21 GRAMS

ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு திரைக்கதைக்குள் பின்னி உருவாக்கப்படும் படங்களில் எனக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு. நான்லீனியர் திரைப்படங்கள் பற்றி நான் எழுதிய “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்” என்ற தொடர்பதிவுகளில் இடம்பெற்ற சிலபடங்கள், பல தனித்தனிக் கதைக்களை உள்ளடக்கியவையே. குறிப்பாக “பல்ப் ஃபிக்ஷன்”. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் தொடரிலும் டிராஃபிக்” படம் பற்றி எழுதியிருக்கிறேன், அதுவும் பலகதைகளை உள்ளடக்கியதே. நான் எழுதாத எனக்குப் பிடித்த இன்னொரு படம் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கிய “மக்னோலியா”(1999). 2000க்குப் பிறகு, ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை உள்ளடக்கிய படங்களையே தொடர்ந்து எடுத்து, அந்த வகைப்பிரிவில் முக்கியமானராக மாறியிருக்கும் ஒரு இயக்குனரைப் பற்றியே அடுத்து பார்க்கப்போகிறோம்.

[ 2000 முதல் 2009 வரையான பத்தாண்டுகளில் புதிதாக எழுந்துவந்து உலக அளவில் கவணம் பெற்றவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதும் 10 இயக்குனர்களின் இந்தப் பட்டியல், தரவரிசையிலானது அல்ல என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அதாவது இயக்குனர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எண் வரிசை அவர்களின் தகுதி அடிப்படையில் அமைந்தது அல்ல. ]

.

Alejandro Gonzalez Inarritu

7. அலெக்ஸான்ரோ கோன்ஸெலஸ் இனாரிட்டு

மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த இனாரிட்டு, வானொலி தொகுப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கி, இசையமைப்பாளராகவும், தொலைக்காட்சித் தொடர் மற்றும் விளம்பரங்கள் இயக்குபவராகும் வளர்ந்தவர். இடையில் அமெரிக்கா சென்று திரைப்படக் கல்லூரி ஒன்றிலும் படித்து தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்ட பிறகே திரைத்துறைக்குள் நுழைந்தார். திரைக்கதையாசிரியர் கில்லர்மோ அர்ரியாகா-உடன் சேர்ந்து அவர் எடுத்திருக்கும் மரணம் பற்றிய மூன்று திரைப்படங்களே (Trilogy of Death) அவரை சமகாலத்தின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக ஆக்கியிருக்கின்றன. “அமொரெஸ் பெரோஸ்” (2000), “21 கிராம்ஸ்” (2003), “பாபேல்” (2006) என்கிற அந்த மூன்று படங்களும் ‘மல்டிபிள் ஸ்டோரி லைன்ஸ்’ எனப்படுகிற ஒன்றுக்கு மேற்பட்ட கதையோட்டங்களைக் கொண்டவையே.

“அமொரெஸ் பெரோஸ்” என்பதை ஸ்பானிஷ் மொழியிலிருந்து வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் “அன்பு ஒரு பெட்டை நாய்” என்றோ “அன்பு ஒரு நாய்” என்றோ “நாய் அன்பு” என்றோதான் வரும் என்கிறார்கள். ஆனால் அது மட்டுமே அர்த்தமல்ல, ஸ்பானிஷில் “தீவிரமான அன்பு”, “அன்பின் வெற்றியும் தோல்வியும்”, “அன்பு சிலநேரம் வெல்லும் சிலநேரம் தோற்கும்”, “அன்பின் துயர்”, “அன்பே மனிதனின் உற்ற துணை” என்பவை போன்ற பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய சிக்கலான சொற்சேர்க்கை அது என்றும் சொல்கிறார்கள். ஒரு எதிர்பாராத விபத்தில் சம்பந்தப்படும், ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மூன்று கதாபாத்திரங்களின் தனித்தனிக் கதைகளை உள்ளடக்கியது “அமொரெஸ் பெரோஸ்”. மூன்று பாத்திரங்களும் மெக்ஸிகோவின் அடித்தட்டு, நடுத்தரம், மேல்நிலை எனும் பொருளாதாரப் படிநிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

