Thambi Ramaiya and Monika
.

குமுதம் விமர்சனம்

வெகுகாலத்துக்குப் பிறகு தமிழில் ஒரு பாம்புப் படம். நிறைய பாம்புகளுடன் கொஞ்சம் பரீட்சித்து மகாராஜா வரலாற்றையும், கூடவே அமானுஷ்யத்தையும் திரைக்கதையில் கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.

வீடு, கொல்லைப் புறம், வயல்வெளி என ஊரெங்கும் ஒரே பாம்பு மயம்தான். எங்கே இதையெல்லாம் பிடித்தார்கள் என வியப்பாக இருக்கிறது. பாம்புகளிடம் பயந்து கொண்டு அதைக் கண்டு நடுங்கி வழிபடும் ஊர் மக்களுக்கு மத்தியில் அதை சர்வ சாதாரணமாக எதிர் கொள்ளும் ராகவ்.

மேலவீதி, கீழ வீதி என இரண்டாக கோடு போட்டு உயர் ஜாதி, கீழ் ஜாதிப் பிரச்னைகளை மோனிகா மூலமாகவும், அவருக்கு அம்மாவாக வரும் கறிக்கடை பெண்ணின் வழியாகவும் விளாசித் தள்ளியிருக்கிறார் இயக்குநர். மேல் ஜாதி மைனராக வரும் ராமையாவின் உடம்பு அரிப்புக்கு மட்டும் தலித் பெண் தேவைப்படுகிறாள் என்பதை ஆழமாகச் சொன்ன இயக்குநருக்கு பாராட்டு.

கீழ்சாதிப் பெண்ணாக வரும் மோனிகாவின் நடிப்பில் ஜீவன் நிரம்பி வழிகிறது. தன் அம்மாவை “பயன்படுத்திக் கொள்ள ராமையா வீடு தேடி வரும் காட்சிகளில் மனம் நோக அழுவதும், மேல் தட்டு பணக்காரப் பையன் ராகவ் தன்னைச் சுற்றிவரும் போது, “உங்க ஆளுங்கள்லாம் எங்களை வைப்பாட்டியாத்தான் வைச்சுக்கறாங்க என விசும்புவதும் மனதைப் பதம் பார்க்கும் காட்சியமைப்பு.

ஹீரோயினைக் காப்பாற்ற நம் கதாநாயகன் பாம்பை பாதியில் அடித்துவிட்டு விடும்போது ஊரே பதைபதைக்கிறது. ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் நான்கு பனைமரங்களை நட்டு அதற்கு மேலே குடில் அமைத்து ஹீரோவைக் காப்பாற்றும் யுக்தி ஆரம்பத்தில் “அடடே.. போட வைத்தாலும், போகப் போக காட்சிகளின் நீளத்தால் நமக்கு கொட்டாவிதான் வருகிறது.

ராகவ்-மோனிகா காதலில் சாதியையும், பாம்பு துரத்தலையும் முடிச்சுப் போட்டிருப்பது திரைக்கதைக்கான உயிரோட்டமான விஷயம் தான் என்றாலும், அதே பாம்பு மறக்காமல் தேடி வந்து கண்ணைப் பிடுங்கும் காட்சி நம்பும்படி இல்லை.

படத்தின் பெரிய பலம் ஆன்டணியின் ஒளிப்பதிவு. இருட்டிலும் காட்டிலும் பயமுறுத்துகிறது. பாம்பிடம் இருந்து ஹீரோ தப்பினாலும் சாதிப் பிரச்னையால் கொல்லப்படுகிறார் என்பதை இறுதிக் காட்சியில் திருப்பமாக வைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

நஞ்சுபுரம் – பயபுரம் !

குமுதம் ரேட்டிங் – ஓகே

 .

Raaghav

.

தினமலர் விமர்சனம் :

நல்லபாம்பின் விஷத்தை விட கொடூரமானது நம்மிடையே உள்ள ஜாதிபாகுபாடு… எனும் நஞ்சு! என்பதை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம்தான் “நஞ்சுபுரம்!”

விஷப்பாம்புகளுக்கும், அதன் விஷத்தை முறிக்கும் வீரியமான மருந்துகளுக்கும் புகழ்வாய்ந்த கிராமம் நஞ்சுபுரம்! பாம்பென்றால் படையே நடுங்கும் எனும் பழமொழிக்கேற்ப.. ஊரே பாம்புகளுக்கு படையல் செய்து பயந்து வணங்கி வரும் சூழ்நிலையில், ஊர் பெரியவரின் மகன் ராகவ் மட்டும் பாம்பை கண்டால் பாய்ந்து அடித்து கொல்கிறான். அப்படி ஒருமுறை ராகவ் அடித்த பாம்பு ஒன்று தப்பித்து சென்று ராகவை பழிவாங்க துடிக்கிறது. மற்றொருபக்கம் கீழ்ஜாதி பெண்ணான மோனிகாவை காதலிக்கும் ராகவ், அவரை கரம்பிடிக்க முடியாமல் ஜாதி எனும் பாம்பால் பயந்து நிற்கிறார். ஹீரோ ராகவை பழிவாங்கியது, அவர் அடித்து தப்பித்த நல்ல பாம்பா? அல்லது அவர் சார்ந்த ஜாதி எனும் கெட்ட பாம்பா…? இதுதான் “நஞ்சுபுரம்” படத்தின் மீதிக்கதை!

சின்னத்திரை பிரபலம் ராகவ், “நஞ்சுபுரம்” ஹீரோவாக கிராம வாசியாக பெரியதிரைக்கு பெரிய அளவில் ‌பிரமாதமாக புரமோஷன் ஆகி இருக்கிறார். பேஷ்… பேஷ… எனும் அளவில் இருக்கிறது அவரது நடிப்பு மட்டுமல்ல அவரது பின்னணி இசையும் பாடல்கள் இசையும் கூடத்தான். இதுநாள் வரை ராகவ், இந்த திறமைகளை எங்கு ஒளித்து வைத்து இருந்தாராம்…?

ராகவ்வின் ‌காதலியாக கிராமத்து பெண் பாத்திரத்தில் மோனிகா நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். ராகவ்-மோனிகா மாதிரியே தம்பிராமையா, நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயமுறுத்தும் பாம்புகளும், நஞ்சுபுரம் படத்தின் பலம்! அதிலும் தம்பி ராமையா படமெடுத்து ஆடும் நல்ல பாம்புகளையே தனது கெட்ட வில்லத்தனத்தால் பின்னுக்கு தள்ளிவிடுவது படத்தின் கூடுதல் பலம்!

பாம்பின் விஷத்தை விட அதுபற்றிய பயம்தான் மனிதனை கொல்லும் வீரியமுடையது எனும் கருத்தையும், ஜாதிபாம்பின் விஷத்தையும் வீரியத்தையும், ராகவின் இசை, ஆண்டனியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன் அழகாக சொல்லியிருக்கும் புதியவர் சார்லஸ், இயக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில் “நஞ்சுபுரம்” ஏற்படுத்துகிறது “நல்ல(பாம்பு)பயம்!”

=======

.

உயிர்மை பத்திரிக்கையின் இணைய இதழான உயிரோசை-யில் வெளியாகியிருக்கும் விமர்சனத்திற்கான சுட்டி கீழே :

சாதிவெறியி​ன் தீவினை பேசும்; நஞ்சுபுரம்

.

[குங்குமம் போன்ற மேலும் சில இதழ்களில் வந்த விமர்சனங்களையும் இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை, யாருக்கேனும் கிடைத்தால் இணைப்புக் கொடுங்கள்]

.