பாப்பானா?” என்று சொல்லிவிட்டார்கள். எனது வீட்டிலும் யாரும் அந்தப் படத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஏனோ என்னால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை, உடனே பார்த்தாகவேண்டும் என்று தோன்றியது.

நான் முதன்முறையாக, வீட்டில் யாருக்கும் தெரியாமல், அம்மாவின் அனுமதி பெறாமல், நண்பர்களின் துணையில்லாமல், தன்னந்தனியாகச் சென்று பார்த்த அந்தப் படம், “உதயம்”. நாகார்ஜுனா நடித்த தெலுங்கு “சிவா”-வின் தமிழ் டப்பிங் படமான அது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற என்னைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கியது. ஒரு கல்லூரிக்குள் அரசியல்வாதிகளும், நிழலுலகத்தினரும் ஆதிக்கம் செய்ய முனைவதால் ஏற்படும் பாதிப்புகளையும், ஒரு மாணவனின் வாழ்க்கை புறச்சூழல்களின் தாக்கத்தால் மெல்லமெல்ல சிதிலமடைவதையும், அவனும் ஒரு நிழல் உலக தாதாவாக மாறுவதையும் விவரித்துச் சென்றது கதை. ரசிக்கும்படியான திரைமொழியோடு நம்பும்படியாகவும் காட்சிப்படுத்தியிருந்தவிதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. குறிப்பாக ஒடுங்கிய தெருக்களுக்குள் நடக்கும் ஒரு துரத்தல் காட்சியும், கதாநாயகன் ஒரு நெருக்கடியில் முதல்முறையாகத் திருப்பித் தாக்குவதற்காக சைக்கிள் சங்கிலியை உருவும் காட்சியும் அந்த வயதில் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தன. நாயகனுக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக சாகும் காட்சிகள் மிகுந்த வலிமிக்கதாக இருந்தன. அந்தப் படத்தைப் பற்றி நான் நண்பர்களிடம் சிலாகித்துப் பேசினேன், அதற்குள் அவர்களும் நிறைய கேள்விப்பட்டிருந்தார்கள். இரண்டாம் முறை நண்பர்களோடு பார்த்தபோதுதான் இயக்குனரின் பெயரைக் கவணித்தேன். அம்மாவின் அனுமதியும் பணமும் பெற்றுக்கொண்டு மூன்றாம் முறை படம் பார்த்தபோது, நான் “ராம்கோபால் வர்மா”வின் ரசிகனாகவே மாறிவிட்டிருந்தேன்.

"உதயம்" படத்தில் நாகார்ஜூனா, அமலா

.

எனது வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு, நான் மதிக்கும் இயக்குனர்களில் ராம்கோபால் வர்மாவும் ஒருவர் என்பது தெரிந்திருக்கும். “படம் வெற்றியா தோல்வியா” “குப்பைத் தொட்டியும் சிம்மாசனமும்” என்னும் தலைப்புகளில் நான், ராம் கோபால் வர்மா அவர்களின் இரு கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன். அந்தக் கட்டுரைகள் மூலமே என்னை அதிகம்பேர் வாசிக்கவும் ஆரம்பித்தார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அந்த இரு கட்டுரைகளையும் தனது தளத்தில் பரிந்துரை செய்தார் என்பதே அவற்றுக்குக் கிடைத்த உயரிய மரியாதை என்று நான் நினைக்கிறேன்.

.