முதல் கதை, தனது அண்ணனின் மனைவியை நேசிக்கும் நடுத்தரவர்க்க இளைஞனைப் பற்றியது. முரடனாகவும் கையாலாகாதவனாகவும் இருக்கும் தன் அண்ணனால் துன்பத்துக்கு ஆளாகும் அண்ணியையும், அவள் கையிலும் வயிற்றிலும் இருக்கும் குழந்தைகளையும் தான் தனியே அழைத்துச்சென்று வாழவைக்கவேண்டும் என்று இளைஞன் விரும்புகிறான். அதற்காகத் தன் நாயை பந்தயச்சண்டையில் ஈடுபடுத்திப் பெரும்பணமும், பந்தயக்காரர்களின் தீராத பகையையும் சம்பாதிக்கிறான். ஆனால் அவன் நினைத்ததிற்கு மாறாக, இறுதியில் அண்ணி அவனை நிராகரித்துவிடுகிறாள். திரைக்கதையின் மையமான அந்த கார் விபத்தை நிகழ்த்துவது இந்த இளைஞன் தான்.

இரண்டாம் கதை, ஒரு புகழ்பெற்ற மாடல் பற்றியது. பெரும் பணக்கார வியாபாரி ஒருவன் தன் முதல் மனைவியையும் குடும்பத்தையும் கைகழுவிவிட்டு வந்து, ஒரு புதிய வீடெடுத்து புதுவாழ்வை மாடலோடு ஆரம்பிக்கிறான். இந்த நிலையில், முதல்கதையிலும் வந்த அந்த கார் விபத்தில் தன் காலை இழக்கிறாள் மாடல். ஒருநாள் அவள் தனியாக வீட்டிலிருக்கும்போது அவளுடைய செல்ல நாய், மரத்தாலான தரைத்தளத்தின் அடியில் இடுக்குக்குள் சென்று மாட்டிக்கொண்டு காணாமலாகிறது. அதை மீட்டுக்கொடுக்கும்படி இரவும் பகலும் தன் காதலனை தொல்லைசெய்கிறாள் அவள். இதனால் அவர்களுடைய உறவு சிக்கலாகிறது. இறுதியில் அந்த நாய் எப்போதோ செத்துவிட்டது என்பதையும், முடமானதால் மாடலிங் துறையும் புகழும் தன்னைவிட்டு நிரந்தரமாகப் போய்விட்டது என்பதையும் நிதர்சனமாக உணர்கிறாள் அவள்.

தெருவில் குப்பை பொறுக்கியபடி அலையும் ஒரு முதியவரைப் பற்றியது மூன்றாவது கதை. அவர் ஒருகாலத்தில் ஆசிரியராக இருந்து, பின்பு கொரில்லாப் போராளியாக ஆகி, சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தவர். இப்போது பகுதி நேரத்தில் பணத்துக்காகக் கொலைசெய்யும் தொழில்முறைக் கொலைகாரராகவும் இருக்கிறார். அவருக்கு ஒரு மகள் உண்டு, இறந்துபோன அவருடைய மனைவியின் தங்கையிடம் வசதியான சூழலில் அவள் வளர்கிறாள். அவர் அவளை மிகவும் நேசிக்கிறார். ஆனால் அப்பா இறந்துவிட்டதாகவே சொல்லி வளர்க்கப்பட்ட அந்தப் பெண்ணை அவரால் நெருங்க முடியவில்லை. இதற்கிடையில், சாலையில் நடக்கும் கார் விபத்தைப் பார்க்கும் அவர், முதல்கதை இளைஞனின் நாயைக் காப்பாற்றி தன்னிடமிருக்கும் ஏராளமான நாய்களோடு சேர்த்து வளர்க்கிறார். அந்தப் பந்தய நாய் ஒருநாள் எல்லா நாய்களையும் கடித்துக் கொன்றுவிடுகிறது. அதன் பிறகு அவர் கொலைத்தொழிலை விடுகிறார்.

மூன்று கதைகளிலும் உள்ள ஒரு ஒற்றுமை, மூன்றிலுமே நாய்கள் வருகின்றன. மூன்று மையக் கதாபாத்திரங்களும் தாங்கள் வளர்க்கும் நாய் மீது அன்புகாட்டுகிறார்கள், அந்த நாய்களே அவர்களுடைய பிரச்சனைகளுக்கும் காரணமாகின்றன. மூன்று கதாபாத்திரங்களும் ஒரு கட்டத்தில் சூழ்நிலைக் கைதிகளாக, தனித்து விடப்பட்டவர்களாக, அன்புக்காக ஏங்குபவர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு ஒற்றுமை.

