CHE

.

[இயக்குனர் ஸ்டீவன் ஸோடர்பெர்க் பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி..]

Steven Soderbergh

2000ஆம் ஆண்டின் இரு முக்கியப்படங்களை எடுத்ததின் மூலம் நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்ந்தார் ஸ்டீவன் ஸோடர்பெர்க். ஹாலிவுட்டின் எல்லாத் தயாரிப்பு நிறுவனங்களும் நடிகர்களும் அவரோடு பணியாற்ற விரும்பினார்கள். அவரும் ஏராளமான படங்களை எடுத்துக் குவித்தார். ஆனால் அவற்றில் சில படங்கள் தவிர்த்து மற்றதெல்லாமே ஏமாற்றமளிப்பவையாகவே இருந்தன. “ஃபுல் ஃப்ரண்டல்”, “பபிள்”, “தி குட் ஜெர்மன்”, “கேர்ள் ஃபிரண்ட் எக்ஸ்பீரியன்ஸ்”, “தி இன்ஃபார்மெண்ட்” போன்ற படங்கள் இலக்கற்றவையாகவும், கொஞ்சம் அறிவுஜீவித் தனமாகவும், மனதைத் தொடாத போலியான படங்களாகவும் எனக்குத் தோன்றின. மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் குவித்து அவர் எடுத்த வணிகப் படங்களான “ஓஸன்ஸ் லெவன்”, “ஓஸன்ஸ் டுவெல்வ்”, “ஓஸன்ஸ் தேர்டீன்” வரிசை, பொழுதுபோக்குக்குச் சிறந்ததே. ஒரு குழு சேர்ந்து கொள்ளையடிக்கும் பல படங்கள் வந்திருந்தாலும், இவற்றிலிருக்கும் புது அனுகுமுறையை யாரும் உணர முடியும். மட்டுமல்லாமல் ஏராளமான நல்ல நடிகர்களை ஒருசேரத் திரையில் பார்க்கும் அனுபவமும் அலாதியானது.

.

ஸோடர்பெர்க்-யின் முக்கியமான ஒரு படம், 2002யில் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து அவர் இயக்கிய “சோலாரிஸ்” எனும் அறிவியல் புனைவு. புகழ்பெற்ற ரஸ்ய இயக்குனர் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி-யின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான சோலாரிஸ்-ஐ சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத்தில் ரீமேக் செய்தார்கள். ஸோடர்பெர்க் தனது பொறுப்புணர்ந்து சிறப்பாகவே இந்த மறுஆக்கத்தைச் செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

வேற்றுக்கிரகம் ஒன்றில் வாழும் அந்நிய உயிரினத்தை ஆராய்வதற்காகச் சென்ற விண்கலத்தில், சில விவரிக்க முடியாத விநோதங்களும் மர்மங்களும் மரணங்களும் நிகழ்கின்றன. அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக நாயகன் அங்கு அனுப்பப்படுகிறான். பல வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்துபோன தன் மனைவியை அவன் அங்கு சந்தித்துத் திகைக்கிறான். அது வேற்றுக்கிரக உயிரினத்தின் வேலை என்று, அங்கு தப்பிப் பிழைத்திருக்கும் இரு விண்வெளி வீரர்கள் சொல்கிறார்கள். அப்படி, விண்கலத்திலிருந்த ஒவ்வொருவருக்குமே, அவர்களது நினைவுகளிலிருந்து, உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் ரத்தமும் சதையுமாக உயிர்பெற்று எழுந்து வந்திருக்கிறார்கள். அங்கு இறந்து போய்விட்ட ஒரு விஞ்ஞானியின் மகன், அப்படி உருவாகி வந்து இன்னும் விண்கலத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

நினைவுகளிலிருந்து உருவாகி உயிர்பெற்று நடமாடும் அந்த நபர்கள், உண்மையில் நிஜ உறவினர்களும் அல்ல, அவர்களின் பிரதிகள் மட்டுமே. ஒரு பிரதியை அழித்தாலும் இன்னொரு பிரதி வந்துவிடும். அதிலிருந்து திரைக்கதை மேலும் சிக்கலான உளவியல் பிரச்சனைகளுக்குள் நுழைகிறது. இதன் இறுதிக் காட்சிக்கும் இன்செப்ஷன் படத்தின் இறுதிக் காட்சிக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. செமிகிஸ் இயக்கிய காண்டாக்ட் படத்தின் புகழ்பெற்ற உச்சக் காட்சியும் இதனோடு ஒப்பு நோக்கக் கூடியதே.

