Children Of Men

.

அல்பொன்ஸோ குவாரோன்

இனிவரும் ஆண்டுகளில் திரைக்கலைக்கு அதிகம் பங்காற்றக்கூடிய இயக்குனர்கள் என்று நான் எதிர்பார்ப்பவர்களில் முக்கியமான ஒரு திறமைசாலி, மெக்ஸிகோவைச் சேர்ந்த அல்பொன்ஸோ குவாரோன். அவர் எடுத்திருக்கும் படங்களை விட, பாதியில் நிறுத்திய படங்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம். முடிவெடுப்பதில் தடுமாற்றங்கள் கொண்ட ஒரு குழப்பவாதி என்று பெயரெடுத்தவர். மெக்ஸிகோவின் அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றகாலத்தில் கல்லூரி முதல்வரை எதிர்த்துக் கலகம் செய்ததிற்காகப் பாதிப் படிப்பிலேயே வெளியேற்றப்பட்டவர். சில ஆண்டுகள் சினிமாவை மறந்து வேறு தொழில்களில் ஈடுபட்டார், பிறகு உதவி இயக்குனராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. அவர் இயக்கிய சில குறும்படங்கள் திரைப்பட விழாக்களில் கவணம் பெற்றதால், அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்தார்கள். 90-களின் பிற்பாதியில் அவர் ஹாலிவுட்டுக்கு சென்று “எ லிட்டில் பிரின்ஸஸ்”, மற்றும் சார்லஸ் டிக்கன்ஸ்-யின் புகழ்பெற்ற நாவலான் “கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்” போன்ற முழுநீளத் திரைப்படங்களை எடுத்தார். எந்தப் பெரிய அங்கீகாரமும் அங்கு கிடைக்காமல், மீண்டும் அவர் மெக்ஸிகோ திரும்பிவந்து எடுத்த படம்தான் “யு து மாமா தாம்பியன்”. 2001யில் வெளிவந்த இந்தப் படம் மூலமே உலகப் பார்வையாளர்களின் கவணத்தைப் பெற்று, அங்கீகரிக்கப்பட்டார் அல்பொன்ஸோ குவாரோன்.

Alfonso Cuaron

‘உன்னுடைய அம்மாவையும்..’ என்பது மாதிரியான அர்த்தம் கொண்ட மெக்ஸிகோவின் மிக மோசமான கெட்ட வார்த்தையையே தலைப்பாகக் கொண்ட “யு து மாமா தாம்பியன்” படத்தின் கதை, மேலோட்டமாகப் பார்த்தால் மிக எளிமையானது. பதின்ம வயதுக்கே உரிய விளையாட்டுத்தனங்களோடும், காமம் சார்ந்த இச்சைகள், ஆர்வங்கள், தேடல்களோடும் இருக்கும் இரு இளைஞர்கள், பக்குவம் அடைவதைப் பற்றிய கதை. ஆனால் அதைத் தாண்டி, பார்வையாளர்களின் மனதில், ‘வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ ‘காமம் என்பது என்ன?’ என்பது போன்ற ஆழமான கேள்விகளையும்; உறவுகள், ஒழுக்கம் பற்றிய விவாதங்களையும்; அரசியலமைப்பு, பொருளாதாரம், பின்தங்கிய கிராமங்களின் வறுமை, போலீஸ் கெடுபிடிகள் பற்றிய மெல்லிய விமர்சனங்களையும் எழுப்புகிறது படம்.

இரு நெருங்கிய நண்பர்கள், தங்கள் காதலிகள் கோடைவிடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட, தனிமையில் வாடுகிறார்கள். பொழுதுபோகாமல் சுற்றிவருகிறார்கள். சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். தங்களை விட வயதுகூடிய பெண்ணொருத்தியை, ஒரு திருமண விழாவில் சந்தித்து வழிகிறார்கள். அவளைக் கவர்வதற்காக தாங்கள் ஒரு தனிமையான அழகிய கடற்கரையை நோக்கி சாலைப் பயணமாக செல்லவிருப்பதாக ‘சும்மா’ சொல்கிறார்கள். அந்தப் பெண் அதற்குப் பின் ஒரு டாக்டரைச் சென்று பார்க்கிறாள், இரவில் அவளது கணவன் வெளியூரிலிருந்து போன் செய்து, தான் அவளுக்குத் துரோகம் செய்துவிட்டதாகப் போதையில் உளருகிறான். போனை வைத்துவிட்டு அவள் தேம்பி அழுகிறாள். மறுநாள் காலையில் அவளே அந்த இளைஞர்களுக்குப் போன்செய்து தானும் அவர்களின் பயணத்தில் கலந்துகொள்வதாகச் சொல்கிறாள்.