சில வாரங்களுக்கு முன்னால் எனது ஆந்திர நண்பன், “ரத்தச் சரித்திரம்” படத்தில் ராம் கோபால் வர்மா ஒரு பாடல் பாடியிருப்பதாகச் சொன்னான். அப்போது இசை வெளியாகியிருக்கவில்லை. நான் எரிச்சலோடு, “அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என்றபோது, நண்பன் “இல்லைடா.. நல்லா இருக்கு” என்றான். நண்பன் வர்மாவுக்குப் பழக்கமானவன், தொடர்பில் இருப்பவன் என்ற வகையிலும், என்னை விடப் பலமடங்கு தீவிரமான ரசிகன் என்பதாலும் அவனது பாராட்டை நான் ஐயப்பட்டேன். சில தினங்களுக்கு முன்பு, ஃபேஸ் புக்கில் அவன் அந்தப் பாடலை இணைத்திருந்தான். நான் வர்மாவின் பல பேட்டிகளை தொலைக்காட்சியிலும், இணையத்திலும் கேட்டிருந்தாலும், அந்தப் பாடலின் குரல் அவருடையதுதான் என்பதை ஏற்றுக்கொள்ளச் சிரமமாகவே முதலில் இருந்தது. அது எனக்கு நன்கு பழக்கமான வேறு யாருடைய குரல்போலவோ ஒலித்தது. இளையராஜாவின் குரல் சாயல் கொஞ்சம் இருப்பதுதான் அதற்குக் காரணமா என்றும் யோசித்தேன். உணர்வுபூர்வமாகவும், மெல்லிய சோகத்தோடும், இரவின் தனிமையில் கேட்கத்தக்க அமைதியுடனும் இருக்கும் அந்தப் பாடலை, முன்னோட்டத்தில், மிக வன்முறையான காட்சிகளுக்குப் பின்னணியாகப் பயன்படுத்தியிருக்கிறார் வர்மா.

.

[ராம்கோபால் வர்மா பாடிய பாடல்..]

.

“புத்தம் சரணம் கச்சாமி” என்பது தவிர்த்து, எனக்கு ஒரு வார்த்தையும் புரியாத இந்தப் பாடலை நான் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இசை ரசிகர்கள் இந்தப் பாடலை நிராகரிக்கக் கூடும், சுதி சுத்தமில்லாத, பாடும் பயிற்சி இல்லாத இந்தக் குரலை அவர்கள் விமர்சிக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களே எளிமையையும் நாட்டுப்புறத் தன்மையையும் இந்தப் பாடலுக்கு வழங்கி ரசிக்கவைக்கிறது. அதோடு வர்மாவின் குரல், அவருடைய படங்களில் என் மனத்தைக் கணக்கச் செய்த ஒரு மைய அம்சத்தை எதிரொலிப்பதாக நான் நினைக்கிறேன். அது.. ‘வன்முறையின் விளைவு துயரமே’ என்னும் கருத்துரு. வன்மத்தின் அர்த்தமின்மையை, அந்த அபத்தம் உருவாக்கும் வெறுமையை, அழிவின் துயரத்தை அவருடைய சில படங்களின் முடிவில் நான் தீவிரமாக உணர்ந்திருக்கிறேன். அதையே இந்தப் பாடலிலும், அதன் மொழி புரியாவிட்டாலும், நான் கேட்கிறேன்.

.

ராம்கோபால் வர்மாவின் படங்களை மூன்று வகைப்பட்டவையாகப் பிரித்துவிட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

.

[1] நிழல் உலகமும் வன்மமும் :

இந்திய திரையுலகத்துக்கு ராம்கோபால் வர்மாவின் முக்கியமான பங்களிப்பு என்பது அவருடைய “நிழல் உலகம்” (Underworld) சார்ந்த படங்கள்தான். அவருக்கு முன்பே மணிரத்தினத்தின் “நாயகன்”, விது விநோத் சோப்ராவின் “பறவை” (“பரிந்தா”) போன்ற குறிப்பிடத்தகுந்த படங்கள் அந்தத் தளத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ராமுவின் வருகை ஒரு பெரிய தாவல். வேறெந்த இந்திய இயக்குனரையும் விட “நிழல் உலகின் பெரிய தாதா” அவர்தான். கோவிந்த் நிஹ்லானியின் “பாதி உண்மை” (“அர்த் சத்யா”) படமும் ஒருவகையில் அவருக்கு முன்னோடிப் படமே. அதன் நாயகனான, ‘தனது கட்டுப்பாட்டை மீறிய சுழலுக்குள் சிக்கிக்கொண்ட, நேர்மையான, கோபக்கார போலீஸ் அதிகாரி’, வர்மாவின் படங்களிலும் நடமாடுவதை நாம் பார்க்க முடியும்.