கடந்த பத்தாண்டுகளின் பிற்பாதியில், நான் ஸோடர்பெர்க் மீது கிட்டத்தட்ட நம்பிக்கையிழந்திருந்தபோது “சே : பாகம் 1”, “சே : பாகம் 2” படங்கள் வந்து, இயக்குனர் மீது மீண்டும் மரியாதையை உண்டாக்கின. என் மனதுக்கு நெருக்கமான படங்களின் வரிசையில் பொதுவாக வாழ்க்கை வரலாறுகளே அதிகம். “காந்தி”, “லாரன்ஸ் ஆப் அரேபியா”, “ஸ்பார்டகஸ்”, “ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்”, “தி பியானிஸ்ட்” போன்ற பல சிறந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் இருந்தபோதும், அவையெல்லாவற்றிலும் இல்லாத ஒரு யதார்த்தமும், நம்பகமும் இந்தப் படத்தில் இருக்கிறது. வரலாற்று நாயகர்களை ஒரு சராசரியான படச்சட்டத்துக்குள் அடக்க இயக்குனர்கள் பொதுவாக விரும்புவதில்லை. சூழலையும், படச்சட்டத்தையும், நாடகத் தருணங்களையும் கொஞ்சம் மிகையான அழகுபடுத்தல்களோடும் செம்மையானதாகவுமே அமைப்பார்கள்.

சே குவேரா வாழ்க்கையை வேறு எந்த இயக்குனர் படமாக்கியிருந்தாலும், கொஞ்சம் செயற்கைத்தனத்தோடு அதிமனிதராகவே அவரை சித்தரித்திருப்பார். ஏனென்றால் பொதுவில் அவருக்கு இருக்கும் பிம்பம் அத்தகையது. “சே” புரட்சியின், கட்டுடைத்தலின், எதிர்ப்பின், கலகத்தின் மாபெரும் சின்னமாகவே ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இந்தப் படத்தில் மிகமிக யதார்த்தமாக அவரை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் ஸோடர்பெர்க்-கும் நடிகர் பெனிசியோ டெல் டோரோ-வும். சமகாலத்தில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் டெல் டோரோ என்பதை அவர் இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். கேண்ஸ் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டாலும், ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்றவை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. சே குவேரா பாத்திரத்தில் நடித்ததிற்கு அந்த அமெரிக்க விருதுகள் ஏன் வழங்கப்படவில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

Benicio Del Toro – “CHE”

அதன் முதல் திரையிடல் கேண்ஸ் திரைப்படவிழாவில் தான் நடந்தது, சுமார் நாலரை மணிநேரம் ஓடும் முழுப் படமும் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டது. பிறகு வெகுஜனப் பார்வைக்கு வெளியிடும்போது இரு பாகங்களாகப் பிரித்து வெளியிடப்பட்டது. முதல் பாகம் சே குவேரா-வின் எழுச்சியையும், இரண்டாம் பாகம் அவரின் வீழ்ச்சியையும் சித்தரிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லலாம். கியூபா புரட்சியை மையமாகக் கொண்டது முதல் பாகம். பொலிவியா நாட்டில் சே நடத்திய கொரில்லா யுத்தத்தை மையமாகக் கொண்டது இரண்டாவது பாகம்.

