இந்த வாரம் குமுதம் இதழில் (29-6-2011) இலக்கிய உலகம் பகுதியில் என்னைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு புகைப்படத்தோடு வெளியாகியிருக்கிறது.

.

டைரக்டர் சார்லஸ்

‘நஞ்சுபுரம்’ இயக்குனர் சார்லஸ், ‘வார்த்தைகள்’ என்னும் பெயரில் ‘பிளாக்’
தொடங்கி எழுதி வருகிறார். இதில், கடந்த பத்தாண்டுகளில் உலக சினிமாவில் பேசப்பட்ட முக்கிய பத்து இயக்குனர்கள் பற்றி சார்லஸ் எழுதி வரும் தொடர் வலை வட்டாரத்தில் பிரசித்தமானது.

.

பல நண்பர்கள் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு “நீங்க நெட்ல எழுதறீங்களா? சொல்லவே இல்லையே” என்று ஆச்சர்யமாக விசாரித்தார்கள். சிலர் “தெனமும் சந்திச்சுப் பேசியிருக்கோம் ஒருதடவ கூட இதப்பத்தி பேசலையே” என்று கோபித்துக்கொண்டார்கள். “எழுதறத நிறுத்தாதீங்க.. வாரத்துல ஒருநாள்.. மாசத்துக்கு ரெண்டுன்னாவது எதையாவது எழுதுங்க” என்று எல்லாருமே அறிவுறுத்தினார்கள். திடீரென்று என் எழுத்துக்கு இப்படியொரு அங்கீகாரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. குமுதத்தில் அந்தப் பெட்டிச் செய்தியைப் போட்டவர் யாரென்று தெரியாது. தொகுப்பு: மா.கிருஷ்ணன் என்றிருந்தது. ஒருவேளை என்னை மீண்டும் எழுதவைப்பதுதான் அவரது நோக்கமென்றால் அதில் அவர் வெற்றியடைந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இணையத்தில் எழுதுவது அப்படியொன்றும் வெட்டிவேலை இல்லை என்று என் மனைவிக்குப் புரியவைத்ததிற்காகவாவது அவருக்கு நான் நன்றி சொல்லியாகவேண்டும்.

2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நான் தொலைக்காட்சி தொடர் ஒன்றிலிருந்து முற்றிலுமாக வெளிவந்திருந்த நிலையில், டெல்லி-ஆக்ரா-ஜெய்ப்பூர் என்று குடும்பத்தோடு ஒரு டூர் சுற்றிவிட்டு திரும்பிவந்து வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்த ஒருநாளில்.. பல வருடங்களாக நான் அவ்வப்போது எழுதிவைத்திருந்த சிறுபிள்ளைத்தனமான கவிதைகளை எடுத்துப் படித்தபடி அவற்றை என்ன செய்யலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது உதித்த(?) யோசனைதான் இந்த “வார்த்தைகள்”. இலவசமாக ஏதாவது கிடைத்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற மிடில்கிளாஸ் மனநிலை எனக்குள் ஊறியிருந்தது கூட “ப்ளாக்” ஆரம்பிப்பதற்கான தூண்டுகோலாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

அதன்பிறகு, எழுத்தாளர் ஜெயமோகனோடு ஒரு திரைப்பட முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சினிமாவின் வியாபாரம் பற்றி அவரிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன். ராம்கோபால் வர்மா தன்னுடைய பிளாக்கில் எழுதிய கட்டுரையொன்று நாங்கள் விவாதித்ததற்கு சம்பந்தமாக இருந்ததால் அதைத் தமிழில் மொழிபெயர்த்து என் பிளாக்கில் பதிவிட்டேன். அதன் லிங்கை ஜெயமோகனுக்கு அனுப்பிப் படித்துப்பார்க்கும்படிச் சொன்னேன், எனது முதல் மொழியாக்க முயற்சி என்பதால் அவருடைய கருத்தை அறிய விரும்பினேன். அவர் அதைப் படித்ததோடல்லாமல் தனது இணையதளத்தில் வாசகர்களுக்குப் பரிந்துரைக்கவும் செய்தார்.

திடீரென்று என் ப்ளாக்குக்குப் பலரும் படையெடுத்துவந்து படிக்க ஆரம்பித்தார்கள். நான் ஆர்வமாக இன்னொரு வர்மாவின் கட்டுரையையும் மொழிபெயர்த்துப் பதிப்பித்தேன். சினிமாவைப் பற்றிய தமிழ் எழுத்துக்கு எத்தனை வரவேற்பிருக்கிறது என்று நான் கண்டுகொண்டது அப்போதுதான். தொடர்ந்து உலக சினிமா பற்றி, என்னைக் கவர்ந்த இயக்குனர்கள் பற்றி, திரைத் தொழில்நுட்பம், திரைக்கதை யுத்திகள் பற்றி வரிசையாக எழுத ஆரம்பித்தேன். ‘ரிவியூ’ பாணியிலான திரைவிமர்சனங்கள் எழுதுவதில் எனக்கு எப்போதும் ஆர்வமில்லை. என்னுடையவை ‘ஃபிலிம் அப்ரிஸியேஷன்’ பாணியிலானவை. என் வலைப்பதிவுகளைத் தங்கள் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்த சுரேஷ் கண்ணன், ஜாக்கி சேகர், உண்மைத் தமிழன் போன்றவர்களையும் இந்தச் சமயத்தில் நினைவுகூறுகிறேன். நிறைய பதிவுலக நண்பர்கள் கிடைத்தார்கள். பிரபலமான சில பத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களும் கூட எனக்குத் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் அனுப்பி ஊக்கப்படுத்தினார்கள்.

