Traffic

.

ஸ்டீவன் ஸோடர்பெர்க்

2001ஆம் ஆண்டு ஆஸ்கர் விழாவின் சிறப்பம்சமே ஒரே இயக்குனரின் இரு படங்கள் முக்கிய விருதுகளுக்காகப் போட்டியிட்டது தான். அவை “டிராஃபிக்” மற்றும் “எரின் புரோகொவிச்” இயக்கியது அமெரிக்கரான ஸ்டீவன் ஸோடர்பெர்க். “டிராஃபிக்” படம் ஸ்டீவன் ஸோடர்பெர்க்குக்கு சிறந்த இயக்குனர் விருதையும், டெல் டோராவுக்கு சிறந்த நடிகர் விருதையும், மேலும் திரைக்கதையாசிரியருக்கும் படத்தொகுப்பாளருக்கும் விருதுகளைப் பெற்றுத்தந்தது. “எரின் புரோகொவிச்” படம் ஜூலியா ராபர்ட்ஸ்-க்கு சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தது.

பத்தாண்டுகளின் (2000-09) பத்து இயக்குனர்கள் பட்டியலில் ஸோடர்பெர்க்கை வைப்பதா வேண்டாமா என்கிற குழப்பம் எனக்கு இருந்தது. காரணம் அவர் இயக்கிய முதல் படமான “செக்ஸ், லைஸ் அண்ட் வீடியோ டேப்ஸ்” 1989யிலேயே திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிறகு 1998யில் அவர் எடுத்த, சுவாரஸ்யமான திரைக்கதையமைப்புள்ள “அவுட் ஆப் சைட்” ஒரு வணிக வெற்றியும் கூட. ஆனால் அவரை ஒரு முக்கிய இயக்குனராக முன்னிலைப்படுத்தியது 2000ஆம் ஆண்டில் வெளியான “டிராஃபிக்” மற்றும் “எரின் புரோகொவிச்” படங்களே என்பதாலும், இந்தப் பட்டியல் அவரில்லாமல் முழுமையடையாது என்று நான் நினைப்பதாலுமே சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.

Steven Soderbergh

“டிராஃபிக்”, ஆவணப்படமெடுக்கும் பாணியைப் பின்பற்றி பெரும்பாலும் கையில் கேமராவைச் சுமந்து எடுத்தது, அதிலும் இயக்குனரே அதிகமும் ஆபரேடிவ் கேமராமேன் போல படமெடுத்திருக்கிறார். மெக்ஸிகோ நாட்டிலிருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், காவல் துறை நடவடிக்கைகள் மற்றும் அங்கிருந்து அமெரிக்காவுக்குக் கடத்தப்படுவது, அமெரிக்க இளைஞர்களிடம் பரவியிருக்கும் போதைப்பொருள் கலாச்சாரம், அதற்கெதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் என்கிற விரிந்த தளத்தை மையமாகக் கொண்ட, ஒன்றுக்கொன்று தொடர்புடைய 4 தனித்தனிக் கதைகளை உள்ளடக்கியது இதன் திரைக்கதை.

Michael Douglas in “Traffic”

மிகுந்த பொறுப்புமிக்க, அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைவராகப் புதிதாக நியமிக்கப்படும் ஒரு நீதிபதி (மைக்கேல் டக்ளஸ்) தனது சொந்த மகளே போதைக்கு அடிமையாகி சீரழிவதைப் பார்த்துக் கலங்கி நிற்கும் கதை முக்கியமானது. அந்த மகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், படிப்பறிவும் திறமையும் உள்ள மாணவர்களிடம் கூட போதைப்பொருள் பழக்கம் எப்படி ஒரு அறிவுச் செயல்பாடுபோலப் பரவுகிறது என்று காட்டுகின்றன. அவள் இறுதியில் ஒரு சேரிப் பகுதியில் போதைக்காகத் தனது உடலைவிற்று வாழ்கிறாள். அப்பா இதை வெளியில் சொல்ல முடியாமல், அவளைத் தெருத்தெருவாகத் தேடியலைகிறார். ஒரு சிறிய அறையில் வயதான ஆளோடு விபச்சாரம் செய்கையில் வந்து மீட்கிறார். நிர்வாணமாக போதை மயக்கத்தில் கிடக்கும் அவள், அரைக்கண் திறந்து அவரைப்பார்த்து, தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியாமல், குழந்தைபோலப் புன்னகைத்து “குட்மார்னிங் டாடி” என்று சொல்ல, அவர் அடக்க முடியாமல் கதறி அழும் காட்சி உருக்கமானது. [நாம் ஒரு மாறுதலாக, இது தமிழின் “மகாநதி”யிலிருந்து சுட்டது என்று சொல்லிக்கொள்ளலாம்].