முதல் பாகம் நேர்கோடற்ற திரைக்கதை அமைப்பு கொண்டது. அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த சே, பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப் படையில் சேர்ந்து கியூபாவின் சர்வாதிகார அரசைக் களைவதற்காகப் போரிட்டு வெல்வதே முதன்மையான கதை. இடையிடையே, சே அமெரிக்க நியூயார்க் நகரத்துக்கு கியூப அமைச்சராகவும், தூதுவராகவும் பிற்காலத்தில் வந்திருந்ததையும், ஊடகங்களுக்குப் பேட்டியளித்ததையும், ஐ.நா.சபையில் கியுபாவின் தரப்பை சிறப்பாக எடுத்துரைத்ததையும், அவரின் செல்வாக்கு உலகமெங்கும் உயர்ந்ததையும் காட்டும் காட்சித்தொடர் வருகிறது. அதில்தான் நாம் இன்று கொண்டுள்ள பிம்பத்துக்குப் பொருத்தமான சே குவேராவைக் காணமுடிகிறது. முதன்மையான கதையில், மிக யதார்த்தமாகச் சித்தரிக்கப்படும் சே, மிகப் பெரும் ஆளுமையாக வளர்ந்தெழுவதை, சிறுசிறு சம்பவங்கள் வாயிலாகக் காட்டிச் செல்கிறது திரைக்கதை.

Demian Bichir (Fidel Castro) Del Toro (Ernesto Che Guevara)

படத்தின் முதல் காட்சியே, மெக்ஸிகோவில் ஒரு நண்பரின் வீட்டில் வைத்து, சே குவேரா முதன் முறையாக பிடல் காஸ்ட்ரோவைச் சந்திப்பதுதான். இருவருமே இலட்சியவாதிகள், ஆனால் பிடலின் லட்சியம் கியுபா-வின் விடுதலை என்ற ஒரு மையத்தில் குவிந்தது, சே மொத்த தென்அமெரிக்க நாடுகளின் அரசுகளையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். பிடல் சரியான திட்டமிடல்களும் முன்தீர்மானங்களும் உள்ளவராக இருக்கிறார், ஆனால் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்பவே சே பயணிக்கிறார். பிடல் எடுக்கும் சில அரசியல் முடிவுகள் சே-க்கு பிடிக்காதபோதும், அதற்கு ஏதோ ஒரு சரியான காரணம் இருக்கும் என்று நம்பி, பிடல் சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் சே. போரின் ஆரம்ப நாட்களில், மற்ற படைவீரர்கள், சே ஒரு டாக்டர் என்கிற அளவில் மட்டுமே மதிக்கிறார்கள், அவருடைய ஆஸ்த்துமா நோய் காரணமாக பெரிய வீரராகவோ தலைவராகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பிடல் ஒவ்வொரு முறையும் சே-வுக்கு உரிய மரியாதையையும், முன்னிலையையும் கொடுத்து அவரை முக்கியமானவராக்குகிறார். ஒருமுறை சே-வை பதவியிறக்கமும் செய்கிறார், போர்க்களத்திலிருந்து ஒதுக்கியும் வைக்கிறார், ஆனால் பிறகு சரியான சந்தர்ப்பத்தில் சே-வுக்கு உயரிய பதவி கொடுத்து, தனக்கு அடுத்த இடத்தில் அமர்த்துகிறார் பிடல். கியூபாவின் நிலவியல் அமைப்பு, ஒவ்வொரு பகுதி மக்களுடைய மனநிலைகள், அரசுப் படைவீரர்களின் மனநிலை எல்லாவற்றையும் பிடல் காஸ்ட்ரோ தெளிவாக அறிந்துவைத்திருக்கிறார். இறுதிப் போரில் சே-வின் பங்களிப்பும், அவர் தலைமையிலான படைப் பிரிவின் தீரமுமே வெற்றியைத் தருவது அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சே மிகுந்த நிதானமுள்ளவர், அழுத்தக்காரர் என்கிற சித்திரமே இந்தப் படத்தின் மூலம் நான் பெற்றது. கோபப்படும் சமயங்களிலும் அதை அவர் வெளிப்படுத்தும் விதம் நிதானமாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கிறது. அவர் எதிரிகளிடம் போரிடுவதைவிடவும் தனது உடலோடு (ஆஸ்துமா நோயோடு) போராடுவதே, அவருடைய லட்சியப் பிடிப்பையும் தியாகத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. ஒரு தலைவன் சந்திக்கும் சவால்கள், அவனுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்புகள் எல்லாம் சே-வின் வாழ்க்கையின் ஊடாக நாம் அறிய முடிகிறது. படம் முழுவதும் அவர் தனது வீரர்களுக்குள் வரும் சிறுசிறு சண்டைகளைப் பேசித் தீர்த்தபடியே இருக்கிறார். படையில் புதிதாக சேர வருபவர்களை உடனே சேர்க்காமல், எதிர்மறையாகப் பேசுகிறார், வரக்கூடிய இழப்புகளைப் பற்றி எச்சரிக்கிறார். எந்தப் பெரிய யுத்தத்துக்குக் கிளம்புவதற்கு முன்பும், தன் படையினரை ஒன்றாக நிறுத்தி “யாருக்காவது விலகவேண்டுமென்று தோன்றினால் இப்போதே போய்விடலாம்” என்று சொல்லி, அப்படி முன்வருபவர்களை ஒரு விளக்கமும் கேட்காமல் அனுப்பிவைக்கிறார்.


