The Prestige

.

இந்த ஆண்டின் (2010) ஆரம்பத்தில் ஒரு மாலையில், 2000 முதல் 2009 வரையிலான பத்தாண்டுகளில் உலக சினிமாவின் போக்கு பற்றியும், அதில் எழுந்து வந்து நிலை நின்ற இயக்குனர்கள் பற்றியும் யோசித்தபடி அமர்ந்திருந்தேன். அந்த இயக்குனர்களின் பட்டியல் ஒன்றையும் போட்டேன். சுமார் 25 பெயர்கள் இடம்பெற்றன. இப்போது அதைத் திரும்ப எடுத்துப் பார்த்தபோது, அதில் பத்துபேரை மட்டும் தேர்ந்து ஒரு பதிவாகப் போடலாம் என்று தோன்றியது. இந்தப் பட்டியல் எனது தனிப்பட்ட ரசனை சார்ந்து நான் தேர்ந்தவை. மேலும் 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் எழுந்து வந்த இவர்கள், உலக சினிமாவின் திசையையும் போக்கையும் மாற்றியமைத்தார்கள் என்று நான் நினைக்கிறேன். பன்னாட்டு இளம் இயக்குனர்களின் மேல் பாதிப்பை ஏற்படுத்தி, உலக கவணமும் பெற்ற இவர்களை, நான் உள்ளூர மிக நேசிக்கிறேன் அதேசமயம் பொறாமையும் கொள்கிறேன்.

இந்த இயக்குனர்களில் சிலர் 90களின் பிற்பாதியிலேயே சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்றபோதிலும் 2000க்குப் பிறகே தங்களின் மிக முக்கியமான படங்களை எடுத்து பரவலான கவணிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள். அந்தப் பத்தாண்டுகளில் பெரும் புகழும் விருதுகளும் பெற்ற வேறு பல இயக்குனர்கள் இருந்த போதிலும் அவர்கள் 2000க்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர்களாக இருந்ததினால் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவேளை கடந்த பத்தாண்டுகளின் மிகச் சிறந்த படங்களென்று நான் நினைப்பவைகளின் பட்டியலைப் போட்டால் அதில் இந்தப் பட்டியலில் இருக்கும் இயக்குனர்கள் சிலரின் படங்களே கூட இடம்பெறாமல் போயிருக்கக் கூடும்.

ஆக 2000த்திலிருந்து 2009 வரையான ஆண்டுகளுக்குள் புதிதாக எழுந்துவந்த இயக்குனர்களில், முக்கியமானவர்களாக நான் நினைப்பவர்களின் பட்டியல் மட்டுமே இது.

இது தரவரிசையிலான பட்டியல் அல்ல, எண்கள் ஒரு அடையாளத்துக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

.

