Old Boy

உலக அளவில், 2000 முதல் 2009 வரையான பத்தாண்டுகளில், புதிதாக கவணம் பெற்று உதித்தெழுந்த இயக்குனர்களில், முக்கியமானவர்களாக நான் கருதும் பத்து பேரின் பட்டியல் இது.

அடுத்த இயக்குனரைப் பற்றிச் சொல்வதற்கு முன் ஒரு சிறு குறிப்பு:

ஆசிய நாடுகளில், ரஸ்யா தான் உலக சினிமாவை ஆதிதொட்டு ஆதிக்கம் செலுத்திவந்தது. பிறகு அதனுடன், ஓஸு, குரோசவா போன்றவர்களின் பங்களிப்பின் விளைவாக ஜப்பான் இணைந்துகொண்டது. சீனா உட்பட மற்ற ஆசிய நாடுகள் உலக திரைவிழாக்களில் பங்கேற்றுவந்த போதிலும், பல சிறந்த படங்களைத் தந்து விருதுகளையும் பெற்ற போதிலும், எந்தப் பெரிய அலையையும் ஏற்படுத்தியதில்லை. சத்யஜித் ரே உலக அளவில் தனிக் கவணம் பெற்றிருந்தார், ஆனால் மொத்தமாக “இந்திய சினிமா” என்கிற அலை எழுந்ததே இல்லை.

90-களில் ஈரான் ஒரு பெரும் அலையை உருவாக்கியது. மிகுந்த கட்டுப்பாடுகளும், தணிக்கையும் நிறைந்த சூழலிலும் அந்த தேசத்துக் கலைஞர்கள் தங்கள் உணர்வுபூர்வமான படைப்புகளின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார்கள். 90-களின் பிற்பாதியில் மெல்ல உருவாகி 2000க்குப் பிறகு சீறியெழுந்த இன்னொரு அலை, கொரிய சினிமா. 1995 முதல் 99 வரை நான் பார்த்த உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்ற கொரிய படங்கள் பெரும்பாலும், அமெரிக்க ஐரோப்பிய படங்களை நகலெடுத்தவையாகவும், பொழுதுபோக்குக்கான வணிக சினிமாவாகவும் தான் இருந்தன. ஆனால் அவற்றின் தொழில்நுட்ப நேர்த்தி வேறெந்த ஆசிய நாட்டைவிடவும் சிறப்பாக இருந்தது. கொரிய சினிமாவின் உள்ளடக்கத்தில் நேர்மையான உழைப்பும், புதுமையும், தீவிரமும் கூட ஆரம்பித்ததும், உலக சினிமாவின் தவிர்க்கமுடியாத சக்தியாக அது மாறியது. இந்த அவதானிப்பின் காரணமாகவே, “இந்திய சினிமா”வும் மிக விரைவிலேயே ஒரு பேரலையாக உலக அளவில் எழுந்துவரப்போகிறது என்று நான் நம்புகிறேன்.

Chan-Wook Park

சான்-வூக் பார்க்

கொரிய சினிமாவின் மீது முதல் வெளிச்சம் விழுவதற்குக் காரணமான படங்கள் என்று நான் நினைப்பவை, “ஜாயிண்ட் செக்யூரிடி ஏரியா” (JSA), “இல் மாரே”, “மை சஸ்ஸி கேர்ள்” “ஓல்ட் பாய்”, “எ டேல் ஆப் டூ சிஸ்டர்ஸ்” மற்றும் “ஸ்ப்ரிங், சம்மர், ஆட்ம், விண்டர்.. அண்ட் ஸ்பிரிங்”. இவற்றில் இரு படங்களை இயக்கியிருக்கிறார் சான்-வூக் பார்க். அதிலும் “ஓல்ட் பாய்” படத்திற்காக அவர் கேன்ஸ் திரைவிழாவின் உயரிய விருதைப் பெற்ற போதுதான் தென்கொரியாவின் வெற்றிக்கொடி உலக சினிமாவில் நாட்டப்பட்டது.