நமக்குப் பரிச்சயமில்லாத வேறொரு உலகை அவர் காட்டியபோதிலும், அங்கு நடமாடும் மனிதர்களை நாம் ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்திக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும், நெருங்கவும் முடிவதே, வர்மாவின் படங்கள் தனித்துத் தெரிவதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். “சிவா”, “சத்யா”, “கம்பெனி”, “டி”, “சர்க்கார் ராஜ்” போன்ற மிக முக்கியமான படங்களை அந்தத் தளத்தில் அவர் எடுத்திருக்கிறார். வன்முறையின் பல்வேறு சாத்தியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். விரோதமும், நட்பும், அச்சமும், அகங்காரமும், நிதானமும், வெறியும் கொப்பளிக்கும் பல்வேறு கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். துரோகமும், இழப்பும், பழிவாங்கலும், அதிகார வேட்கையும், கொல்லுதலும், கொல்லப்படுதலுமான பல்வேறு கதைத் தருணங்களை மிகச் சிறப்பாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

.

"ரத்தச் சரித்திரம்" படத்தில் சூர்யா

.

மனிதன் ஒரு தூய மிருகமாக மாறி வேட்டையாடுவதையும், வேட்டையாடப்படுவதையும் அவர் காட்டும் விதம் நம்மை நடுக்கமுறச் செய்துவிடும். திரையில் தெரியும் வன்முறையைவிடப் பலமடங்கு நம் மனதுக்குள் நிகழும். அதேசமயம், இந்த எல்லாப் படங்களுமே ஆழமான துயரத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன. இறுதியில் அவை மிகுந்த மனச்சுமையையும் துயரத்தையுமே பார்வையாளர்களுக்குக் கொடுத்தனுப்புகின்றன. மற்ற மசாலாப் படங்களைப் போல, அவருடைய நாயகர்கள் அசாதாரன சண்டைக் காட்சிகளில் பறந்து பறந்து அடிப்பதில்லை, இருபது முப்பது அடியாட்களை ஒரேசமயத்தில் துவம்சம் செய்வதில்லை. இறுதியில் வெற்றி வீரர்களாகக் கொண்டாடப்படுவதும் இல்லை. மாறாக, அவருடைய நாயகர்கள் இறுதியில், தங்களுக்கு நெருக்கமானவர்களைப் பலிகொடுத்தவர்களாகவும், தோற்பவர்களாகவும், தங்கள் செயலுக்கு நாணுபவர்களாகவும், நெருங்கியவர்களாலேயே ஒதுக்கப்படுபவர்களாகவும், தனிமையில் வாடுபவர்களாகவும், வன்முறையின் தீ நாக்குகளில் சுட்டுப் பொசுங்குபவர்களாகவுமே காட்டப்படுவார்கள். வன்முறையின் வசீகரத்தை மட்டும் காட்டாமல், அதன் எல்லா அபத்தங்களையும், துயரங்களையும் சேர்த்துக்காட்டி அந்த உலகின் மேல் ஆழமான வெறுப்பைப் பார்வையாளர்களிடம் உருவாக்குவது தான் வர்மாவின் தனித்தன்மை.

.

[2] பெண்ணுடலும் காதலும் :

இந்த வகைப் படங்களை வர்மாவின் ரசிகர்கள் பலரே கூட மிகுந்த சங்கடத்தோடு ஒதுக்குவதுண்டு. பெண் உடலின் அங்கங்களையும், வளைவுகளையும், நெளிவுகளையும் மட்டுமே கொண்டு கலைப்படைப்புகளாக மாறிய ஏராளமான ஓவியங்களும் சிற்பங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு இணையாக இந்தப் படங்களைச் சொல்வது சரியல்ல என்றபோதும், வர்மா அதைத்தான் உத்தேசிக்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். இந்த வகையில் வர்மா எடுத்த பலப் படங்களில் ஒன்றிரண்டு தவிர்த்து மற்றதெல்லாம் குப்பைகள் என்பதே எனது தனிப்பட்ட எண்ணம்.