நான் கண்ட மேலும் ஒரு ஒற்றுமை, மூன்று கதாபாத்திரங்களும் முடிவில் தாங்கள் ஆசைப்பட்ட ஒன்று கையில்கிட்டாமல் நழுவிச் செல்வதைப் பார்த்தபடி கையறு நிலையில் நிற்கிறார்கள் என்பதே. இயற்கை என்னும் பிரம்மாண்டத்தின் முன், சமூகம் எனும் சிக்கலான மாபெரும் வலைப்பின்னலின் முன் ஒவ்வொரு மனிதரும் கைவிடப்பட்டவரே என்பதே படத்திலிருந்து நான் புரிந்துகொண்டது.

.

2000ஆம் ஆண்டு வெளிவந்த “அமொரெஸ் பெரோஸ்” படம் உலகம் தழுவிய அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்ற பிறகு, இயக்குனர் அலெக்ஸாண்ட்ரோ கோன்ஸெலஸ் இனாரிட்டு-க்கு ஹாலிவுட்-யின் அழைப்பு வந்தது. அங்கு சென்று அவர் எடுத்த “21 கிராம்ஸ்” படம் அவருடைய முந்தைய படத்தைவிடவும் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இதிலும், ஒரு விபத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்படும் மூன்று கதாபாத்திரங்களின் தனித்தனிக் கதைகளே பின்னப்பட்டுள்ளன. ஆனால் ஸியான் பென், பெனிசியோ டெல் டோரோ, நவோமி வாட்ஸ் ஆகியோரின் அற்புதமான நடிப்பும், உணர்ச்சிகரமான தருணங்களும் இந்தப் படத்தை ஒரு மிகச் சிறந்த அனுபவமாக்குகின்றன.

பல்ப் ஃபிக்ஷன்” படத்தின் பாதிப்பு காரணமாக 1995க்குப் பின் ஏராளமான அமெரிக்க ஐரோப்பிய படங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை உள்ளடக்கி ‘நான்லீனியர்’ வடிவில் திரைக்கதைகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக ஃபிரஞ்சு ‘நான்லீனியர் – மல்டிபிள் ஸ்டோரி லைன்ஸ்’ படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களில் எல்லாம், காலத்தில் முன் பின் செல்லும் இடங்களில், பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக ஏதோ ஒன்று செய்யப்பட்டிருக்கும், ஒவ்வொரு கதைப் பகுதிகளும் ஓரளவுக்கு நீளத்தோடு, அது எங்கே எப்போது நடக்கிறது யார்யார் காட்சியில் இருக்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கும். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் இல்லாமல், மொத்த திரைக்கதையையுமே செதில் செதிலாக வெட்டி, கலைத்து அடுக்கியது போல் இருக்கிறது “21 கிராம்ஸ்”. துண்டு துண்டாக சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகளை வைத்து மொத்தச் சித்திரத்தைப் பார்வையாளர்கள்தான் முயற்சிசெய்து புரிந்துகொள்ளவேண்டும்.

இப்படி வேண்டுமென்றே குழப்புவது சரியா என்கிற விவாதத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. எனக்கும் அது பற்றி மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் ஒரு நவீன ஓவியத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஏற்படும் கலை அனுபவத்தைத் திரைப்படத்திலும் கொண்டுவர செய்யப்பட்ட சோதனை முயற்சி என்ற அளவில் இது முக்கியமானதே. ஆனால் கொஞ்சம் முயற்சிசெய்து உள்நுழைபவர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன், மிகச் சிறந்த நடிகர்களின் பங்களிப்பும் உணர்ச்சிகரமான காட்சிகளும் நம்மை எளிதில் உள்ளிழுத்துவிடுவதாகவே இருக்கின்றன.