.

2011 பிறந்த பிறகு நான் உருப்படியாக எந்தப் புதிய பதிவையும் எழுதவில்லை. நஞ்சுபுரம் பற்றிய செய்திகளையும் பிறரது விமர்சனங்களையும் மட்டுமே இணைத்துவந்தேன். பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள் தொடரில் கடைசியாக ஜனவரியில் பதிப்பிட்டது கூட சென்ற டிசம்பரில் நான் எழுதி வைத்திருந்ததுதான். அதன் அடுத்த பாகமாக, “எடர்னல் சன்ஷைன் ஆப் த ஸ்பாட்லெஸ் மைண்ட்” படத்தின் இயக்குனர் மிஷேல் கோந்ரே என்ற ஃபிரஞ்சுக்காரர் பற்றிய கட்டுரையையும் அப்போதே பாதி எழுதி அப்படியே நிறுத்திவைத்திருந்தேன். இடையில் ‘உரையாற்றும் நடிப்பு’ என்ற பதிவை ‘சும்மா’ எழுதிப் போட்டுவைத்தேன்.

தீவிரமான கட்டுரை எழுதும் மனநிலையை முற்றிலுமாக இழந்திருந்ததால், சும்மாவாவது எதையாவது எழுதிக்கொண்டிருப்பது சரியல்ல என்று நினைத்தே எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். மனச்சோர்வுக்குக் காரணங்கள் பல. ஓராண்டாக நான் எதிர்பார்த்த திரைவாய்ப்புகள் கைநழுவியபடியே இருந்ததாலும், தெலுங்கில் என் திரைக்கதைகள் படமாவதற்கான வாய்ப்புகள் இருமுறை நெருங்கி வந்து நின்றுபோனதாலும் ஏற்பட்ட ஏமாற்றம் ஒரு பக்கம், 5 ஆண்டுகளுக்கு முன் எடுத்துப் பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த படம் ஏற்படுத்திய நீண்டகால தலைவலி இன்னொரு பக்கம். இதெல்லாவற்றையும் விட முக்கியமாக என்னை எழுதவிடாமல் தடுத்தது, எனக்கே உருவான ஒரு சந்தேகம்.. திரைப்பட வாய்ப்புகளைத் தேடுவதைத் காட்டிலும் நான் கட்டுரை எழுதுவதில் அதிக முனைப்புக்கொண்டுவிட்டேனோ? என்னை நானே வேலைப்பளுவுக்குள் ஆழ்த்திக்கொள்வதன் மூலம் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறேனோ?.. கொஞ்சநாள் ப்ளாக் எழுதுவதை நிறுத்திப்பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆனந்த விகடன் பத்திரிகைக்காக ‘என் விகடன் தீம் பாடல்’ எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து நஞ்சுபுரம் இசை வெளியீட்டுவிழாவும், அதிலிருந்து இரண்டே வாரத்தில் பட வெளியீடு என்று முடிவானதால் இறுதி பிரதி எடுப்பது மற்றும் சென்சார் வேலைகள் இருந்தன. ஏப்ரலில் படம் ரிலீசான வாரத்திலேயே அடுத்த படத்திற்கான வாய்ப்பு வந்து, அதற்கான கதை-திரைக்கதை கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என்று நாட்கள் நகர்ந்துவிட்டன. இடையில் பிளாக்கில் எழுதவேண்டுமென்ற எண்ணமே தோன்றவில்லை.

தினமும் குடித்துக்கொண்டிருந்தவன் அதை நிறுத்தியதும் முதலில் தடுமாற்றங்களோடே இருப்பான், பிறகு அந்த வாழ்க்கை இலகுவாக ஆனபிறகு, ஒருவித விடுதலை உணர்வுக்கும் நிம்மதிக்கும் ஆளாவான். மீண்டும் குடிப்பதற்கான அழைப்புகள் விடுக்கப்படும்போது மிகுந்த தயக்கத்தோடு தவிர்ப்பான். “அளவோடு குடித்தால் தப்பில்லை” என்று நண்பர்கள் சொல்லும்போது ஒரு சஞ்சலம் ஏற்படும். ‘தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் இப்போதுபோலவே மீண்டும் நிறுத்திக்கொள்ளலாம், நான் ஒன்றும் குடி அடிமை அல்லவே’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு ஒருநாள் குடிக்க ஆரம்பித்துவிடுவான்..

அப்படி நான் மீண்டும் ப்ளாக் எழுத ஆரம்பித்தால், அதற்கு முழுமுதற் காரணமும் குமுதம் இதழாகத்தான் இருக்க முடியும் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.