இறுதியில் நீதிபதி, போதைக் கடத்தலுக்கு எதிரான தனது பத்து அம்ச செயல்திட்டத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்க மேடையேறுகிறார், ஆனால் அவரால் பேசவே முடியவில்லை. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்கிறார். போதை மறுவாழ்வு மையத்தில் மகள் திருந்தியவளாகப் பேச, அதைக் கேட்டபடி அமர்ந்திருக்கும் நீதிபதியிடம், அமைப்பாளர் மைக்கைக் கொடுக்க, அவர் “நான் இங்கு பேச வரவில்லை.. கேட்க வந்திருக்கிறேன்” என்கிறார். கடத்தலும் கள்ளச் சந்தையும் ஒருவர் மாற்றி ஒருவரால், ஒருவழியை மூடினால் மறுவழியில் நடந்தபடியே தான் இருக்கும், நம் குடும்ப உறவுகளும், தெரிந்தவர்களும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் காப்பதும் மீட்பதும், போதை ஒரு சமூகப் பழக்கமாக ஆகாமல் தடுப்பதுமே முக்கியமானது என்று காட்டுகிறது இந்தக் கதைத்தொடர்.

Benicio Del Toro in “Traffic”

அடுத்த கதையில், மெக்ஸிகோவின் சிறுநகரம் ஒன்றின் காவல்துறை அதிகாரி (டெல் டோரோ) பெரும் போதைப்பொருள் கடத்தலொன்றைப் பிடித்து, தனிப்படையோடு அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் மைய அரசின் ஜெனரல் ஒருவரிடம் நற்பெயர் பெறுகிறான். அவருடைய கட்டளைப்படி அவன் ஒரு குறிப்பிட்ட கொலையாளியை (காலின்ஸ்) பிடித்துக்கொடுக்கிறான். அந்த ஆளைச் சித்திரவதை செய்து, ஓபரகான் என்னும் போதைப்பொருள் கும்பலில் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியலைப் பெறுகிறார்கள். ஜெனரலின் தனிப்படையும் காவலதிகாரியும் அந்தக் கும்பலின் முக்கியப் புள்ளிகளை அழித்து அதன் செயல்பாட்டை முடக்குகிறார்கள். அதன் பிறகுதான் காவலதிகாரிக்கு ஜெனரலின் உள்நோக்கம் புரிகிறது. அவர் உண்மையில், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு பெரிய கடத்தல் மன்னனின் கைக்கூலி, அவனுக்காகவே ஓபரகான் கும்பலை அழித்திருக்கிறார்.

இந்த ரகசியத்தை வெளியில் சொன்னதற்காக காவலதிகாரியின் கூடவே இருக்கும் துணை அதிகாரியை அவர்கள் கொல்கிறார்கள். அது காவலதிகாரியை வெகுவாகப் பாதிக்கிறது. அவன் ஒட்டுமொத்தமாக எல்லாரைப் பற்றிய ரகஸியங்களையும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்திடம் கையளிக்க முன்வருகிறான். அதற்குக் கைமாறாக எவ்வளவு பணம் வேண்டும் என்று அவர்கள் கேட்க, காவலதிகாரி தனது நகரத்திற்குப் போதுமான மின்சார வசதி செய்துதரவேண்டும் என்றும் இரவிலும் பேஸ்பால் விளையாடக் கூடிய விளக்குகள் கொண்ட மைதானம் அமைக்க வேண்டும் என்றும் கேட்கிறான். அதன் மூலம் இளைஞர்கள் இரவில் வீதிகளில் கும்பல்களாக சேர்வதும் குற்றங்களில் ஈடுபடுவதும் தடுக்கப்படும் என்று அவன் நம்புகிறான். இறுதியில், ஒரு பெரிய மைதானம் விளக்குகளில் ஜொலிக்க பெருந்திரளான இளைஞர்கள் பேஸ்பால் போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்க, அவர்களோடு காவலதிகாரியும் அமர்ந்திருப்பதோடு படம் நிறைவடைகிறது. டெல் டோரோ-வின் நடிப்பில் என்னை அசரவைத்தது அவர் துப்பாக்கியைக் கையாளும்விதம்தான், எதிராளியை விட தன் துப்பாக்கியையே அவர் அதிகமும் அஞ்சுவது போலிருக்கும்.

