City of God

.

உலக சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் (2000-2009) கவணம் பெற்று எழுந்து வந்த இயக்குனர்களில் நான் முக்கியமானவர்களாகக் கருதும் 10 பேரின் பட்டியலை முந்தைய பதிவில் ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சி..

.

Fernando Meirelles

ஃபெர்னாண்டோ மெய்ரெலஸ்

“சிட்டி ஆப் காட்” என்னும் பிரேஸில் நாட்டுப் படம், நிச்சயமாக கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் வெளிவந்த ஆகச் சிறந்த படங்களில் ஒன்று. வன்முறைகள் நிறைந்த சூழலில் அதைப் பார்த்துப் பயின்று வளரும் இளைஞர்களும் அதே தீயில் விழுந்து மடிவதை மிக அழுத்தமாகக் காட்டிய படம். கையில் ஏந்திய துப்பாக்கி கொடுக்கும் அளவில்லாத அதிகாரத்தின் ருசிகண்ட சிறுவர்கள், வறுமையையும் குடும்ப இழப்புகளுக்குப் பழிதீர்த்தலையும் காரணம் காட்டி, தாங்கள் வாழும் சூழலையே ஒரு நரகமாக மாற்றிவிடுவதை மிக உண்மையாகப் பதிவுசெய்த படம். மிகமிக சுவாரஸ்யமான கேமரா அசைவுகளும், படத்தொகுப்பும், தொழில்முறை அல்லாதவர்களை நடிக்கவைத்த விதமும், நிறைய கதாபாத்திரங்கள் கொண்ட சுமார் இருபது ஆண்டுகள் நடக்கும் ஒரு பெருங்கதையை நேர்த்தியாக திரைக்கதைக்குள் சுருக்கியவிதமும், அந்தப் படத்தை ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாற்றியிருக்கின்றன. கடந்த 6-7 ஆண்டுகளில் தமிழ் சினிமாத்துறையினரை அதிகமும் பாதித்த படம் இதுதான் என்று தயங்காமல் சொல்லமுடியும். இந்தப் படத்தை இரு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கியிருந்தாலும் ஃபெர்னாண்டோ மெய்ரெலஸ்-யின் பங்கே அதிகம்.

City of God

பிரேஸில் நாட்டில், ரியோ டி ஜெனிரோவின் ஒரு மூலையில், ஏழைகளும், அகதிகளும், குற்றவாளிகளும் வசிக்கும் ‘கடவுளின் நகரம்’ என்னும் பெயர்கொண்ட குடியிருப்புப் பகுதியில், 1960கள் முதல் 80கள் வரை நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. ஆரம்பமே அமர்க்களமானது, கோழி வெட்டுவதற்காக கத்தி தீட்டப்படுகிறது, கட்டப்பட்டிருக்கும் ஒரு கோழி தப்பித்து ஓடுகிறது, அதைப் பல சிறுவர்கள் துப்பாக்கிகளோடு துரத்திச் செல்கிறார்கள். ஃபோட்டோகிராபரான நாயகன் அங்குவர, ஒருபக்கம் துப்பாக்கிகளோடு வரும் போதை மருந்து கடத்தல் கும்பல் மறுபுறம் அவர்களைப் பிடிக்க வந்த போலீஸ் இருக்க, நடுவில் பலியாகக் காத்திருக்கும் கோழி போல மாட்டிக்கொண்டு அவன் நிற்கிறான், அங்கிருந்து ஃப்ளாஷ் பேக்கில் கதை சொல்லப்படுகிறது. மிகச் சிறுவயதிலேயே கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கும் ‘ஸே’ (Ze) என்னும் ராட்சஸன் தான் படத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குபவன். துப்பாக்கியின் மீது சிறுவயதிலேயே மோகம்கொள்ளும் அவன் படிப்படியாக போதை மருந்து வியாபாரத்தை முழுவதும் கைப்பற்றுகிறான், அதற்காக ஏராளமானவர்களைக் கொன்று குவிக்கிறான். அந்தக் குடியிருப்பில் எல்லாராலும் அஞ்சப்படுகிற தாதாவாகிறான். மறுபக்கம் ‘ராக்கெட்’ என்பவன் சிறுவயதிலேயே புகைப்படக் கருவியின் மீது ஆர்வம் கொள்கிறான், இறுதியில் ஒரு பிரபல பத்திரிகையில் புகைப்படக் கலைஞனாக மதிப்புமிக்க வேலையில் சேர்கிறான்.