Sean Penn in “21 GRAMS”

ஒரு மனிதன் உயிரிழக்கும்போது அவன் உடம்பில் 21 கிராம்கள் சட்டென்று குறைவதாக ஒரு பழைய ஆய்வு சொல்கிறது. ஆகவே உயிரின் எடை 21 கிராம்கள் தானா என்று ஒரு விவாதம் இருக்கிறது. அதைத்தான் படத்தின் தலைப்பு குறிக்கிறது. மரணத்தால் உண்டாகும் இழப்பு வெறும் 21கி. மட்டுமில்லை அது எத்தனைப் பெரிய பேரிழப்பு என்று காட்டுகிறது படம். ஒரு கணிதப் பேராசிரியர் சிக்கலான இதய நோயின் காரணமாக மரணத்தை எதிர் நோக்கியிருக்கிறார். கடுமையான வலியும் வேதனையும் நிறைந்த நரக வாழ்வு, கழிப்பறைக்குக் கூட ஆக்ஸிஜன் சிலிண்டரை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற நிலை.

ஒருவழியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு உயிர் பிழைக்கும் அவர், தனக்கு இதயம் கொடுத்தது யார் என்று ஒரு தனியார் துப்பறியும் ஆளைக்கொண்டு கண்டறிகிறார். ஒரு விபத்தில் கணவன் மற்றும் இரு குழந்தைகளைப் பறிகொடுத்த இளம்பெண், தன் கணவனின் இதயத்தையே அவனுக்கு வழங்கியிருக்கிறாள் என்பது தெரியவருகிறது. அந்தப் பெண் தாங்க முடியாத வேதனையிலும் தவிப்பிலும் தனியே வாடுவதைப் பார்த்து, அவளிடம் சென்று பேசுகிறான். அவள், விபத்து நடந்தபோது சிறிது நேரம் தனது கடைசி மகள் உயிரோடிருந்திருக்கிறாள் என்றும், காரில் வந்து மோதிய ஆள் நினைத்திருந்தால் அவளை மட்டுமாவது காப்பாற்றியிருக்க முடியும் என்றும், ஆனால் அவன் நிறுத்தாமல் சென்றான், ஆகவே அவனைக் கொல்லவேண்டும் என்றும் சொல்கிறாள்.

Naomi Watts in “21 GRAMS”

பலகாலம் சிறையிலேயே கழித்த ஒரு முன்னால் குற்றவாளி இப்போது மனம்திருந்தி தீவிர கிறிஸ்தவ பக்தி இயக்கம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறான். குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கும் சேரி இளைஞர்களிடம் போதனைகள் செய்து இயேசுவைப் பின்பற்றும்படி மதப் பிரச்சாரம் செய்கிறான் அவன். தனது மனைவியோடும் இரு குழந்தைகளோடும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறான். இந்த நிலையில் அவனது ஒரு கண நேர கவணக் குறைவால் காரில் மோதி ஒரு தந்தையும் இரு மகள்களும் செத்துப்போகிறார்கள். பதட்டத்தில் நிறுத்தாமல் வந்துவிடும் அவன் பிறகு தானே சென்று போலீஸில் சரணடைகிறான்.

இயேசு தன்னைக் கைவிட்டது ஏன் என்கிற கேள்விக்கு அவனுக்கு விடையே இல்லை, தான் சிறையிலேயே கழிக்கவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம் என்று நினைக்கிறான். ஆனால் அவனது விருப்பத்தையும் மீறி அவனது மனைவி வக்கீல் மூலம் போராடி அவனை சிறையிலிருந்து விடுவிக்கிறாள். தன் வீட்டுக்கு வந்து குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும் போது தன்னால் இறந்துபோன இரு சிறுமிகளின் ஞாபகமே அவனுக்கு வருகிறது. தனக்குத் தானே தண்டனை கொடுப்பதுபோல குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே செல்கிறான். இயேசுவின் மீதான பக்தியையும் கைவிட்டு இலக்கில்லாமல் அநாதை போல வாழ்கிறான்.

Benicio Del Toro in “21 GRAMS”

இந்த நிலையில் அவனைக் கொல்வதற்காக, இறந்தவனின் மனைவியும், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆளும் தேடி வருகிறார்கள். இறுதியில் அவன் பாவக் குழியிலிருந்தும், குற்றமனப்பான்மை என்கிற நரகத்திலிருந்தும் மீட்பும் மன்னிப்பும் பெறுகிறான். இறந்தவனின் மனைவி, தனது கணவனின் இதயத்தோடு வந்த ஆளின் மூலம் தான் கர்ப்பமாகியிருப்பதை அறிகிறாள். வயிற்றிலிருக்கும் அந்தப் புதிய உயிர் அவளுக்கு வாழ்வின் மீதான பிடிப்பை வலுப்படுத்துகிறது, புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