“குரூரம்” எனும் ஒற்றைச் சொல்லில் சான்-வூக் பார்க் படங்களை அடக்கிவிட முடியும். அவரின் எல்லாப் படங்களும் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன், காரணம் கடந்த பத்தாண்டுகளில் எழுந்துவந்த ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை அவர். அதே சமயம் உள்ளூர அவர் படங்களை நான் வெறுக்கிறேன். காரணம், அவை சகமனிதர்களின் மீது அவநம்பிக்கையையும், ஆழமான வன்மத்தையும், கசப்பையுமே ஏற்படுத்துகின்றன. பழிவாங்கலையும், உயிர் பிழைப்பதற்காக நடக்கும் போராட்டத்தையும் அவர் மிகைப்படுத்தியே காட்டுகிறார் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனாலும் அவரது படம் முடிந்து கொஞ்ச நேரத்துக்கு விரக்தியும், தனிமையும் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. காரணம், நாம் அறிய விரும்பாத, காண மறுக்கும், இயற்கையின் குரூர யதார்த்தத்தை அவர் தன் புனைவின் வழி காட்டுகிறார் என்பதே.

Joint Security Area

2000ஆம் ஆண்டில் அவர் இயக்கிய “ஜாயிண்ட் செக்யூரிட்டி ஏரியா” (JSA) படம், அவர் எடுத்ததிலேயே நேர்மறையான செய்தியையும், ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தையும் உடைய படைப்பு. தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்குமான எல்லையில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் இருநாட்டு இராணுவத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது மிக பிரச்சனைக்குரிய இடம் என்பதால், ஐ.நா.-வின் ஒரு குழுவும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு விபரீதம் நடந்து, இரு இராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அந்தச் சம்பவம் குறித்து இருநாடுகளுமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தப் பிரச்சனை ஒரு பெரிய போரில் சென்று முடிவதற்கான சூழல் உருவாகிறது.

ஐ.நா. அதிகாரியான, அமெரிக்காவில் வாழும் ஒரு கொரிய வம்சாவழிப் பெண், உண்மையைக் கண்டறிந்து அறிக்கை கொடுப்பதற்காக அங்கு வருகிறாள். இருபக்கமும் உள்ள சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களிடம் அவள் விசாரணை நடத்தி ஒரு ஆச்சரியத்தைக் கண்டுபிடிக்கிறாள். இதற்கிடையில், நேர்கோடற்ற திரைக்கதை, முன்பு என்ன நடந்தது என்பதைப் பகுதி பகுதியாகப் பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது. பிரச்சனைக்குரிய அந்த எல்லைப் பகுதியில் இருநாட்டு முனைகளிலும் இரவில் காவலுக்கு இருக்கும் வீரர்களுக்கு இடையே உருவான ஒரு அபூர்வமான நட்பின் கதை விவரிக்கப்படுகிறது. அரசியல் விரோதங்களையும், தாங்கள் சார்ந்த இராணுவங்களிடையே இருக்கும் தீராப் பகையையும், அந்த இராணுவ வீரர்கள் சிரித்துக் கேலிசெய்தபடி தாண்டிச் செல்லும் இடங்கள் அற்புதமானவை. இத்தனை மனிதநேயத்தையும், மாண்பையும் வெளிப்படுத்திய இயக்குனரா பின்பு மனித வெறுப்பையும் குரூரத்தையும் காட்டும் படங்களை எடுத்தார் என்று இப்போது யோசித்துப்பார்க்க ஆச்சர்யமாகவே இருகிறது.

எனக்குப் பிடித்த காட்சி, காட்டில் இரவு ரோந்து செல்லும் தென்கொரிய இராணுவத்தினர் வழிதவறி வடகொரிய எல்லைக்குள் நுழைந்துவிட்டதை அறிந்து திகைப்பதும், சிறுநீர் கழிக்கும் ஒருவனை விட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிட, அவன் தெரியாமல் கண்ணிவெடியில் காலைவைத்துவிட்டு உதவிக்காக கத்தவும் முடியாமல் நிற்பதும், அங்கு வடகொரிய இராணுவத்தின் இருவர் வந்து பார்த்துவிட்டு அமைதியாகத் திரும்பிச் செல்ல முனைய, கண்ணிவெடியில் மிதித்தவன் உயிர்பயத்தில் அழ ஆரம்பிக்க, எதிரிகள் சிரித்தபடி வந்து அவனைக் காப்பாற்றுவதும் அற்புதமான காட்சி.