இரு ‘சுடும்’ கருவிகளில் கேமராவைத் தேர்ந்தெடுத்தவனே இறுதியில் பிழைக்கிறான். துப்பாக்கியை எடுத்தவன் இறுதியில் மிக அசிங்கமாக அவனைவிடச் சிறிய பொடிப்பயல்களால் கொல்லப்படுகிறான். அதுவரை எல்லாராலும் மதிக்கப்பட்ட அவன் வீழ்ந்த மறுகணமே தூக்கி எறியப்படுவது, ஆயுதத்தால் எடுத்துக்கொள்ளப்படும் அதிகாரம் எத்தனை நிலையில்லாதது என்று காட்டுகிறது. படத்தின் ஒரு முக்கியமான பகுதி, இரு போட்டிக் குழுக்களுக்குள் நடக்கும் நீண்டகால யுத்தம். ஆட்கள் சாகச் சாகப் புதிய பையன்கள் சேர்ந்தபடியே இருக்கிறார்கள். இரு குழுவுமே நகரத்தின் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்துப் பணமும் சேர்க்கிறார்கள், ஆனால் அதை சுகிப்பதில்லை, அதைக்கொண்டு மேலும் மேலும் ஆயுதங்களை வாங்கிச் சுட்டுத் தள்ளியபடியே இருக்கிறார்கள். ஆயுதப் போராட்டங்களின் இன்னொரு பெரிய அபத்தம், ஒரு குழுவுக்குள்ளேயே யார் எப்போது எதிராகத் திரும்புவார்களோ என்ற ஐயம். இறுதியில் ‘ஸே’ கொல்லப்படுவதே அவனால் குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, அவனிடமிருந்து ஆயுதம் பெற்றவர்களால் தான்.

.

இயக்குனர் ஃபெர்னாண்டோ மெய்ரெலஸ் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் அதிக மதிப்பை உண்டாக்கியது உண்மையில் அவரது அடுத்த படமான “கான்ஸ்டண்ட் கார்டனர்” தான்.

மேற்கத்திய மருந்துக் கம்பனிகள், ஆப்பிரிக்க மக்களின் வறுமையையும் நோயையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கே தெரியாமல் நடத்தும் மருந்துப் பரிசோதனைகளையும், அதைத் துப்பறிந்ததால் கொல்லப்படும் தன்னார்வ சேவகியையும், அவளுக்கு நியாயம் கிடைப்பதற்காகத் தன் உயிரைப் பணயம் வைக்கும் அவளது கணவனான பிரிட்டிஷ் தூதரக அதிகாரியையும் சுற்றிப் பின்னப்பட்ட உணர்ச்சிகரமான படம். இலவச மருத்துவ முகாம் என்ற பெயரில் நடக்கும் மருந்துப் பரிசோதனைகள், அதில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் துடைத்தழிக்கப்படுவது, ஊழல் மலிந்த ஆப்பிரிக்க அரசுகள் மற்றும் பன்னாட்டுத் தூதரக அதிகாரிகள், அச்சத்தில் வதங்கும் எளிய மக்கள் என்று உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதப்பட்ட ஜான் லே கர்ரே-வின் நாவலுக்கு உயிர்கொடுத்து, உணர்ச்சிகரமும் சுவாரஸ்யமும் சிறிதும் குறையாத காவியமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

Constant Gardener

அவருடைய இன்னொரு படமான “பிளைண்ட்னஸ்” மிகுந்த குறியீட்டுத் தன்மையுள்ள படம். திடீரென்று பரவும் ஒரு வைரஸ் காரணமாகப் பலரும் குருடர்களாக மாறுகிறார்கள், நோய் மேலும் பரவாமலிருக்க பாதிக்கப்பட்டவர்கள் ஒரு தனிக் கட்டிடத்தில் அடைக்கப்படுகிறார்கள். நல்ல கண் பார்வையோடு இருக்கும் ஒருத்தியும் தன் கணவனுக்கு உதவுவதற்காக அங்கு சென்று வாழ்கிறாள். இறுதியில் மொத்த நகரமும் குருடாகிவிட, தன்னலம் கருதாத தாயாகவே மாறிவிடும் அவள் மட்டுமே பார்வையோடு மிஞ்சுகிறாள்.