புரட்சியாளர்கள் அவசியம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தியபடியே இருக்கிறார் சே. பொதுமக்களிடம் தன் படையினர் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதில் மிகக் கறாராக இருக்கிறார், அவர்களின் உணவைப் பறிப்பதையோ, பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதையோ அவர் மன்னிப்பதே இல்லை. “பொதுமக்களுக்காகவே நாம் உயிரைக்கொடுக்கிறோம், ஆனால் அதற்காக அவர்கள் நமக்குக் கடமைப்பட்டவர்கள் என்று நினைத்தால் அது தியாகமே இல்லை” என்கிறார் சே. இதையே முதல் பாகத்தின் இறுதிக் காட்சியும் அழுத்திச் சொல்கிறது. புரட்சி வெற்றியடைந்த பிறகு படைகள் தலைநகர் நோக்கிச் செல்கின்றன. அப்போது சில வீரர்கள் ஒரு விலையுயர்ந்த காரில் கோஷமிட்டபடி வருகிறார்கள். சே அவர்களை மறித்து, “இந்தக் காரை யாரிடம் பறித்தீர்கள்? கொண்டுபோய் திருப்பிக்கொடுத்துவிட்டு, படை வண்டியிலோ, பஸ்ஸிலோ அல்லது நடந்தோ வாருங்கள்” என்று ஆணையிடுகிறார்.

இரண்டாவது பாகம், நேர்க்கோட்டில் அமைந்த திரைக்கதையைக் கொண்டுள்ளது. சே சுமார் எட்டாண்டுகள், புரட்சிக்குப் பின்னான கியூபாவைக் கட்டியெழுப்புவதற்காக, தேசப் பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளில் பணியாற்றிவிட்டு, திடீரென்று ஓர்நாள், ஒரு விளக்கக் கடிதத்தை பிடலுக்கு அனுப்பி, தனது எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு, கியூபாவிலிருந்தும் வெளியேறிவிட்டார் என்கிற செய்தியோடு ஆரம்பிக்கிறது படம். தனது அடையாளத்தை மாற்றிக்கொண்ட சே கொஞ்சகாலம் அர்ஜண்டினாவில் தனது குடும்பத்தோடு (மனைவி, மூன்று குழந்தைகள்) இருந்துவிட்டு, பிறகு போலிப் பத்திரங்களோடு வேறு பெயரில் ரகசியமாக பொலிவியாவுக்குள் நுழைகிறார். பிடல் பெரும் நிதியுதவியை அங்கு அனுப்பிவைக்க, சே தனது ஆதரவாளர்களை வரவழைத்து, காட்டுக்குள் படைவீடமைத்து, பொலிவிய அரசை ராணுவப் புரட்சியின் மூலம் கைப்பற்றும் பெரும் கனவோடும் நம்பிக்கையோடும் களமிரங்குகிறார்.