மெக்ஸிகோவின் வறுமை சூழ்ந்த கிராமப்புறங்கள் வழியாகக் காரில் பயணிக்கும் அந்த மூவரும், தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்கள் பற்றியும், முதல் காதல் மற்றும் உடலுறவு அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்தப் பெண் இரு வாலிபர்களோடும் தனித்தனியாக உடலுறவு கொள்ள, அவர்கள் ஒருவரையொருவர் பொறாமைப்படவும் வெறுக்கவும் ஆரம்பிக்கிறார்கள். அந்தச் சண்டையில், இருவருமே அடுத்தவனின் காதலியோடு உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்கிற ரகஸியம் வெளியே வருகிறது, அடிதடியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சண்டையை நிறுத்தாவிட்டால் தான் தனியே விலகிச் செல்வதாக மிரட்டி, அவர்களைச் சமாதானப்படுத்துகிறாள் அந்தப் பெண்.

மூவரும் ஒரு அழகிய கடற்கரையை அடைகிறார்கள், மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். அன்றிரவு குடித்துவிட்டு, இரு நண்பர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொண்டதை இப்போது எந்தவித வெறுப்போ குற்றவுணர்வோ இல்லாமல் பேசிச் சிரிக்கிறார்கள். ஒருவன் “நான் உன் காதலியோடு மட்டுமல்ல, உன் அம்மாவோடும் உறவுகொண்டேன்” என்று சொல்ல, அவன் கோபப்படாமல் சிரிக்கவே செய்கிறான். இறுதியில் மூவரும் சேர்ந்து உடலுறவு கொள்கிறார்கள், அப்போது ஒரு கட்டத்தில் இரு வாலிபர்களும் தங்களை மறந்து முத்தமிட்டுக்கொள்கிறார்கள். காமம் என்பது மூளையில் உருவாகும் ஒரு உணர்வெழுச்சி மட்டுமே, அது எங்கும் யார்மீதும் உருவாகமுடியும் என்ற அதிர்ச்சிகரமான உண்மை அங்கு அரங்கேறுகிறது. காலையில் ஒரே படுக்கையில் கண் விழிக்கும் இரு நண்பர்களும், தர்மசங்கடத்தோடு விலகுகிறார்கள். ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லி, இருவரும் சுற்றுலாவை அத்தோடு முடித்துக்கொண்டு வெவ்வேறு திசைகளில் கிளம்பிச்செல்கிறார்கள். அந்தப் பெண் தான் அந்தக் கடற்கரையிலேயே சிறிது காலம் தங்கியிருக்கப் போவதாகச் சொல்கிறாள்.

சரியாக ஓராண்டு கழித்து அந்த இளைஞர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கிறார்கள். இடையில் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை என்பதும், அவர்களது காதலிகள் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்த உடனேயே காதலை முறித்துக்கொண்டார்கள் என்பதும், இப்போது இரு இளைஞர்களும் வேலைகளில் சேர்ந்து அவரவர் வாழ்க்கைப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. இருவரிடமுமே இப்போது விளையாட்டுத்தனங்கள் ஏதும் இல்லை, பக்குவமுள்ள பெரிய மனிதர்கள் போல் நடந்துகொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை மாற்றிய அந்த சாலைப் பயணத்தைப் பற்றிய பேச்சு வருகிறது. அந்தப் பெண் அதற்குப்பிறகு ஒரு மாதத்தில் அந்தக் கடற்கரையிலேயே இறந்துபோனாள் என்றும், தனக்கு கேன்ஸர் இருந்ததை அவள் யாரிடமும் சொல்லவில்லை என்றும் தெரியவருகிறது. இரு நண்பர்களும் மீண்டும் பிரிகிறார்கள், அதன் பிறகு அவர்கள் சந்தித்துக்கொள்ளவே இல்லை என்ற குறிப்போடு படம் முடிகிறது.

