Sivaji and Brando

.

சிவாஜி கணேசன்

தமிழ் சினிமாவின் உச்சங்களில் ஒன்று சிவாஜி கணேசன். அவருடைய பிரதான பலம், உணர்ச்சிகரமான ஏற்றத் தாழ்வுகள் கொண்ட தெளிவான வசன உச்சரிப்பு. அதுதான் அவரை வெற்றிகரமான நாடக நடிகராகவும், முதல் திரைப்படத்திலேயே உச்ச நட்சத்திரமாகவும் ஆக்கியது. ‘பராசக்தி’ என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த நீதிமன்ற வசனம் தான். அந்தக் காட்சியின் பெரும் பகுதி வசனங்களை ‘உரையாடல்’ என்பதைவிட ‘உரைநிகழ்த்துதல்’ அல்லது ‘உரையாற்றுதல்’ என்றே சொல்லவேண்டும். அந்த வசனம் அளவுக்கே பிரபலமான ‘மனோகரா’ மற்றும் பல படங்களில் சிவாஜி கணேசன் மிகச் சிறந்த உரைநிகழ்த்தல்களைச் செய்திருக்கிறார். படத்துக்குப் படம் அவர் நடிப்பு மெருகேறியிருக்கிறது என்றபோதும், அவருடைய முதல் படத்து கன்னிப் பேச்சை 60 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகம் நினைவில் வைத்திருக்கிறது, பொதுச் சூழலில் புளங்குகிறது என்பது ஆச்சர்யம்தான்.

வெறும் மேடைப் பேச்சின் மூலமே அரசியல் நடைபெறும் தமிழகத்தில், இத்தனை உணர்ச்சிகரமான பேச்சாளர் ஏன் அரசியல் மேடைகளில் வெற்றிபெற முடியவில்லை, ஏன் சிவாஜி கணேசன் ஒரு மிதமான அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்பது எனக்குப் புரியாத விஷயங்களில் ஒன்று. ஒருவேளை வசனங்களைப் பாடம் செய்து நடிப்பதில்தான் அவருடைய திறமை இருக்கிறது போலும். மேடையில் சுயமாகக் கோர்வையாகப் பேசுபவர்களே பிரச்சாரத்தின் போது கவணத்தை ஈர்க்க முடியும். அரசியலில் சிவாஜி காணாமல் போனாலும், தமிழக மக்கள் அவருக்கு எத்தனைப் பெரிய இடத்தைக் கொடுத்திருந்தார்கள் என்பதை, நான் அவருடைய இறுதி ஊர்வலத்தின் போதுதான் பார்த்தேன். சிவாஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான மக்கள் சிறு கிராமங்களிலிருந்து வந்து, கட்டுச் சோறோடு தி.நகர் தெருக்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்த காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

சார்லி சாப்ளின்

“கிரேட் டிக்டேடர்” படத்தின் இறுதிக் காட்சியில், ஜனநாயகத்துக்கும் அமைதிக்கும் ஆதரவாகவும் – சர்வாதிகாரத்துக்கும் போருக்கும் எதிராகவும், மறக்க முடியாத ஒரு உரையை நிகழ்த்தியிருக்கிறார் சார்லி சாப்ளின். அதுதான் அவர் நடித்த முதல் ‘பேசும் படம்’ என்பதும், அதிலேயே உலகத்தை நோக்கி தான் பேச நினைத்ததையெல்லாம் பிரச்சார உரை போல நிகழ்த்திவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடால்ஃப் ஹிட்லர் ஒரு மாபெரும் வல்லரசின் தலைவராக இருந்தபோதே, அவருக்கு எதிராக, குறிப்பாக அவர் யூதருக்குச் செய்த அநீதிக்கு எதிராக, கலையுலகில் எழுப்பப்பட்ட ஒரே கண்டனக் குரல் இந்தப் படம் தான். ஹிட்லரும் சாப்ளினும் ஒரே வயதுக்காரர்கள். அதிலும் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் – ஹிட்லர்: ஏப்ரல் 20 1889, சாப்ளின்: ஏப்ரல் 16 1889 – ஆக சாப்ளின் 4 நாட்கள் மூத்தவர்.

கலைஞர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியமானது, அவர்கள் அநீதிக்கும் தீமைக்கும் எதிராக எப்போதும் குரல் எழுப்பவேண்டும் என்பதற்கு சார்லி சாப்ளின் ஒரு பெரிய முன்னுதாரணம். இந்தப் படம் அமெரிக்காவில் வெளியாகி ஓராண்டுக்குப் பின்பே அந்த நாடு தனது நடுநிலையைக் கைவிட்டு ஜெர்மனிக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் குதித்தது.

இந்தப் படத்தில் ஹிட்லரைக் கோமாளியாகச் சித்தரிக்கும் ஏராளமான காட்சிகள் உண்டு குறிப்பாக, உலக உருண்டை வடிவிலான பலூனை வைத்து விளையாடி உடைக்கும் காட்சி. அந்த நகைச்சுவைக்குள் இருக்கும் கூர்மையான விமர்சனமே சார்லி சாப்ளின் என்னும் கலைஞனின் வலிமை. படத்தின் ஆரம்பத்தில் வரும் உலகப் போர்க் காட்சிகளும் நையாண்டி கலந்து முன்வைக்கப்பட்ட போருக்கு எதிரான விமர்சனமே.