உள்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கம் தன்னோடு இணையுமென்று முதலில் அவர் நம்புகிறார். ஆனால் ரஸ்யாவின் ரகஸிய ஆணை காரணமாக அவர்கள் சே-வை நிராகரிக்கிறார்கள் (ரஸ்யா சீனாவுக்கிடையே உறவு முறிந்தபோது, சே மாவோவை ஆதரித்தார்). வெகுசில உள்ளூர்க்காரர்களையே படையில் சேர்க்க முடிகிறது. ‘போகப்போக நிலைமை மாறும், சிறு வெற்றிகளைப் பெற ஆரம்பித்தால் படை திரளும்’ என்று அவர் நம்புகிறார். ஆனால் பொதுமக்கள் இந்தப் படையினரை அந்நியர்களாகவே பார்க்கிறார்கள். அதனுடன் பொலிவிய அரசு திட்டமிட்டுப் பரப்பும் அவதூறுகளும் வதந்திகளும் சேர்ந்துகொள்ள, பொதுமக்கள் இவர்களை அஞ்சவும் செய்கிறார்கள். அமெரிக்காவின் பெரும் அளவிலான ஆயுத உதவிகளையும் சிஐஏ உளவையும் பயன்படுத்தி பொலிவிய அரசு புரட்சிப் படையை முற்றிலுமாக அழிக்கிறது. சே குவேரா கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக் கொல்லப்படுகிறார்.

உணவு வரத்தும் உதவிகளும், ஒருகட்டத்தில் காட்டுக்குள் இருக்கும் படைக்குக் கிடைக்காமல் போகும்போது, அவர்கள் படும் அவலம் கொஞ்சமல்ல. கையில் ஆயுதம் இருந்துகூட கிராமவாசிகளிடம் எதையும் பறிக்காமல், உணவுப்பொருட்களைப் பணம் கொடுத்தே வாங்குகிறார் சே. படையில் வந்துசேரும் பொலிவிய ஆட்கள், புரட்சிக்கான எவ்வித மனத்தயாரிப்பும் இன்றியும், கொள்கையற்றவர்களாகவும் இருப்பதே சே-வை ஒவ்வொரு முறையும் சிக்கலில் ஆழ்த்துகிறது. சிறந்த உதாரணம், துப்பாக்கியைக் கையில் கொடுத்து “சமைப்பதற்கு எதையாவது வேட்டையாடி வாருங்கள்’ என்று இரு இளைஞர்களை அனுப்பிய உடனேயே, அவர்கள் ஓடிப்போய்விடுகிறார்கள், இராணுவத்திடம் புரட்சியாளர்களைக் காட்டியும் கொடுக்கிறார்கள்.

கியுபாவில் இருந்திருந்தால், காரும் பங்களாவும், அமைச்சருக்கான மரியாதைகளையும் பெற்றிருக்கக் கூடிய சே, காலில் புண்ணோடு மூச்சிறைத்தபடி காட்டில் அலைந்து திரிவது வேதனையானது. படத்தின் இறுதியில், சே சுடப்பட்ட பின்பு, ‘ஃப்ளாஷ் கட்’டில், முதல் பாகத்தின் ஆரம்பத்தில் சே குவேரா-வும் பிடல் காஸ்ட்ரோ-வும் ஒரு சிறிய படையோடு மெக்ஸிகோவிலிர்ந்து கியூபாவுக்கு படகில் வரும் காட்சி மீண்டும் காட்டப்படுகிறது. அதில் சே சிறிது விலகி நின்று, கடலைப் பார்த்தபடி இருக்கும் பிடல்-ஐ வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறார். அத்துடன் படம் முடிகிறது. இதன் மூலம் சொல்லப்படுவது என்ன என்பது ஓரளவு புரிந்தாலும், தென்அமெரிக்க வரலாற்றையும் சே, காஸ்ட்ரோ பற்றியும் மேலும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றே நினைத்துக்கொண்டேன்.

நான் இரு பாகங்களையும் டிவிடி-யில் அடுத்தடுத்து தொடர்ந்து பார்த்தேன். அப்படிப் பார்ப்பதே சிறந்தது என்று பார்க்காதவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். பல இடங்களில் புல்லரிப்பை உணர்ந்தேன், சில இடங்களில் கண்கலங்கினேன். அப்படியொன்றும் உணர்ச்சிகரமோ, மெலோ-டிராமாவோ இல்லாத, ஆவணப்படம் போன்ற திரைமொழியில் இது எப்படி சாத்தியமாயிற்று என்று வியக்காமலிருக்க முடியவில்லை. ஒரு சிறந்த நடிகரும், சிறந்த இயக்குனரும், ஒரு நிஜ வரலாற்றைப் படமாக்கினால் எத்தகைய உயிரோட்டத்தைத் திரையில் உருவாக்கமுடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தப் படம்.

.

[பட்டியல் தொடரும்]

.

.