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த அம்சம், கதை சொல்லியின் பின்னணிக் குரலைப் பயன்படுத்துவதில் செய்யப்பட்டிருக்கும் ஒரு புதுமை. இரு இளைஞர்களில் ஒருவன் பார்வையாளர்களிடம் சொல்வது போன்ற அந்தக் குரல், எழுதப்பட்ட டைரிக் குறிப்புகள் அல்லது பயணக் குறிப்புகள் போன்ற தொனியுடனேயே படம் முழுவதும் ஒலிக்கிறது. அதில் ஏராளமான உபரித் தகவல்கள் இடம்பெறுகின்றன, அவையே படத்திற்கு ஒரு விரிந்த தளத்தைத் தருகின்றன. அந்த மூன்று நாட்களும் அவர்கள் என்னென்ன பேசினார்கள் என்பதை முழுவதுமாக ஒரு திரைக்கதைக்குள் அடக்கவே முடியாது. ஆனால் பின்னணிக் குரல், அவர்கள் எப்போது என்னென்ன பேசினார்கள் என்பதை முழுக்க சிறுகுறிப்புகளாகச் சுருக்கிச் சொல்கிறது. கதாபாத்திரங்களின் வளர்ப்புச் சூழல் பற்றிய தகவல்கள், குறிப்பிட்ட காட்சிகளில் நிலவிய மனநிலைகள், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்னும் தகவல்கள், பயணத்தின் ஊடே பார்த்தவை, சந்தித்த மனிதர்கள் பற்றிய உபரித் தகவல்கள் எல்லாம், படத்தின் நீளத்தைத் தாண்டிய பெரும் அனுபவத்தை அளிக்கின்றன. அந்தத் தகவல்கள் குறிப்புகள் மூலமே மெல்லிய அரசியல் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடித்து பின்னணிக் குரலிலும் பேசிய கேயல் கார்ஸியா பெர்னால் தான் பின்பு, சே குவேரா எழுதிய பயணக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட “மோட்டார் சைக்கிள் டயரிஸ்” படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

ஹாரி பாட்டர் தொடரில் முதல் இரு படங்களையும் எடுத்த கிறிஸ் கொலம்பஸ் என் விருப்பத்துக்குரிய அமெரிக்க இயக்குனர்களில் ஒருவர். மிகச் சிறந்த குடும்பக் காதல் கதைகளையும் (நைன் மந்த்ஸ், மிஸஸ் டவுட்ஃபயர், ஸ்டெப் மாம், பைசெண்டினியல் மேன்), சிறுவர் சாகஸமான “ஹோம் அலோன்” படங்களையும் செய்தவர். இருந்தபோதிலும், ஹாரி பாட்டர் புத்தகத்தைப் படமாக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தது மிகத் தவறான தேர்வு என்றே நினைக்கிறேன். அவருடைய எல்லாப் படங்களுமே கொஞ்சம் மென்மையானவை. ஜே.கே.ரோவ்லிங் எழுத்தில் படைத்த, இருள் சூழ்ந்த பாதாள கற்பனை உலகை அவரால் திரையில் சரிவர உருவாக்கிக்காட்டவே முடியவில்லை. மூன்றாவது புத்தகமான “ஹாரிபாட்டர் அண்ட் த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்”, அல்போன்ஸோ குவாரோன்-யிடம் ஒப்படைக்கப்பட்டது ஒரு துணிச்சலான முடிவே. ஆனால் அவர் அதை எதிர்பார்த்ததிற்கும் மேலே சிறப்பாகச் செய்தார். கிறிஸ்டோபர் நோலான் ‘பேட் மேன்’-க்குச் செய்ததை அல்போன்ஸோ குவாரோன் ‘ஹாரி பாட்டர்’-க்குச் செய்தார் என்று சொல்லலாம். அதன் பிறகு வந்த எல்லா படங்களும் அவரின் வழியையே பின்பற்றின. ஆயினும் இதுவரை வந்த எல்லா ஹாரி பாட்டர் படங்களிலும் குவாரோன் இயக்கியதே சிறந்தது என்பதே பொதுவாக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அல்போன்ஸோ குவாரோன் இதுவரை இயக்கியதில் ஆகச் சிறந்த படம், “சில்ட்ரன் ஆஃப் மென்”. ஒரு இயக்குனரால் செய்யக்கூடிய அதிகபட்ச தொழில்நேர்த்தியை இந்தப் படத்தில் செய்துகாட்டியிருக்கிறார் அவர். உலகமெங்கிலும் உள்ள எல்லா கைதேர்ந்த இயக்குனர்களுக்கும் விடுக்கப்பட்ட வெளிப்படையான சவால் இந்தப் படம் என்று நான் நினைக்கிறேன். ஒரு கற்பனையான உலகை மிக நம்பகமானதாக மாற்றிக்காட்டும் மேஜிக் வித்தையை அவர் உருவாக்கிக்காட்டியிருக்கிறார். வருங்காலத்தில் நடப்பது போன்ற படங்களை பலர் எடுத்திருந்தாலும், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. வழக்கமாக இயக்குனர்கள், தாங்கள் உருவாக்கும் படச்சட்டத்துக்குள் ஒரு இல்லாத உலகைப் படைத்து அதை உயிரோட்டம் உள்ளதாக மாற்றுவார்கள். ஆனால் அல்போன்ஸோ, ஒரு கற்பனை உலகை முதலில் உருவாக்கிவிட்டு அதற்குள் கேமராவை தன்னிச்சையாக அலையவிட்டது போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறார். அதுதான் இந்தப் படத்தின் தனிச் சிறப்பு.