ஊர்மிளா மடோன்கர், அந்தரா மாலி, இஷா கோபிகர், பிரியங்கா கோதாரி, ஜியா கான் போன்ற பல கதாநாயகிகள் புகழ்பெற்றது வர்மாவின் படங்களின் மூலமே. அவர் படங்களில் நடிப்பதற்கு முன்புவரை மிகச் சராசரியாக இருந்த அப்பெண்கள், அவரது படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வந்த உடனேயே ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்த்தைப் பெறுவதை நான் ஆச்சர்யத்தோடு கவணித்திருக்கிறேன். அவர்கள் திடீரென்று திரையில் அழகாகத் தோன்றிவிடுவதும், அவர்களுக்கொரு தனித்த உடல்மொழி உருவாகியிருப்பதும் வர்மாவினால்தான் என்பதை அறியமுடியும். ஆடை வடிவமைப்பிலிருந்து, நடன அசைவுகளிலிருந்து, கேமராக் கோணங்களிலிருந்து எல்லாவற்றிலும் அவருடைய நுட்பங்கள் இருக்கும். ஆனால் அதையே அவர் மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்ததால், சிலபடங்களுக்குப் பிறகு ஒருவகையான சலிப்பே ஏற்பட்டுவிட்டது.

இந்த வகைப்பட்ட வர்மாவின் படங்களை மேலும் இரு உட்பிரிவுகளாகவும் பிரிக்க முடியும்

(அ) முதல் பிரிவில் வரும் படங்கள் காதல் கதைகள், அவை பொதுவாக ஒரு நடிகையைச் சுற்றியோ, நடிகையாக விரும்பும் பெண்ணைச் சுற்றியோ, நடனத்தில் சாதிக்க விரும்புபவளைச் சுற்றியோ, மாடலிங் துறை சார்ந்தவளைச் சுற்றியோ பின்னப்பட்ட காதல் கதையாக இருக்கும். இவ்வகையில் “ரங்கீலா” நல்ல படம், “மஸ்த்” ஓரளவு தேறும், மற்றதெல்லாமே என்னைப் பொறுத்தவரை தரமற்றவை.

(ஆ) இரண்டாம் பிரிவில் வரும் படங்கள் திரில்லர் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மையக்கதை ஒன்றேதான்; ஓர் ஆணும் பெண்ணும், காதலித்தோ அல்லது சந்தர்ப்பத்தாலோ சேர்ந்து ஓடிப்போகும்போது, வேறொரு பெரிய சிக்கலில், மரணப் போராட்டத்தில் மாட்டிக்கொள்வார்கள். அந்த சிக்கல் சாலையில் லிஃப்ட் கேட்கும் சைக்கோவின் வடிவிலோ, காட்டுக்குள் இருக்கும் வீரப்பன் வடிவிலோ, கொள்ளையடித்த பணத்தைத் தேடும் கும்பல் வடிவிலோ, அல்லது வெறுமொரு முட்டாள் சிரிப்பு தாதாவின் வடிவிலோ வந்து சேரும். ஒரு நீர்வீழ்ச்சி அல்லது குளியலறைக் காட்சி, இரவில் தீமூட்டிக் குளிர்காய்வது அல்லது தங்கும் விடுதியில் ஒரே படுக்கையில் உறங்குவது போன்ற காட்சிகளுக்குப் பிறகு, இறுதியில் வில்லனை அழித்துக் காதலர்கள் இணைவார்கள். “என்னமோ நடக்குது” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட, வர்மாவின் இரண்டாவது படமான “க்ஷணா க்ஷணம்” எனக்கு அப்போது பிடித்திருந்தது. மற்றபடி இந்த வகையில் எல்லாப் படங்களும் சிலக் காட்சிகள், சிறு பகுதிகள் தவிர்த்துப் பொதுவாக ஏமாற்றம் அளிப்பவையே.

"ஓட்டம்" (DAUD) படத்தில் ஊர்மிளா

.

