.

அன்புள்ள இயக்குனர் அவர்களுக்கு,

உங்களிடம் ஒரு கேள்வி . ஆங்கில படஉலகில் biography யின் அடிப்படையில் பல அற்புதமான படங்கள் எடுக்கப்பட்டுள்ளது (எ கா : The beautiful Mind , The pursuit of happynesss, The Social Network ). இப்படங்கள் அனைத்தும் ஒரு ஆவணப் படம்போல் அல்லாமல் மிகநேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் படி எடுக்கப்பட்டப் படங்கள் . அதை போன்ற சில படங்கள் தமிழிலும்  வந்துள்ளன (பாரதி , காமராஜ் ) என்றாலும் அவை ஒரு ஆவணப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக cinematography . எதற்கு என்ன காரணம் ?. biography படங்களை தமிழில் இவ்வாறு எடுக்க வேண்டிய காரணம் என்ன ? .  உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

நன்றி ,
பிரவின் சி

பிரவின்,

அந்த வித்தியாசம் மிக அடிப்படையானது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு தமிழ்ப்படங்களும் கடந்த காலத்தில் (வரலாற்றுக் காலம்) நடந்தவை. நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் மூன்று ஆங்கிலப்படங்களுமே தற்காலத்தில் நடந்தவை.
.
சமகாலத்து சாதனையாளர்களின் கதைகள் கொஞ்சம் சகஜத் தன்மைகொண்டவை, அவை புத்தகமாக எழுதும்போதே இயல்பாக நாவல் போன்ற வடிவிலேயே அமைகின்றன. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று ஆங்கிலப் படங்களுமே முதலில் புத்தக வடிவில் எழுதப்பட்டவை, அந்த மூலப் புத்தகங்களே வரலாறு போல அமையாமல் சகஜமாகக் கதைசொல்வது போன்ற தொனி கொண்டவை தான்.
.
ஆனால் வரலாற்றுக் காலத்து மாமனிதர்களின் சரித்திரம், பல்வேறு ஆவணங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை, சிறு சிறு சம்பவங்கள் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து கட்டமைக்கப்படுவது. அதனால் புத்தகமாகவோ, திரைக்கதையாகவோ அவற்றை எழுதும்போது அவை இயல்பாகவே ஆவணம் போன்று அமைந்துவிடுகின்றன. படம்பிடிக்கும் போதும் அது தொற்றிக்கொள்ளும்.
.
மேலும் வரலாற்று நாயகர்களின் கதைகள் தத்ரூபமாகவும், சுவாரஸ்யமாகவும் அமையவேண்டுமென்றால் அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். ஆனால் பாரதி, காமராஜ் போன்றவை மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டவை. அதிலும் காமராஜ் பள்ளிக்கூட நாடகம் போல இருந்தது (அதன் இயக்குனர் பாலகிருஷ்ணன் எந்தப் பயிற்சியும் இல்லாதவர், அவரை எனக்கு நேரில் அறிமுகமுண்டு)
.
“பாரதி”, “பெரியார்” படங்களை எடுத்த ஞானராஜ சேகரன் அடிப்படையிலேயே “ஆர்ட் படம்” “அவார்ட் படம்” என்று ஒரு பிரிவு இருப்பதாகவும் அதுவே தரமானதென்றும் நம்புபவர். அவர் அவார்ட் கமிட்டியில் இருப்பவர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே படம் எடுப்பார். தமிழின் மிகப் பிரபலமான நாவல்களில் ஒன்றான “மோக முள்” அவருடைய கைவண்ணத்தில் எப்படி சகிக்கவே முடியாத குப்பையாக மாறியது என்பதைப் பார்த்தாலே தெரியும்.
.
நீங்கள் எதிர்பார்ப்பதுபோல், //மிகநேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் படி// படம் எடுக்கவேண்டுமானால் முதலில் மிகத் திறமையான இயக்குனர் அதைச் செய்ய வேண்டும். பிறகு ஒரு நல்ல ரசனையுள்ள தயாரிப்பாளர் வேண்டும்.
.
மேலும், வரலாற்று நாயகர்கள் பற்றி எது சொன்னாலும், பெரும்புள்ளிகளும், அரசியல் இயக்கங்களும் சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்ற பயமும் இருக்கிறது. (“பெரியார்” படத்தை திராவிடர் கழகம் தயாரித்தது, அதிலிருந்து பிரிந்த ‘பெரியார் திராவிடர் கழகம்’ என்ற இயக்கம் படத்தை எதிர்த்தது)
.
நம்மால் எடுக்கப்பட்ட நிஜக் கதைகள் எல்லாமே தலைமறைவாக வாழ்ந்த குற்றவாளிகளைப் பற்றியது (சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி) அவையும் ஜாதிச் சங்கங்களின் நெருக்கடிகளைச் சந்தித்தன.
.
நீங்கள் குறிப்பிட்ட மூன்று ஆங்கிலப் படங்களின் நாயகர்களும் உயிரோடு இருப்பவர்கள். தங்கள் வாழ்க்கையை புத்தகமாகவும் படமாகவும் ஆக்க ஒரு பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, அத்தனை ரகஸியங்களையும் பொதுவில் வைக்கத் தயங்காமல் ஒத்துக்கொண்டவர்கள். ஆனால் இந்தியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்த விரும்பமாட்டார்கள். பொதுவுலகு அறிந்தது தவிர்த்து தங்களின் இன்னொரு பக்கத்தை வெளியில் சொல்லவேமாட்டார்கள். புத்தக வடிவில் பதிவான தகவல்களைக் கூட திரைப்படமாக எடுப்பதற்கு ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. அப்படி இன்னொரு பக்கமே இல்லாத தட்டையான வாழ்க்கை படமானால் அதில் உண்மையும் இருக்காது, ஒரு ஆளுமையை முழுக்கப் புரிந்துகொள்ளவும் முடியாது.
.
சார்லஸ்.
.
.
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் சொல்லிய காரணங்கள் அனைத்தும் உண்மை . குறிப்பாக இங்கே  எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் கதையின் நாயகர்களை நல்லவர்கள் போலவும் வாழ்வில் தவறே செய்யாதவர்கள் போலவும் சித்தரித்துக் கூறுவது மிகவும் அபத்தமாகவும் , யதார்த்தத்தில் இருந்து பெரிதும் விலகி உருவாக்கபடுகிறது. சமீபத்தில் Robert Downey ஜூனியர் நடித்த “சாப்ளின் ” படம் பார்த்தேன் . சாப்ளின் பற்றிய முற்றிலும் புதிய கண்ணோட்டத்தை அது எனக்குக் கொடுத்தது. படங்களில் மட்டுமே அவர் சிரிக்கவைக்கிறார் . ஆனால் அமெரிக்காவில் தனது புரட்சிக்கருத்துக்களால் அலறவிட்டவர். இதைபோன்று அவருடைய சொந்த வாழ்விழும் வெற்றிகொண்டவர் என்று கூற இயலாது. இவைஅனைத்தும் அப்படம் மூலம் அறிந்து கொண்டவை.  இதைப் போன்று வெளிப்படையான, யதார்த்தமான  படங்கள் தமிழில் வரும் நாளை எதிர்ப்பார்கிறேன் .
.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
.
அன்புடன்

பிரவின். சி