2027ஆம் ஆண்டில் நடக்கிறது கதை. ஆனால் வளர்ச்சியடைந்த உலகமாக அது இல்லை, அழுகிக்கொண்டிருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கும் உலகையே நாம் காண்கிறோம். காரணம், ஒட்டுமொத்த மனித குலமும் குழந்தைப் பேறை இழந்துவிட்டது. பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல அது நடந்திருக்கிறது. முதலில் தானாகவே கருக்கலைந்து போவது அதிகரித்து, இறுதியில் பெண்கள் தாய்மையடைவதே முற்றிலும் நின்றுபோயிருக்கிறது. சுற்றுச்சூழலின் மாசுகளும், நுண்ணுயிரியல் பயன்பாடுமே இந்த விபரீதத்துக்குக் காரணம் என்று ஒருசாரார் கணிக்க, கடவுளின் கோபத்துக்கு மனிதன் ஆளானதே இந்த பரிதாபத்துக்குக் காரணம் என்று இன்னொரு சாரார் நம்புகிறார்கள்.

எதிர்காலமே இல்லாத உலகில் தொழில்நுட்பம் எப்படி வளரும்? சட்டம் ஒழுங்கு, அரசியல், பொருளாதாரம் எல்லாவற்றுக்கும் என்ன பொருள்? நம் சந்ததிகள் வாழப்போவதில்லை என்று தெரிந்தபின் இந்த சமூக அமைப்பையும் கட்டுக்கோப்பையும் எதற்குத் தாங்க வேண்டும்? சமூக அமைதி சீர்குலைந்து, இங்கிலாந்து தவிர்த்து உலகின் எல்லா அரசுகளும் வீழ்ந்துவிட்ட பின், பயங்கரவாதமும் குண்டுவெடிப்புகளும் அன்றாடச் செயல்களாகிவிட்ட லண்டனில் கதை நடக்கிறது. இங்கிலாந்தைப் பாதுகாக்கும் அரசுக்கும் இராணுவத்துக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையே, வெளிநாடுகளிலிருந்து வந்து சட்டவிரோதமாகக் குடியேறும் அகதிகள்தான். அளவுக்கதிகமாகப் பெருகிவிட்ட அவர்களை சாலையோரங்களில் கூண்டமைத்து அடைத்துவைக்கிறது அரசு. பாதுகாப்பு வேலிக்கு அப்பாலுள்ள எல்லையோர ஊர்கள் அகதிகளால் நிரம்பிவழிகின்றன.

இந்த நிலையில், உலகின் மிகக் குறைந்த வயதுடையவன் என்பதாலேயே நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்ந்த ஒரு 18 வயது இளைஞன் இறந்துவிடுகிறான், அந்த செய்தி கேட்டு உலகமே கண்ணீர்விட்டு அழுகிறது. அந்த நாளிலிருந்தே படம் ஆரம்பிக்கிறது. வாழ்வில் எந்தப் பிடிப்பும் இல்லாத நாயகன், இப்போது ஒரு தலைமறைவு இயக்கத்தில் இருக்கும் தனது முன்னாள் மனைவியின் மூலம், ஒரு பெரும் பணிக்கு இழுத்துவரப்படுகிறான். அது, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு இளம்பெண்ணையும், பல வருடங்களுக்குப் பிறகு உலகில் பிறக்கப்போகும் முதல் மனிதக் குழந்தையும் காப்பாற்றிப் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்கும் பெரும் பணி.

மைகேல் கெய்ன் நடித்திருக்கும் கதாபாத்திரம் மறக்க முடியாதது. கிளைவ் ஓவென், ஜூலியானே மூர், கர்ப்பினியாக நடித்திருக்கும் பெண் ஆகியோரும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் இமானுவேல் லுபெஸ்கி, ஸ்லீப்பி ஹாலோ” உட்பட அவருடைய எல்லாப் படங்களையும் விடச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அல்போன்ஸோ இயக்குனராக மட்டுமின்றி திரைக்கதையாசிரியர்களில் ஒருவராகவும், படத்தொகுப்பாளரில் ஒருவராகவும் கூட இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