Christopher Nolan and Christian Bale

1. கிறிஸ்டோபர் நோலன்

இங்கிலாந்தைத் தாயகமாகக் கொண்ட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலான், 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முளைத்தெழுந்து, பத்தாண்டுகளில் மாபெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறார். 2000யில் வெளிவந்த “மெமண்டோ” திரைப்படம், புதிர்த் தன்மை, நேர்கோடற்ற கதைசொல்லல் மற்றும் பின்னால் நகரும் காலவோட்டத்தில் காட்சிகளை வரிசைப்படுத்துவது போன்ற யுத்திகளின் காரணமாகவே உலகம் முழுவதும் கவணத்தை ஈர்த்தது. ‘குறுகியகால ஞாபக மறதி’ நோயுள்ள கதாநாயகனின் கோணத்திலிருந்து காட்சிகளைப் புரிந்துகொள்வதற்குப் பின்னகரும் கால யுத்தி மிகச் சிறப்பாகப் பொருந்தியிருந்தது. கதையிலிருந்த முடிச்சுகளும், படத்தின் முடிவும், இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை உருவாக்கியது, அவற்றைப் புரிந்துகொள்வதற்காக அவர்கள் மீண்டும் மீண்டும் படத்தைப் பார்த்தார்கள். அதற்கு முன்பு ஸ்டேன்லி க்யுப்ரிக் படங்களுக்கு மட்டுமே இது நடந்திருக்கிறது. நோலன் மிகப்பெரிய ஸ்டேன்லி க்யுப்ரிக் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகனின் மறதி நோய், முக்கியத் தகவல்களை அவன் உடலில் பச்சை குத்திக்கொள்வது, போலராய்டு புகைப்படங்களாக எடுத்துவைத்துக்கொள்வது போன்றவற்றைத் தவிர்த்து, கஜினி படத்துக்கும் இதற்கும் பெரிய சம்பந்தமில்லை. ‘மெமண்டோ’ நாயகன், தான் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்தபோது சந்தித்த ‘சாம்மி’ என்கிற ஒரு ‘குறுகியகால ஞாபக மறதி’ நோயாளியைப் பற்றிச் சொல்வது, உண்மையில் நாயகனின் சொந்த வாழ்க்கையில் நடந்ததுதான், அது வேறு யாருக்கோ நடந்ததாக அவன் மனம் மாற்றிக்கொண்டிருக்கிறது. தனது மனைவியைக் கொன்றவனைப் பழிதீர்ப்பதாக நினைத்து அவன் ஏற்கனவே சில கொலைகளைச் செய்துவிட்டான், அவற்றை நோயின் காரணமாக மறந்துவிட்டு இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான். தனது விநோத நோயின் காரணமாக தான் ஒரு சக்கை போல மாறிவிடாமல், வாழ்வை இலட்சியமுள்ளதாகவும், நொடிக்கு நொடி பரபரப்பான தேடல் உள்ளதாகவும் ஆக்கிக்கொள்வதற்காக, அவன் தெரிந்தே தவறான தகவல்களை உடலில் பச்சை குத்திக்கொள்கிறான் என்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி.

நோலன் அடுத்ததாக இயக்கியது ஒரு ஐரோப்பிய படத்தின் அமெரிக்க ரீமேக், இன்சோம்னியா. தூக்கமின்மை நோயால் அவதியுறும் போலீஸ்காரராக ‘அல் பாசினோ’ நடித்த அந்தப் படத்தின் மூலமே ஹாலிவுட்டின் பெருமுதலீட்டு மைய ஓட்டத்தில் இணைந்தார் நோலன். அவர் இயக்கிய இரு பேட்மேன் படங்களும், காமிக்ஸ் நாயகர்களை மையமாகக் கொண்டு இதுவரை எடுக்கப்பட்ட எந்தப் படத்தைவிடவும் மேலானதாகக் கருதப்படுகின்றன, தீவிர சினிமாவாகவே அவற்றை உருவாக்கியிருக்கிறார். அதிலும் “தி டார்க் நைட்” ஒரு அற்புதம்.