இரு நாட்டின் அர்த்தமற்ற பகைமை பல இடங்களில் கேலிசெய்யப்பட்டிருக்கிறது. வடகொரியாவின் கம்யூனிசமும் தென்கொரியாவின் முதலாளித்துவமும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களால் நிலத்தில் வரையப்பட்ட எல்லைக்கோடு இயற்கையின் முன்னால் சிறுபிள்ளைத்தனமாவதை சில காட்சிகள் காட்டுகின்றன. வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளுக்கு தென்கொரிய அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றிக்காட்டும்போது, காற்றின் சிறு அலையொன்று ஒரு பெண்ணின் தொப்பியை தூக்கி வடகொரியாவில் போட்டுவிடுகிறது. மற்றொரு காட்சியில், இரு எதிரி நாட்டு நண்பர்களும் மற்றவர்கள் முன்னால் அதை வெளிப்படுத்தாமல், விறைப்பாக எல்லைக் கோட்டுக்கு இருபுறமும் நிற்கும்போது, மாலைச் சூரிய ஓளி காரணமாக ஒருவனது நிழல் எல்லைக்கோடு தாண்டி விழ, மற்றவன் “ஏய் உன் நிழல் எங்கள் நாட்டில் விழுகிறது” என்று அதட்ட அவன் பதறிவிலகுவது நகைச்சுவையானது.

2002-2005 ஆண்டுகளுக்கு இடையில் ‘சான்-வூக் பார்க்’ எடுத்த மூன்று படங்களும் “பழிக்குப் பழி” என்பதையே பொதுவான உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. இப்போது “வெஞ்சன்ஸ் டிரையாலஜி” என்றே பொதுவாக அறியப்படும் அந்தப் படங்கள், “சிம்பதி ஃபார் மிஸ்டர் வெஞ்சன்ஸ்”, “ஓல்ட் பாய்” மற்றும் “லேடி வெஞ்சன்ஸ்”. இவற்றுள் ஆகச் சிறந்ததும் இயக்குனருக்கு நல்ல பெயர் எடுத்துக்கொடுத்ததும் “ஓல்ட் பாய்” தான்.

மிக அரிதாகவே அமையக்கூடிய கச்சிதம் “ஓல்ட் பாய்”-க்கு கூடிவந்திருக்கிறது. முதல் ஃப்ரேமிலிருந்து இறுதி ஃப்ரேம் வரை மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை பார்ப்பவர்களுக்கு சில விஷயங்கள் ஏன் நடக்கிறதென்று புரியாமலும், விலகிச்செல்வது போன்றும் தோன்றலாம் ஆனால் எல்லாமே இறுதியில் கோர்க்கப்பட்டு முழுமையான சித்திரமாக ஆகிவிடுகிறது. இந்த முழுமையையும் நேர்த்தியையும் அந்த இயக்குனராலேயே மறுமுறை செய்யமுடியுமா என்பது சந்தேகமே. இந்தப் படத்தின் கதை எப்போதுமே எனக்குப் பிடித்ததில்லை, ஆனால் இயக்கமும், திரைக்கதையின் வடிவமும் ஒவ்வொருமுறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. மையப் பாத்திரத்தில் நடித்திருக்கும் மின்-சிக் சோய் சந்தேகமில்லாமல் ஆசியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர்.

ஒருவன் தனியறை ஒன்றில் 15 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். யார் அவனை கடத்திவந்து அடைத்தார்கள், என்ன காரணத்திற்காக, என்று அவனுக்குச் சுத்தமாகத் தெரியவேயில்லை. வேளா வேளைக்கு உணவு மட்டும் வருகிறது. வாரத்தில் ஓர் நாள் மயக்கப் புகை அறைக்குள் அனுப்பப்படுகிறது. அவன் மயங்கிய பின் சிலர் வந்து, அவனுக்கு ஷேவ் செய்து, உடைமாற்றி, அறையை சுத்தமும் செய்கிறார்கள். ஒரு பெண் வந்து அவனுக்கு ஹிப்னாடிஸம் செய்து உரையாடுகிறாள்.