கடந்த பத்தாண்டுகளில் பல முக்கிய இயக்குனர்களும் கையாண்ட இந்த வகைப் படங்களில் (28 டேய்ஸ் லேட்டர், சில்ட்ரன் ஆப் மென், தி ஹேப்பனிங், ஐ ஏம் லெஜண்ட், தி ரோட்) “பிளைண்ட்னஸ்” மட்டுமே “தி ரோட்”க்கு அடுத்தபடியாக பரபரப்பு சாகஸம் போன்றவை இல்லாத தீவிரமான படம். மலையாள “குரு” படத்தையும் இது நினைவுபடுத்துகிறது.

Blindness

அடைக்கப்பட்ட கட்டிடத்துக்குள், குருடர்கள் ஒரு சமூக அமைப்பை உருவாக்கிக்கொள்ள முனைகிறார்கள். அதில் ஒரு முரட்டுக் குழு வன்முறையின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றி எல்லாரையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருகிறது. வெளியில் இருந்து அளிக்கப்படும் உணவு மூட்டைகளைத் தாங்கள் கைப்பற்றி, பணம் நகைகளைக் கொடுத்தே உணவைப் பண்டமாற்று செய்யமுடியும் என்கிறார்கள். அவை எல்லாவற்றையும் கைப்பற்றிய பின்னர், பெண்களைப் படுக்க அனுப்பவேண்டும் என்கிறார்கள். பசிக்கு முன்னால் வேறு எல்லாவற்றுக்கும் அர்த்தமில்லாமல் ஆகிறது. பெண்கள் தங்களுக்காகவும் தங்களைச் சார்ந்த ஆண்களுக்காகவும் அதற்குச் சம்மதிக்கிறார்கள். நாகரீக வேடங்களைக் கலைத்து, மனிதனின் அடிப்படையான உணர்வுகள் என்னென்ன, தேவையும் ஆசையும் என்ன, உறவுகளுக்கு என்ன அர்த்தம் என்று காட்டுகிறது படம்.

கண்ணுள்ள நாயகி தனியே போராடி தன்னைச் சார்ந்தவர்களை அடைபட்ட கட்டிடத்திலிருந்து வெளியே கொண்டுவருகிறாள். ஆனால் அதற்குள் மொத்த மாநகரே குருடாகிவிட்டதைக் கண்டு அதிர்கிறாள். சமூக விலங்குகளான மனிதர்கள் உணவு தேடி கூட்டம் கூட்டமாக பிரம்மாண்ட நகருக்குள் அலைவது திகில் காட்சிகள். மனிதன் எத்தனைச் சிறியவன், அவனுடைய அகங்காரம் எத்தனைப் போலியானது, ஒரே ஒரு ஊனம் எப்படி மனித இனத்தையே பாதாளத்துக்குள் தள்ளிவிட முடியும் என்பதை மௌனமாக உணர்த்துகிறது படம். மேலும் ‘குருட்டுத்தன்மை’ என்பதே, சகமனிதர்களின் மேல் அக்கறையில்லாத தன்மை, வெளியுலகப் பிரச்சனைகளில் அறியாமை போன்ற பொதுப் புத்தியையே குறியீட்டால் உணர்த்துகிறது என்று நான் நினைக்கிறேன். இறுதியில் நேர்மறையான நம்பிக்கையூட்டும் முடிவோடு படம் நிறைவடைவது ஆறுதல் அளிக்கிறது.

ஆரம்பத்தில் மிகமிக எளிமையாக ஆரம்பித்துப் போகப்போக மிகப் பிரம்மாண்டமாக மாறும் இந்தப் படத்தை, ஃபெர்னாண்டோ மெய்ரெலஸ் தனது முந்தைய படங்களிலிருந்து வெகுவாக மாற்றி இயக்கியிருக்கிறார். வெவ்வேறு தளங்களும் அவருக்கு சாத்தியமானதே என்பது அவர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

தொடரும்.

.

.

Advertisements