அவரே திரைக்கதை எழுதி இயக்கிய இந்தப் படத்தில், ஹிட்லர் போல ஒரு சர்வாதிகாரியாகவும், ஒரு யூத சவரத் தொழிலாளியாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் சாப்ளின். இறுதியில் நடக்கும் ஒரு ஆள்மாறாட்டக் குழப்பத்தில், சவரம் செய்யும் யூதன் சர்வாதிகாரியின் வேடத்தில், உயர் அதிகாரிகளுக்கும் திரளான படைவீரர்களுக்கும் முன்னால், வானொலி மூலம் அனைத்துக் குடிமக்களும் நேரடி ஒலிபரப்பில் கேட்டுக்கொண்டிருக்க, உரை நிகழ்த்தும் காட்சியைப் பற்றியே நான் சொல்ல வந்தது.

பிரச்சாரம் போல நேரடியாகக் கருத்துச் சொல்வது ஒரு நல்ல கலைவெளிப்பாடு அல்ல என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவசியமானபோது கலைஞர்கள் பிரச்சார யுத்தியைக் கையில் எடுப்பது தவறல்ல என்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

சாப்ளின் என்னும் மகத்தான மக்கள் கலைஞன், திரைப்பட ஊடகத்தைப் பயன்படுத்தி, மனுக்குலத்தை நோக்கி நிகழ்த்திய உரையின் காணொளி :

.

மார்லன் பிராண்டோ

கதாபாத்திரங்கள் ஒரு அவையிலோ, திரளான மக்களின் முன்னோ உரை நிகழ்த்தி அவர்களை எழுச்சிகொள்ளவைப்பது போன்ற காட்சிகள் திரைப்படத்துக்கு வந்தது நாடகங்களில் இருந்துதான். நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான் அதில் முன்னோடி. அவருடைய நாடகமான “ஜூலியஸ் சீசர்”-யில் சீசரின் கொலைக்குப் பிறகு மக்களை நோக்கி மார்க் ஆண்டனி நிகழ்த்தும் உரை ஷேக்ஸ்பியர் எழுதியவற்றிலேயே ஆகச் சிறந்த உரை என்று சொல்லலாம். அந்த நாடகம் ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டபோது, அதில் மார்க் ஆண்டனியாக நடித்தவர் மார்லன் பிராண்டோ.

“ஆன் த வாட்டர்ஃப்ரண்ட்” “எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிஸையர்” “காட் ஃபாதர்” போன்ற மறக்க முடியாத பல படங்களில் பிராண்டோ நடித்திருந்தாலும், “ஜூலியஸ் சீஸர்” தான் அவருடைய ஒரே வரலாற்றுப்படம் என்று நினைக்கிறேன். இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், பொதுவாக பழைய வரலாற்றுப் படங்களில் தெள்ளத் தெளிவான வசன உச்சரிப்பு கொண்ட மரபான நடிகர்களே நடிக்கமுடியும். ஆனால் பிராண்டோ ஒரு “மெதட் ஆக்டர்”. ஒவ்வொரு சொல்லும் துள்ளியமாக ஒலிக்கும்படிப் பேசுவது செயற்கையான நடிப்பு என்று நினைப்பவர். அப்படி இருந்தும் ஒரு ஷேக்ஸ்பியர் நாடகத்தின் படமாக்கத்தில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டதற்கு, அப்போது அவர் பார்வையாளர்களிடம் பெற்றிருந்த பெரும் வரவேற்பே காரணமாக இருக்க முடியும்.

உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான மர்லன் பிராண்டோ, மார்க் ஆண்டனியாக உரையாற்றும் காட்சி :

.

அல் பாஸினோ

எழுபதுகளுக்குப் பின் வந்த நடிகர்களில் தலைசிறந்த மேடைப் பேச்சாளர் என்றால் அது அல் பாஸினோ தான். அவர் நடிக்க வராமல் மதப் போதகராகவோ, அரசியல்வாதியாகவோ ஆகியிருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்திருந்திருப்பார் என்று நான் நினைப்பதுண்டு. படத்துக்குப் படம் பிரமிக்கத்தக்கவகையில் தனது பேச்சாற்றலை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேசமயம் மிகக் குறைவாகப் பேசும் ‘மைக்கேல் கார்லியான்’ என்னும் கதாநாயகனாக மூன்று “காட் ஃபாதர்” படங்களிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்பது அவருடைய பன்முக நடிப்புக்குச் சான்று.

அவருடைய சில உரை நிகழ்த்தல்களின் காணொளிகள் கீழே :

.

ஒரு பார்வையிழந்த இராணுவ அதிகாரியின் விவாதம் : [செண்ட் ஆப் எ வுமன்]

.

சோர்வுற்றவர்களை ஊக்கப்படுத்தும் உரை : [எனி கிவன் சண்டே]

.

ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் ஏமாற்றுப் பேச்சு : [சிட்டி ஹால்]

.

வழக்கறிஞரின் உணர்ச்சிவசப்பட்ட வாதம் : [அண்ட் ஜஸ்டிஸ் ஃபார் ஆல்]

.

கடவுளுக்கு எதிரான சாத்தானின் போதனை : [டெவில்’ஸ் அட்வொகேட்]

.

.