மற்ற சமயங்களில் அவன் டிவி மூலமே வெளியுலகைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான். தொலைக்காட்சியே அவனுக்கு கடிகாரம், காலண்டர், உரையாடுவதற்கு நண்பன், உறவுகொள்வதற்குக் காதலி எல்லாமே. தொலைக்காட்சி செய்தியிலேயே அவன் தன் மனைவி கொல்லப்பட்டதையும், அந்தக் கொலைப்பழி தன் மீதே விழுந்துவிட்டதையும், தன் மகள் அநாதையாகிவிட்டதையும் அறிகிறான். இந்த தனிமைச் சிறை தனக்கு யாரோ அளிக்கும் தண்டனை என்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. தன் மேல் யாருக்கெல்லாம் பகையிருக்கிறது என்று அவன் ஒரு பட்டியல் தயாரிக்கிறான். தப்பித்து வெளியேறியதும் அந்த ஆளைத் தேடிக் கண்டுபிடித்து, துண்டு துண்டாக வெட்டவேண்டும் என்கிற பழியுணர்ச்சியை நினைத்தபடியே அவன் ஒவ்வொரு நொடியும் வாழ்கிறான்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென்று ஒருநாள் அவன் விடுவிக்கப்படுகிறான். அவனுக்கு நிறைய பணமும் செல்போனும் கொடுக்கப்படுகிறது. தனது மகளை ஒருபுறம் தேடி, அவள் வெளிநாடு சென்றுவிட்டதாக அறிகிறான். மறுபுறம் பழிதீர்ப்பதற்காகத் தனது எதிரியைத் தேடுகிறான். இதற்கிடையில் ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறான். அவள் அவனுக்கு உதவுகிறாள். இருவருக்குள்ளும் இயல்பான ஒரு நெருக்கமும் உறவும் ஏற்படுகிறது. அவர்கள் உடலுறவுகொள்கிறார்கள். இறுதியில் அவன் தான் தேடும் எதிரி யார் என்பதையும், என்ன காரணத்திற்காக அவன் தன்னை அடைத்துவைத்தான் என்பதையும் கண்டறியும் போது, ஒரு பேரதிர்ச்சி அவனுக்குக் காத்திருக்கிறது. உண்மையில் அவனை 15 ஆண்டுகள் அடைத்துவைத்தது பெரும் தண்டனை அல்ல, வெளியில் விட்ட பிறகுதான் உச்சகட்டமான தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

அவன் இளமையில் ஒரு பள்ளியிலிருந்து மாற்றலாகி வேறு ஊருக்குச் செல்வதற்கு முன்னால், அங்கு படிக்கும் ஒரு பெண்ணுக்கும் அவளுடைய தம்பிக்கும் இடையே வரம்புமீறிய உறவு இருப்பதைக் கண்டறிகிறான். ஊரைவிட்டுப் புறப்படும்போது அந்த ரகசியத்தை ஒரே ஒருவனிடம் மட்டும் சொல்கிறான். அதன் பிறகு அது ஒரு காட்டுத் தீ போலப் பரவுகிறது, பல வதந்திகளைக் கிளை பரப்புகிறது, அவள் தன் சொந்த சகோதரன் மூலம் கர்ப்பமாகிவிட்டதாகப் பள்ளியில் எல்லாரும் பேசுகிறார்கள். அதை அந்தப் பெண்ணே நம்ப ஆரம்பித்து, அவள் வயிறு வீங்க ஆரம்பிக்கிறது. அவன் போகிறபோக்கில் சொன்ன ஒரு சொல் அவளைக் கர்ப்பமாக்கிவிட்டது. அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். ஆனால் இது எதுவுமே தெரியாமல் அவன் வேறு ஊரில் படித்து வளர்ந்தான். இறந்த பெண்ணின் சகோதரன்தான் அவனை இப்போது பழிவாங்கியிருக்கிறான்.

அவனை அடைத்துவைத்தது மட்டுமல்ல, அவனுடைய மகளை வளர்த்ததும் எதிரிதான். அவன் வெளியில் வந்தபின்பு சந்தித்து உறவுகொண்ட அந்த இளம்பெண் உண்மையில் அவனுடைய சொந்த மகளேதான். இத்தனை ஆண்டுகளாக எதிரி அவளுக்கும் அவனுக்கும் தனித்தனியே ஹிப்னாடிஸம் செய்யவைத்து, அவர்களுக்குள் திட்டமிட்டு காதல் ஏற்படும்படிச் செய்திருக்கிறான். எதிரியைப் பழிவாங்க வந்த நாயகன், இந்த உண்மை தெரிந்தபின்பு அவனிடமே மண்டியிட்டுக் கெஞ்சுகிறான், இந்த உண்மை தன் மகளுக்குத் தெரியக்கூடாது என்று வேண்டுகிறான். தான் சொல்லிய சொல்லே எல்லாவற்றுக்கும் காரணம் என்பதனால் தன் நாக்கையே அறுத்துக்கொள்கிறான். அதன்பின் எதிரி அவன் மகளுக்கு உண்மை தெரிவதைத் தடுத்துவிடுகிறான், “நானும் என் சகோதரியும் உண்மையாகக் காதலித்தோம், அதை நீ உன் மகளோடு செய்யமுடியுமா” என்று சொல்லிவிட்டு அவன் தற்கொலை செய்துவிடுகிறான். அதன் பிறகு நாயகன் தனக்குத் தானே ஹிப்னாடிஸம் செய்யவைத்து, உண்மையை அறிந்த தன்னுடைய ஒரு பாகத்தை அழித்துவிட்டு, ஏதும் தெரியாதவனாக அந்த இளம்பெண்ணுடன் வாழ ஆரம்பிக்கிறான் என்பதோடு படம் நிறைவடைகிறது.