Catherine Zeta-Jones in “Traffic”

மூன்றாவது கதை, செல்வச் செழிப்பில் சொகுசாக வாழும் ஒரு பணக்காரக் குடும்பப்பெண் (கேத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ்) பற்றியது. திடீரென்று ஓர்நாள் அவளது கணவன் கைதுசெய்யப்பட, அதிர்ந்துபோகிறாள். அவள் நினைத்திருந்ததைப் போல அவன் ஒரு மதிப்புமிக்க தொழிலதிபனே அல்ல, பெரும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரி. மூன்று வயது மகனும் வயிற்றில் ஒரு குழந்தையுமாக இருக்கும் அந்தத் தாய், நிழலுலகம் பற்றி அதுவரை எதுவுமே தெரிந்திருக்காத அந்த இல்லத்தரசி, ஒரு கொலைகாரியாக மாறுகிறாள். தன்னிடம் பிரியமாகவே நடந்துகொண்ட கணவனையும், தான் வாழ்ந்த சொகுசு வாழ்வையும் இழக்க விரும்பாமல், அநீதியின் பக்கம் சாய்கிறாள். ஒரு தொழில்முறை கொலைகாரனிடம் (காலின்ஸ்), ஓபரகான் கடத்தல் கும்பலிடமும் அவள் தன் கணவனுக்கு எதிரான முக்கிய சாட்சியைக் கொல்லும்படி பேரம் பேசும் காட்சிகள் அதிர்ச்சிகரமானவை. சுயநலமான அன்பு எத்தனை ஆபத்தானது என்பதை உணர்த்துபவை.

Don Cheadle

நான்காவது கதை, இரு உளவுத்துறை அதிகாரிகளைப் பற்றியது. முந்தைய கதையில் வரும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரியைக் கைது செய்தது இவர்கள் தான். முக்கிய சாட்சியை ரகஸிய இடத்தில் பாதுகாத்து வைப்பதற்கும், நீதிமன்றத்தில் சாட்சிசொல்ல வைப்பதற்கும், கடத்தல்காரனின் மனைவியின் நடவடிக்கையை வேவு பார்ப்பதற்கும், அந்த இளைஞர்கள் அர்ப்பணிப்போடும் கடமையுணர்வோடும் இரவுபகலாகப் பணியாற்றுவது மலைக்கவைப்பது. சாட்சியைக் கொல்ல முயன்ற முதல் முயற்சியில் இருவரில் ஒரு இளைஞன் இறந்துபோக, இரண்டாவது முயற்சியில் சாட்சியே கொல்லப்பட அவர்களின் மொத்த உழைப்பும் வீணாகிறது. உயிரோடிருக்கும் ஒருவன் (டான் ஷீடில்) தோல்வி மற்றும் நண்பனின் மரணத்தால் விரக்தியடையாமல், இறுதியில் தனது உளவு வேலையை மெல்லிய புன்சிரிப்போடும் துள்ளலோடும் மீண்டும் ஆரம்பிப்பதாகக் காட்டப்படும் கட்டம், அற்புதமான திரைத் தருணம்.

டிராஃபிக் படம், அதன் கதை, மிகச் சிறந்த நடிப்பு என்பனவற்றைத் தாண்டி, ஸோடர்பெர்க்-யின் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான, ஆவணப்பட சாயலுள்ள திரைமொழிக்காகவும் பார்க்கப்படவேண்டியது.

“எரின் புரோகொவிச்” படம், ஒரு வாழும் நிஜப் பெண்ணையும் உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஜீலியா ராபர்ட்ஸின் பிறவிப் பயன் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் என்று நான் நினைக்கிறேன்.

