.

ஒரு திரைப்பட உருவாக்கம் என்பது வேறு எந்தக் கலை வடிவத்தை விடவும் அதிக உடல் உழைப்பைக் கோரக்கூடியது. ஒரு இயக்குனர் படைப்புத் திறனும், சமயோஜிதமும், ஆளுமையும், தேர்வுசெய்வதில் ரசனையும் கொண்டவராக இருப்பதோடு, சளைக்காமல் உழைப்பவராகவும் இருப்பது அவசியம். பல்வேறு கலைஞர்கள் சேர்ந்துதான் ஒரு படத்தை உருவாக்குகிறார்கள், ஆனால் அதன் தொடக்கப் புள்ளியிலிருந்து இறுதிப் புள்ளிவரை இருப்பது இயக்குனர் மட்டுமே. எந்தவொரு படத்தின் நேர்த்தியும், நுணுக்கங்களும், சிறப்பும் அதன் இயக்குனரின் ஈடுபாட்டையும் உழைப்பையுமே உணர்த்துகின்றன. 2000 முதல் 2009 வரையான பத்தாண்டுகளில் எழுந்துவந்த இயக்குனர்களில், முக்கியமானவர்களாக நான் நினைக்கும் பத்துபேரின் பட்டியலில் அடுத்து இடம்பெறுபவர் அப்படிப்பட்ட கடின உழைப்புக்குப் பெயர் பெற்ற ஒருவரே…

Peter Jackson

6. பீட்டர் ஜாக்ஸன்

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஜாக்ஸன், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்துவந்த இயக்குனர்களிலேயே மிகப் பெரிய கடின உழைப்பாளி என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் நான் அவரை ஒரு ரோல் மாடலாகவே கருதுகிறேன். அவருடைய மூன்று “லார்ட் ஆஃப் த ரிங்ஸ்” படங்களும் எத்தனை பிரம்மாண்டமானவை, சிக்கலானவை, தேர்ந்த தொழில்நுட்பமும், கலை நேர்த்தியும் கொண்டவை என்பதைப் பார்த்தவர்கள் யாரும் உணர முடியும். ஒவ்வொரு படமும் இரண்டு படங்களுக்குச் சமமானவை. மூன்று படங்களையும் சேர்த்தால் சுமார் 10 மணிநேரம் ஓடக்கூடும். அத்தனை பெரிய படைப்பை அவர் உருவாக்கிய வேகம் ஒரு பெரும் ஆச்சர்யமே.

2001-03 ஆகிய மூன்று ஆண்டுகளின் ஒவ்வொரு டிஸம்பர் மாதமும் ஒரு பாகம் என்னும் கணக்கில் வெளியிடப்பட்டது “லார்ட் ஆப் த ரிங்ஸ்”. முதல் பாகம் வெளியாகும் போதே அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டன (19 Dec 2001, 18 Dec 2002, 17 Dec 2003). பீட்டர் ஜாக்ஸன் கூற்றுப்படி “ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுக்கு முன்னால் தண்டவாளங்களைப் பதித்தபடி செல்வது போன்று” அவரும் குழுவும் வேலைசெய்தார்கள்.

ஆனால் அவரொன்றும் சிக்கனமாக, தேவையானதை மட்டும் படமெடுக்கும் இயக்குனர் அல்ல. ஒரு ஷாட்-ஐயே வெவ்வேறு கோணங்களில் எடுத்துவைத்துக்கொண்டு படத்தொகுப்பில் எது தேவையென முடிவுசெய்வார். ஏராளமான டேக்குகளுக்குப் பெயர் பெற்றவர். ஒரு டேக்கில் அவருக்கு சொல்வதற்கோ திருத்துவதற்கோ ஏதும் இல்லாவிட்டாலும் “அதிர்ஷ்டத்துக்காக இன்னொரு முறை” என்று அவர் அறிவிப்பது மிகப் பிரபலம். ஒரு காட்சியையே பல நாட்களுக்கு எடுத்துக்கொண்டிருப்பார். ஏராளமான அனிமேஷன், செட் எக்ஸ்டென்ஷன், காம்போஸிடிங் கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகள் நிறைந்திருந்தாலும் ஒவ்வொரு நுணுக்கத்திலும் தனிக்கவணம் செலுத்தி துள்ளியமான நேர்த்தியை எட்டும்வரை விடமாட்டார்.