இந்த முடிவு எப்போதும் என்னை அச்சத்தில் ஆழ்த்துவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவுமே இருக்கிறது. ரத்த உறவே ஆனாலும் அது வெறுமொரு நினைவுதான், நம்மைத் தடுப்பது கலாச்சாரம் உருவாக்கிய கற்பிதங்கள்தான், அதை எளிதில் தாண்டிச் சென்றுவிடமுடியும், பந்தங்களை உருமாற்றிக்கொள்ள முடியும் என்று இந்தப் படம் சொல்கிறது. அந்த குரூர யதார்த்தம் நம்மை செவிட்டில் அறைந்து உலுக்குகிறது. ( ரோமன் பொலன்ஸ்கி-யின் “சைனா டவுன்” படத்திலும் இதையே நான் உணர்ந்தேன்) உறவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்றானால் நம்முடைய வாழ்வும் அர்த்தமிழந்து போய்விடுமல்லவா. கதையைத் தாண்டி, இயக்குனரின் கலைநேர்த்தியும் புதுமையான அணுகுமுறைகளும் இந்தப் படத்தை, எனக்கு எப்போதும் பிடித்த படங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது.

சென்ற ஆண்டு ‘சான்-வூக் பார்க்’ இயக்கிய “தாகம்” என்ற படம் தான் அவர் எடுத்ததிலேயே அதிக வன்முறையும் குரூரமும் நிறைந்த படம். மனிதனுக்கும் பாவத்துக்குமான இணைப்பை ஒரு கற்பனையான கதையின் வழி சொல்லிச்செல்கிறார் இயக்குனர். ஒருமுறை பாவக் குழிக்குள் தவறிவிழுந்தாலும் அது மேலும் மேலும் உள்ளிழுத்து நரகத்துக்குள் அமிழ்த்திவிடும் என்ற செய்தியே கதையின் மையம். இந்தப் படத்தில், அப்படி பாவத்தில் விழுபவன் லௌகீக வாழ்க்கையில் ஈடுபடும் சராசரி மனிதனும் அல்ல, ஒரு கிறிஸ்தவப் பாதிரியார், அவர் சாதாரண பாவமும் செய்யவில்லை மற்ற மனிதர்களிடமிருந்து ரத்தத்தைக் குடிக்கும் வேம்பயராக மாறுகிறார். இப்படி எல்லாவற்றையும் அதீதமானதாக ஆக்கி, சான்வூக் பார்க் தன்னுடைய விருப்ப தளத்தில் உச்சபட்சத்தைத் தொட முனைந்திருக்கிறார். நாயகனை மேலும் பாவத்துக்குள் இழுப்பது ஒரு பெண் என்பது உட்பட, கதையின் பலஅம்சங்கள் பைபிளின் “ஆதாம்-ஏவாள்-ஆதிபாவம்” போன்றவற்றோடு மிகுந்த தொடர்புடையதாக இருக்கிறது.

ஒரு மருத்துவமனையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் பாதிரியார், ஒரு குறிப்பிட நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆபத்தான பரிசோதனைக்குத் தன்னை ஒப்படைக்கிறார். அதில் உயிர் போவதற்கான வாய்ப்பே அதிகம் என்று தெரிந்தும் தியாக உள்ளத்தோடு அதில் ஈடுபடுகிறார். ஆபத்தான ஒரு கட்டத்தில் அவருக்கு அவசரத்தில் மாற்று ரத்தம் ஏற்றப்படுகிறது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் செத்துப்போகிறார். ஆனால் சில நிமிடங்கள் கழித்து உயிர்த்தெழுகிறார். அந்த அதிசய சம்பவம் அவரைப் பிரபலமானவராக ஆக்குகிறது. மக்கள் அவரை ஒரு புனிதராகப் பார்க்கிறார்கள், அவருடைய தரிசனத்தையும் ஆசியையும் பெறவிரும்புகிறார்கள்.