பொருத்தப்பட்ட மாற்று இதயத்தை பேராசிரியரின் உடல் ஒப்பவில்லை, ஆகவே தன்னை விட்டு உயிராபத்து விலகவில்லை என்பதை உணர்கிறார். தன் உயிர் ஒரு நல்ல காரியத்துக்காகச் செல்லட்டும் என்று முடிவெடுத்த அவர், இறந்தவனின் மனைவிக்கும் விபத்தைச் செய்தவனுக்குமான பகையைத் தீர்ப்பதற்காகத் தன்னைத் தானே சுட்டுக்கொள்கிறார். இறுதியில் மீண்டும் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருந்தபடி, உயிர் என்றால் என்ன என்று அவர் யோசிக்கிறார் என்பதோடு படம் நிறைவடைகிறது.

நேர்கோடற்ற திரைக்கதை பற்றி நான் எழுதிய “காலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்” என்ற தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தவொரு படத்தையும்விட அதிகமாகக் காலக் குழப்பம் செய்யப்பட்ட படம் இதுதான். ஒவ்வொரு சிறு காட்சியும், நன்கு கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டின் ஒரு சீட்டுப் போல, கதையோட்டத்துக்குத் தொடர்பே இல்லாமல் எங்கோதான் செறுகப்பட்டிருக்கிறது. இயக்குனர் படப்பிடிப்பில் கால வரிசைப்படியேதான் காட்சிகளை எடுத்திருக்கிறார், பிறகு படத்தொகுப்பில் தன் விருப்பப்படி கலைத்து அடுக்கியிருக்கிறார். அவர் வழங்கியிருக்கும் வரிசையின்படி கதையை உள்வாங்கும்போது, வாழ்வின் விசித்திரத்தையும், புரிந்துகொள்ள முடியாத புதிர்த் தன்மையையும் நன்கு உணரமுடிகிறது என்பது மறுக்கமுடியாதது. நேர்கோட்டில் கதைசொல்லியிருந்தால் இந்த உணர்வு நிச்சயம் ஏற்பட்டிருக்காது.

.

2006 ஆம் ஆண்டு வெளியான “பாபேல்” திரைப்படம், முன்னனி நடிகர்களான பிராட் பிட், கேட் பிளான்செட் போன்றவர்கள் நடித்திருந்ததாலும் இயக்குனரின் முந்தைய இரு படங்கள் பெற்ற வரவேற்பு காரணமாகவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் உலக சினிமாவில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் பார்த்திருக்கக்கூடிய ஒருசில படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் என்னைப் பொருத்தவரை இயக்குனரின் முந்தைய படங்களை விட இது சுமாரானதே. திரைக்கதையில் குறைகளும் தருக்கப் பிழைகளும் இருந்தாலும், மையமாக எடுத்துக்கொண்ட விஷயம் அற்புதமானது. அதுவே இந்தப் படத்தை முக்கியமான ஒன்றாக்குகிறது.

‘பாபேல்’ என்பதற்கு ‘பல புரியாத பேச்சுக்கள் சேர்ந்து குழப்பமாக ஒலிப்பது’ என்று அகராதி அர்த்தம் சொல்லும். பைபிள் படித்தவர்கள் ‘பாபேல் கோபுரம்’ பற்றி அறிந்திருப்பார்கள். மனிதர்கள் ஒரே இடத்தில் வாழாமல் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று விரும்பிய கடவுள், அவர்களுக்குள் பலவித மொழிகளைத் தோற்றுவித்துப் பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்குச் சிதறச் செய்ததாக வரும் பகுதி அது. “பாபேல்” திரைப்படமும் மனிதர்களுக்குள் இருக்கும் தொடர்பு இடைவெளி பற்றியதே. வெளிப்படையாகப் பேச முடியாமை, மற்றவர் சொல்வதைக் கவணிக்கவும் புரிந்துகொள்ளவும் முயலாமை, உண்மையை மறைத்துப் பேசுவது, சகமனித நம்பிக்கையின்மையால் தொடர்புகொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றியே இந்தப்படம் பேசுகிறது.