அப்படியிருந்தும், முன்னறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே படங்களை வெளியிட அவரால் முடிந்தது. அதைச் சாத்தியப்படுத்தியது அவருடைய சளைக்காத உழைப்பே. முன்-தயாரிப்பு வேலைகளையும் சேர்த்து மொத்தம் 4 ஆண்டுகளாக, அவர் ஒரே ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைசெய்தார் என்கிறார்கள். நான்காண்டுகளாக ஓய்வே இல்லாமல், செய்யும் வேலையில் சலிப்படையாமல், தன் படைப்பாற்றலை மென்மேலும் கூர்தீட்டியபடியே பணியாற்றிய ஒரு கர்மயோகி அவர்.

அதேசமயம் உம்மென்று சீரியஸாக வேலைசெய்பவரும் அல்ல அவர். விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிறுவனின் மனநிலையிலேயே அவர் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பார் என்று சொல்லப்படுவதுண்டு. விளையாட்டு எத்தனை தீவிரமாக இருந்தாலும் சிரிப்பும் குதூகலமும் கூடவே இருக்கும்போது உற்சாகம் குறைவதில்லை, சலிப்பும் தோன்றுவதில்லை. இந்த விளையாட்டு மனநிலை எல்லா திரைப்பட இயக்குனர்களுக்கும் மிக அவசியமானது என்று நான் நினைக்கிறேன்.

“லார்ட் ஆப் த ரிங்ஸ்” ஒரு ஹாலிவுட் படமாக அறியப்பட்டாலும், அது உண்மையில் முழுக்க முழுக்க நியூஸீலாந்தில் தயாரிக்கப்பட்டது. படப்பிடிப்பு மட்டுமல்ல, திரைக்கதை எழுதுவதில் ஆரம்பித்து இறுதிக்கட்ட வேலைகள் வரை தன் தாய்நாடான நியூஸிலாந்திலேயே தயாரிப்பு வேலைகளை நடத்தினார் பீட்டர் ஜாக்ஸன். ஹாலிவுட்டில் பெருவெற்றி அடைந்தபிறகும் அமெரிக்காவிற்கு சென்று குடியேறாத ஒரே இயக்குனர் அவர்தான். நியூஸிலாந்து நாட்டின் திரைப்பட வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியதற்காக அந்நாட்டு அரசு அவரை கௌரவித்திருக்கிறது.

உலகை வியக்கவைத்த அந்தப் படங்களின் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை நிகழ்த்தியது உண்மையில் ஹாலிவுட்டின் எந்த நிறுவனமும் அல்ல, நியூஸிலாந்தில் சிறிய அளவில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட சொந்த நிறுவனமே. முதன் முறையாக, ஒரு திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளைப் பல அடுக்குகளாகப் பிரித்து அவுட்சோர்ஸிங் முறையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் கொடுப்பதை ஆரம்பித்ததும் அவர்தான். அதன் மூலமே மிக விரைவாக அவரால் படப்பிடிப்பிற்குப் பின்னுள்ள வேலைகளை முடிக்க முடிந்தது. அப்படி சில இந்திய நிறுவனங்களும் அந்தப் படங்களில் பங்காற்றியிருக்கின்றன.

.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜே.ஆர்.ஆர்.டால்கின் 1937-யில் தனது 45ஆவது வயதில் எழுத ஆரம்பித்து சுமார் 12 ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்த நீண்ட புனைகதை “லார்ட் ஆப் த ரிங்ஸ்”. அதில் பெரும்பான்மையான பகுதிகளை, இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து விமானப் படையில் பணியாற்றிய தனது மகன் படிப்பதற்கு அஞ்சலில் அனுப்புவதற்காகவே அவர் எழுதினார். மொழி ஆய்வு, இலக்கியம், வரலாறு, புராணம் ஆகியவற்றில் அவருக்கிருந்த ஆழமான புலமையைப் புனைவில் பயன்படுத்திய காரணத்தாலேயே அந்த நூல் ஒரு தேவதைக் கதை என்றல்லாமல் ஒரு புராண காவியமாகவே ஐரோப்பியர்களால் கொண்டாடப்படுகிறது.

பிற்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, “ஹாரி பாட்டர்” உட்பட நூற்றுக்கணக்கான ஃபேண்டஸி கதைகளிலும், “ஸ்டார் வார்ஸ்” உட்பட ஏராளமான திரைப்படங்களிலும் டால்கின் பாதிப்பு இருக்கிறது என்பதிலிருந்தே அவரின் முக்கியத்துவத்தை உணரமுடியும். உலகப் போரின் மேல் ஆசிரியருக்கிருந்த ஆழமான வெறுப்பே புனைவாக விரிந்திருக்கிறது என்றும், கதையில் வரும் அழிவுச் சக்தியான மோதிரம் உண்மையில் அணு ஆயுதத்தின் குறியீடு என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நான் மூல நூலைப் படித்தது இல்லை, ஆனால் பீட்டர் ஜாக்ஸனின் மூன்று படங்களும் நூலின் அனுபவத்தைப் பன்மடங்கு பெருக்கியே திரையில் பிரதிபலித்திருக்கின்றன என்றே நம்புகிறேன்.