ஆனால் பாதிரியார் ஒரு விநோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமே தெரியும். பகலில் சூரிய வெளிச்சம் பட்டால் அவருடைய உடல்முழுவதும் கொப்பளங்கள் உண்டாகும், தீயில் கருகுவது போல தோல் பொசுங்க ஆரம்பித்துவிடும். தினமும் இரவில் அவர், கோமா நிலையில் இருக்கும் தனக்குத் தெரிந்த ஆளின் ரத்தத்தை டியூப் மூலம் உறிஞ்சிக் குடிக்கிறார். புது ரத்தம் பாய்ந்ததும் அவருக்கு அளவில்லாத பலமும், வேகமும், மிக உயரத்துக்கு எம்பித் தாவவும், மேலிருந்து குதிக்கவும் கூடிய ஆற்றல்களும் உண்டாகின்றன.

நோயாளியான தன் பள்ளி நண்பனை ஆசிர்வதிப்பதற்காகவும் பிரார்த்திப்பதற்காகவும் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் பாதிரியார், அங்கு ஒரு வேலைக்காரிபோல நடத்தப்படும் நண்பனின் மனைவி மீது இறக்கம்கொள்கிறார். அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் இடையில் காமம் துளித் துளியாய் ஆரம்பித்துப் பிறகு பெருவெள்ளமாகி அவர்களை அடித்துச் செல்கிறது. அவர் அவளுக்காகத் தன் நண்பனையே கொல்கிறார். ஒரு கட்டத்தில் அவளும் வேம்பயராக மாறுகிறாள். அப்போது உண்டாகும் ஆற்றல் கொடுக்கும் போதையில் அவள் ஏராளமான கொலைகளைச் செய்கிறாள், அவரையும் தூண்டுகிறாள்.

ஏரியில் மூழ்கி இறந்த கணவன் ஈரத்தோடு நீர்சொட்ட வீட்டுக்குள் உலாவருவது, பல திகில் படங்களில் இடம்பெற்றதுதான் என்றாலும், இதில் நாயகன் நாயகியின் குற்ற உணர்வின் உருவெளித்தோற்றமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எஜமானியாக வளம்வந்த மாமியார் இறுதியில் வாதநோயில் விழுந்து, கண்ணிமைகள் தவிற வேறு எதையும் அசைக்க முடியாதவளாகி, தன் மருமகளும் பாதிரியாரும் ரத்தக் காட்டேரிகளாகிவிட்டதை மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருப்பதும், தன் மகனைக் கொன்ற அவர்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பிரயத்தனப்படுவதும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தேவாலய மடத்தில் தங்கியிருக்கும் கண்தெரியாத மூத்த பாதிரியார் ஒருவர், படத்தின் ஆரம்பத்தில் தன் ரத்தத்தை நாயகனுக்குப் பசியாறுவதற்காகக் கொடுக்கிறார். இறுதியில் அவனுடைய ரத்தத்தை தனக்குள் செலுத்தி தன்னையும் வேம்பயராக மாற்றும்படி அவர் கெஞ்சுகிறார், அதன் மூலம் தானும் சிறப்பு ஆற்றல்கள் பெற்று, இந்த உலகைக் கண்கொண்டு பார்த்துவிட முடியுமென்று ஆசைப்படுகிறார். இதுபோன்ற நிறைய காட்சிகள், மனிதன் உலகைத் துய்ப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வான் என்று காட்டுகின்றன.

அதீதமான வன்முறையும் வக்கிரமும் கலந்து, ரத்தத்தில் தோய்த்து எழுதப்பட்டது போன்ற இந்தத் திரைக்கதையை, திட்டமிட்டே கொஞ்சம் அருவருப்பை உண்டாக்கும் வகையில் இயக்கியிருக்கிறார் சான்-வூக் பார்க். அதைச் சகித்துக்கொண்டு தாண்டிவந்தால், இறுதியில் ஒரு அற்புதமான உச்சக் காட்சி இருக்கிறது. இயக்குனர் தான் ஒரு மாஸ்டர் என்பதை அங்கு நிரூபித்திருக்கிறார்.

“ஓல்ட் பாய்” அளவுக்கு ஒரு கச்சிதமான அமைப்பு இந்தப் படத்தில் கைகூடவில்லை. படம் எங்கெங்கோ வளைந்து நெளிந்து தாவிச் செல்கிறது. என்றாலும் இதுவும் சான்-வூக் பார்க்-யின் முக்கியமான ஒரு படமே.

[ தொடரும் ]

.

.