இருமுறை விவாகரத்து செய்து, மூன்று குழந்தைகளோடு, வேலையில்லாமல், செலவுக்குப் பணமில்லாமல் அல்லாடும் எரின், அவளுடைய முன்கோபத்தாலும், வாயாடித்தனத்தாலும், கவர்ச்சியாக உடுத்துவதாலும், சபை நாகரீகமில்லாத நடத்தையாலும் அனைவராலும் வெறுக்கப்படுபவள். தனது காரில் வந்து மோதி தன்னையும் காயப்படுத்திய ஆளிடமிருந்து நஷ்டஈடு பெறுவதற்காக ஒரு சட்ட நிறுவனத்தை நாடுகிறாள். (அந்த விபத்துக் காட்சி ஒரு அற்புதம், அத்தனை தத்ரூபமாக வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை) கோர்ட்டில் அவளுடைய நடத்தை காரணமாக அவள் தரப்பு நியாயம் எடுபடாமல் போகிறது. எங்கும் வேலை கிடைக்காத நிலையில், நஷ்டஈடு வாங்கித்தராததையே காரணமாகச் சொல்லி அடித்துப்பேசி அந்த சட்ட நிறுவனத்திலேயே ஒரு தற்காலிக வேலையில் சேர்ந்துவிடுகிறாள் எரின். அங்கு எதேச்சையாக, ஒரு சாதாரண நில விற்பனை தொடர்பான வழக்கின் கோப்புகளைப் பார்க்கும் எரின், அதிலிருக்கும் முரண்பாடு காரணமாக விசாரிக்கத் தொடங்கி, மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு, தீவிரமாகத் தோண்டித் தோண்டி ஒரு பூதாகரமான பிரச்சனையைக் கண்டடைகிறாள்.

Julia Roberts in “Erin Brockovich”

ஒரு பெரிய ரசாயன தொழிற்சாலை பல ஆண்டுகளாக பூமிக்கடியில் கழிவுகளைப் புதைத்ததால், அதிலிருந்து நச்சு வெளியேறி நிலத்தடி நீரில் கலந்துவிட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் பலரும், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, மலட்டுத்தன்மை முதல் கேன்ஸர் வரை பலவிதமான தீராத நோய்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த தொழிற்சாலை நிர்வாகிகள் தாங்களே டாக்டர்களை நியமித்து, இலவச மருத்துவ உதவிகளை அந்த மக்களுக்கு வழங்கி, அவர்களுடைய நோய்களுக்கான உண்மையான காரணம் தெரிந்துவிடாமலே வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்களது வீடுகளையும் நிலங்களையும் தங்கள் நிறுவனத்துக்கு விற்றுவிட்டு வெளியேறும்படி வற்புறுத்துகிறார்கள்.

எரின் தனது விடா முயற்சியால் ஆதாரங்களைத் திரட்டி, பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து, உண்மையை விளக்கி, அவர்களது நம்பிக்கையைப் பெற்று, தான் சார்ந்த சிறிய சட்ட நிறுவனத்தின் மூலம், பலநூறு பேருக்கு அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை இல்லாத மிகப் பெரிய நஷ்டஈட்டை வாங்கித்தருகிறாள். அது ஒரு உண்மைச் சம்பவம் என்று தெரியாவிட்டால் நம்பவே முடியாத அளவுக்கு, ஒரு எளிய பெண்ணால் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய சாதனையின் கதை. தீவிரமான விஷயத்தை நகைச்சுவையோடு சொன்ன படம்.

எரின் ஊர்ப் பிரச்சனைக்காக அலைந்தபடி இருப்பதால் அவளது குழந்தைகள் சிரமத்துக்குள்ளாவதும், பக்கத்து வீட்டுக்குக் குடிவரும் ஒரு ஹிப்பி அவளைக் காதலிப்பதும், அவனே முன்வந்து குழந்தைகளை அவளைவிடச் சிறப்பாகப் பார்த்துக்கொள்வதும் மிக அழகிய துணைக் கதை. ஒரு கட்டத்தில் காதலன், குடும்பத்துக்காக அவள் இந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறான். அதற்கு எரின், “என் வாழ்க்கையில் முதல்முறையாக மனிதர்கள் என்னை மரியாதையோடு நடத்துகிறார்கள், நட்பாகச் சிரிக்கிறார்கள், நான் அவர்கள் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று நம்புகிறார்கள்.. இதை நான் எப்படி இழக்கமுடியும்?” என்கிறாள். எரினின் நடவடிக்கைகளால் ஆரம்பத்தில் எரிச்சலடையும் குடும்பத்தினர் இறுதியில் அவளைப் புரிந்துகொள்வது நெகிழ்ச்சியானது. ஸோடர்பெர்க் எந்த அலங்காரங்களும் மிரட்டல்களும் இல்லாமல் மிக யதார்த்தமாக, உண்மையையும் உணர்ச்சிகரத்தையும் மட்டுமே நம்பி எடுத்த நல்ல படம் இது.

.

[ஸ்டீவன் ஸோடர்பெர்க் படங்களைப் பற்றி அடுத்த பதிவிலும் தொடரும்]

.

.