‘மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துக்கு எதிரான கதை’ என்று சுருக்கமாக “லார்ட் ஆப் த ரிங்ஸ்”-ஐ சொல்லலாம். மூவுலகையும் ஆளும் சர்வ வல்லமையைத் தரக்கூடிய ஒரு மோதிரத்தை அழிப்பதற்காக, ஒரு குழு மேற்கொள்ளும் சாகஸப் பயணம்தான் மையச் சரடு. அத்தனை சக்தியைத் தரும் ஒன்றை வைத்து நல்லதும் செய்யலாமே என்ற கேள்வி இயல்பாக நமக்கு எழலாம். ஆனால், சர்வ வல்லமைகளும் ஒரு ஆளிடம் குவிந்தால், அவன் எப்பேர்ப்பட்ட தர்மசீலனாக இருந்தாலும், அது அவனைத் தீமையின் பக்கமே சாய்க்கும் என்று இந்தக் கதை சொல்கிறது. அந்த வகையில் குறியீட்டுத் தளத்தில் அது உலக அரசியலை, சர்வாதிகாரத்தை, வல்லரசுகளை விமர்சிக்கிறது.

அதேசமயம் ‘மனித பலவீனத்தின் கதை’ என்றும் சொல்லலாம். தீமை எப்போதும் கவர்ச்சிகரமாகவும் ஈர்ப்பதாகவும் இருப்பதனால், மனித மனம் அதன் பக்கமே நழுவிச்செல்ல எத்தனிக்கிறது என்பதை அழுத்தமாகக் காட்டுவதன்மூலம், தனிமனித ஒழுக்கத்தைப் பற்றிய ஒரு நீதிக் கதையாகவும் “லார்ட் ஆப் த ரிங்ஸ்” விளங்குகிறது. மனிதனின் பேராசையும் அதிகார வேட்கையும் எப்படிப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தும் என்பதையும், எந்த வகையான சர்வாதிகாரமும் கேடானதே என்பதையும், தீமை வெளியிலெல்லாம் இல்லை அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமே இருக்கிறது என்பதையும், ஏராளமான கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மூலம் காட்டுகின்றன மூன்று படங்களும்.

ஏராளமான துரத்தல்களும், சண்டைகளும், போர்களும் நிறைந்த பரபரப்பான சாகஸக் கதையாக இருந்தபோதிலும், அதன் மையக் கதாபாத்திரமான ஃப்ரோடோ சண்டையே போடுவதில்லை என்பதுதான் மிக விசித்திரமான அம்சம். அவன் போராடுவதெல்லாம் தன் மனத்தின் பலவீனத்தோடு மட்டும்தான். வல்லமை மிக்க அந்த மோதிரத்தை, மாவீரர்களாலும் மன்னர்களாலும் அறிஞர்களாலுமே எடுத்துச்சென்று அழிக்க முடியவில்லை. காரணம், மோதிரம் அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தித் தீமையின் பக்கம் விழவைத்துவிடும். கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எதில் சிறந்திருந்தாலும், அவர்கள் அதிகாரத்தைக் கைக்கொள்ளும் ஆசையில் தீமையின் பக்கம் விழுந்துவிடலாம். ஆகவே, அவை மூன்றுமே இல்லாத, கள்ளங்கபடமற்ற வெகுளியாகவும், இயல்பிலேயே நல்லவனாகவும் இருக்கும், குள்ளர் இனத்தைச் சேர்ந்த ஃப்ரோடோ எனும் இளைஞனிடம், மோதிரத்தை எடுத்துச்சென்று அழிக்கும் பொறுப்பு அளிக்கப்படுகிறது.

அந்த மோதிரத்தைக் கைப்பற்ற தீய சக்திகள் முயற்சிப்பதால், ஃப்ரோடோ-க்குத் துணையாக ஒரு மூதறிஞரும் பலவகைத் திறன்கள் மிக்க மாவீரர்களும் கொண்ட குழு ஒன்று புறப்படுகிறது. ஃப்ரோடோ தன் எதிரிகள் அளவுக்கே, தனக்குத் துணையாக வரும் குழுவினரைப் பார்த்தும் அஞ்ச வேண்டியிருக்கிறது. யார் மோதிரத்தின் மேல் ஆசைகொள்வார்கள் என்று தெரியாது. ஆகவே ஒரு கட்டத்தில் அவன் அவர்களை விட்டுப் பிரிந்து, தன் நெருங்கிய நண்பனோடு தனிப்பாதையில் பயணிக்கிறான், அவர்களை வேறு பாதையில் வரச்சொல்கிறான்.