[3] அமானுஷ்யமும் பயமும் :

வர்மாவுக்கு விருப்பமான இன்னொரு தளம், பேய்ப் படங்கள். பொதுவாக அத்தனை மரியாதையோடு பார்க்கப்படாத அந்தத் தளத்தில் அவர் மீண்டும் மீண்டும் படமெடுத்ததற்கு அவருடைய பிடிவாத குணமே காரணமாக இருக்க முடியும். முக்கிய விமர்சகர்கள் அந்தப் படங்களைப் புறந்தள்ளியிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை வர்மா மிகச் சிறப்பாகவே அந்தத் தளத்தில் சாதித்திருக்கிறார். பொருளாதார ரீதியாகவும் அவருக்குப் பெரிய வெற்றிகளைக் கொடுத்த படங்கள் அவை. தான் இயக்கிய படங்கள் மட்டுமில்லாமல், தனது கதைகளை வேறு இயக்குனர்களை வைத்துத் தயாரித்தும், தொடர்ந்து இருபது ஆண்டுகளாகத் திகில் படங்களுக்கான சந்தையை வெற்றிகரமாகக் கைப்பற்றி வைத்திருக்கிறார் அவர்.

“இரவு” (“ராத்ரி”/ இந்தியில் “ராத்”), “பேய்” (“தெய்யம்”), “ஆவி” (“பூத்”), “பயப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது” (“தர்னா மனா ஹைய்”), “பயப்படுவது அவசியமானது” (“தர்னா சரூரி ஹை”) போன்றவை அந்தத் தளத்தில் முக்கியமான படங்கள். “யார்?” (“கோன்?”) படத்தில் ஆவி ஏதும் இல்லை என்றபோதும், அதுவும் மிகச் சிறந்த திகில் படமே. இந்தியாவின் சிறந்த திகில் பட இயக்குனர்களின் வரிசையில் வர்மாவுக்கு மிக முக்கியமான ஒரு இடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

.

நான் ஏற்கனவே சொன்னதுபோல வர்மாவின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது, அவரது ‘வன்முறை’ படங்களே. நிழல் உலகம், அரசியல்வாதிகள், காவல்துறை என்னும் மும்முனைகளையும், அவற்றுக்குள் இருக்கும் தொடர்புகளையும், மோதல்களையும் பற்றித் தொடர்ந்து பல படங்களைச் செய்து, அந்தக் கதைக் களத்தின் அடையாளமாகவே மாறிவிட்டார் வர்மா. மும்பையைக் கோலோச்சிய தாவூத் இப்ராஹீம் என்னும் நிழலுலகத்தின் நிஜ தாதாவையும் அவனது கூட்டாளிகளான குட்டி தாதாக்களையும் பற்றிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வர்மா எடுத்த படங்கள் இந்தத் தளத்தில் மிக முக்கியமானவை. இப்போது அவர் இயக்கிக்கொண்டிருக்கும் “ரத்தச் சரித்திரம்” படமும், ஆந்திராவை ஆட்டிப்படைத்த “பரிட்டாலா ரவி” மற்றும் அவனைப் பழிதீர்த்த “சூரி” என்னும் நிஜ மனிதர்களையே அடிப்படையாகக் கொண்டது.

“ரத்தச் சரித்திரம்” படத்தின் இந்தி முன்னோட்டம் :

.

சுமார் ஐந்து மணிநேரம் ஓடக் கூடிய “ரத்தச் சரித்திரம்” கதையை மொத்தமாகப் படம்பிடித்துவிட்டு, அதை இரு பாகங்களாகப் பிரித்து, மூன்று மாத இடைவெளியில் இரு படங்களாக வெளியிடப்போகிறார் வர்மா. அந்த விதத்தில் இந்தியாவில் செய்யப்படும் முதல் முயற்சி இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தக் கதையிலும், “வன்முறையின் விளைவு துயரமே” என்னும் ராம்கோபால் வர்மாவின் குரல் மீண்டும் ஒலிக்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.

.

.