இதுவரையிலான ஆகச் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்று இதில் வரும் ‘ஜோக்கர்’ பாத்திரம். பணம் காமம் போன்ற எந்த உலக இன்பங்களையும் நாடாதவன். பெருங்குழப்பங்களை உண்டாக்கி சமூக அமைப்பைச் சிதைப்பதையும், சமூகத்தின் அறவுணர்ச்சியுள்ள ஆன்மாவைக் கொல்வதையுமே லட்சியமாகக் கொண்ட வில்லன். எதனால் அவன் அப்படி மாறினான், பின்னணி என்ன, தனிப்பட்ட காரணம் என்ன என்பதைப் பற்றி எதுவுமே படத்தில் சொல்லப்படுவதில்லை, அதுவே பார்வையாளர்களை அதிகம் அச்சமூட்டியது. அவன் ‘கேம் தியரி’, ‘கெயோஸ் தியரி’ போன்ற கோட்பாடுகளை நடைமுறைப் பயன்பாட்டுக்கு உட்படுத்துகிற விதமும், மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஒருவனைக் கீழ்மைக்குத் தள்ளுவதன் மூலம் சமூகத்தில் ஒழுங்கின்மையை உருவாக்க நினைப்பதும், சராசரி மனிதர்களின் மன அழுக்குகளை முழுக்கப் புரிந்துகொண்ட ஒரு அறிவுஜீவியாகப் பேசுவதும் மிரட்சியானது. அவன் பேட்மேனை நோக்கி “நான் எப்படி உன்னைக் கொல்வேன்? நீ தானே என்னை முழுமை செய்கிறாய்? நாம் இப்படியே இறுதிவரை இந்த விளையாட்டைத் தொடர வேண்டியதுதான்” என்று சொல்லும் இடம், திரைக்கதையை எழுதிய சகோதரர்களான கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஜோனதன் நோலனின் உயர்வைக் காட்டுகிறது. வழக்கமாக சூப்பர் ஹீரோக்கள் இறுதியில் தங்கள் மீது சுமத்தப்பட்ட பழியைக் களைந்து மக்கள் முன் போற்றுதலுக்கு உரியவர்களாக நிற்பார்கள். ஆனால் இதில் எதிர்மறையாக, இறுதியில் பேட்மேன் தானே பழியை ஏற்றுக்கொண்டு ஓடி ஒளிகிறான். தான் ஒருவன் களங்கப்படுவதன் மூலம், சமூக ஒழுங்கும், மக்களின் நம்பிக்கையும் நீடிக்குமென்றால், அதுவே சிறந்தது என்கிறான்.

நோலனின் விருப்ப தளமான, பொய்யில் வாழ்வது / வாழ்வின் மாயை, நினைவுகள் / கனவுகள் போன்றவை அவரின் எல்லாப் படங்களிலும் இருக்கும் பொதுத்தன்மை. அது உச்சமாக வெளிப்பட்ட ஆகச் சிறந்த படங்கள் என்று நான் நினைப்பவை, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த இரு மேஜிக் நிபுணர்களின் தீவிர போட்டியை மையமாகக் கொண்ட “தி பிரஸ்டீஜ்”, மற்றும், கனவுக்குள் கொள்ளையடிப்பது இன்னொருவரின் ஆழ்மனதில் ஒரு கருத்தை விதைப்பது பற்றிய “இன்செப்ஷன்”.

நண்பர்களாக இருந்து பின்பு போட்டியாளர்களாகவும் தீவிர விரோதிகளாகவும் மாறும் இரு மேஜிக் நிபுணர்கள், நிலையில்லாத தற்காலிக வெற்றிகளுக்காகத் தங்களுடைய எல்லாவற்றையும் இழப்பதையும், நெருக்கமானவர்களிடம் கூடப் போலியாக நடந்துகொள்வதையும், தங்களை சுயவதைகளுக்கு உட்படுத்திக்கொள்வதையும் மிகச் சிறப்பாகக் காட்டிச்செல்லும் படம் “தி பிரஸ்டீஜ்”. நேர்கோடற்ற திரைக்கதையே இதன் பலம். பொதுவாக நாடகம் திரைக்கதை போன்றவற்றை 3 பகுதிகளாக (Three Acts) அடுத்தடுத்துக் கட்டமைப்பது உண்டு. இந்தப் படத்தில் ‘மூன்று ஆக்ட்’களும் இணையாகச் செல்கின்றன, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவித்தாவி நேர்கோடற்றதாக திரைக்கதை அமைவது, அதன் புதிர்த் தன்மையையும் மர்மங்களையும் கூட்டி, முடிவை நோக்கியே எல்லாவற்றையும் குவித்து, சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

கிறிஸ்டோபர் நோலன் கடந்த பத்தாண்டின் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி, இனிவரும் ஆண்டுகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கிறார். அதற்கு இந்த ஆண்டு வெளிவந்த ‘இன்செப்ஷன்’ படத்தின் வணிக வெற்றியும், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களுமே சாட்சி.

தொடரும்

.

.