பின்பு அவன் தன் மனத்தின் ஆசையோடும் போராட வேண்டியிருக்கிறது. தானே தனக்கு எதிரியாகிவிடும் அபாயம் ஏற்படுகிறது. தீமை அவனை உருக்க, மனதாலும் உடலாலும் பலவீனமானவனாக மாறுகிறான். உச்சக் காட்சியில் தீக்குழம்புக்குள் மோதிரத்தை அவனால் போடவே முடியவில்லை, வெறிபிடித்தவன் போல “இல்லை.. இது என்னுடையது..” என்று சொல்லியபடி தன் விரலில் மோதிரத்தை அணியும் கட்டம் மிக அதிர்ச்சிகரமானது.

இந்த மூன்று படவரிசையில் உள்ள எல்லா அற்புதமான தருணங்களையும், கதாபாத்திர வடிவமைப்புகளையும், காட்சிப்படுத்தலின் சிறப்புகளையும் சொல்வதானால் ஒரு தனித் தொடரே எழுத வேண்டும். முதல் பாகமான “ஃபெல்லோஷிப் ஆப் த ரிங்”-யில் பிரம்மாண்டமான ஒரு பயண மாண்டாஜ்-உம், காட்டாற்று வெள்ளம் திடீரென்று பெருகி நீர்க்குதிரைகளாக ஓடிவரும் காட்சியும், குகைக்குள் சரிந்து விழும் மதில் சுவர்களின் மேல் ஓடி நெருப்புப் பூதத்திடமிருந்து தப்பிக்கும் காட்சியும் மறக்க முடியாதவை.

Gollum – “The Lord Of The Rings: The Two Towers”

இரண்டாம் பாகமான “டூ டவர்ஸ்” மற்ற இரு பாகங்களைப் போல ஆஸ்கார் விருது விழாவில் கௌரவிக்கப்படவில்லை. ஆனால் மூன்றில் ஆகச் சிறந்தது அதுவே என்று கருதும் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள். குறிப்பாக “கொலும்” எனும் மனப்பிரள்வுள்ள சிக்கலான கதாபாத்திரம் அனிமேஷனில் வடிவமைக்கப்பட்ட விதம், அந்தத் தளத்தில் முதன்மையானவரான ஜார்ஜ் லூக்காஸ்-ஐயும் மிஞ்சுவதாக இருக்கிறது. தீயசக்தியின் பிடியில் ஒரு அரசன் வீழ்ந்து சுயமிழந்து கிடப்பதும் பிறகு அவன் மீட்கப்படுவதுமான பகுதிகள் மறக்க முடியாதவை.

நிறைவுப் பாகமான “ரிடர்ன் ஆஃப் த கிங்” உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்தது. 11 ஆஸ்கார் விருதுகளை “பென் கர்”, “டைட்டானிக்” படங்களுக்குப் பிறகு பெற்றது இந்தப் படம்தான். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் எனும் உச்ச விருதுகளும் அந்தப் பதிணொன்றில் அடக்கம். இது அந்த மூன்றாம் பாகத்துக்கு மட்டுமல்லாமல் மொத்த தொடரையே கௌரவிப்பதற்காகக் கொடுத்தது என்றே நான் நினைக்கிறேன். படத்தில் வரும், ஒரு மலையே நகரமாக அமைந்த வடிவமைப்பும், அதன் அரசன் புத்திர சோகத்தால் மதியிழந்து தனது படையினர் களத்தில் மாண்டுகொண்டிருக்க பாட்டு கேட்டபடி வாயில் உணவைக் கடித்துத் திண்பது இடைவெட்டாகக் காட்டப்படுவதும், மாபெரும் இறுதி யுத்தமும், மோதிரம் அழிக்கப்படும் உச்சக் காட்சியும் என்றென்றைக்கும் நினைவில் நிற்கக் கூடியவை.

.

.

பீட்டர் ஜாக்ஸன் சிறுவயதில் பார்த்த ஒரு படம்தான் அவருக்கு திரைக்கலையில் ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அது 1933ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட “கிங் காங்”. அதன் பாதிப்பு அனேகமாக அவரின் எல்லாப் படைப்புகளிலும் உண்டு. சிறு வயதில் ஏராளமான ராட்ஸச ஜந்துக்களைத் தானே உருவாக்கிக் குறும்படங்களை எடுத்திருக்கிறார். மினியேச்சர் வடிவமைப்பதிலிருந்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு வரை எல்லாவற்றையும் தானே செய்து, தானே பல வேடங்களில் நடித்து, தன் நண்பர்களையும் நடிக்கவைத்து, ஒரு விளையாட்டுப்போல அவர் உருவாக்கிய படங்களின் மூலமே அவர் திரைப்பட தொழில்நுணுக்கங்களைப் பயின்றார். அந்தப் படங்களே அவருக்குத் திரைத்துறைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தது.