ஒரு துப்பாக்கிச் சூட்டோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புள்ள 4 தனித்தனிக் கதையோட்டங்களைக் கொண்டிருக்கிறது திரைக்கதை. இரு சிறுவர்கள் தங்கள் விளையாட்டுத்தனத்தால் துப்பாக்கியை வெடித்து அது பிரச்சனையாகியதும், தங்கள் அப்பாவிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். மொராக்கோ பயங்கரவாதிகள் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியைச் சுட்டுவிட்டதாக உலகமெங்கும் அது செய்தியாகிவிடுகிறது. இறுதியில் உண்மையை மறைத்ததற்கான தண்டனையை சிறுவர்கள் அடைகிறார்கள்.

ஒரு குழந்தை இறப்பினால் கணவன் மனைவிக்குள் உருவாகும் விரிசல் பேசித்தீர்க்கப்பட முடியாமல் இருவருக்கு நடுவிலும் பாறைபோல நின்றிருக்க, சுற்றுலா சென்ற இடத்தில் மனைவி குண்டடிபட, அந்தக் களேபரத்தின் உச்சத்தில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்கள்.

அந்தக் கணவன், வீட்டில் தனது இரு குழந்தைகளைக் கவணித்துக்கொள்ளும் வேலைக்காரப் பெண்மணிக்கு போன்செய்து, தன் சூழ்நிலை காரணமாக, அவள் கேட்டிருந்த விடுப்பை கொடுக்கமுடியாது என்கிறான். ஆனால் அவள் விடுப்பு கேட்டிருந்ததோ தனது மகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக. அது அவள் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று என்பதைப் புரிந்துகொள்ளாமல், அவள் சொல்ல வருவதைக் கேட்காமல், தன்னுடைய பிரச்சனையை மட்டுமே பெரிதாக நினைத்து போனை வைத்துவிடுகிறான் கணவன். அந்தப் பெண்மணி இரு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு சாலை வழியாக நாடுவிட்டு நாடு சென்று, தன் மகன் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும் வழியில், பரந்த பாலை நிலத்தில் குழந்தைகளைத் தொலைத்துவிடுகிறாள்.

முதல் கதையில் வெடித்த அந்தத் துப்பாக்கியை மொராக்கோகாரனுக்கு விற்றது ஒரு ஜப்பானிய ஆள். அவருடைய, காது கேளாத வாய்பேச முடியாத மகள், தன் அம்மா தற்கொலைசெய்து செத்துப்போனதை சிறுவயதில் நேரில் பார்த்திருக்கிறாள். அந்த அதிர்ச்சியை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் மனதில் தேக்கிவைத்திருக்கிறாள். அந்த அழுத்தம் இளம்பெண்ணான பிறகு விபரீதமான பாலுறவு வேட்கையாக அவளிடம் வெளிப்படுகிறது. இறுதியில் அவள் மனம்விட்டு அழுது தன் துக்கத்தை அப்பாவிடம் முதன்முறையாக வெளிப்படுத்துகிறாள் என்பதோடு படம் நிறைவடைகிறது.

மொழிப்பிரச்சனை, சக மனிதர்களிடம் அக்கறையின்மை, நெருங்கிய உறவினர்களிடம் கூட வெளிப்படையாகப் பேசமுடியாமலாக்கும் மனத்தடை உட்பட, மனிதருக்கிடையே உண்டாகும் தொடர்பு இடைவெளியின் எல்லா அம்சங்கள் பற்றியும் படம்நெடுகிலும் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் கதைச் சூழல்கள் வழி காட்டப்பட்டிருக்கிறது. அதேசமயம் மனிதனின் அகம் எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு இணக்கமான இன்னொரு மனித மனத்தை எளிதில் இனங்கண்டு புரிந்துகொள்கிறது என்பதும் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, மொராக்கோவின் குக்கிராமமொன்றில் இருக்கும் படிப்பறிவில்லாத மூதாட்டியும், குண்டடிபட்ட அமெரிக்கப் பெண்ணும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்கிறார்கள். மொழி உட்பட எந்தப் புற வழியிலும் தொடர்பில்லாத அவர்கள் இருவருக்குள்ளும் சட்டென்று உண்டாகிவிடும் புரிதலைக் காட்டியிருக்கும் விதம் இந்தப் படத்தின் சிறந்த தருணங்களில் ஒன்று.

[தொடரும்]

.

.