படத்தில் ஏராளமான காட்சிகள் மறக்க முடியாதவை. மிக முக்கியமான ஒன்று, குழந்தை பிறக்கும் காட்சி. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த மூன்று நிமிடக் காட்சி, நிஜமாகவே ஒரு பிரசவம் கண்ணெதிரே நடப்பதுபோல் தோன்றவைக்கிறது. இறுதியில், குழந்தை வெளியே வந்து சட்டென்று அழுது உடலை அசைக்கும் தருணம் அற்புதமானது. சாதாரண பார்வையாளர்கள் அதை நிஜம்போலவே பார்த்துச்செல்லவும், அதன் பின்னால் இருக்கும் இயக்குனர் மற்றும் குழுவினரின் உழைப்பையும் திறனையும் கவணிக்காமல் விடுவதற்குமே வாய்ப்பதிகம்.

நான் முன்பு எழுதிய, “ஒரே ஷாட்டில்” என்ற பதிவுத்தொடரில், இந்தப் படத்தின் வேறு இரு காட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். படத்தின் முதல் காட்சியில் வரும் ஒரு ‘லாங் டேக்’, சாலையில் நடக்கும் திடீர் குண்டுவெடிப்பை தத்ரூபமாகக் காட்டுகிறது. இன்னொரு காட்சி நாயகனின் முன்னாள் மனைவி கலவரக்காரர்களால் கொல்லப்படுவது, கிட்டத்தட்ட நாலு நிமிடங்கள் காருக்குள் பயணிக்கும் அந்த ‘லாங் டேக்’, திரைக்கலைஞர்களையே வியக்கவைப்பது. அந்தக் காட்சிகளின் வீடியோ இணைக்கப்பட்ட எனது பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே:

ஒரே ஷாட்டில் – 2

ஒரே ஷாட்டில் – 3

நான் முதலில் குறிப்பிட்டது போல், அல்போன்ஸோ ஒரு கற்பனை உலகையே முதலில் படைத்துவிட்டு அதற்குள் கேமராவை தன்னிச்சையாக அலையவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார் என்பதை, மேலிருக்கும் சுட்டிகளில் உள்ள வீடியோக்கள் மூலம் நீங்கள் காண முடியும். படத்திலிருக்கும் ஒரு ரயில் பயணம் மற்றும் பிற்பாதியில் இருக்கும் ஒரு பஸ் பயணக் காட்சியிலும், தெருவில் நடந்துசெல்லும் நாயகனை தீவிரவாதிகள் கடத்தும் காட்சியிலும் அதே போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார் இயக்குனர்.

ஆனால் அது மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருப்பது, படத்தின் உச்சக் காட்சியில். அகதி முகாமுக்குள் நடக்கும் கலவரத்துக்கு நடுவே, தாயையும் சேயையும் காப்பாற்ற நாயகன் போராடும்போது, பார்வையாளர்களும் துப்பாக்கி குண்டுகளுக்கும் பீரங்கித் தாக்குதலுக்கும், கட்டிட இடிபாடுகளுக்கும் நடுவே பதுங்கிச் செல்வதுபோன்ற உணர்வையே பெறுவார்கள். பத்து நிமிடங்கள் நடக்கும் அந்தக் காட்சியின் வீடியோ கீழே:

.

அல்போன்ஸோ குவாரோனின் படைப்புத்திறனும், தொழில்நேர்த்தியும் எந்தப் பெரிய இயக்குனருக்கும் இணையானதே. ஆனால் அவர் சிறந்த திரைக்கதைகளைக் கையாளும்போதுதான் அது மேலும் சிறப்பாக வெளிப்பட முடியும். அவர் ஒரு குறிப்பிட்ட வகைப் படங்களையே செய்யமுடியும் என்கிற எந்த எல்லைகளும் இல்லாதவர். இதுவரை அவர் எடுத்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான படங்கள், வேறுவேறு இயக்குனர்கள் செய்தார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அந்தந்தக் கதைக்கேற்ப முழுமையாக தனது உத்திகளை மாற்றிக்கொள்ளத் தெரிந்தவர்.

விவாகரத்து மற்றும் தனது மகனின் உடல்நிலை போன்ற காரணங்களால் மன உளச்சலுக்கு ஆளான குவாரோன், அமெரிக்காவிலிருந்து வெளியேறி, லண்டனில் சென்று தங்கிவிட்டார். 2006-க்குப் பிறகு இதுவரை எந்த திரைப்படமும் செய்யவில்லை. விரைவில் மீண்டு வருவார் என்றே என்னைப் போல நிறைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

.

.

[ தொடரும் ]

Advertisements