70களில் மீண்டும் “கிங் காங்” எடுக்கப்பட்டு வெளியானபோது, பீட்டர் ஜாக்ஸன் பெரும் எதிர்பார்ப்போடு சென்று பார்த்தார். ஆனால் அதில் மூலத்திலிருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முப்பதுகளில் நடந்த பொருளாதார வீழ்ச்சி, சினிமா என்னும் புதிய கலைத்துறை, அறியப்படாத நிலவெளிகள் தீவுகள் பற்றிய மர்மம் ஆகியவையே மூலப் படத்தின் பின்னணிக் களம். ஆனால் அவையெல்லாம் முற்றிலுமாக அகற்றப்பட்டு, 70களில் நடப்பதுபோலவே அந்த இரண்டாம் படம் அமைந்திருந்தது. அதனால் சமகாலத்தின் நம்பகத்தன்மைக்காக டைனஸார் உட்பட மற்ற பெரிய விலங்குகள் வரும் பகுதிகள் நீக்கப்பட்டு, மர்மத் தீவின் காட்டில் கிங் காங் மட்டுமே பெரிதாக இருப்பதுபோல் காட்டியிருந்தார்கள்.

அந்தப் படம் பீட்டர் ஜாக்ஸனுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. தனக்கு வாய்ப்புக் கிடைத்தால் மூலப்படத்துக்கு மிக நெருக்கமாக மீண்டும் ஒரு “கிங் காங்” படத்தை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுக்க வேண்டும் என்று அப்போதே விரும்பினார். அதற்கான வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு அவர் எடுத்த “கிங் காங்” 2005யில் வெளிவந்தது. மூலப்படத்தின் காலத்திலேயே நடப்பதுபோல் வைத்துக்கொண்டதால் கதையில் எந்தப் பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் எடுக்கப்பட்ட விதம், நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டோடும் செய்நேர்த்தியோடும் இருந்தது.

இந்தப் படத்தின் சிறப்பான அம்சமே, அனிமேஷன் பாத்திரமான கிங் காங், ஒரு தேர்ந்த நடிகனுக்குரிய முகபாவனைகளோடும் உடல்மொழியோடும் வலம்வந்ததுதான். “லார்ட் ஆப் த ரிங்ஸ்” படத்தின் “கொலும்” அனிமேஷன் கதாபாத்திரத்தை ஆண்டி செர்கிஸ் என்ற நடிகரே செய்தார். அவரின் உடல் மற்றும் முக அசைவுகள் ‘மோஷன் கேப்சரிங்’ முறையில் பிரதி எடுக்கப்பட்டு அனிமேஷன் பாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டன. நோஞ்சானான அந்தப் பாத்திரத்தில் நடித்த அதே நடிகர்தான் ராட்சஸ உருவம்கொண்ட கிங் காங் பாத்திரத்திற்கான மோஷன் கேப்சரிங்-குக்கும் நடித்திருக்கிறார். கொரில்லாக் குரங்கின் உடல்மொழியை நம்பகத்தன்மையோடும் அதேசமயம் கதைக்குத் தேவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும் அற்புதமாக செய்திருக்கிறார் அவர். இந்த வகையான தொழில்நுட்ப உத்தியின் முன்னேறிய வடிவமே “அவதார்” படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1933-யில் வந்த மூலப் படம் குறியீட்டுத்தளத்தில் அப்போதைய அமெரிக்க அரசியலையும், ஜனாதிபதி ஃபிரான்க்ளின் ரூஸ்வெல்ட்-யையும் விமர்சிப்பதாக கருதப்படுகிறது. ஆனால் பீட்டர் ஜாக்ஸனின் இந்தப் படத்தில் அப்படி சமகாலத்துக்கான எந்த ஒரு குறியீட்டு அர்த்தமும் வழங்கப்படவில்லை. முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்குப் படமாகவே அது இருக்கிறது. நான் சோர்வாக இருக்கும்போதோ, அல்லது யதார்த்தத்திலிருந்து கொஞ்ச நேரம் தப்பிக்க நினைத்தாலோ, பார்க்க விரும்பும் சில படங்களில் இதுவும் ஒன்று.